ஆழியாள் , ஜெயகரன் ஆகியோருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2021 இன் விருது

பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!  ஆர்.சி.ஜெயந்தன்,   இந்து தமிழ்  19 May 2022)

இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 4 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு கனடா. அங்கே, கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்பட இயங்கிவருகிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக கடந்த 2001-ஆம் ஆண்டு, கனடாவின் தலைநகரானா டொராண்டோவில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் பொதுவான நோக்கம், உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்களை அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

இத்தமிழ்ப் பணிகளின் வரிசையில், உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, சர்வதேச அளவில் கனடா இலக்கியத் தோட்டம் ஆண்டு தோறும் வழங்கி வரும்இயல்விருது, சர்வதேச தமிழ்ச் சமூகத்தால் மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஒன்றாக இருந்து வருகிறது.காரணம், தமிழுக்கும் அதன் இலக்கியச் செழுமைக்கும் வாழ்நாளில் பெரும் பங்காற்றி வந்திருப்பவர்களை அடையாளம் கண்டுஇயல்விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மொழிபெயர்ப்பு, கவிதை, புனைவு, அபுனைவு உள்ளிட்ட பல பரிசுகள் இயல் விருதுடன் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, 2021-ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை கனடா இலக்கியத் தோட்டம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விருதுபெறும் தமிழறிஞர், படைப்பாளிகளின் பட்டியலை விருதுக் குறிப்புடன் (citation) கனடா இலக்கியத் தோட்டம் இந்து தமிழ் நாளிதழுக்கு அனுப்பியுள்ளது.

 

இயல் விருது - பேராசிரியர் .இரா.வேங்கடாசலபதி

பேராசிரியர்

.இரா.வேங்கடாசலபதி வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதைப் பெறுகிறார். அவர் இவ்விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளது பற்றி: ‘‘கடந்த நாற்பது ஆண்டுகளாக, வரலாறு, மொழி, இலக்கியம், பண்பாடு, அரசியல், சமூகம் எனப் பல்வேறு துறைகள் சார்ந்து வேங்கடாசலபதி தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை வெளிநாட்டினரிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார்.இவர் கணிசமான மொழியாக்கங்களையும் செய்திருக்கிறார். சிகாகோ, பேர்க்லி, டொராண்டோ, நியூசீலாந்து பல்கலைக்கழகங்களில் தன் முக்கிய ஆய்வுகள் குறித்துச் சிறப்புரை ஆற்றியிருக்கிறார். வருகைதரு பேராசிரியராக ஹார்வர்டு, சிகாகோ பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து இருமொழி அறிஞராக தீவிரமாகவும் காத்திரமாகவும் இவர் இயங்கிக்கொண்டிருப்பது தமிழுக்கு பெருமை எனத் தனது விருதுக் குறிப்பில் கனடா இலக்கியத் தோட்டம் தெரிவித்துள்ளது.

 

 

புனைவுப் பரிசு - பா.. ஐயகரன்


கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நாடகம், கவிதை, சிறுகதை என புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகில் செயற்பட்டு வரும் பா. . ஜயகரன், தமிழ்ப் படைப்புலகில் முக்கியமானவர். புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய உலகில் சிறந்த நாடகப் பிரதிகளுக்காகவும் நன்கு அறியப்பட்டவர். எல்லாப் பக்கமும் வாசல் (2000), என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள் (2005) ஆகிய இவருடைய நாடக நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இவருடைய படைப்புகள் போகும் போக்கில் எளிய முறையில் சொல்லப்படுவதால் அவற்றை எத்தனை தடவையும் வாசிக்கலாம். அலுப்புக் கொடுக்காமல் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு புது அர்த்தத்தை அவை தரும். சொற்கள் தேர்விலும் வசனம் அமைப்பதிலும் போதிய கவனம் செலுத்துவதால் சிறுகதைக்கான நேர்த்தி இலகுவில் இவருக்கு அமைந்து விடுகிறது. புகலிட அனுபவங்களுக்கூடாகத் தமிழ் இலக்கிய வெளியில் நிலவும் எல்லைகளைத் தாண்டும் புகலிட எழுத்துகளில் பா. . ஜயகரனின் கதைகள் கவனம் பெறுகின்றன.நீண்டகாலமாகப் புனைவு வெளியில் இயங்கி வரும் பா..ஜயகரன், 2021ஆம் ஆண்டுக்கான புனைவுப் பரிசைத் தன்னுடைய பா.. ஜயகரன் கதைகள் நூலுக்காகப் பெறுகிறார் என விருதுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

புனைவு விருது - மேநாள் நீதிபதி கே.சந்துரு


தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2021ஆம் ஆண்டுக்கான அபுனைவு விருது, சுயசரிதை நூலுக்காக மேநாள் நீதிபதி கே.சந்துருவுக்கு வழங்கப்படுகிறது. ஒரு தனி மனிதனாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ள மனித உரிமைகளை, கடைக்கோடியினரும் அறிந்து அனுபவிக்க அவர்களுக்காக வழக்குரைஞராக போராடியவர், நீதிபதியாக பதவி உயர்ந்தபின் அஞ்சாநெஞ்சராக தன் தீர்ப்புகள் மூலம் அவர் எதிர்கொண்ட சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது நானும் நீதிபதி ஆனேன் என்கிற அவருடைய நூல்.

வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் இவர் பழங்குடியின மக்களுக்காக நடத்திய சட்டப் போராட்டத்தில், வழக்கொன்றின் அடிப்படையில் திரையாக்கம் செய்யப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன், அரசு அந்த மக்களுக்காக பல கொள்கை முடிவுகளை எடுக்கக் காரணமாகவும் அமைந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.

சுயசரிதை நூல் என்பதற்கு மேலாக இது ஒரு வரலாற்று நூல். அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளை சாதாரணனும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட அறிவு நூல். சட்டம் பயிலும் மாணவர்களுக்கான பாட நூல். அத்துடன் மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகளுக்கு தீர்ப்புகளை மேற்கோள் காட்டும் வழிகாட்டி நூல். ஆறே ஆண்டுகள் காலத்தில் நீதிபதி சந்துரு 90,000 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி சாதனை படைத்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழில் எட்டு நூல்களையும், ஆங்கிலத்தில் ஆறு
நூல்களையும் படைத்துள்ள மேநாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான கே.சந்துரு, இவ்விருதுக்கு பெரிதும் தகுதியானவர். என விருதுக் குறிப்பில் கனடா இலக்கியத் தோட்டம் குறிப்பிட்டுக்குக் காட்டியுள்ளது.

 

கவிதை விருது - ஆழியாள்


நெடுமரங்களாய் வாழ்தல் (2021) தொகுப்புக்காக கவிதைக்கான விருதைப் பெறுகிறார் ஆழியாள். இதுபற்றிய விருதுக் குறிப்பில்: ஆழியாள் என்கிற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ரகுபதி ஈழத்து தமிழ் கவிஞர். இவர் மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமர்சனம் எனத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பையும் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் நிறைவு செய்திருக்கிறார். தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய ஆழியாளின் உரத்து பேசு (2000), துவிதம் (2006), கருநாவு (2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும், ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் மொழிபெயர்ப்பு கவிதைகள் (2017), நெடுமரங்களாய் வாழ்தல் (2021) ஆகியவை இதுவரை வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் சொல்மிகாத நுட்பமும், கனத்த மௌனமும் கொண்டவையாக இருக்கும். பல கவிதைகள் மலையாளத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 




மொழிபெயர்ப்புப் பரிசு - மார்த்தா ஆன் செல்பி


மார்த்தா ஆன் செல்பி டெக்சஸ் பல்கலைக்கழக பேராசிரியரும் தென்கிழக்காசிய ஆய்வு மையத்தின் தலைவியுமாவார். இவர் 2022 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் பேராசிரியராக பணியாற்றுவார். பழம் தமிழ், பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆய்வாளரான இவர், பல சங்க இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவற்றில் ஐங்குறுநூறு முக்கியமான மொழிபெயர்ப்பாகும். மார்த்தா ஆன் செல்பி, தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான திலீப் குமாரின் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து Cat in the Agraharam and other stories என்கிற தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.

இவர், Fullbright நல்கை வழங்கிய உதவியால், எட்டு மாதங்கள் சென்னையில் தங்கியிருந்து, நூலின் ஆசிரியருடனும் பல கல்வியாளர்களுடனும் கலந்து ஆலோசித்து இந்த மொழிபெயர்ப்பை மிக அவதானமாக செய்து முடித்திருக்கிறார். பல கதைக் களங்கள் ஏகாம்பரேசுவர் அக்ரஹாரத்தில் அமைந்து இருப்பதால், அங்கே நேரில் சென்று, அந்தச் சுற்றாடலையும் மக்களையும் மனதில் உள்வாங்கி மொழிபெயர்த்திருப்பது அதன் நேர்த்தியில் தெரிகிறது. சொல் சொல்லாக அல்லாமல் தன்னியல்பாக வெளிப்பட்ட ஓர் மொழியில் இந்த மொழிபெயர்ப்பு அமைந்திருப்பது இதன் சிறப்பு. தமிழ் சிறுகதைகளில் காணப்படும் அகவுலகும் நுட்பமும் தனித்தன்மையும் ஆங்கிலத்திலும் அப்படியே வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பில் ஏற்படும் பண்பாட்டுச் சிக்கல்களை ஆசிரியர் எளிதில் கடந்துள்ளார். அனைவராலும் பாராட்டப்படும் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு, அதன் தரத்துக்காக 2021-ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் மொழிபெயர்ப்புப் பரிசினைப் பெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜூன் மாதம் விருது விழா


கடந்த 2001இல் சுந்தர ராமசாமியில் தொடங்கி, அழுந்தத் தடம் பதித்துவரும் தமிழ்ப் படைப்பாளிகள், தகைமை மிகுந்த தமிழறிஞர்கள் இயல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுவருவதால், தமிழுக்குக் கொடுக்கப்பட்டுவரும் தலைசிறந்த விருதுகளில் ஒன்றாக தமிழ்கூறும் நல்லுலகால் கருதப்பட்டு வருகிறது. இயல் விருது ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பணமுடிப்பும் ஏனைய பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் விருதுகளுக்கு தலா ரூபாய் 30 ஆயிரம் பணமுடிப்பும் விருதுக் கேடயம், பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கும் விழா வரும் ஜூன் 11-ஆம் தேதி வாக்கில் டொராண்டோ நகரில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இவர், ஆசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கதைசொல்லி என பன்முகம் கொண்டவர். இவருடைய The Kural: Tiruvalluvars Tirukkural என்னும் மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் பல நூல்களை இவர் படைத்துள்ளார்.

இன்று இயல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது பெறும் எழுத்தாளர் வேங்கடாசலபதி மற்றும் மேநாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தன்னுடைய ட்வீட்டர் பதிவு மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

  (  ஆர்.சி.ஜெயந்தன்,   இந்து தமிழ்  19 May 2022)

(https://www.hindutamil.in/news/world/801861-professor-a-r-venkatachalapathi-and-judge-k-chandru-got-iyal-awards.html)

No comments: