அன்னமிட்ட கை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 மக்கள் திலகம் எம் ஜீ ஆரின் படங்கள் ஆரம்பிக்கப்பட்டு மளமளவென்று வளர்ந்து திரைக்கு வந்து வெற்றி பெறுவதும் உண்டு,ஆண்டுக்கணக்கில் இழுபட்டு திரைக்கு வந்து பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் போவதும் உண்டு.அவ்வாறு வெற்றிக்கனியை தவறவிட்டால் படங்களில் ஒன்றுதான் 1972ல் வெளிவந்த அன்னமிட்ட கை !ஆனால் அப்படி நடந்ததால் இப்படத்துக்கு ஒரு பெருமையும் கிடைத்தது.134 படங்களில் நடித்த எம் ஜீ ஆரின் கடைசி கறுப்பு வெள்ளைப் படம் என்ற பெருமை இப் படத்துக்கு கிட்டியது.



அது மட்டும் அன்றி மேலும் சில சிறப்புகளும் இந்தப் படத்துக்கு கிடைத்தது.பல படங்களில் எம் ஜீ ஆரின் வில்லனாக வந்த நம்பியார் இந்த ஒரு படத்தில் தான் அவரின் அண்ணனாக வருகிறார்.இவர்கள் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்த ஒரே படம் அன்னமிட்ட கை தான்!

பல படங்களில் ஜோடியாக நடித்த நாகேஷ்,மனோரமா இருவரும்

1960ம் ஆண்டுகளின் இறுதியில் ஜோடியாக நடிப்பதை விட்டுவிட்டார்கள்.ஆனால் இந்தப் படத்தில் அவர்களை ஜோடியாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது.அதிலும் இளமையாகவும் அழகாகவும் மனோரமா காட்சியளித்தார்.நாகேசும் துடிப்பாக தோன்றினார்.

சிவாஜியின் பல படங்களுக்கு வசனம் எழுதி ,எம் ஜீ ஆரின்
விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களுக்கு வசனம் எழுதிய ஏ எல் நாராயணன் படத்துக்கு வசனம் எழுதியிருந்தார்.அதே போல் சிவாஜியின் கமராமேன் என்று அறியப்பட்ட கே எஸ் பிரசாத் ஒளிப்பதிவை கையாண்டார்.

துரைராஜ்,செல்வராஜ் இருவரின் தந்தை ஜமீந்தார் சதாசிவம்.செல்வராஜையும் அவன் தாயையும் சிறுவயதிலேயே சதாசிவம் விரட்டிவிடுகிறார்.துரைராஜின் தாயும் அவரின் கொடுமை தாங்காமல் இறந்து விடுகிறாள்.துரைராஜ் தந்தையை விட்டு விலகி தனித்து வாழ்கிறான்.பல ஆண்டுகள் கழித்து சகோதரர்கள் சந்திக்கிறார்கள்.அதே சமயம் தந்தை இறந்த செய்தியும் கிட்டுகிறது.அவரின் திரண்ட சொத்துகளுக்கு ஏக வாரிசாக துரை அறிவிக்கப்படுகிறான்.ஆனால் நல்ல மனம் படைத்த அவனோ செல்வராஜை ,துரை என்று அறிமுகப்படுத்தி அவனை சொத்துகளுக்கு அதிபதி ஆக்குகிறான்.ஆனால் அத்துடன் அவன் கடமை முடிவதாக இல்லை.செல்வராஜின் கண் இல்லாத தாய்,எஸ்டேடில் குழந்தைகளை பராமரிக்கும் சீதா,சொத்துக்களை சுருட்ட காத்திருக்கும் எஸ்டேட் மானேஜர் கனகரத்தினம்,அவரின் மகள் டாக்டர் கல்பனா,இவர்களின் சிக்கல்கள்,காதல்,மோசடி,எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.


இவ்வாறு அமைத்த படத்தின் கதையை பிரபல கதாசிரியர் ஜீ பாலசுப்ரமணியம் எழுதி இருந்தார்.வசனங்களை ஏ எல் நாராயணன் தீட்டியிருந்தார்.கதை,வசனம் இரண்டும் தெளிவாக,அர்த்தபுஷ்டியாக அமைந்திருந்தது.பாடல்களை வாலி இயற்ற கே வி மகாதேவன் இசையமைத்தார்.பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா,அன்னமிட்டக்கை நம்மை ஆக்கிவிட்ட கை ,ஒண்ணுன்னா ஒண்ணுன்னா சொல்லு சொல்லு ,அழகுக்கு மறு பெயர் பெண்ணா ஆகிய பாடல்கள் இனிமையாக அமைந்தன.

நாகேஷ் ,மனோரமா,வி கே ராமசாமி ,சீதாலட்சுமி ஆகியோரின் நகைச்சுவை படத்தை கலகப்பாக நகர்த்தியது.முன் பல்லுடன் நாகேஷ் தோன்றும் கட்சி செம தமாஷ்! தாயாக வரும் பண்டரிபாய் பாத்திரத்துக்கு பொருந்தினார்.வில்லனாக வரும் மனோகர் வழக்கமான பாணியில் நடித்திருந்தார்.இவர்களுடன் டி எஸ் முத்தையா,கீதாஞ்சலி, எஸ் என் லட்சுமி ஆகியோரும் நடித்தனர் .

படத்தில் எம் ஜீ ஆருக்கு ஜெயலலிதா,பாரதி என்று இரண்டு

ஜோடி.கிராமத்து பெண்ணாக துடிப்பாக நடித்தார் ஜெயலலிதா என்றால் , டாக்டராக அடக்கமாக வந்து கவர்ந்தார் பாரதி.மேல் நாட்டு ஆடைகள் இன்றி இருவரும் படம் முழுவதும் சேலை அணிந்து வருவதும் ஒரு சிறப்பு.

பாத்திரத்துடன் ஒன்றி மிகை இன்றி இயல்பாக நடித்திருந்தார் எம் ஜீ ஆர்.இது அவரின் கதாபாத்திரத்தை மேலும் மெருகூட்டியது.அதே சமயம் காதல் காட்சிகளிலும்,சண்டைக்கு காட்சிகளிலும் அசத்தியிருந்தார் அவர்.அதே போல் அவரின் அண்ணனாக வரும் நம்பியாருக்கு நல்ல வாய்ப்பு.எம் ஜீ ஆருடன் தர்க்கம் செய்வதும் பின்பு அடங்கிப் போவதுமாய் பாலன்ஸ் பண்ணியிருந்தார் அவர்.

படத்தை இயக்கியவர் எம் கிருஷ்ணன்.சீராக படத்தை இயக்கி இருந்தார். படத்தின் பல காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பாக அமைந்தது இனிமை.ஆனால் கலரில் அமையாதது கொடுமை!


படம் தொடங்கி சில ஆயிரம் அடிகள் கறுப்பு வெள்ளையாக வளர்ந்த பிறகு அவற்றை தூக்கி போட்டு விட்டு மீண்டும் கலரில் படத்தை எடுப்போம் என்று எம் ஜீ ஆர் சொன்னதைக் கேட்டு தயாரிப்பாளர் சிவஸ்வாமி ஆடிப் போய் விட்டார்.பிறகு இழுபட்டு ,இழுபட்டு ஒருவழியாக திரைக்கு வந்த அன்னமிட்டகை படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள் எனோ கை கொடுக்கவில்லை!

1 comment:

Anonymous said...

Excellent article I saw this movie first day first show at Taj theater vellore on 15.9.1972.