மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
தங்கம்மா எங்களம்மா சமயவழி நின்றவம்மா
திங்களணி எம்பிரானைத் தினமெண்னும் தங்கம்மா
மங்கலமாம் சுடராக வலம்வந்தார் மாநிலத்தில்
இல்லறத்தில் இணையாமல் நல்லறத்தில் இணைந்தாரே
உள்ளமதில் உறுபொருளை ஊன்றியே விதைத்தாரே
ஊர்சிறக்க வாழ்நாளை உவந்தளித்தார் அம்மாவும்
பார்முழுக்க அவர்நாமம் பரவியே நிற்கிறதே
ஆசானாய் கால்பதித்து ஆன்மீகம் தேர்ந்தெடுத்தார்
ஆசையுடன் அரனடியை அவரகமும் பற்றியதே
மாசுமறு வணுகாமல் வழிகண்டார் அம்மாவும்
காசினியில் யாவருமே கைகூப்ப வாழ்ந்தாரே
மெய்யான பரம்பொருளை விலகிவிடா திருந்தனரே
அரனடியார் பாதையிலே அவர்செல்ல விரும்பினரே
அதனாலே அவர்பாதை அனைவரகம் அமர்ந்ததுவே
நாயன்மார் சிந்தனையில் நல்லதமிழ் தேர்ந்தெடுத்து
சங்கத் தமிழோடு சந்தத் தமிழுரைத்தார்
பக்தியொடு பக்குவத்தைப் பாங்காக எடுத்துரைக்க
எங்களம்மா தங்கம்மா ஏகிநின்றார் பலவிடங்கள்
நல்லைநகர் நாவலரை நாம்மறக்க மாட்டோமே
அவ்வழியில் செல்லவல்லார் யார்வருவார் எனநினைத்தோம்
எங்களம்மா தங்கம்மா வந்தமைந்தார் அந்நிலையில்
அந்தத் திருமகளை அகமிருத்திப் போற்றுவமே
சைவத்தைத் தமிழைக் காக்கவந்த காவலனாய்
நல்லைநகர் பெருமானும் நம்நாட்டில் பிறந்தனரே
அவர்பிறந்து பலகாலம் ஆனததன் பின்னாலே
ஆலயத்தைத் தேர்தெடுத்து ஆற்றினார் சொற்பெருக்கை
அகமிருக்கும் அழுக்குகளை அகற்றிவிடக் கருத்துரைத்தார்
அம்மாவின் சொற்பெருக்கை அடியார்கள் பருகிநின்றார்
ஆலயத்தை வாழ்வாக்கி அம்மாவும் அமைந்துநின்றார்
தெல்லிநகர் பதியினையே தேர்ந்தெடுத்தார் எங்களம்மா
நல்லிதயம் மலர்ந்ததனால் நற்பணிகள் பலதொடர்ந்தார்
அல்லல்படும் மக்களினை அடையாளம் அவர்கண்டார்
அரவணைத்து கைகொடுத்து அவர்வாழ வழிவகுத்தார்
துர்க்கையம்மன் சன்னதியைத் துயர்துடைக்கும் இடமாக்கி
சாந்தி நிலையமாய் வளர்த்துநின்றார் எங்களம்மா
தங்கம்மா எனும்நாமம் சஞ்சலத்தைப் போக்குதற்கு
தக்கதொரு மருந்தாக அமைந்துமே இருந்ததுவே
ஆன்மீகம் என்பதற்கு அவர்விளக்கம் கண்டார்கள்
அல்லலினைப் போக்குவதை அகமிருத்தி நின்றார்கள்
ஆணவத்தை வெறுத்தார்கள் அன்புநிலை அணைத்தார்கள்
ஆர்மனமும் நோகாமல் அவருரைத்தார் நன்மொழிகள்
பல்கலைக் கழகத்தார் வழங்கிநின்றார் பட்டத்தை
பலசபைகள் பல்லமைப்பும் வழங்கினார் பட்டமெலாம்
என்றாலும் அவர்பெயரில் இணைந்த ஒருபட்டமாய்
சிவத்தமிழ் செல்வியே தெரிகிறது ஒளியாக
No comments:
Post a Comment