உலகச் செய்திகள்

 ஜப்பானிய முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட்டுக்கொலை

பிரிட்டனின் புதிய பிரதமர் பதவிக்கு போட்டி வலுக்கிறது

இந்திய ட்ரோன் விமான பரிசோதனை வெற்றி என அறிவிப்பு

உக்ரைன் போர்: உலகில் எரிவாயு பயன்பாடு வீழ்ச்சி

பாகிஸ்தான் பிரதமருக்கு நீதிமன்றம் உத்தரவு

விமான தாங்கிக் கப்பலுக்கு விமானம் வாங்கும் இந்தியா


ஜப்பானிய முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட்டுக்கொலை

ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

தெற்கு நகரான நாராவில் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அபே மீது இரு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அங்கேயே விழுந்த அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய 41 வயதான ஆடவர் சம்பவ இடத்தில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டார். டெட்சு யமகாமி என்ற அந்த ஆடவர் கடல்சார் பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தத் தாக்குதலை கண்டித்ததோடு, இது காட்டுமிராண்டித்தனமானது மற்றும் கொடிய செயல் என்று சாடியதோடு அமைதிகாக்கப்போவதில்லை என்றும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

தற்சமயம் ஜப்பான் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நோபுவோ கிஷி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்தத் தாக்குதல் மன்னிக்க முடியாத செயல் என்று கூறினார்.

அபேவின் கழுத்தில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டதாகவும் அவரது இடது பக்க மார்புப் பகுதியில் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் குறிப்பிட்டது.கைத்துப்பாக்கிகள் தடை செய்யப்பட்டுள்ள ஜப்பானில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.

3 முறை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்ததாகவும் ஜப்பானியச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள், அந்த இடத்தில் இரத்தத்தைக் பார்த்ததாக கூறினர்.

ஜப்பானில் அதிக காலம் பிரதமராக இருந்தவராக அபே பதிவாகியுள்ளார். முதலில் 2006இல் ஓராண்டு காலமும், பின்னர் 2012 முதல் 2020 வரையிலும் அவர் பிரதமர் பொறுப்பை வகித்துள்ளார். 2020 இல் சுகாதாரக் காரணங்களுக்காக 67 வயதான அபே பிரதமர் பதவியில் இருந்து வெளியேறினார்.

தீவிர பழமைவாத மற்றும் தேசியவாதியாக அறியப்படும் அபே, தனது தனித்துவமான 'அபெனோமிக்ஸ்' என்று அழைக்கப்படும் ஆக்ரோஷமான பொருளாதாரக் கொள்கையுடன் வளர்ச்சியைத் தூண்டுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்.

அவர் பதவியில் இருந்த காலத்தில் ஜப்பானின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளிவும் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். குறிப்பாக ஜப்பானின் போருக்குப் பின்னரான அமைதி சார்புடைய அரசிலமைப்பிலும் திருத்தங்களை கொண்டுவந்தார்.   நன்றி தினகரன் 




பிரிட்டனின் புதிய பிரதமர் பதவிக்கு போட்டி வலுக்கிறது


பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி வலுத்துள்ளது.

இதில் சட்டமா அதிபர் சுவெல்லா பிரேவமான் மற்றும் ஸ்டீவ் பேக்கரை தொடர்ந்து அந்தப் பதவிக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டொம் டெஜன்டட்டும் குதித்துள்ளார்.

தம்மைத் தொடர்ந்து புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்கப்போவதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.து விலக வேண்டும் என்று சக கட்சியைச் சேர்ந்த பலர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் அண்மைய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்.பிக்கள் சிலரை, பிரதமரின் இராஜினாமாவைக் கோரத் தூண்டியது.

இந்நிலையில் ஆளும் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக கால அட்டவணை அடுத்த வாரம் உறுதி செய்யப்படவுள்ளது. புதிய பிரதமர் வரும் செப்டெம்பரில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி தினகரன் 






இந்திய ட்ரோன் விமான பரிசோதனை வெற்றி என அறிவிப்பு

எதிரி இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தக்கூடிய ட்ரோன்களை இந்திய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் திட்டத்தில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் 15 நிமிடங்களுக்கு பறக்கவிடப்பட்டது. இப் பரிசோதனை திருப்தி அளிப்பதாக உள்ளது என்று பரிசோதனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளின் பாதுகாப்பு படைகள் தற்போது ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆளற்ற தாக்குதல் கருவியாக பயன்படுத்தி வருகின்றன. இந்திய இராணுவத்தில் ஏராளமான இஸ்ரேலில் தயாரிப்பான தாக்குதல் ட்ரோன்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் குரூஸ் ஏவுகணைகளைப் போல எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ட்ரோன்கள் உள்ளன. இதே சமயம் மூன்று பில்லியன் டொலர் செலவில் 30 தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யும் திட்டத்தை இந்தியா தற்போது நிறுத்தி வைத்து உள்ளுரில் இராணுவ ட்ரோன்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை முடுக்கி விட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளுர் தயாரிப்பான ட்ரோனின் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றிருப்பதை, இந்தியாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்துறை அபிவிருத்தியில் ஒரு மைல் கல்லாக வர்ணித்திருக்கும் இத்துறைசார் விஞ்ஞானி, மிக முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இது எடுத்துக்காட்டியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த ட்ரோன் மேலும் பலகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கமிட்டியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 






உக்ரைன் போர்: உலகில் எரிவாயு பயன்பாடு வீழ்ச்சி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு பயன்பாடு குறையும் என்று சர்வதேச எரிசக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளது. அத்துடன் எரிவாயுவின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

அதன் காரணமாகப் பயனீட்டாளர்கள் எரிவாயுவுக்குப் பதிலாக மாற்றுவழிகளில் எரிசக்தியைப் பெற ஆரம்பித்துள்ளனர் என்று அமைப்பு கூறியது.

உக்ரைனியப் பூசல், உலகளவிலான எரிவாயு விலையைப் பாதித்திருப்பதுடன், விநியோகத் தொடரில் நெருக்குதலையும் உருவாக்கியுள்ளது என்று அது சுட்டிக்காட்டியது.

இயற்கை எரிவாயு, கட்டுப்படியான, நம்பகமான எரிசக்தியாகக் கருதப்படுவதையும் அது மாற்றியமைக்கக்கூடும் என்றும் அமைப்பு குறிப்பிட்டது.

ரஷ்யா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவைக் குறைத்திருக்கும் வேளையில், ஐரோப்பிய நாடுகளும் அதனிடமிருந்து எரிவாயு பெறுவதைக் குறைத்துக்கொள்ளப்போவதாகக் கூறியுள்ளன. அதன் தாக்கம் உலகெங்கும் எதிரொலிக்கிறது.    நன்றி தினகரன் 






பாகிஸ்தான் பிரதமருக்கு நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இடம்பெறும் காணாமல்போன ஆட்கள் தொடர்பான வழக்கு வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி விசாரணைக்கு வரும்போதும் அவர்களை முன்னிலைப்படுத்தும்படி பாகிஸ்தான் பிரதமர் செஹ்பாஸ் ஷரீபுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் பிரதமர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.

காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் முதஸ்ஸர் மஹ்மூத் மற்றும் மேலும் ஐவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோதே இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதார் மினல்லா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கட்டாயமாக காணாமலாக்கப்படுவோர் சம்பவங்கள் பலொகிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் அதிகமான பதிவாகி வருகின்றன.    நன்றி தினகரன் 




விமான தாங்கிக் கப்பலுக்கு விமானம் வாங்கும் இந்தியா

இந்திய கடற்படை அதன் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான விக்ராந்திற்காக, அவரசுகளுக்கு இடையிலான வழித்தடத்தின் கீழ் டெக் அடிப்படையிலான போர் விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தெரிந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கொள்முதலுக்காக பிரான்ஸ் நிறுவனமான டயோல்ட் ஏவியேசன் மூலம் தயாரிக்கப்படும் ரபால் எம் மற்றும் போயிங்கின் எப்/ஏ-18ஈ சுப்பர் ஹோர்னட் விமானங்களை கடற்படை தேர்வு செய்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்த இரு விமானங்களும் கோவாவில் உள்ள கடற்படைத் தளம் ஒன்றில் தமது செயற்பாட்டு திறனை நிரூபித்திருப்பதோடு அதன் செயல்திறன் பற்றிய விரிவான அறிக்கை ஒன்றை பெற கடற்படை தற்போது எதிர்பார்த்துள்ளது.     நன்றி தினகரன் 


No comments: