உலகச் செய்திகள்

கிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைனியருக்கு ரஷ்ய குடியுரிமை

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி

தாய்வானுக்கு அருகே சீனா இராணுவ பயிற்சி

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: தாக்குதலுக்கு முன் பேஸ்புக்கில் செய்தி அனுப்பிய துப்பாக்கிதாரி



கிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் வட்டாரங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யப் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பாடசாலைகள் உட்பட 47 பொது இடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் கூறியது.பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் ஹார்கிவ் நகரில் பொதுக் கட்டமைப்பைச் சேதப்படுத்தியாக ரஷ்ய வீரர்கள் இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.    நன்றி தினகரன் 





உக்ரைனியருக்கு ரஷ்ய குடியுரிமை

ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த உக்ரைனிய வட்டாரங்களில் வாழும் மக்களுக்கு ரஷ்யக் குடியுரிமை எளிதில் வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது குறித்த ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கையெழுத்திட்டார்.

கெர்சன், ஸாபோரீஸர் வட்டாரங்களின் குடியிருப்பாளர்கள் இனி ரஷ்யக் குடியுரிமையைப் பெறமுடியும். ரஷ்யா கெர்சன் வட்டாரத்தையும் ஸாபோரீஸரின் சில பகுதிகளையும் கைப்பற்றியதை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஏற்கனவே, ரஷ்யத் தரப்புப் பிரிவினைவாதிகள் ஆக்கிரமித்துள்ள லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளிலுள்ள மக்களுக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 800,000 பேருக்குக் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

உக்ரைனிய மக்களை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா சாடியது.

இந்நிலையில் தனது அரசுரிமையையும் பிரதேச உரிமையையும் ரஷ்யா மீறியுள்ளதாக உக்ரைன் கூறியது.    நன்றி தினகரன் 





20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி

உலகளவில் இது வரை 20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதியாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பரவியிருந்த நிலையில் பிற நாடுகளுக்கும் இந்நோய் பரவி வருகிறது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், உலகளவில் 20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் பரவியுள்ளதும் மேலும் சந்தேகிக்கப்படும் 100 பேருக்கு தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கனடாவில் இந்த நோயிற்கான அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ததில் அவர்களில் 18 பேருக்கு குரங்கம்மை நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த நோயால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இந்த நோய் குறைந்த அளவிலேயே பரவும் தன்மை கொண்டிருந்தாலும் பாலியல் உறவுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





தாய்வானுக்கு அருகே சீனா இராணுவ பயிற்சி

பசிபிக் வட்டாரத்தில் சீனா அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் என்ற அச்சத்துக்கு இடையே தாய்வான் அருகே இராணுவப் பயிற்சியை நடத்தியிருப்பதாகப் பீஜிங் கூறியுள்ளது.  

தாய்வானுக்கு அருகே ஆகாய, கடற்படைப் பயிற்சிகள் நடத்தப்பட்டிருப்பதாகச் சீனா கூறியது.  

அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்து செயல்படுவதற்கு எதிரான எச்சரிக்கை என்று சீனா அந்தப் பயிற்சி பற்றி தெரிவித்தது.

தாய்வானைச் சீனா தாக்கினால் அமெரிக்கா அதை இராணுவ ரீதியாகத் தற்காக்கும் என்று ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் பேசிய பேச்சு சீனாவுக்குக் கோபத்தை மூட்டியுள்ளது. 

அமெரிக்கா இதுவரை அத்தகைய தலையீடு பற்றி நேரடியாக எதுவும் கூறவில்லை.. 

சீனா தாய்வானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. தேவை ஏற்பட்டால் இராணுவ பலம் கொண்டு அதை இணைத்துக்கொள்ளவும் தயங்கப்போவதில்லை என்று சீனா கூறி வருகிறது.      நன்றி தினகரன் 





டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: தாக்குதலுக்கு முன் பேஸ்புக்கில் செய்தி அனுப்பிய துப்பாக்கிதாரி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பாலர் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி அந்தத் தாகுதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்திருப்பதாக அந்த மாநில ஆளுநர் கிரேக் அபோட் தெரிவித்துள்ளார்.

தனது பாட்டி மற்றும் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்போவதாக துப்பாக்கிதாரியான சல்வடோர் ராமோஸ் குறிப்பிட்டுள்ளார் என்று ஆளுநர் தெரிவித்தார்.

இதேநேரம் தாக்குதலை தடுப்பதற்கு பாடசாலைக்குள் நுழையும்படி அங்கு வந்த பொலிஸாருக்கு அங்கிருந்தவர்கள் கூறியபோதும் அவர்கள் அதனைச் செய்யாமல் இருந்தது பற்றி செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ரமோஸ் 40 நிமிடங்களின் பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக டெக்சாஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அங்க செல்லும்படி பொலிஸாருக்கு பெண்கள் கூச்சலிட்டனர் என்று சம்பவத்தைப் பார்த்த ஜீவான் கரன்சா என்பவர் ஏ.பி செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் தனது மகளை இழந்த கரன்சா, பொலிஸார் செயற்படாததன் காரணமாக அங்கிருந்தவர்கள் உள்ளே செல்ல திட்டமிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டினால் 19 சிறுவர்கள் மற்றும் இரு பெரியவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் நீண்ட காலமாக விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் துப்பாக்கி கட்டுப்பாடு பற்றிய பேச்சை மீண்டும் மேலெழச் செய்துள்ளது.

துப்பாக்கி வாங்குவது பற்றிய சட்டத்தை கடுமையாக்குவதற்கு பலரும் வலியுறுத்தி இருக்கும் அதேநேரம் அது இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை நிறுத்த உதவும் என்பதில் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் இடம்பெறுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னர், பேஸ்புக்கில் ராமோஸ் பதிவிட்ட தனிப்பட்ட செய்தி ஒன்றில், தனது பாட்டியை கொலை செய்ய திட்டமிடுவதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் அதனைச் செய்ததாக அவர் குறிப்பிட்டார். கடைசியாக சூடு நடத்துவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் அவர் பதிவிட்ட செய்தியில், பாலர் பாடசாலை ஒன்றை தான் இலக்கு வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விபரத்தை விசாரணையாளர்கள் கூறவில்லை.   நன்றி தினகரன் 



No comments: