இசைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம் இளையராஜா

 Friday, July 8, 2022 - 5:10pm

- ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதை கொண்டாடும் இரசிகர்கள்

தமிழக இசையமைப்பாளர்களில் மிகப்பெரும் கௌரவம் பெற்றவர்களில் முதன்மையானவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் இன்று ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை இரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

பண்ணைபுரம் ராசய்யா ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டது தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் விடயம் ஆகும். தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் கடைக்கோடி கிராமமான பண்ணைபுரத்தில் நான்கு சகோதரர்களில் இரண்டாவது சகோதரனாக இளையராஜா பிறந்தார். இளையராஜாவிற்கு பெற்றோர் வைத்த பெயர் 'ராசய்யா' ஆகும். அண்ணன் பாவலர் வரதராஜன், தம்பிகள் பாஸ்கர், கங்கை அமரன் ஆகிய மூவரும் இவரது உடன்பிறப்புகள் ஆவார்கள். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இளையராஜாவின் மகன்கள் கார்த்திக், யுவன் ஷங்கர். அவர்கள் இருவரும் இசையமைப்பாளர்கள். மகள் பவதாரிணி பாடகி ஆவார்.

ஆரம்பத்தில் கம்யூனிச மேடைகளில் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் பெண் குரலில் பாடிக் கொண்டிருந்த இளையராஜாவுக்கு இசையின் மீது தானாக ஈர்ப்பு வந்தது. இவரது தம்பி கங்கை அமரனுக்கும் இசைத்துறையில் உள்ளவரே. சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர் இளையராஜா. 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டவர்.

1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். லண்டனின் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் தொலைதூர கற்றல் சேனல் மூலம் பாடநெறியை முடித்த பின்னர் பாரம்பரிய கிதாரில் தங்கப்பதக்கம் வென்றார். டி.வி.கோபாலகிருஷ்ணனிடமிருந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார் .

சென்னையில் கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசை உதவியாளராக சேர்ந்தார், அங்குதான் இளையராஜாவின் திரையுலக இசைப்பயணம் முறையாகத் தொடங்கியது. கன்னடத்தில் 200 திரைப்படங்களுக்கு மேல் ஜீ.கே.வெங்கடேஷிடம் பணியாற்றினார். ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக, இளையராஜா தேறினார். இந்தக்காலக்கட்டத்தில் இளையராஜா தனது சொந்த இசைக்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். அதை வெங்கடேஷின் ட்ரூப் இசைக்கவும் செய்தது.

1970 களில் இளையராஜா, மலேரியா இன்ஸ்பெக்டராக இருந்த பாரதிராஜா, எஸ்.பி.பி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எஸ்.பி.பி மேடைக்கச்சேரிகளில் இளையராஜா, அமரன் ஆகியோர் வாசித்தது உண்டு. பின்னர் இளையராஜா மிகப்பெரும் இசையமைப்பாளராகவும், எஸ்.பி.பி மிகப்பெரும் பாடகராகவும், பாரதிராஜா இயக்குநர் இமயமாகவும் மாறினர். ரஜினி, கமல் ஆகியோரும் இதே காலக்கட்டத்தில் திரையுலகில் கால் பதித்து முன்னேற்றம் கண்டனர். ஆகவே 1970 களின் இறுதிகாலம் பல ஜாம்பவான்களை தமிழ் திரையுலகிற்கு அளித்தது எனலாம்.

பட வாய்ப்புகக்காக அலைந்த நிலையில் 1975 ஆம் ஆண்டு பஞ்சு அருணாசலம் தயாரித்த 'அன்னக்கிளி' படத்திற்கு இசையமைக்க இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் இசையமைக்க எல்லாம் ஆரம்பிக்கும் போது மின்சாரம் போய் விட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களை அபசகுனமாக திரைத்துறையில் பார்ப்பார்கள். ஆனால் அதன் பின்னர் உடனே மின்சாரம் வந்தது. வெளிச்சமும் வந்தது. அன்று வந்த வெளிச்சம் பின்னர் இளையராஜாவின் வாழ்க்கையில் கூடிக் கொண்டேதான் போனது.

'அன்னக்கிளி' தமிழ் திரையுலகில் வித்தியாசமான சாதனையை படைத்தது. கிராமிய இசைக் கலைவையாக இளையராஜாவின் அன்னக்கிளி உன்னை தேடுதே, மச்சானை பார்த்தீங்களா போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. அடுத்து '16 வயதினிலே' பாடல்களும் அறிமுக பாடகர் மலேசியா வாசுதேவனின் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடலும் மிகப்பிரபலமானது. இளையராஜா பற்றியே பேச்சு எங்கும் ஒலித்தது.

இளையராஜா தனது திரைப்பட பின்னணி இசையில் தமிழ் இசையைப் புகுத்தினார். மேற்கத்திய இசையுடன் தமிழ் இசையை கலக்கும் இசை பலரையும் மயக்கி கட்டிப் போட்டது. குறுகிய காலத்தில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மலையாளக் கவிஞர்கள், தெலுங்கு, கன்னட கவிஞர்களின் வரிகளுக்கு அற்புதமான இசையமைத்து தென் இந்திய இசையமைப்பாளரானார். 1980 களில் வேகமாக ஓடத் தொடங்கிய பண்ணைபுரம் எக்ஸ்பிரசின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 2000 ஆவது ஆண்டுகளில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன், கார்த்திக் உள்ளிட்ட இளம் இசைக்கலைஞர்கள் கால்பதித்தப்பின் வேகத்தை குறைத்தார் இளையராஜா.

பாரதிராஜா, எஸ். பி. முத்துராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே. பாலச்சந்தர், மணிரத்னம், சத்யன் அந்திக்காடு, பிரியதர்சன், ஃபாசில், வம்சி, கே. விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலா, சங்கர் நாக், மற்றும் ஆர். பால்கி போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்தார் இளையராஜா. இதில் பல பாடகர்கள், படங்கள் தேசிய விருது பெற்றன. இளையராஜாவும் 5 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர பத்ம பூஷண் விருது - 2010, பத்ம விபூஷண் விருது- 2018 பெற்றுள்ளார்.

1985 ஆம் ஆண்டு சாகர சங்கமம் (தெலுங்கு), 1987 ஆம் ஆண்டு சிந்து பைரவி (தமிழ்), 1989 ஆம் ஆண்டு ருத்ர வீணை (தெலுங்கு), 2009 ஆம் ஆண்டு பழஸிராஜா (மலையாளம்), 2016 ஆம் ஆண்டு தாரை தப்பட்டை பின்னணி இசைக்காக (தமிழ்) விருது பெற்றார்.

தமிழ் திரையுலகம் மட்டுமல்ல இந்திய அளவில் பின்னணி இசைக்காக மிகவும் மதிக்கப்பட்டவர் இளையராஜா. அவரளவிற்கு வேகமாக யாரும் இசையமைக்கவும் முடியாது ( பலர் வாரக்கணக்கில் ஒரு படத்திற்கு நேரம் எடுத்துக்கொள்ளும்போது இளையராஜா ஒரு நாளைக்கு 4 படம் பின்னணி இசை அமைத்ததாக சொல்வார்கள்) அவரைப் போல் அற்புதமாக இசைமைக்கவும் முடியாது என்பார்கள்.

இளையராஜா ஆரம்ப காலங்களில் 1975 ஆம் ஆண்டுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியிடம் பணியாற்றினார். அப்போது அவரது திறமையைப் பார்த்து, வருங்காலத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளராக இவர் வருவார் என அன்றே சொன்னார் கலீல் சௌத்ரி. இதேபோல் இந்தி திரையுலகின் ஜாம்பவான்கள் நவ்ஷாத், ஆர்.டி.பர்மன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால் போன்றோரும் இளையராஜாவை பாராட்டியுள்ளனர். 'தளபதி' படத்திற்காக 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலுக்கு இளையராஜா பயன்படுத்திய வயலின், அவரது நோட்ஸ் பார்த்து இந்தி படவுலகினர் மிரண்டு போயுள்ளனர்.

வெறுமனே சாதாரண இசையமைப்பாளராக இருக்காமல் இசையின் அத்தனை விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தார் இளையராஜா. அவரது மேற்கத்திய இசை ஞானம் அதை தமிழ் இசையுடன் கலந்து கொடுத்தது இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தமிழில் முதல் 'ஸ்டீரியோ' இசையை 'பிரியா' படத்திலும், 'விக்ரம்' படத்தில் புதுவித நவீன இசை வடிவங்களையும், புன்னகை மன்னன், அஞ்சலி போன்ற படங்களில் வித்தியாசமான இசையையும் வழங்கியவர் இளையராஜா.

இன்றைய முதல்தர இசையமைப்பாளர்கள் குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இளையராஜாவின் குழுவில் பணியாற்றியவர்கள். இளையராஜாவை பற்றி தான் ஏறும் எந்த மேடையானாலும் ஒரு பாடலையாவது சொல்லி புகழ்ந்து தள்ளிவிடுவார் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. அவரது இசை திறமையைக் கண்டு 'இசைஞானி' என்கிற பட்டத்தை வழங்கினார் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி. மேஸ்ட்ரோ என்கிற பட்டமும் இளையராஜாவிற்கு உண்டு.

இளையராஜா 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைப்பட பின்னணி இசை அமைத்துள்ளார். 20,000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது உலக சாதனையாகக் கூட இருக்கலாம். தனது 80 ஆவது வயதில் கடந்த மாதம் 26 ஆம் திகதி மதுரையில் இசைக்கச்சேரி நடத்தினார். இளையராஜா 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் தமிழ் பட உலகம் மட்டுமல்ல தென் இந்திய, மேற்கத்திய உலகையும் கட்டிப் போட்டுள்ளார்.

காற்றுள்ளளவும், காற்றில் இசை உள்ளளவும் இளையராஜாவின் கான கீதங்கள் நம்மை தழுவிக் கொண்டே இருக்கும். மூன்று தலைமுறைகளைத் தாண்டி இசையால் கட்டிப் போட்டுள்ள இளையராஜாவின் இசையில் மிகப் பெரும் பாடகர்கள் டி.எம்.எஸ். ஜேசுதாஸ், எஸ்.பி.பி, பி.சுசிலா, எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன், சித்ரா எனத் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை பாடியுள்ளனர்.

இளையராஜா நமக்கு கிடைத்த நமக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம் என அடிக்கடி சொல்வார் எஸ்.பி.பி. அந்த பொக்கிஷத்துக்கு இன்று மத்திய அரசின் அங்கீகாரமாய் சிவாஜி கணேசனுக்கு பின் இளையராஜா கலைத்துறை மூலம் கௌரவ உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். பண்ணைபுர ராசய்யாவை ராஜ்ய சபா உறுப்பினராக்கியதன் மூலம் அப்பதவி பெருமை கொள்கிறது.    நன்றி தினகரன் 

No comments: