ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரன் தெணியான் விடைபெற்றார் முருகபூபதி

 கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய

ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார். 06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது. தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு

எனவும் அவர் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் ( நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள் முதலானவற்றின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர். 

இலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான், பேராசிரியர் க. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர். தான் கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார். கனடாவில் வதியும் தெணியானின் தம்பி நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவந்திருக்கும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன் தொகுத்திருக்கிறார். தெணியானின் பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் " தெணியானின் படைப்புகள் மீதான பார்வை" - " தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் " ஆகியனவற்றையும் யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது. இலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன. பல பசுமையான நினவுகளைத் தந்துவிட்டு விடைபெற்றுள்ள எமது இலக்கியச் சகோதரன் தெணியானுக்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி . ----------------------

No comments: