அன்னை சரஸ்வதியே…. அடியன் நாவில் குடியிருந்து
அருள்புரிவாய் மிகுந்து ….. நன்னூல் இலக்கணங்கள் நானறிகிலேன்
நம்பினேனே நற்குகந்து நற்கருணை தாராய் !
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்
கேட்டோம் பாரதி தீந்தமிழ் இலக்கியத்தில்
தணியாத தாகத்தை தவறாது கேட்டோம்
ஈழமணித் திருநாட்டின் வானொலியில்
தணியாத தாகத்தை தணித்த பின்னே – கடல் சூழ் கண்டமதில்
வாழையும் – முருங்கையும் – கனிதருமரங்களும்
செழித்து வாழும் ராணியின் பூமியில்…
ஆமாம், குயின்ஸ்லாந்து மாநிலத்தில்…
தமிழ்ஒலி பரப்பும் எனதருமை நண்பா வாசுதேவா…
உன்வரவுக்கும் – உன் தலைமைக்கும் வாழ்த்துக்கூறி
ஆழமிலா நீரோடை சலசலக்கும் நீரோட்டம்
நீர் குறையும் பெரும் குடம், தளதளத்து தளும்பும் குறை குடம்
வெட்டிப்பேச்சும் – திண்ணைப்பேச்சும் காற்றிலே கரையும்
நிலைத்திருக்கும் செயலும் விளைவும்.
கொலம்பஸ் – கெப்டன் குக் வாய்ச்சொல் வீரரோ..?
வித்தகம் பேசி வாதங்கள் புரியாது கண்டனர் கண்டனர்
கண்டங்கள் கண்டனர்.
ஒரு முட்டை ஈன்று கொக்கரிக்கும் கோழி
பல முட்டை ஈன்றாலும் அமைதி காக்கும் ஆமை.
மாற்றான் தோட்டத்தில் மல்லிகையும் மணக்கும்.
அண்டை வீட்டில் அல்லியும் மலரும்.
இத்தத்துவம் புரியாமல் வித்தகம் பேசுகின்றார்.
சீப்பை மறைத்துவிட்டால் திருமணம் நின்றிடுமோ…?
அகப்பையை ஒளித்துவிட்டால் விருந்ததுவும் நின்றிடுமோ…?
இவையனைத்தும் இயல்பாயின்
குளத்தோடு கோவித்த கதையாகிப்போகும் !
தரப்படுத்தல் என்று சொல்லி உண்மைத் தரங்களை குழியில் தள்ளி
பேசினார் சமதர்மம் சிங்கார மேடையிலே !
ஓட்டுக்கேட்டோர்… வேட்டு வைத்தனர் எமக்குரிய கல்விக்கு…
கல்விக்கு வேட்டு வந்ததால்… கல்வித்தாய் வெகுண்டாளோ…?
வேட்டுக்கு வேட்டு… பதிலுக்கு பதிலாய்…
பிரித்தல் – கூட்டல் – கழித்தல் எண்கணித சாத்திரத்தில்
உயிர் பிரித்தல் -புது உறவைக் கூட்டல்
கழித்தல் – களையெடுத்தல் – நீடித்த இக்கணக்கு
தப்பியதால், தவறியதால் , அழிவுகளே நிலையாகிப்போனதய்யோ
!
வள்ளுவன் – கம்பன் – இளங்கோ
பனையோலை ஏட்டிலே பதிந்த தமிழ்
தேமதுரத் தமிழோசை பரப்ப பாரதி ஒலித்த
தமிழ்
பரம்பரையில் வந்திங்கு பேசிடுவோம் பேசிடுவோம்
வித்தகம் பேசிடுவோம் !
எட்டுத்திக்கிலும் எங்கெங்கு காணினும்
எம் தமிழர் தரணியெங்கும்.
ஏற்றமுண்டோ இல்லையோ…
பேச்சு மட்டும் நிறைவாய் உண்டு
வித்தகம் பேசாமல் வீரியமாய் சாதனை குவிக்கும்
அந்நிய பூமிதனில் தத்துவம் படைத்து
தனித்துவமாய் வாழும் பரம்பரையை பாரீரோ…
நடை – உடை – பாவனை – மொழியும் இரவலாகி
இரந்திங்கு வாழும் நிலை கண்டோம்
உண்மைகள் சுட்டாலும் உண்மைகள் என்றும் உண்மைகளே…!
வித்தகம் பல பேசி ஒப்பத்தம் பல மலர்ந்து கண்ட பலன் என்ன…?
B - C. பக்ட் – J R – Rajiv பக்ட் – Prema பக்ட்
பக்ட்டுகள்…. பக்ட்டுகள்….பொக்கட்டிலும் பக்கட்டிலும் பிறீவ் கேஸிலும்….
பேசுவோம்… பேசுவோம்… கொழும்பு – டில்லி – திம்பு – பகமாஸ்
கொழும்பு – லண்டன் – டில்லி….
பேசுவோம்… பேசுவோம்… வித்தகம் பேசுவோம் !
முல்லையூர் – குமுழமுனை – அலம்பில் – மூதூர் – புல்லுமலை –
உடும்பன் குளம் – வல்லையும் வடமராட்சி எல்லையும்
கோப்பாயும் கைதடியும் இரத்த ஆறு ஓடும்…
மனித உயிர்கள் ஓலமிட்டு ஓடும்….
உயிர், உடல் கூடுவிட்டுப்பாயும்… ஒன்றா…? இரண்டா…? ஓராயிரமா…?
கழுகுகளும் ஓநாயும் நாய்களும் பிணம் தின்ன….
பேசிடுவோம் பேசிடுவோம் வித்தகம் பேசிடுவோம்…
சிந்தனைக்கு வேலியிட்டு, சீரிய பணி முடக்கி
சீவனற்ற ஜடமாகி சிலையானோர் பலருண்டு !
நரம்பில்லா நாக்கு நயமின்றிப் பேசும்
நல்ல திருநாடுதனை அழித்த கதையறிவோம்
காவியங்கள் பலவறிவோம்.
பாரத புத்திரர்கள் படைபடையாய் வந்தார்கள்
படிதாண்டா பத்தினியரை பரிதவிக்கச் செய்தார்கள்
பத்தினியர் கண்ணீரில் பல கதைகள் உண்டு !
இக்கதைகள் யாவும் இலக்கியமாய் சரித்திரமாய்
பவனிவரும் காலம் வரும் !
எதிரிக்கு எதிரி நண்பனாகி… என் மூக்குப்போய்…
அவன் சகுனம் பிழைத்து புதிய தத்துவமே இன்றைய வித்தகம் !
ஆறுமுகம் – அப்புகாமி – அபூபக்கர் – ஆபிரகாம் –
எம் மண்ணின் மைந்தரே ! எம் மைந்தர் கரம் உயர்ந்தால்…
பொது எதிரி வீழ்வான்… சரிவான்….
கலைமகளே… அலை மகளே… மலைமகளே…
அருள்புரிவாய் எம் மண்ணில் !
விலையாகிப்போயுள்ள எம் நிலை கண்ணுற்றாயோ…?!
வித்தகம் பேசிடாமல் விந்தைப்பணி புரிய
அருள்புரிந்தெம்மை ஆதரிப்பாயே….
--------
எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இந்த 15 ஆவது அங்கத்தில் இடம்பெறும்
இந்த நீண்ட கவிதையை யார் எழுதியது..? என்ற கேள்வியை , இத்தொடரை வாசித்துவரும் வாசகர்கள்
கேட்கக்கூடும்.
இதனை எழுதிய கவிஞனும் நான்தான். இது கவியரங்கு கவிதை. அவுஸ்திரேலியத் தமிழ் கலை மன்றம் 14 – 10 – 1989 ஆம் திகதி மெல்பன்
பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மண்டபத்தில் வெகு விமரிசையாக நடத்திய கலைமகள் விழாவில் குவின்ஸ்லாந்திலிருந்து வருகை தந்து கலந்துகொண்ட கவிஞரும் வானொலி ஊடகவியலாளருமான சண்முகநாதன் வாசுதேவன் தலைமையில் வித்தகம் பேசி வீண் காலம் போக்காமல்…. என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் நான் சமர்ப்பித்த கவிதைதான் இது.
எனது வாழ்நாளில் நான் இரண்டே இரணடு கவியரங்குகளில் மாத்திரமே இதுவரையில் பங்கு
பற்றியிருக்கின்றேன். இலங்கையில் எமது ஊரில் விஜயரத்தினம் இந்துக்கல்லூரியின் பழைய
மாணவர் மன்றம், 1974 ஆம் ஆண்டு நாமகள் விழாவை நடத்தியபோது, கவிஞர் ஈழவாணன் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில்
முதலிலும், அதன்பின்னர் பதினைந்து வருடங்கள்
கழித்து மெல்பனில் நடந்த கலைமகள் விழாவிலும் கவியரங்கு மேடையில் தோன்றினேன்.
குறிப்பிட்ட தமிழ்க்கலை மன்றத்தினை அப்போது முன்னின்று இயக்கியவர் இராஜரட்ணம்
சிவநாதன். அன்றைய விழாவை சிறப்பாக நடத்துவதற்காக
அவர் ஒரு குழுவை நியமித்தார். கணக்காளர் தருமகுலராஜா தலைவராகவும் பல் மருத்துவர் ரவீந்திரராஜா
பொருளாளராகவும் நண்பர்கள் பாலச்சந்திரன், விஜயகுமார்,
திவ்வியநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இயங்கினர்.
மெல்பனில் பூசகராக பணியாற்றிய ஶ்ரீராமன் அவர்கள் பூசையை நடத்தினார். சில பெரியவர்கள்
குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்துவைத்தனர்.
உரையரங்கம், கவியரங்கம், நடன அரங்கம், நாடக அரங்கம் என்று விழா சுமார் ஆறுமணிநேரம் களைகட்டியது.
செல்வன் மகேந்திரநாதன் செந்தூரன் சக்தி வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மிருதங்க கலைஞர் ரவிச்சந்திராவும் வயலின் கலைஞர் பாலஶ்ரீயும் திருமதி சாரதா வாசுதேவனும் ( வீணை ) இசையரங்கில் இணைந்தனர். திருமதிகள் உஷா சிவநாதன், ஶ்ரீகாந்தி விஜயகுமார், பிரபா கந்தசாமி ஆகியோர்
பாமாலை என்ற தலைப்பில் சில பாடல்களை பாடினர்.
நாடக அரங்கில் மூன்று நாடகங்கள் இடம்பெற்றன. மாவை நித்தியானந்தன் தனது கண்டம் மாறியவர்கள் நாடகத்தை மேடையேற்றினார். அதில் கண்ணன், தர்ஷினி
ரஞ்சன், ரஞ்சன் ஆகியோர் நடித்தனர்.
யாழ். பாஸ்கர் எழுதிய கலையும் கண்ணீரும் நாடகத்தில் முல்லை சிவா, அளவையூர் வித்தி, யாழ். பாஸ்கர் ஆகியோருடன்
செல்வி வாசுகி இராஜரட்ணம் நடன நர்த்தகியாகத் தோன்றினார்.
வாசுதேவன் வானொலி நாடக ஒலிபரப்பு பாணியில் தொலைபேசி படுத்தும் பாட்டை அங்கதச்சுவையுடன்
ஓரங்க நாடகமாக மேடையேற்றினார். அவர் தனது மனைவியுடன் ஒலிவாங்கிகளின் முன்னின்று நடித்தார்.
மெல்பனில் நிருத்தசேத்திரா கலையகத்தை ஆரம்பித்திருந்த நடன நர்த்தகி ஶ்ரீமதி சாந்தி
ராஜேந்திராவின் மாணவியர் நடன அரங்கில் இடம்பெற்றனர்.
கலைமகள் விழா குழுவிலிருந்தவர்களின் மனைவிமார் மற்றும் குடும்ப நண்பர்களின் மனைவிமார்
சிற்றுண்டிகள் தயாரித்து வழங்கினார்கள். மண்டபம்
நிறைந்து மக்கள். அவ்வாறிருந்தும் அந்த நிகழ்ச்சியை
புறக்கணிக்கும் நாடகமும் வெளியே அமைதியாக அரங்கேறிக்கொண்டிருந்தது.
அக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த என்னைப்போன்ற
அகதிகள் இணைந்து முன்னெடுத்த விழா அது. எனக்கும் கூட அப்போது நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கவில்லை.
மாற்றுச் சிந்தனையை முன்வைத்து இயங்கிய மக்கள் குரல் கையெழுத்து இதழை நடத்தியவர்களே,
இந்த கலைமகள் விழாவையும் முன்னெடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து, அதற்கு எதிரானவர்கள்
சிலர் விழாவை புறக்கணிக்குமாறு பிரசாரம் செய்தனர். அவ்வாறிருந்தும் விழா சிறப்பாக மண்டபம்
நிறைந்த மக்களுடன் நடந்தது.
அதனால்தான் எனது கவிதையில், “ சீப்பை மறைத்துவிட்டால்
திருமணம் நின்றிடுமோ…? அகப்பையை ஒளித்துவிட்டால் விருந்ததுவும் நின்றிடுமோ…? “ என்ற வரிகளையும் சேர்த்திருந்தேன்.
விழா செலவுகளுக்கு சில அன்பர்கள் நிதியுதவி வழங்கினர். பொருளாளராக செயற்பட்ட பல்மருத்துவர் ரவீந்திரராஜா,
மேடையில் வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பித்தபோது, தேங்காய் – பழம் – அரிசி - கற்பூரம் – ஊதுவத்தி வாங்கிய கணக்குகளையும் சொன்னார்.
அவர் இதுவிடயத்தில் மிகவும் நேர்மையாக செயற்பட்டார். அவரது அறிக்கையை கேட்டு சிலர் சிரித்தனர். இதெல்லாம்
சொல்லவேண்டுமா..,? என்று சிலர் என்னிடமே கேட்டனர்.
“ ஆம்… எதற்கும் கணக்கு இருக்கவேண்டும். பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள் இதுவிடயத்தில் வெளிப்படையாக
இருக்கவேண்டும். அதனைத்தான் எமது நண்பர் ரவீந்திரராஜா செய்கிறார் “ என்றேன்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், தலைமுறைகள் சங்கமித்த பெருவிழாவாக அந்த
நிகழ்வு நடைபெற்றது. பேராதனை பல்கலைக்கழக முன்னாள்
விரிவுரையாளர் கலாநிதி காசிநாதன் முழுவிழாவையும் பார்த்து ரசித்துவிட்டு, இந்நிகழ்வு
ஒரு மைல்கல் என்று பாராட்டியது இன்றும் எனது நினைவில் தங்கியிருக்கிறது.
கலையும் கண்ணீரும் நாடகத்தில் ஒரு நடனக்காட்சி வருகிறது. அதற்கு ஒரு இளம் யுவதியை
நாம் தேடிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் அருண். விஜயராணி, எமக்கு தமது அக்கா மகள் வாசுகியை அறிமுகப்படுத்தினார். இவர் கொழும்பில் வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவி. கதிரேசன் மண்டபத்தில் நடந்த ஒரு நாட்டிய நாடகத்தில்
இவரும் பங்கேற்றிருந்தார்.
வாசுகி ஜெகதீஸ்வரனை பேட்டிகண்டு வீரகேசரியில் எழுதியபோது, குறிப்பிட்ட நாட்டிய
நாடகம் பற்றியும் எழுதியிருக்கின்றேன். மெல்பனுக்கு
தனது பெற்றோருடன் வந்திருந்த செல்வி வாசுகியை தொடர்ந்தும் நடனம் பயிற்றுவிக்க அவர்கள் விரும்பியிருந்தமையால், வாசுகியை
ஶ்ரீமதி சாந்தி இராஜேந்திராவுக்கு அறிமுகப்படுத்தி, கலையும் கண்ணீரும் நாடகத்தின் கதையையும்
அவரிடம் சொன்னோம்.
யாழ். பாஸ்கரும் உடன்வந்து காட்சியை விளக்கினார். தொடர்ச்சியாக பயற்சி பெற்ற வாசுகி, அந்த நாடகத்தில்
தனது திறமையை காண்பித்தார்.
பின்னர் அவரும் மெல்பனில் சாந்தி ராஜேந்திராவின் மாணவியானார். அவரது
அரங்கேற்றம் லத்ரோப் அகோரா மண்டபத்தில் பின்னர் நடந்தது. அதுவே மெல்பனில் அக்காலப்பகுதியில் நடந்த முதலாவது பரதநாட்டிய அரங்கேற்றம். அதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலும் செல்வி வாசுகியை பாராட்டி நான் எழுதநேர்ந்தது.
1989 ஆம் ஆண்டு நடந்த குறிப்பிட்ட
கலைமகள் விழாவில் அன்று இணைந்திருந்த பல செல்வன்கள் – செல்விகள் பின்னாளில் கலைத்துறையில்
தீவிர பயற்சி பெற்று அரங்கேற்றங்களும் கண்டுவிட்டனர். திருமணமாகி பெற்றேர்களுமாகிவிட்டனர்.
அந்த விழா பற்றிய செய்திகளை இலங்கை பத்திரிகைகளில் படங்களுடன் வெளிவரச்செய்தேன்.
மக்கள் குரல் இதழின் முகப்பிலும் படங்கள் இடம்பெற்றன. அவ்விதழில் விமல் அரவிந்தன்
தனது அழகான கையெழுத்தில் விழா பற்றிய கட்டுரையை விரிவாக எழுதியிருந்தார்.
மாவை நித்தியின் கண்டம் மாறியவர்கள் நாடகம், அதன்பின்னரும் மேடையேறியது. அத்துடன் பிரான்ஸிலும் யாழ்.தெல்லிப்பழை
மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் மன்றத்தின் விழாவிலும் மேடையேறியது.
அன்று கலையும் கண்ணீரும் நாடகத்தில் பங்கேற்ற யாழ். பாஸ்கர், முல்லை சிவா, அளவையூர் வித்தி முதலானோர்
பின்னாளிலும் அதே நாடகத்தை மேடையேற்றினர். அத்துடன் பண்டாரவன்னியன், மற்றும் எழுத்தாளர் பாடும்மீன் சிறிகந்தராசாவின் இயக்கத்தில் மேடையேறிய எஸ்.
பொ. வின் வலை நாடகத்திலும் நடித்தனர்.
அந்த கலைமகள் விழா நடந்து முப்பத்தி
மூன்று வருடங்களாகிவிட்டன. எனினும் பசுமையான அந்த நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை.
கவிஞர் சண்முகநாதன் வாசுதேவன் குவின்ஸ்லாந்தில் 1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
கலைஞர் கண்ணன் சில வருடங்களுக்கு முன்னர் இயற்கை
எய்தினார். இவர்கள் இருவருக்கும் இந்தப்பதிவை
சமர்ப்பணம் செய்கின்றேன்.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் வரும் கவிதையின் மூலப்பிரதியை பார்த்துவிட்டு, எனது
மனைவி மாலதி “ ஏன் தொடர்ந்தும் கவிதைத் துறையில்
ஈடுபடவில்லை…? “ என்று கேட்டார்.
“ எனது வாழ்வில் இரண்டே இரண்டு கவியரங்கில்தான்
கவிதை எழுதி சமர்ப்பித்தேன். அதுவும் கலைமகள்
விழாக்களில் மாத்திரம்தான்.
‘ கவிதை எழுதவும் - பாடவும் நிறையப்பேர் இருக்கிறார்கள். நீ… எழுத்துத்துறையில் வேறு பணிகளைப் பார் ‘ என்று அந்தக்கலைமகள் உத்தரவிட்டுவிட்டாள், நானும் ஒதுங்கிக்கொண்டேன் “ என்று பதில் சொன்னேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment