எரிபொருள், எரியும் பிரச்சினையாக மாறினால் அதன் விளைவு எவ்வாறிருக்கும் என்பதை இலங்கையின் சமகால நிகழ்வுகள் துல்லியமாக காண்பிக்கின்றன.
ஒரு நாட்டில் பொலிஸ், இராணுவம்
மற்றும் விமானப்படை, கடற்படைகள் பதவிக்கு வரும் அரசுகளை பாதுகாப்பதற்கு மாத்திரம் அல்ல.
நெருக்கடி நிலைமை உருவாகும்போது முப்படையினரும்
பொலிஸும் களத்தில் இறக்கப்படுவார்கள். குறிப்பாக இயற்கை அநர்த்தம் வரும் பட்சத்தில் மக்களின் நலன் – தேவைகள் கருதியும் இவர்கள் உஷார் நிலையில் நிறுத்தப்படுவர். இவர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்படும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள
பாரிய நெருக்கடி இயற்கையினால் நேர்ந்தது அல்ல. கோத்தபாய சகோதரர்களின் முறைகேடான அரசினால்
உருவானதே இந்த சிக்கல். அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் எழுச்சிகொண்டு வீதிக்கு இறங்கினார்கள்.
எந்தவொரு அயல் நாடும் இந்த
எழுச்சியை தூண்டிவிடவில்லை. எனினும் பல நாடுகள்
இலங்கை அரசின் ஊடாக மக்களுக்கு உதவ முன்வந்துள்ளன.
தீர்க்கதரிசனமற்ற பொருளாதார
கொள்கைகளினாலும், விவேகமற்ற அரசியல் தீர்மானங்களினாலும்
நாட்டை இந்த சீரழிவுப் பாதைக்கு இட்டுச்சென்ற பெருமையை பெற்றவர்களாக ராஜபக்ஷ குடும்பத்தினர்
திகழ்ந்திருக்கின்றமையால்தான், சந்தர்ப்பவசமாக அவர்களின் தலைவராகவும் தேசத்தின் அதிபராகவும் விளங்கும் கோத்தபாய ராஜபக்ஷவை
வெளியேறிச்செல்லுமாறு கோத்தா கோ இயக்கம் எழுச்சி பெற்றது.
இந்த இயக்கத்தில் இணைந்துள்ள
பெளத்த பிக்குகளும் கடும் தொனியில் அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரு பெளத்த பிக்கு விஷ்ணு தெய்வம் மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுத்துவந்து, இந்த கொடுங்கோலர்களை அழிக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மக்களையும் அழைத்து தேங்காய் உடைத்து சாபமிடுகிறார்.
கோத்தபாய அரசின் முன்னாள்
அமைச்சர் ஒருவரது வீட்டை சேதப்படுத்தியவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஒரு பல்கலைக்கழக
பேராசிரியரான பௌத்த பிக்கு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2019 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை இழந்த உறவுகளுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்ற கடுங்கோபத்திலிருக்கும் கத்தோலிக்க மதபீட பேராயர் உட்பட கத்தோலிக்க மத குருமாரும் இந்த அரசின் மீது தங்கள் எதிர்ப்புணர்வை காண்பித்து வருகிறார்கள்.
முழுநாடும் படிப்படியாக முடங்கிவரும் சூழ்நிலையில் அதற்கு பிரதான
காரணமாகியிருக்கும் எரிபொருள் பற்றாக்குறை நெருக்கடியை சமாளிப்பதற்காக இராணுவத்தை அரசு
களம் இறக்கியிருக்கிறது.
எரிபொருள் பற்றாக்குறை
தொடர்ந்தால், அதனையொட்டி பல்வேறு சிக்கல்கள் சங்கிலித்தொடராகிவிடும். இன்று இலங்கைக்கு
நேர்ந்திருப்பதும் அதுதான்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில்
நீண்டநேரம் காத்திருந்தும், கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் விரக்தியின்
உச்சத்திற்கே செல்கிறார்.
அதன் எதிரொலியை காணக்கூடியதாகவிருக்கிறது. ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு இராணுவ அதிகாரி,
பொது மகன் ஒருவரை காலால் எட்டி உதைக்கும் காட்சி ஊடகங்களில் வைராலாக பரவியிருக்கிறது.
காவல் துறை மக்களின் நண்பன்
என்ற பேச்சு, தற்காலத்தில் அரசின் நண்பன் என மாறியிருக்கிறது.
இந்த காவல்துறையிலிருப்பவர்களுக்கும்
குடும்பம் பிள்ளைகள் உறவுகள் என்று பலர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் பொருளாதார நெருக்கடி வரும்போது, எரிபொருள் பற்றாக்குறை
உருவாகும்போது யாரைத்திட்டுவார்கள்.
காலிமுகத்திடலில் ஆரம்பித்த
“ கோ ஹோம் கோட்டா “ குரல் நாடெங்கும் எதிரொலித்து,
நாடாளுமன்றத்திற்குள்ளும் கடந்த வாரம் ஒலித்தது.
அப்போது கோத்தாவும் அதனைக் கேட்டுக்கொண்டுதானிருந்தார். அவரது வாசஸ்தலம் வரையில் வந்து ஒலித்த குரல், அவர் சம்பிரதாயத்திற்காக வருகை தந்த நாடாளுமன்ற அமர்வின்போதும் அவரது காது குளிரக்கேட்டதையடுத்து
எழுந்து சென்றுள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே
இவ்வாறு அபகீர்த்திக்கு ஆளாகியுள்ள ஜனாதிபதி வேறு எவருமில்லை.
தனக்கு 69 இலட்சம் மக்கள்
வாக்களித்து ஆளும் ஆணையைத் தந்துள்ளதாக அவர் மீண்டும் மீண்டும் சொன்னாலும் கூட இன்று
அம்மக்கள் மீண்டும் மீண்டும் சொல்வது “ கோ ஹோம் கோட்டா “ என்பதைத்தான்.
அவரதும் அவரது அண்ணன் மகிந்தவினதும் தீவிர நம்பிக்கைக்குரியவர்களும் நாட்டு மக்களிடம்
தங்களது முகத்தை ரேடியாக காண்பிக்க முடியாத நிலைதான் இன்று தோன்றியுள்ளது.
அந்தளவுக்கு அவர்கள் மீதான
எதிர்ப்பின் தீவிரம் முற்றியதனால்தான் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறுகள் நிலை
தோன்றுகின்றது.
பொது மகனை எட்டி உதைக்கத்துணியும்
இராணுவம், பெளத்த பிக்குவிடமோ அல்லது பிற மதத்
தலைவர்களிடமோ அவ்வாறு நடந்துகொள்ளுமா..?
இராணுவத்தின் எஜமானராக விளங்கும்
ஜனாதிபதிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா திட்டித் தீர்த்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வைராலாக பரவியிருந்தது.
இப்போது நாடளுமன்றில் கோ ஹோம் கோட்டா ஒலித்திருப்பதும் சமூக வலைத்தளங்களில்
பரவிவருகிறது. நாட்டை அதிகாரபூர்வமாக முடக்க
முடியாமலும், எழுச்சி கொண்டிருக்கும் மக்களின் எதிர்ப்பலைகளை அடக்க முடியாமலும் திணறிக்கொண்டிருக்கும்
ஜனாதிபதி, தனது சகோதரர்களை காப்பாற்ற ரணிலை பதவியில் அமர்த்தினார்.
இனி தன்னை அவர் பாதுகாக்கவேண்டுமானால், பொலிஸையும் முப்படைகளையும்தான் நம்பியிருக்கவேண்டும்.
இங்குதான் பொலிஸாரும் முப்படையினரும்
இனி என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொதுமக்கள் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிக்கு
மத்தியில் தங்கள் நிதானத்தை இழந்துவிடாமல், சமயோசிதமாக நடக்கவேண்டிய காலம் இது.
கடந்த கரும்புலிகள் தினத்தின்போது
வடக்கிலோ கிழக்கிலோ குண்டுகள் வெடிக்கலாம் என்ற அச்சமும் வந்தது. இதுபற்றி மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார
திசாநாயக்கவும் எச்சரித்திருந்தார்.
அதிகார வர்க்கம் தன்னை பாதுகாக்க
என்னவெல்லாமோ செய்யும். போர்க்காலத்தினை காரணம்
காண்பித்து, அன்று வடக்கிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அன்றைய ஆளும் அதிகார
வர்க்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அங்கு
அதனால் விளைந்த துன்பத்தையும் அங்கு வாழ்ந்த மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே சமயம் அம்மக்கள் கோ ஹோம் அரசே என்று அன்று கோஷம் எழுப்பவில்லை. தங்கள் தேவைகளை மின்சார வெட்டுக்கு மத்தியிலும்
கவனித்தார்கள்.
இன்று தென்னிலங்கையில் அதகைய போர்க்கால சூழல் இல்லாமலேயே மக்கள் பொருளாதார
நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். அதன் எதிரொலி
கடந்த சில மாதங்களாகவே நீடித்திருக்கிறது.
கோ ஹோம் கோட்டா நாடுகடந்தும்
ஒலிக்கிறது. வௌிநாடொன்றில் GO GOTA
GO கடையொன்றும் திறக்கப்பட்டுள்ளது.
கோட்டா வீடு செல்வாரோ இல்லையோ,
அவரது நாமம் உலகெங்கும் ஒலிக்கிறது.
அவரையும் அவரது அதிகார வர்க்கத்தையும் பாதுகாப்பதற்கு பொலிஸும் முப்படையும் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில்கொண்டு மக்கள் விழிப்போடு தங்கள் நாளையும் பொழுதையும் கடக்கவேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment