படித்தோம் சொல்கின்றோம் சர்வதேசப் பார்வையுடன் தேவகி கருணாகரனின் கதைகள் அவள் ஒரு பூங்கொத்து கதைத் தொகுதி கூறும் செய்திகள் முருகபூபதி


புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளாகி மூன்று தசாப்த காலமாகிவிட்டது. இக்காலப்பகுதியில், கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த படைப்பிலக்கியவாதிகளின்  ஆக்க இலக்கியப் படைப்புகள் சிறுகதைகளாக, நாவலாக, கவிதையாக ஏராளமான பிரதிகள் வெளிவந்துவிட்டன.

தொடக்கத்தில், தங்கள் தாயக நினைவுகளை சித்திரித்து  எழுதிவந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், படிப்படியாக தாம் வாழும் புகலிட தேசத்தின் வாழ்வுக் கோலங்களையும் தமது படைப்புகளில் பதிவேற்றத் தொடங்கினர்.

தனது பதின்மவயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்


 தமிழ்ச் சேவையில் இசையும் கதையும் எழுதிக்கொண்டிருந்த தேவகி கருணாகரன், பின்னாளில் தனது கணவருடன், அவரது  தொழில் நிமித்தம் ஆபிரிக்க நாட்டுக்கு புலம்பெயர்கிறார்.

அதன்பிறகு அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார். இவர் தனது பதின்மவயதில் விட்டுவிட்ட எழுத்துப்பணியை மீண்டும் 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தவர்.

முன்னர், வானொலிக்காக இசையும் கதையும் எழுதிக்கொண்டிருந்தவர், திருமணமாகி, பிள்ளைகளுக்கும் தாயாகி, அதன்பின்னர் அவர்களின் பிள்ளைகளை அரவணைத்து கொஞ்சி மகிழும் காலகட்டத்தில், ஊடகங்களில் சிறுகதைகள் எழுதத் தொடங்குகிறார்.

தேவகி கருணாகரனின் முதல் கதைத் தொகுதி அன்பின் ஆழம், சென்னையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களின் ஏற்பாட்டில் அவரது மித்ர பதிப்பகத்தினால் வெளியாகின்றது.

தேவகி கருணாகரன், அத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்தும் எழுதுகிறார். இவரது பெரும்பாலான இலக்கியப் பிரதிகள் சிறுகதைகளாகவே அமைந்துவிடுகின்றன.

இலக்கிய இதழ்கள் நடத்தும் சிறுகதைப் போட்டிகளுக்கும் எழுதி பரிசுகள் பெறுகிறார்.

அவ்வாறு தொடர்ந்து எழுதிய பதினைந்து  சிறுகதைகளைத் தொகுத்து தற்போது அவள் ஒரு பூங்கொத்து என்ற பெயரில் வரவாக்கியிருக்கிறார்.

இந்நூலை தமிழ் நாடு சித்தன் புக்ஸ் பதிப்பித்திருக்கிறது.

இலங்கையில் வீரகேசரி, தினக்குரல் வார இதழ்களிலும் ஞானம், ஜீவநதி முதலான மாத இதழ்களிலும் தமிழ்நாட்டில் கல்கி, கணையாழி, கலைமகள், குமுதம் முதலான இதழ்களிலும் தேவகி கருணாகரன் எழுதிய கதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

தேவகியின் வாழ்க்கை, அவரது தாயகமான இலங்கையிலும் அதன்பின்னர் ஆபிரிக்க நாடான நைஜீரியா என்ற இருண்ட தேசத்திலும், அதன்பிறகு உலகில் முதலில் விழிக்கும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியா கண்டத்திலும் படர்ந்திருக்கிறது.

எல்லோருக்கும் வாழ்க்கையானது தரிசனங்களை தந்துகொண்டேயிருக்கும். ஆனால்,  இலக்கியப் படைப்பாளிகள் மாத்திரம்தான் தமது வாழ்வின் தரிசனங்களை உண்மையையும் கற்பனையையும் கலந்து இலக்கியப்பிரதிகளாக படைக்கின்றார்கள்.

தேவகி - தான் வாழ்ந்த மூன்று நாடுகளிலும் கண்ட தரிசனங்களை வாழ்வியல் அனுபவமாக உள்வாங்கிக்கொண்டு தனது சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

தனது தாயகமான இலங்கையில் நீடித்த போர் நெருக்கடியில் அல்லலுற்ற அனுபவங்களை புலம்பெயர்ந்து சென்று வாழநேரிட்ட நாடுகளில் கற்றதையும் பெற்றதையும் ஒப்பீடு செய்து வாசகர்களுக்கு ஒரு கதைசொல்லியாக மாறியிருக்கிறார்.

அதனால், இவரது கதைகளில் செய்திகள் விரவிக்கிடக்கின்றன.  இரண்டாம் உலகப்போரும், நீடித்த இலங்கை உள்நாட்டுப்போரும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களும்  நாடுவிட்டு நாடு அகதிகளாக – நாடோடிகளாக – பரதேசிகளாக சென்றவர்களும் தேவகியின் கதைகளில் பாத்திரங்களாகின்றனர். அதனால், இவரது கதைகளுக்கு சர்வதேசப் பார்வையும் கிட்டுகிறது.

நைஜீரியா, அவுஸ்திரேலியாவை களமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளில் நிலக்காட்சிகளையும் தேவகி சித்திரிக்கின்றார்.

இந்நாடுகளில் எமது தமிழர்களின் வாழ்வுக்கோலங்களில் தலைமுறை இடைவெளி, கலாசாரப்பிரழ்வு,  இரண்டக  சிந்தனை என்பனவற்றையும் துல்லியமாக படம் பிடித்துக் காண்பிக்கின்றார்.

தேவகியின் படைப்புமொழி சிலசந்தர்ப்பங்களில் கட்டுரைப் பாங்கில் அமைந்திருந்தாலும், அவை கூறும் செய்திகளின் ஊடாக வாசகரை கரம் பிடித்து அழைத்துச் செல்கின்றார்.

தனது சிறுகதைகளில்  தேசங்களின் நிலக்காட்சிகளை  காண்பிக்கும் அதே சமயம்,  அங்கு வாழும்  மாந்தர்களை சித்திரிப்பதிலும் கூர்ந்த அவதானத்தை காண்பித்துள்ளார்.

திண்டாடும் பண்பாடு என்ற சிறுகதையில்,  ஒரு முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்படும் பேரக்குழந்தைகளையும் கண்டுவிட்ட ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு சித்திரிக்கின்றார்:

“  காலத்தினதும் வேதனையினதும் தாக்கம் வலைபோல் குறுக்குக் கோடிட்டிருந்த அவரது அழகான முகம் சிவக்க, கூர் நாசியினின்று நீர் வழிய, செப்பனிட்ட குவிந்த அழகான இதழ்கள் துடிக்க, கையில் ஊன்றுகோலின் உதவியுடன்  காரை விட்டிறங்கி வயோதிப கூனலுடன் நடந்தார் விநோதினி. தலையை நிமிர்த்தி குழிவிழுந்து பழுப்பேறியிருந்த கண்களால் அந்த கட்டிடத்தை நோக்க, சித்திரை மாத இலையுதிர் கால சூரியனின் ஒளியில் அவர் தலைமுடி வெள்ளை  வெளீரென மின்னியது.  “

ஒரு முதிய பெண்ணின் தோற்றத்தை சித்திரிக்கின்ற அதேவேளை, அவள் தனது அந்திம காலத்தில் அடைக்கலம் புகும் கட்டிடத்துள் பிரவேசிக்கும்போது,  இலையுதிர்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதையும் வாழ்வியல் கண்ணோட்டத்துடனும்  சொல்கின்றார்.

இத்தன்மைகளை  இத்தொகுப்பில் வேறு கதைகளிலும் காண்பிக்கின்றார்.

தேவகி, தனது சிறுகதைகளில் மாந்தரின் இயல்புகளையும் இயற்கையையும் இணைக்கின்றார்.

அத்துடன் தாயகத்தின் நீங்காத நினைவுகளையும் கதைசொல்லியாக பதிவுசெய்துகொண்டே புகலிட வாழ்வையும் காண்பிக்கின்றார்.

உலகப் போர்களாயிருந்தாலென்ன, உள்நாட்டுப் போர்களாக  இருந்தாலென்ன, அவற்றால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் பெண்கள்தான்.  தேவகி கருணாகரன் அவ்வாறு பாதிப்புற்ற பெண்களின் பக்கமே கருணையுள்ளத்துடன் நிற்கிறார்.  

பெண்களின்  மென்மையான உணர்வுகளை துல்லியமாகச் சித்திரித்துள்ள தேவகி கருணாகரன்,  அவர்களின் ஆன்ம பலத்தையும் சில கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதனால், அவள் ஒரு பூங்கொத்து கதைத் தொகுதி, ஒற்றைப்பூவின் மகரந்தங்களை மாத்திரமன்றி, பலதரப்பட்ட மகரந்தங்களையும் பரவச்செய்கிறது.

தேவகி கருணாகரனுக்கு எமது வாழ்த்துக்கள்.

---0---

 

  



No comments: