நாய் நன்றியுள்ள மிருகம். நாய் வீட்டைக் காக்கும் . என்றவாறெல்லாம் எமது சிறிய வயதில் பாடசாலைகளில் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
நாய் பற்றி திருவாசகம் முதல் திரைப்படங்கள் வரையில் ஏராளமான
பாடல்கள் பிறந்திருக்கின்றன.
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு என்று
தாம் இயற்றிய திருவாசகத்தில் மாணிக்கவாசகரும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மூத்த கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும்
வீமா வீமா ஓடி வா என்ற தலைப்பினைக்கொண்ட குழந்தைகளுக்கான பாடலை வரவாக்கியவர்.
கவியரசு கண்ணதாசனும் படிக்காத மேதை திரைப்படத்திற்காக எழுதிய
ஒரு பாடலில் நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா என எழுதியிருப்பார்.
பாவேந்தர் பாரதிதாசனும்
“ என்றன் நாயின் பெயர் அப்பாய் “ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
ஜெயகாந்தனும் நிக்கி என்ற தமது சிறுகதையில் ஒரு குப்பத்து
நாயைப்பற்றி எழுதியிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் வதியும் விலங்கு மருத்துவரான எழுத்தாளர் நடேசன் வாழும்
சுவடுகள் என்ற தொகுப்பில் தான் சிகிச்சை செய்த, வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்கள்
பற்றிய கதைகளில் அவற்றின் சிறப்பியல்புகளை எழுதியிருக்கிறார்.
இந்த பத்தியை படிக்கும் வாசகர்கள், இது என்ன…! நாய்களின் மகத்மியத்தை இந்த அவதானி எழுதுகிறாரே என
யோசிக்கலாம்.
உலகெங்கும் அமைந்துள்ள விமான நிலையங்களில் சுங்கப்பிரிவில்
நிற்கும் நாய்கள், அந்தந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக மட்டுமன்றி குற்றச்செயல்களையும்
கடத்தப்படும் போதை வஸ்துகளையும் கண்டுபிடிப்பதற்காக
காவல் துறைக்கு துணையாக இயங்குகிறது.
ஆனால், இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் தெருநாய்களை கண்டால், கல்லை எறிந்து கலைத்துவிடும் காட்சிகளைத்தான் பார்க்கின்றோம்.
அண்மையில் வடபுலத்தில் புங்குடுதீவு பிரதேசத்தில் நான்குபேர் ஒரு நாயை அடித்தும் வெட்டியும் சித்திரவதைக்குட்படுத்தி கொலை
செய்ததுமட்டுல்லாமல், அக்காட்சியை கைத்தொலைபேசியில் காணொலியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பரவச்செய்திருக்கின்றனர்.
இக்கொடுரத்தை செய்திருப்பவர்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள்தான்.
தற்போது இவர்களில் இரண்டுபேர் கைதாகியிருப்பதாக ஊடகச்செய்திகள்
தெரிவிக்கின்றன.
நாளடைவில் இவர்கள் பிணையில் வெளியே வந்துவிடுவார்கள். சட்டத்தில்தான்
நிறையத் துவாரங்களும் இருக்கின்றனவே. தண்டனையிலிருந்தும்
தப்பிவிடக்கூடும்.
இதுபோன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கு சமூக விழிப்புணர்வு
மிக மிக அவசியம். வெளிநாடுகளில் நாய்களின்
பாதுகாப்பிற்காக எத்தனையோ பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல்பொருள் அங்காடிகளில் நாய்களுக்கு தரப்படுவதற்கென்றே விசேட
உணவுகள் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு விடப்படுகின்றன.
இலங்கை போன்ற நாடுகளில் வீடுகளில் வீசப்படும் முதல்நாள் பழைய
உணவுகள்தான் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.
அவ்வாறு பழையதை உண்டு வாழ்ந்தாலும்,
நாய்கள் நன்றியுள்ள மிருகமாகவே இறுதி வரையில் வாழ்ந்துவிட்டு விடைபெற்றுவிடும்.
இந்தப்பதிவை எழுதும் அவதானி, அண்மையில்
777 சார்லி என்ற
திரைப்படத்தை பார்த்தார்.
தற்போது பொலிஸாரால் கைதாகியிருக்கும் குறிப்பிட்ட குற்றவாளிகள்
மாத்திரமன்றி, நாயைக்கண்டால் கல்லைத் தூக்குபவர்களும்
இந்த வருடம் வெளியாகியிருக்கும் கன்னடத் திரைப்படமான 777 சார்லி
யை
பார்க்கவேண்டும் என பரிந்துரை செய்கிறார் அவதானி.
பெற்றவர்களையும் உடன் பிறந்த ஒரே ஒரு தங்கையையும் வாகன விபத்தில்
இழந்துவிடும் ஒருவனின் தனிமையை தொடக்கத்தில் சித்திரிக்கும் இத்திரைப்படத்தில், எதிலுமே பற்றின்றி விரக்தி நிரம்பிய வாழ்க்கை வாழும் அவனிடம் எதிர்பாராமல் குறுக்கிடும் ஒரு தெருநாய் எவ்வாறு
மனித வாழ்வின் மீதான நம்பிக்கையை ஊட்டுகிறது என்பதை காண்பிக்கிறது இத்திரைப்படம்.
உலக சினிமா ரசிகர்களை
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த புகழ்பெற்ற
கலைஞர் சார்லி சப்ளினின் ரசிகனான அந்த இளைஞன், தன்னிடம் வந்து தஞ்சமடையத்துடிக்கும் அந்த நாயின்
மீது தொடக்கத்தில் எரிச்சலுற்று , தனது தனிமையை கெடுக்க வந்த பிராணியாக அதனை வெறுத்து
ஒதுக்க நேர்ந்தாலும், நாளடைவில் அதன் செயல்களை
அவதானித்து தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்கின்றான்.
தனக்குப் பிரியமான நடிகர் சார்லியின் பெயரையே அதற்கும் சூட்டி,
ஒரு ஆங்கில இதழின் முகப்பினை அலங்கரிக்குமளவுக்கு கவர் ஸ்ரோரி நாயகனாகின்றான்.
இந்திய எல்லையை காக்கும் இராணுவத்தினர் வசமும் அந்த இதழ்
செல்கிறது. கர்நாடாக, கோவா, குஜராத், ராஜஸ்தான், இமாலய பிரதேசம், மற்றும் காஸ்மீர்
வரையில் அவனுடன் அந்த நாயும் பயணிக்கிறது.
வாழ்க்கை என்பது என்ன..? என்ற கேள்விக்கு மற்றவர்களுக்கு
உதவுவதுதான் வாழ்க்கை என்ற பதிலையே தத்துவமாகவும்
இத்திரைப்படம் போதிக்கின்றது.
ரக்ஷித் ஷெட்டி நாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் பிரதான
பாத்திரம் அந்த லபரேடர் இனத்து நாய்தான். படத்தின் கதையை நகர்த்துவதும் அதுதான்.
இந்தத் திரைப்படம் கன்னடத்தில் வெளியாகியிருப்பதனால், இலங்கை
திரையரங்குகளுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு. எனினும் கணினி வசதியுள்ளவர்கள் தரவிறக்கம்
செய்து பார்க்கலாம்.
கிளிநொச்சியில் இயங்கும் பாலுமகேந்திரா நூலகம் உட்பட சனசமூக
நிலையங்களும் இத்திரைப்படத்தை தரவிறக்கம் செய்து காண்பிக்கலாம்.
நாய்களை சித்திரவதை செய்து கொலைசெய்யும் மனிதர்களுக்கு தண்டனை
வழங்கும் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் இதுபோன்ற திரைப்படங்களை குற்றவாளிகள்
பார்க்கத் தக்கதாக தங்கள் தீர்ப்புகளை எழுதுதல் வேண்டும்.
நாய்களால் பேசமுடியாதுதான்.
ஆனால் அவற்றுக்கு அறிவுத்திறனும் மோப்பத்திறனும் அதிகம் இருக்கிறது.
2004 இறுதியில் இலங்கை, இந்தோனேஷியா , இந்தியா
உட்பட 14 நாடுகளுக்கு
நேர்ந்த சுநாமி கடற்கோள் அநர்த்தத்தில் சுமார் இரண்டு இலட்சத்து முப்பதினாயிரம் மக்கள்
கொல்லப்பட்டனர். எனினும், இந்த பேரனர்த்தத்தில் எங்காவது நாய்கள் தண்ணீரில்
மூழ்கி இறந்ததாக செய்திகள் வெளியானதா..?
அவை தமது அறிவுத்திறனாலும் மோப்ப சக்தியினாலும் தம்மை காப்பாற்றிக்கொண்டன.
நாய்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் மிக உயர்ந்த அதிர்வெண் ஒலிகளையும்
உணரும் சக்திகொண்டவை. அத்துடன் அவற்றுக்கு நுகர்ச்சியுணர்வு மனிதர்களைவிட பற்பல மடங்கு
அதிகம்.
குற்றச்செயல்களை கண்டுபிடிப்பதற்கு ஆறறிவு படைத்த - விஞ்ஞானமும்
படித்த மனிதர்கள் கூட நாய்களைத்தான் நம்பியிருக்கின்றனர்.
---0---
No comments:
Post a Comment