தவப்புதல்வன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 ஆரம்பத்தில் ஜெமினி,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் போன்ற


நடிகர்களை வைத்து படம் எடுத்து வந்த முக்தா பிலிம்ஸார் சிவாஜியின் நட்பினைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தொடர்ந்து படம் எடுக்க ஆரம்பித்தனர்.அந்த வகையில் முதலில் நிறை குடம்,தொடர்ந்து அருணோதயம், ஆகிய படங்களை தயாரித்தவர்கள் மூன்றாவதாக தவப்புதல்வன் படத்தை 1972ல் தயாரித்தார்கள்.தேவர் பிலிம்ஸைப் போலவே அண்ணன் ராமசாமி தயாரிக்க தம்பி சீனிவாசன் படத்தை டைரக்ட் செய்தார்.


முக்தா பிலிம்ஸ் படங்களின் கதாநாயகன் பொதுவாக

பவீனமானவனாகவும்,பிறருக்கு உதவப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்பவனாகவும் சித்திரிக்கப்படுவான்.இந்தப் படத்திலும் அது தொடர்ந்தது.பணக்கார பிள்ளையான நிர்மல் ஓர் இசைக் கலைஞன்.கிளப் ஒன்றின் மானேஜராக இருக்கும் தன் நண்பன் ஜேம்ஸின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவனுக்கு உதவி செய்வதாக கிளப்பில் இடம் பெறும் நடன நிகழ்ச்சியில் வாத்தியம் இசைக்க உடன்படுகிறான்.நடனமாடும் பெண்ணான விமலா,நிர்மல் பணக்காரன் என்பதை அறிந்து அவன் சொத்துக்களை அபகரிக்க அவனை திருமணம் செய்ய தன் அண்ணன் ஜம்புவுடன் சேர்ந்து திட்டம் இடுகிறாள்.இவர்களின் சதியால் நிர்மலுக்கும் அவன் காதலி வசந்திக்கு நடக்கவிருக்கும் திருமணமும் நின்று விடுகிறது. இப்படி அமைந்த படத்தின் கதையின் கதாநாயகனிடம் காணப்படும் ஒரு குறையே விமலாவின் கை ஓங்க காரணமாகிறது.

எந்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் தயங்காமல் நடிக்கக் கூடிய சிவாஜி இதில் மாலைக் கண் நோய்க்கு உள்ளானவராக நடித்திருந்தார்.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது உணர்ச்சி மிக்க நடிப்பின் மூலம் அந்த நோயின் தாக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் .குறிப்பாக தாயிடமும்,காதலி இடமும் தன் நோயை மறைத்து அதனால் வீண் பழிக்கு ஆளாகும் போது பரிதாபம் ஏற்படுகிறது.அவருக்கு இணையாக கே ஆர் விஜயாவும் தன் திறமையை காட்டியிருந்தார்.அதே போல் பல காட்சிகளில் அவருடைய உருவமே பாதி திரையை ஆக்கிரமித்தது.மகனை நினைத்து துடி துடிக்கும் தாயாக பண்டரிபாய்.குறை இன்றி அந்த பாத்திரத்தை நிறைவேற்றி இருந்தார்.


படத்தில் முக்கிய வேடம் டான்சர் விமலாவாக வரும் சி ஐ டி சகுந்தலாவுக்கு. சுமார் 14 ஆண்டுகளாக நடன நடிகையாக வலம் வந்த அவருக்கு இதில் முழுப் படமும் சிவாஜியுடன் இணைந்து வரும் வேடம்.சந்தர்ப்பத்தைத் தவறவிடவில்லை சகுந்தலா.இப் படத்தைத் தொடர்ந்து அநேகமாக எல்லா சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெறத் தொடங்கினார்.அதே போல் சிவாஜிக்கு வில்லனாக நடிக்கும் ப்ரோமோஷன் எம் ஆர் ஆர் வாசுவுக்கு இப் படத்தில் கிடைத்தது. (நடிகவேள் எம் ஆர் ராதா,அவரின் மூத்த மகன் எம் ஆர் ஆர் வாசு,பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவரின் இளைய மகன் எம் ஆர் ராதாரவி இவர்கள் மூவரையும் இயக்கிய பெருமை சீனிவாசனை சேரும் !)இவர்களுடன் சோ,மனோரமா, இருவரும் நகைச்சுவைக்கு உதவ காந்திமதி,வி கோபாலகிருஷ்ணன்,செந்தாமரை என்று முக்தா பிலிம்ஸுக்கு உரிய நடிகர் பட்டாளம் இந்தப் படத்திலும் இடம் பெற்றார்கள்.


படத்தின் பாடல்களை கண்ணதாசன், வாலி இருவரும் எழுதி இருந்தார்கள்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய love is fine darling (நான் ஒரு காதல் சந்நியாசி) பாடல் ரசிகர்களை கிறங்கடித்தது.இதன் ஆங்கில வரிகளை ராண்டார் கை எழுதியிருந்தார்.எல் ஆர் ஈஸ்வரி,அஜித்சிங் குரலில் அமைத்தது இப் பாடல்.இதைத் தவிர இசை கேட்டால் புவி அசைந்தாடும்,கிண்கிணி கிண்கிணி என வரும் மாதா கோயில் மணியோசை பாடல்களும் ரசிக்கும் படி அமைந்தன.படத்தில் நாயகன்,நாயகிக்கு டூயட் கிடையாது.இதனால் பி சுசீலாவுக்கு வேலையும் இல்லை! படத்துக்கு இசையமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன்.


படத்தின் கதை,வசனத்தை தூயவன் அமைத்திருந்தார். மாலைக்கண்
நோயுடன் சம்பந்தப்பட்ட முதல் தமிழ் படம் என்று இப் படத்தை சொல்லலாம்.அதனை அடிப்படையாகக் கொண்டு சுவாரஸ்யமான முறையில் கதையையும்,வசனங்களையும் தூயவன் எழுதியிருந்தார். அவரின் வளர்ச்சிக்கு உதவியப் படமாக இப்படத்தை குறிப்பிடலாம்.என் எஸ் வர்மா ஒளிப்பதிவு செய்தார்.

தொய்வில்லாமல் படத்தை இயக்கி இருந்தார் சீனிவாசன்.ஓரளவுக்கு சீரியஸான கதையாக அமைந்த படத்தில் கவர்ச்சிக்கும் குறை வைக்காமல் டைரக்ட் செய்திருந்தார்.ஒரு காட்சியில் ஒரு துண்டை மட்டும் போர்த்தியபடி சகுந்தலா படுத்திருக்க, கோபத்துடன் சிவாஜி அதை இழுக்க ,கமரா சகுந்தலா நிர்வாணமாக படுத்திருப்பதாக காட்டியிருந்தது 50 ஆண்டுகளுக்கு முன் துணிச்சல்தான் ! படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.



No comments: