பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), 13வது ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 18 மே 2022 அன்று லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) கூடியது, கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைச் சுழற்சிகளின் வரலாற்றையும் அதற்கான காரணிகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடயங்கள் குறித்த “சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” எனும் தலைப்பிலான கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
செப்டம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 இல் நடந்த ஐ.நா. மனித உரிமைக்
கழக (UNHRC) அமர்வுகளின் போது ஜெனீவாவில் காட்சிப்படுத்தியதன் தொடர்ச்சியாக மத்திய லண்டனில் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை மூன்றாவது முறையாகக் காட்சிப்படுத்தியது, இக் கண்காட்சியை பொதுமக்களுக்கு இலவசமாக பார்வையிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதனால் பெருமளவிலான பல்லின மக்கள் வந்து பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத் தக்கது.
இருபது இளம் தலைமுறை செயல்பாட்டாளர்கள் அவர்களிடையே காட்சிகளைப் பகிர்ந்து கொண்டு, தேவையான இடங்களில் மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் விளக்கமளித்தனர்.
ஒவ்வொரு காட்சியிலும் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் மிகவும் காத்திரமானதும் முன்னர் எப்போதும் வெளிக் கொண்டு வரப்படாத புதிய தகவல்களாகவும் இருந்தது. கண்காட்சியை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்ட ஏராளமான பல்லின மக்கள் அவற்றைப் படித்து, இளம் தலைமுறை செயல்பாட்டாளர்களிடம் கேள்விகளைக் கேட்டு, தங்கள் கைபேசியில் காட்சிகளை புகைப்படம் எடுத்தனர்.
1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது
அதற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து சனநாயக வழிமுறைகளில் எதிர்ப்பைத் தெரிவித்த போது அதனையே சாட்டாக வைத்து தமிழ் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசு முன்வந்தது என்ற விளக்கத்துடன் முதல் காட்சி தொடங்கியது. இது தமிழ் மக்களை ஆயுதரீதியாக அழிக்கும் திட்டத்தை 1963ஆம் ஆண்டிலேயே சிறிலங்கா தனது மூலோபாயத்தில் உட்கொண்டு வந்ததை நிரூபிப்பதுடன் இன அழிப்பின் உள்நோக்கத்தையும் (intent of Genocide) வெளிப்படுத்துகின்றது. வன்முறையின் சுழற்சிகள் அவ்வப்போது தொடர்ந்தன, ஒவ்வொரு முறையும் வன்முறையின் தீவிரம் அதிகரித்தது.
நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்கள், தமிழர் தாயகத்தில் தேவையற்ற உயர் இராணுவ நிலைநிறுத்தத்தை மேற்கோள் காட்டி, தமிழ் மக்களை அச்சுறுத்தல், கைது, தடுப்பு, சித்திரவதை மற்றும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டடத்தினை (PTA) பாவித்து தமிழ் மக்களை மரண பயத்துடன் தொடர்ந்து அச்சுறுத்தி வைத்திருக்க வழிவகுத்தது.
குடிசார் வாழ்வில் இராணுவமயமாக்கல், ஊடகவியலாளர்கள் மற்றும்
மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் போர்வையில் அரச பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழர் தாயகத்தில் சனத்தொகை மாற்றம், தமிழ் மக்கள் தொகை வீழ்ச்சி, தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு, தமிழர் தாயகத்தில் பௌத்த கட்டமைப்புகளை அதிகரிப்பது போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அவற்றை தம் கைத் தொலைபேசியில் (Mobile phone) பதிவு செய்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைக் காட்டும் புள்ளிவிபரத் தரவுகளுடன் வரைபடங்களுடன் காட்சிப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதற்கு சீனத் தாக்கம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சீனாவின் செல்வாக்கு, குறிப்பாக போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின் சிறிலங்காவை அதன் தற்போதைய அவல நிலைக்கு எவ்வாறு இட்டுச் சென்றது என்பதை பல காட்சிகள் தெளிவான ஆதாரங்களுடன் சித்தரித்தன.
இறுதிக் காட்சியானது சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான
மாபாதக குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உலகளாவிய மனித உரிமைகள் தடைச் சட்டத்தின் பிரயோகத்தை வலியுறுத்தும் அதேவேளை, இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை உருவாக்குதல், உலகளாவிய நியாயாதிக்க சட்டத்தை (Universal Jurisdiction) வலுப்படுத்தி பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம், நெறிமுறையற்ற வர்த்தகத்தை நிறுத்துதல் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய அம்சங்களை அமுல்படுத்த கோருகின்றது.
இக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் தொகுக்கப்பட்டு முன்னுரையுடன் “Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence” எனும் தலைப்பில் ஒரு புத்தகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது, இது கல்வியாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகக் காத்திரமான துல்லியமான தகவல்களை வழங்குகிறது.
இப் புத்தகமானது அதன் மூலோபாய முக்கியத்துவம் கருதி
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வு இடம் பெற்ற மேடையில் வைத்து லிபெரல் டெமோகிராடிக் (Liberal Democratic party) கட்சித் தலைவரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Tamils) உப தலைவருமான சேர் எட் டேவி (Rt Hon Sir Ed Davey MP) அவர்கள் மூலம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பிரதிகள் அங்கு வருகை தந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய முக்கியஸ்தர்ளுக்கும் வழங்கப்பட்டது.
பங்கு பற்றியோருக்கும், உதவி செய்தோருக்கும், பொதுமக்களுக்கும் லண்டன் மாநகரத்துக்கும் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடந்தேற ஒத்துழைத்தமைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
“Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence” எனும் வெளியீட்டினை பின் வரும் இணைப்பினை பாவித்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence – British Tamils Forum
இது போன்ற ஆய்வுகளை நடத்தவும் தொகுத்து வெளியிடவும் பிரித்தானிய தமிழர் பேரவை உங்களது செயல்பூர்வமான உன்னத பங்களிப்பினை வேண்டி நிற்கின்றது. இளையோர், முதியோர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி இதில் ஆர்வமுள்ளோர் அனைவரும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி எம் தேசத்தினை மீட்டெடுப்போம்.
மேலதிக விபரங்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
The Video at: https://youtu.be/QZXwLSHYlXM
No comments:
Post a Comment