இலங்கைச் செய்திகள்

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் பல திட்டங்கள்

புலம்பெயர் தமிழரால் பொருளாதாரம் உயரும்

பிரதமராக பதவியேற்க இப்போதும் நான் தயார்

நாமல் எம்.பிக்கு எதிரான ரூ. 70 மில். முறைகேடு வழக்கு

அட்டுலுகம சிறுமியின் மரணம்; விசாரணை CIDயிடம்இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

- பாதுகாப்பு படைகளின் புதிய பிரதம அதிகாரியாக ஷவேந்திர சில்வா

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும்  லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஜூன் 01ஆம் திகதி முதல்  அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு படைகளின் புதிய பிரதம அதிகாரியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜூன் 01ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2022 மே 31ம் திகதி இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதம அதிகாரியான ஜெனரல் விக்கும் லியனகே, ஜூன் 01ஆம் திகதி முதல் 24ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான் - நன்றி தினகரன் 

அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி,

சிரேஷ்ட பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.டி.ஆர்.எஸ்.தமிந்த - தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கும்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. அஜித் ரோஹண - குற்றவியல் மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவிக்கும்

பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே. சில்வா - கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து, குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


நன்றி தினகரன் 


இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் பல திட்டங்கள்

சென்னையில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் எனவும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறதென்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய அரசின்பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை சிரமமான சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கிறது. அங்கு நிலவும் தற்போதைய சூழல் உங்களுக்கு நிச்சயம் கவலையளிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது. நிதி, எரிபொருள், உணவு, மருந்துகள், பிற அத்தியாவசிய பொருட்களும் இதில் அடங்கும். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்க பேசி இருக்கிறது. ஜனநாயகம், சிரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். தொடர்ந்து அந்த நாட்டுக்கு உதவுவோம்.யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். அதை என்னால் மறக்க முடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்கள் மக்களின் உடல்நலம், போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கும். சுதந்திர திருநாள் அமுத பெருநாளை நாம் இப்போது கொண்டாடி வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு முன்பாக சுதந்திர நாடு என்கிற வகையிலே நாம் நம்முடைய பயணத்தை தொடங்கினோம்.

நமது நாட்டுக்காக சுதந்திர போராட்ட வீரர்கள் பல கனவுகளை கண்டார்கள். அவற்றை நிறைவேற்றுவது நமது கடமை. நாம் அனைவரும் அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தியாவை மேலும் வளமான நாடாக மாற்றுவோம் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரெயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழக அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ. க. நிர்வாகிகள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், காயத்திரி ரகுராம் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது  - நன்றி தினகரன் 

புலம்பெயர் தமிழரால் பொருளாதாரம் உயரும்

முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள். தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சனைக்கு தோள் கொடுக்க கூடியதாக இருக்கும் அத்துடன் எமது பிரதேசத்தினுடைய பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பகூடிய ஏதுவான நிலையாக இருக்கும் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உபதலைவர் விக்னேஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கல்விமான்கள், தொழில் துறையில் இருப்பவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் என அனைத்து பிரிவினரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிராந்தியத்தினுடைய அபிவிருத்தி முயற்சிக்காக   அனைத்தையும் மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம். அந்த சமூக பொறுப்பினை உணர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.  உண்மையில் பொருளாதார பிரச்சனையில் ஏனைய மாகாணங்கள் மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நாங்கள் வெற்றி கொள்ள முடியும்.   எனவே வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் மக்களின் முதலீடுகள் தேவையானது. தற்போதைய காலம் அதற்கு ஏற்றதாக இல்லாது போனாலும் நிச்சயமாக இந்த பிரச்சனையின் பின்னால் ஒரு சிறந்த ஒரு எதிர்காலம் இலங்கைக்கு இருக்கின்றது என்று என்னால் கூற முடியும் என்றார்.    நன்றி தினகரன் 

பிரதமராக பதவியேற்க இப்போதும் நான் தயார்

 

சஜித் பிரேமதாச நேற்று அதிரடி அறிவிப்பு

 பிரதமராக பதவியேற்க தான் தற்போதும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகாரத்துக்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, பொறுப்பை ஏற்க முடியாதென்று தான் ஒருபோதும் கூறவில்லை. நேர்மையான அமைச்சரவையை ஸ்தாபிக்க தனது ஐக்கிய மக்கள் கட்சி தயாராக உள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஏற்றவகையில் எம்மிடமுள்ள வினைத்திறன்மிக்க செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வைப் பெற்றுத்தரக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராகவுள்ளோம்.

அதற்குத் தகுதிவாய்ந்த திறமையான குழு எம்மிடமுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.    நன்றி தினகரன் 

நாமல் எம்.பிக்கு எதிரான ரூ. 70 மில். முறைகேடு வழக்கு

செப்.21இல் அழைக்க நீதிமன்று உத்தரவு

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று  (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்ட மாஅதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி முறைப்பாட்டை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு 'கிரிஷ்' என்ற நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.   நன்றி தினகரன் 


அட்டுலுகம சிறுமியின் மரணம்; விசாரணை CIDயிடம்

- நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட, 09 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் (27) முற்பகல் 10.00 மணியளவில் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு அவரது தாய் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு அனுப்பியிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து 9 வயதான அச்சிறுமி அப்பகுதியில் உள்ள சேற்று நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் அப்பிரதேசத்தை மாத்திரமன்றி, முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்க தான் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..

 

 

 

 l


நன்றி தினகரன் 


No comments: