இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆர்ப்பாட்டம்; இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

அசாதாரண நிலைமைக்கு சில நாட்களில் சுமுக தீர்வு

மருத்துவர்கள் 1500 பேர் கடந்த 06 மாதங்களில் வெளிநாடுகளுக்கு

திருகோணமலையில் 1,000 ஏக்கரில் பயறு பயிரிட தீர்மானம்

விமான நிலைய வண்டிகளின் கட்டணங்களில் அதிகரிப்பு


ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

- ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய
- கட்சித் தலைவர்களுக்கு ரணில் அவசர அழைப்பு
- அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் பி.ப. 4 மணிக்கு
- ஜனாதிபதியை விலகுமாறு ஆளும் கட்சி எம்.பிக்கள் கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு தெரிவித்து தற்போது (09) கொழும்பில் இடம்பெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது.

 

 

 

 

பல்வேறு தடைகள், கண்ணீர்ப்புகை பிரயோகங்களையும் மீறி மக்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்

இதேவேளை, பாராளுமன்றத்தை அவசரசமாக கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமச்ஙிக சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அளவில் பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இன்று (09) பி.ப. 4.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 

 

இந்நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்காளன டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமண, நாலக கொடஹேவா உள்ளிட்ட 16 பேர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

 

 நன்றி தினகரன் 





ஆர்ப்பாட்டம்; இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

இன்று (08) இரவு 9.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை, மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸை, கொழும்பு வடக்கு,  தெற்கு, மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்தும் நாளையதினம் (09) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு தொடர்பில் பொலிஸ் மா அதிபர்  வெளியிட்டுள்ள குறித்த அறிவித்தலுக்கமைய, குறித்த பொலிஸ் பிரிவுகளில் உள்ளவர்கள் தமது வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும், பொலிஸ் ஊரடங்கை மீறுவது, பொதுமக்கள் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்வதை தடுப்பதாக அமையுமென கருதி, இறுக்கமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் ஊடாக பயணிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்று வழியை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினகரன் 







அசாதாரண நிலைமைக்கு சில நாட்களில் சுமுக தீர்வு

இன்றைய போராட்டம் எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி

எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத் திட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் நிலைமைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (08) தெரிவித்துள்ளார்.

மிகவும் திட்டமிட்ட மற்றும் நீண்ட முயற்சிக்குப் பிறகு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வுகள் காணப்படும் நிலையில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் வருத்தமளிக்கிறது எனவும், இது நாட்டை மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதாக ஜனாதிபதி ஊடக அறிக்கை மூலம் கூறியுள்ளார்.

அத்தியாவசிய மருந்துகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இந்திய கடன் வசதிகளின் கீழ் 65,000 மெற்றிக் தொன் உரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 44,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றி வரும் முதலாவது கப்பல் இன்று (09) நாட்டை வந்தடையவுள்ளது. ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து பெறப்படும்.

அத்தோடு பல்வேறு விவசாயத் திட்டங்களின் கீழ், நாட்டில் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21வது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சிக்கல் நிலைமைக்கு வெற்றிகரமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்களை ஏமாற்றி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வருந்தத்தக்கது என்றும் ஜனாதிபதி கூறினார்.எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. பெரும் பணக்கார நாடுகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு தேடுகின்றன.

சர்வகட்சி ஆட்சியில் இந்தப் பின்னணியில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்ததால் .ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் கடன் உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி அமைக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளின் தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் எதிர்கால சந்ததிக்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.   நன்றி தினகரன் 






மருத்துவர்கள் 1500 பேர் கடந்த 06 மாதங்களில் வெளிநாடுகளுக்கு

ஹர்ஷ டி சில்வா MP டுவிட்டரில் கவலை

இந்த வருடத்தின் கடந்த 6 மாத காலப்பகுதியில் இலங்கையில் இருந்து சுமார் 1,500 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில்,

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் இலங்கை மருத்துவ சபையினால் “நல்ல நிலைப்பாட்டிற்கான சான்றிதழ்” (Certificate of Good Standing) பெறுவதற்காக 1,486 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கமைய, கடந்த 6 மாதங்களில் சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு, ஜனவரி -138, பெப்ரவரி- 172, மார்ச்- 198, ஏப்ரல்- 214, மே- 315, ஜூன்-449ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    நன்றி தினகரன் 




திருகோணமலையில் 1,000 ஏக்கரில் பயறு பயிரிட தீர்மானம்

- அடுத்த போகத்திற்கு வயலுக்கு அவசியமான நைதரசன் கிடைக்கும்

கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யஹம்பத்தின் ஆலோசனைக்கமைய, கோமரங்கடவல மற்றும் மொறவெவ பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,000 ஏக்கரில் பயறு பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் இடைப் போகமாக அதனை மேற்கொள்ள இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

'வெவ் கம் புபுதுவ' (குளக் கிராமங்கள் மலர்ச்சி) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிடும் விசேட கூட்டம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, இதற்கு அவசியமான பயறு விதைகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டது.

இடைப் போகமாக பயறு செய்கையை மேற்கொள்ளும் போது, அதன் மூலம் அடுத்த போகத்தில் நெல் வயலுக்கு தேவையான நைதரசன் கிடைப்பது இதன்  விசேட அம்சமாகும்.

இக்கலந்துரையாடலில், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி எம். ஹுசைன், கோமரங்கடவெல மற்றும் மொறவெவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், உரிய திட்ட பணிப்பாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.    நன்றி தினகரன் 




விமான நிலைய வண்டிகளின் கட்டணங்களில் அதிகரிப்பு

பயணிகள் அதிர்ச்சி; யாழ்.செல்ல ரூ.73,000

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வாடகை வண்டிகளுக்கான புதிய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வண்டியின் புதிய கட்டணத்தை பார்க்கும் பொழுது, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் செல்ல முடியும் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வாடகை வண்டியின் கட்டணம் 73,000 ரூபாவை அண்மித்துள்ளது.

இலங்கையில் இருந்து அண்டை நாடான இந்தியாவிற்கு விமான டிக்கெட்டின் சராசரி விலை சுமார் 70,000 ரூபாவாகும்.ணம் செல்லும் கட்டணத்தை விடவும் இந்தியாவிற்கு விமானத்தில் செல்வதற்கு குறைவான பணமே தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


No comments: