எதற்கும் பெயர் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆதிகால மனிதர்களும் ஒருவரை ஒருவர் ஏதேனும் பெயர் சொல்லித்தான் அழைத்திருக்கவேண்டும்.
எனது பெற்றோர்
எனக்கு வைத்த பெயரில் அழைப்பவர்களும், பூபதி என்று சுருக்கமாக அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், எனது வாழ்நாளில் என்னை “ முருகு “ என்று அழைத்தவர்
ஒரே ஒருவர்தான்.
அவ்வாறு
அதற்கு முன்பும், பின்பும் அந்த ஒருவரைத் தவிர வேறு எவரும் அழைக்கவில்லை. அப்படி அன்பொழுக அழைத்தவர், தனது அந்திம காலத்தில்
ஏன் எனக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டு, அவதூறும் பரப்பினார் என்பதற்கான விளக்கமும்
என்னிடம் இருந்தது. இந்தத் தொடரில், நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய பகுதிகள்
வரும்போது தெரிவிப்பேன்.
பொறுக்க முடியாத கட்டத்தில் நானும் அவருடன் மோதநேர்ந்தது.
அந்த மோதல்கள் யாவும் எழுத்துவடிவில் வந்தன. இன்றும் இணையத்தில் அவை பரவிக்கிடக்கின்றன.
எனினும்
அவரது மேதா விலாசத்தை என்றைக்கும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.
1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி எனது Brunswick குடியிருப்புக்கு ஒரு கடிதம்
வந்தது. அது அண்டை மாநிலமான நியுசவுத்வேல்ஸிலிருந்து வந்திருந்தது.
எழுதியவர் ஈழத்து மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை.
எஸ்.பொ.
என எமது இலக்கிய உலகத்தினரால் அழைக்கப்பட்ட
அவரிடமிருந்து வந்திருந்த அக்கடிதம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
யாரோ சிட்னிக்கு
வந்தவர்களிடம் அவர் கொழும்பிலிருந்து கொடுத்தனுப்பிய கடிதமாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டு
திறந்து பார்த்தேன்.
8/43,
Russell Street, N.S.W. 2135 என்ற முகவரியிலிருந்து எஸ்.பொ. எழுதியிருந்த அக்கடிதம் அன்புள்ள முருகுவுக்கு எனத் தொடங்கியிருந்தது.
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட அக்கடிதம் இன்றளவும் என்னிடம் பொக்கிஷமாக
பேணப்படுகிறது.
அதனால் எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் தேவை கருதி, வாசகர்களுடன் அக்கடிதத்தை பகிர்ந்துகொள்கின்றேன். பின்னாளில் வெளிவந்த பனியும் பனையும் ( புகலிட எழுத்தாளர்களின் கதைக்கோவை ) நூலின் ரிஷிமூலத்திற்கு அவர் அன்று எழுதிய அக்கடிதமும் காரணமாக அமையலாம்.
எஸ்.பொ. வின் உரையாடலும் எழுத்தும் வெகு சுவரசியமானவை.
இக்கடிதத்திலும்
வாசகர்கள் அதனை அவதானிக்கலாம்.
அதனால்,
அதனை இங்கு முழுமையாகத் தருகின்றேன்.
அன்புள்ள
முருகுவுக்கு வணக்கம். நலம். நலமறிய நாட்டம்.
நான் அண்மையிலே
கொழும்பு சென்றிருந்தபொழுது, நண்பர் ராஜகோபாலையும் உங்களையும் சந்திப்பதற்காக வீரகேசரி
அலுவலகம் சென்றிருந்தேன். அப்பொழுதுதான் நீங்கள் அவுஸ்ரேலியா வந்திருக்கும் செய்தியை
நண்பர் ராஜகோபால் தெரிவித்தார். அத்துடன் உங்கள் முகவரியும் தந்தார்.
வீரகேசரியிலே ‘ ஆபிரிக்காவில் ஒரு தவம் ‘ என்கிற கட்டுரைத் தொடரை எழுதுவதற்குத் திட்டமிட்டு, முதலாவது பகுதியான ‘ துறவு ‘ என்கிற பாகத்தினை நண்பர் ராஜகோபாலுக்கு அனுப்பிவைத்த கையுடன், இந்தக்கடிதத்தினை உங்களுக்கு எழுதுவதற்காக அமருகின்றேன். நீங்கள் என்னை வீரகேசரி அலுவலகத்திலே பேட்டி கண்டபொழுது, இருவரும் சேர்ந்து
எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் ஒரு பிரதியை உங்களுக்கு அனுப்பிவைக்கின்றேன். அந்தப்பேட்டியை நான் பார்க்க முடியவில்லை. அந்தப்பேட்டியின் ஒரு பிரதி தங்கள் வசம் இருப்பின் ஒரு Photocopy அனுப்ப முடியுமாயின், அனுப்பிவைக்கவும். அதனை வாசிக்கத் தாகமாக இருக்கின்றது.
நைஜீரியாவிலே
மிகவும் ஓய்வான – மிகவும் மெதுவாகச் செல்லும் ஒரு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவன் நான்.
ஆனால் இங்கு, எந்திர கதியிலே நடமாடுபவர்களுக்கு மத்தியிலே, செயற்கையான புன்னகைகளை உதட்டிலே
ஏந்திக்கொண்டு நடமாடுபவர்களுக்கு மத்தியிலே வாழ்வது கஷ்டமாக இருக்கின்றது. நாம் எப்படி வேண்டுமானாலும் நைஜீரியாவிலே வாழலாம்.
யாரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
குடி – கூத்தி
என்பன ஆண்மையின் பிரிக்க முடியாத அம்ஸம் என்று அவர்களாலே அங்கீகரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலை
ஓரமாக மல – சலம் கழித்தல் அங்கே மனிதனுடைய அடிப்படை உரிமையாகும். இங்கு என் குசினியிலே
சமைக்கும் கறியின் மணம் அடுத்த அறையிலே வாழ்பவனுடைய மூக்கினைத் தொடக்கூடாதாம்.
நாகரீகம் என்கிற பெயரால், எப்படியெல்லாம் ஆமை ஓட்டுக்குள்ளே புகுந்துகொண்டோம் என்பதை இங்குதான் பூரணமாகக் புரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வாறு மன உள்ளுணர்வுகளுக்கு வடிகால் கிடைக்காத காரணத்தினாலேதான், எண்ணிப்பார்க்க இயலாத கோரமான கற்பழிப்புகள் எல்லாம் இங்கே நடைபெறுகின்றன போலும் !
நான் என்
மகனுடன் இங்கே தங்கியிருக்கின்றேன். நைஜீரிய வாழ்க்கைக்கு ‘வாழி
‘ பாடிவிட்டேன். முன்னர்போல அந்நியச்செலாவணி கிடைக்காது போனமைதான் காரணம். சென்னையில்
புத்தக பிரசுரம் ஒன்று தொடங்க உத்தேசம். என்வசம் பிரசுரிக்கப்படாத என் படைப்புகளாகவே
ஒரு இருபத்தியைந்து நூல்கள் தேறும்.
ஆபிரிக்க
கண்டத்தைப்பற்றி நிறைய அறிந்துள்ளேன். பல நூல்கள் எழுதலாம். அவுஸ்திரேலியாவைப்பற்றியும்
ஒரு நூல் எழுதுவதற்கு ஆசை. மகனுடனும் மருமகளுடனும் தங்கிக்கொண்டு என் நோக்கிலே அவுஸ்திரேலியாவைத்
தரிசித்தல் சாலாததாகும்.
நான் அவுஸ்திரேலியாவிலுள்ள – குறிப்பாக New South Wales - Sidney
யிலுள்ள எழுத்தாளர் அமைப்புகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றேன். அவர்களுடன் தொடர்புகொண்டு நூலை எழுதி முடிக்கும்வரையிலும் Work Permit ஒன்று எடுக்கமுடியுமா? அவ்வாறு எழுத்துப்பணியுடன் சம்பந்தப்பட்ட ஒரு வேலையிலே அமர்ந்துகொண்டால், சுயம்புவாக என் நோக்கிலே அவுஸ்திரேலியாவை தரிசிக்க முடியுமல்லவா?
இவை குறித்து உங்களாலே ஏதாவது பயனுள்ள குறிப்புகள் தரமுடியுமாயின் மிக்க உதவியாக இருக்கும். இதனை நீங்கள் எஸ்.பொ. வுக்குச் செய்யும் தனிப்பட்ட உதவியாக மட்டும் கொள்ளாது,
தமிழ் எழுத்துப்பணிக்குச் செய்யும் பங்களிப்பாகவும் கருதி உதவ முன்வருவீர்கள் என்று நம்புகின்றேன்.
அவுஸ்திரேலியாவுக்கு
வந்த பின்னரும் தங்களுடைய தமிழ் எழுத்துப்பணி தொடர்வதினாலேதான் இவ்வளவு உரிமையுடனும்,
விரிவாகவும் எழுதுகின்றேன்.
எனக்கு மருமகன்
முறையான ஒருவர் Melbourne நகரிலே வாழ்கின்றார். போவதற்கு முன்னர் அவரைப்பார்ப்பதற்காக அங்கு வருதலும் சாத்தியம்.
தற்செயலாக Melbourne வந்தால், உங்களை பார்த்து அளவளாவுதலை என் மகிழ்ச்சிகளுள்
ஒன்றாக கருதுவேன். அப்படி Melbourne வரும் பட்சத்திலே, Brunswick என்கிற உங்கள் பகுதிக்கு எப்படி வருதல் சாத்தியம் என்பதைச் சுருக்கமாக எழுதி
அனுப்பவும். ஆண்டவன் சித்தம் அவ்வாறு அமைந்தாற்றான் நமது சந்திப்பு சாத்தியமாகும்.
தங்களைத் தொலைபேசியிலே தொடர்புகொள்ள முடியுமா?
என் தொலைபேசி
எண் : (02 )
744 1835.
மிகுதி பதில்
கண்டு.
என்றும்
அன்புள்ள
எஸ்.பொன்னுத்துரை.
19/1/89.
இக்கடிதத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது மனதில் பேருவகை எழுந்தது. தாமதிக்காமல் எஸ்.பொ.வுடன் உரையாடினேன். அவரும்
அதனை எதிர்பார்க்கவில்லை.
பிரிந்தவர்
கூடினால் பேசவும் வேண்டுமா..?
அவர் நைஜீரியாவுக்கு
புறப்படுவதற்கு முன்னர் கொழும்பு கொச்சிக்கடையில் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின்
இல்லத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்வு நடந்தது.
அதில் நானும் கலந்துகொண்டேன். அத்துடன் எழுத்தாளர்கள் ம. பாலசிங்கம், தெளிவத்தை ஜோசப்,
மு. கனகராஜன் ஆகியோரும் அந்த சந்திப்பு வருகை தந்தனர்.
எஸ். பொ.
மீண்டும் ஒரு வருடம் கழித்து கொழும்பு வந்தசமயத்தில் என்னைப்பார்க்க வீரகேசரி அலுவலகம்
வந்தார். அப்போது அங்கே சரஸ்வதி பூசைக்கான ஏற்பாடுகள் அச்சுக்கோப்பாளர் பகுதியில் நடந்துகொண்டிருந்தது.
அந்த குறுகிய
அவகாசத்தில் நான் அவரை நேர்காணல் செய்து வீரகேசரி வாரவெளியீட்டில் பின்னர் எழுதியிருந்தேன்.
அவருடன்
வந்த ஒரு இளைஞர் எம்மிருவரையும் படம் எடுத்தார். அதன் பிரதியையும் அவர் ஞாபகத்துடன்
எடுத்து வந்து சிட்னியிலிருந்து அனுப்பியிருந்தார்.
அவர் அன்று
எழுதிய கடிதத்தின் உள்ளடக்கத்திற்கு தேவைப்பட்ட பதில்களை தொலைபேசியூடாகத் தெரிவித்தேன்.
எழுத்தாளர் அருண். விஜயராணியின் அண்ணன் ரவீந்திரனும் சட்டத்தரணியாக இருக்கிறார். நீங்கள் மெல்பனுக்கு வாருங்கள். அவரிடம் ஆலோசனைகள் கேட்கலாம் என்றேன். அத்துடன் அச்சமயம் வெளிவந்திருந்த எனது இரண்டாவது கதைத் தொகுதி சமாந்தரங்கள் பற்றியும் அவரிடம் குறிப்பிட்டு, இன்றே அந்த நூலை
உங்களுக்கு தபாலில் அனுப்புகின்றேன். விரைவில் இதர பிரதிகள் சென்னையிலிருந்து வந்துவிடும். அதன் வெளியீட்டு அரங்கிற்கு நாள் குறித்துவிட்டு சொல்கின்றேன். நீங்கள்தான் பிரதம பேச்சாளர் எனச்சொல்லிவிட்டு, சிட்னியில்தான் எழுத்தாளர் மாத்தளைசோமுவும் இருக்கிறார். அவரது முகவரி, தொலைபேசி இலக்கமும் அனுப்பிவைக்கின்றேன் . “ என்றேன்.
எனது அழைப்பு
அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்திருக்கவேண்டும்.
அவருக்கு
சமாந்தரங்கள் பிரதி கிடைத்ததும் ஆறுதலாக வாசித்துவிட்டு, நான்கு பக்கங்களில் விரிவான
விமர்சனம் எழுதி அனுப்பினார்.
அந்த விமர்சனம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசை பத்திரிகையிலும் கொழும்பு தினகரன் வார மஞ்சரியிலும்
வெளியானது.
எஸ்.பொ.
அந்தக்கட்டுரைக்கு முருகபூபதியின் சமாந்தரங்கள் : ஒரு குணமாய்வு என்றே தலைப்பிட்டிருந்தார்.
வழக்கமாக
எமது எழுத்தாளர்கள் நூல் விமர்சனம், மதிப்பீடு, நூல் அறிமுகம், வாசிப்பு அனுபவம் என்றுதான்
எழுதுவது வழக்கம். ஆனால், எஸ்.பொ. குணமாய்வு என்று பதிவிட்டிருந்தார்.
அந்த நீண்ட
குணமாய்வில் முதல் இரண்டு பெரிய பந்திகள் எனது சிறுகதைகளுக்கு அப்பாற்பட்ட வேறு விடயங்களை
பேசியிருந்தன.
ஊடகங்கள்
அதனை வெளியிடுவதை தவிர்க்கும் என்பது எனது பட்டறிவு. அதனால், அந்த முதல் பந்திகளை தவிர்த்து
அதற்கு மேல் சிவப்பு நிறத்தில் கோடுகளை குறுக்காக எழுதிவிட்டே ஊடகங்களுக்கு அனுப்பினேன். திசையிலும், தினகரன் வார
மஞ்சரியிலும் அவ்வாறே வெளிவந்தன. அவற்றின் நறுக்குகளையும் எஸ். பொ. வுக்கு பின்னர் அனுப்பினேன்.
மீண்டும்
எஸ். பொ. எழுதத் தொடங்குகிறார் என்பதில் இலங்கையில் பல எழுத்தாளர்கள் மகிழ்ச்சியும்
அதேசமயம் கலக்கத்திலும் ஆழ்ந்தனர்.
அவர் நைஜீரியாவில்
தவ வாழ்க்கைதான் மேற்கொண்டிருக்கவேண்டும். அங்கிருந்து அவர் ஆக்க இலக்கியப்படைப்புகள்
எதனையும் இலங்கை இதழ்களுக்கு அனுப்பவில்லை.
ஒருவருடத்தின்
பின்னர் தாயகம் வந்தசமயத்தில்தான் எனது முன்னிலையில் அவர் எழுதிய “ஆபிரிக்காவில் ஒரு தவம் “ என்ற தொடரின் முன்னுரை அங்கத்தை வாரவெளியீடு
ஆசிரியர் பொன். ராஜகோபாலிடம் கொடுத்தார்.
ஆனால், அதனை
அவர் பிரசுரத்திற்கு அனுப்பாமல் வைத்திருந்தார். நானும் பல தடவை கேட்டேன். முழு அத்தியாயங்களும்
வந்தபின்னர் பிரசுரிக்கலாம் என்றார்.
நானும் 1987 பெப்ரவரியில் புறப்பட்டு வந்துவிட்டேன்.
என்னைத்தேடிச்சென்ற எஸ்.பொ., சிட்னிக்கு வந்ததும் மீண்டும் தொடர்புகொண்டார்.
சமாந்தரங்கள்
நூல் பற்றிய அவரது குணமாய்வின் தொடக்கப் பந்திகளும்
சுவராசியமானவை. இதுவரையில் எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராத அந்தப்பகுதிகளை இங்கே தருகின்றேன்.
“ எட்டாண்டு இலக்கிய வனவாசத்திற்குப்பின், எனக்கு
ஒரு சுகமான இலக்கிய அனுபவம் பாலித்துள்ளது. அதனை இலக்கியச் சுவைஞருடன் பங்கிடுதல் சுகமே.
சுகம் அகலித்தல் சங்கையானது.
இலக்கியத்தின்
கதைக்கலைத்துறை அடைந்துள்ள வளர்ச்சியை – அன்றேல் தேக்கத்தை – மட்டிடல் வேண்டும் என்கிற
அவதி என்னுள். இந்த அவதி இலக்கிய தாகந் சார்ந்தது. சென்ற ஆண்டின் இறுதியில், இரண்டு
மாத காலம் சென்னையிலே தங்க நேர்ந்தது. தினந் தினம், வண்ண வண்ண கோலங்களிலே பத்திரிகைக்
கடையிலே தொங்கிய அத்தனை சஞ்சிகைகளையும் ‘ சப்பித் ‘ தீர்த்தேன். ஐயோ, என்ன அவதி ! ஒரு சொட்டுச் சாறுதானும்
தேறவில்லை. அத்தனையும் சக்கை! ‘ ஓட்டோ சங்கரின்
‘சாகஸங்கள் ‘ தொட்டு, நிரோஷாவின் “ கிசு கிசு “ வரை மொத்தமும் குழாயடிச் சங்கதிகள்.
கூவத்தின் நாற்றம். என்னருமைத் தமிழே ! சஞ்சிகை என்னும் பெயரிலே இந்த ஊத்தைச் ‘சதை ‘ வியாபாரம் தேவைதானா?
‘ இலக்கியம்… என்ன சார், இலக்கியம் ? …. மக்கள் விரும்புவதைத்தானே
கொடுக்கின்றோம்…? பத்திரிகைத் தொழிலும் பிஸினஸ்தான்…! என்று ஞானோபதேசம் வேறு. அட பாவிகளா!
மக்கள் விரும்புகிறார்கள் என்றால், பெற்ற தாயைக்கூட அம்மணமாக பத்திரிகைக் கடையிலே நிறுத்தக்கூடிய ‘ தர்மவான்கள் ! ‘ இதைக்கேட்க நாதியற்று, ‘ பரபரப்புச் செய்திகள் ‘ என்கிற முந்தானை முடிச்சுகளிலே தொங்குவதுதான்
சுகமெனக் காலங் கழிக்கும் பொழுது, இலக்கியமாவது மண்ணாவது… ஓ, விரக்தி ?
விரக்தி
ஏற்படும்பொழுது பழங்கணக்குப் பார்த்தல் மனித சுபாவம். அறுபதுகளிலே தமிழீழத்தில் ஓர்மம்
பெற்றிருந்த இலக்கிய சர்ச்சைகளை அசைபோடுகின்றேன்.
‘
மண்வாசனை ‘ என்றும், ‘யதார்த்தம்
‘என்றும் ‘ முற்போக்கு ‘ என்றும் , சுயம் ‘ நற்போக்கு
‘ என்றும் வார்த்தைகளை வைத்து நாம் ஆடிய சந்நதனங்களும், நடத்திய சமர்களும் கொஞ்சமா?
நேற்றைய வரலாற்றில் தமிழ்ப் போராட்டக் குழுக்களுக்குள் நடைபெற்ற மோதுதல்கள் கெட்டது
போங்கள்!
துப்பாக்கிகள்
இல்லை என்றால் என்ன? …. கதிரைகள் என்ன, பட்டாசுகள் என்ன, கூழ் முட்டைகள் என்ன… எல்லாமே
கனவாய் , பழங்கதையாய்… இந்த விரக்திகளுக்கு ஒத்தடம் போடுதல் சுகமா? ஆம், ஒத்தடம் போடுவது
போல அமைந்துள்ளது முருகபூபதியின் ‘ சமாந்தரங்கள்
‘என்னும் சிறுகதைத் தொகை… இலக்கியம் என்னும் பெயரால் நடைபெறும் கலப்பட வியாபார
மசுவாதங்களை எதிர்த்து இலக்கிய சத்தியங்களும் தேறலாம் என்கிற நம்பிக்கையை அது தருகின்றது.
எத்தகைய சுகம் !
இந்தத் தொடக்கப்
பகுதியின் இறுதியில் எஸ்.பொ. குறிப்பிட்டிருந்த
‘ மசுவாதங்களை “ என்கிற
பிரயோகம் என்னை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த சொற்பதம்
எங்கள் நீர்கொழும்பூரில் வாழும் கடற்றொழிலாளர் சமூகத்தினரின் பேச்சு வழக்கில் அன்றாடம்
பிரயோகிக்கப்படுவது.
எனது ஆரம்ப
காலக்கதைகளில் ( மீனவர் சமூகம் பற்றிய கதைகளில் ) இந்தச்சொல் அடிக்கடி வந்திருக்கிறது.
இந்த குணமாய்வின்
தொடக்கத்தில் எஸ். பொ. குறிப்பிட்ட ஓட்டோ சங்கரின் கதையும் திகில் நிரம்பியது.
சென்னையில்
1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லலிதா, சுடலை, சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய ஆறுபேரை கொலைசெய்து புதைத்த - எரித்த ஒரு
சீரியல் கில்லர்.
1984 ஆம் ஆண்டு சென்னையில் வெளிவந்த இயக்குநர் மணிவண்ணனின்
இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள்
திரைப்படத்தை பார்த்திருக்கும் அந்த ஓட்டோ சங்கர், அந்தப்படத்தின் பாணியிலேயே
அக்கொலைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்திருந்தான்.
அவன் கைதானதன் பின்பு வழங்கிய
வாக்குமூலத்தில் இதுபற்றியும் குறிப்பிட்டிருந்தான்.
நூறாவது நாள் திரைப்படத்தை
நானும் 1984 ஆம் ஆண்டு சென்னை சென்றவேளையில் கமலா திரையரங்கில் பார்த்தேன்.
ஓட்டோ சங்கருக்கு 1995 ஆம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஆட்டோ சங்கர் என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி தொடர்
மெகா சீரியலை ஒளிபரப்பியது.
74 பகுதிகளைக் ( Episode ) கொண்ட இந்த தொலைக்காட்சித் தொடரை எழுதி இயக்கியவரும்
ஒரு எழுத்தாளர்தான். அவர் பெயர் கவுதமன். இவர் ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு
கதையையும் அவ்வாறு தொலைக்காட்சித் தொடராக எடுக்கவிரும்பியவர். சந்தனக்கடத்தல் வீரப்பன்
பற்றி சந்தனக்காடு எடுத்தவர்.
எஸ்.பொ. , ஜெயகாந்தன், மணிவண்ணன்,
கவுதமன் ஆகியோரெல்லாம் எழுத்தாளர்கள்தான்.
அவரவர் பார்வையில்தான் எத்தனை
கோணங்கள்.
( தொடரும் )
No comments:
Post a Comment