ஸ்வீட் சிக்ஸ்டி 16 - சுமைதாங்கி - ச சுந்தரதாஸ்



மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா இந்தப் பாடலை அறியாதவர்கள் ரசிக்காதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள்.வாழ்க்கையில் நொந்து போய் விரக்தியின் விளிம்பில் நிற்பவனுக்கு கூட உற்சாக டானிக் கொடுக்கும் பாடலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது இப் பாடல்.கவிஞர் கண்ணதாசனின் அற்புத வரிகளில் உருவான இந்தப் பாடல் இடம் பெற்ற படம்தான் 1962ம் ஆண்டு வெளிவந்த சுமைதாங்கி!

குமுதம் வார இதழில் துணை ஆசிரியராகவும்,இணை ஆசிரியராகவும் நான்கு தசாப்தங்களுக்கு மேல் பணியாற்றியவர் ரா கி ரங்கராஜன்.பிரபல நாவலாசிரியரான இவர் எழுதிய நாவலை படமாகத் தயாரித்தார் கவிஞர் கண்ணதாசன்.இவருடன் கோவை செழியனும் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார்.ரங்கராஜனும்,கண்ணதாசனும் முன்பு சக்தி பத்திரிகையில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.ஆதலால் நீண்ட கால நண்பர்கள்.அந்த அறிமுகத்தில் இந்தக் கதை படமாக்கப்பட்டது.

கூட்டு குடும்பத்தில் அண்ணனின் சம்பாத்தியத்தில் தம்பி பாபு பி ஏ படிக்கிறான்.நண்பர்கள் இடையில் போட்டுக் கொண்ட பந்தயத்துக்கு அமைய தன் ஆசிரியர் மகள் ராதாவை காதலித்து அவள் மனதில் குடியேறுகிறான் பாபு.இருவர் இடையே காதல் வளர்கிறது.அதே சமயம் அண்ணனின் வேலையும் திடீரென பறிபோகிறது.இதனால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு போகிறான் பாபு.திடீர் என பணக்கார சம்பந்தம் ஒன்று வரவே குடும்ப நன்மைக்காக,அவர்களின் வற்புறுத்தலுக்காக தன் காதலை தியாகம் செய்கிறான்.ராதாவோ மனம் ஒடிந்து போகிறாள்.தொடர்ந்து அண்ணன் ,தங்கை நல்வாழ்வுக்காக சுமைதாங்கியாக குடும்ப பாரத்தை சுமந்து தன்னுடைய சுகங்களை எல்லாம் இழக்கிறான் பாபு.



ரா கி ரங்கராஜனின் இந்தக் கதையை சினிமாவுக்காக சில மாறுதல்களை செய்து படமாக்கினார்கள்.அது மட்டுமன்றி கதையின் முடிவையும் படத்துக்காக மாற்றினார்கள்.படத்திற்கு திரைக்கதை ,வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் புதுமை இயக்குனர் .
ஸ்ரீதர்.படத்தை மிக நேர்த்தியாக இயக்கி இருந்தார்.வசனங்களும் இயல்பாகவும்,அளவுடனும் அமைந்தன.அவ்வப்போது கமரா மூலம் காட்சிகளை சித்தரித்திருந்தார்.படத்தின் ஒளிப்பதிவாளர் ஏ வின்சென்ட்.ஒரு காட்சியில் ஜெமினியுடன் தேவிகா பேசும் போது அவரின் கண்களில் நீர் திரையிட்டு அது பிரதிபலிப்பது போல் ஒளிப்பதிவு செய்து தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தார் வின்சென்ட்.



பாபுவாக வரும் ஜெமினி பாத்திரத்துக்கு மிக பொருத்தமாக காட்சியளித்தார்.ஆரம்பத்தில் துள்ளலுடன் வருபவர் பின்னர் வாடிப் போய் சோகமாக காட்சி தந்து ரசிகர்களை வாட்டுகிறார்.அதே போல் ராதாவாக வரும் தேவிகா ஆரம்பத்தில் வெடுக் வெடுக் என்று பேசி குறும்பாக நடித்து,பின்னர் சோகக் காட்சிகளில் ரசிகர்களை வதைக்கிறார்.ஜெமினி,தேவிகா இருவருமே நடிப்பில் அசத்தி விட்டார்கள் எனலாம்.

இவர்களுடன் கே சாரங்கபாணி,முத்துராமன்,லீலாவதி,ஸ்ரீநாத்,எல் விஜயலக்ஷ்மி,பாலாஜி ஆகியோரும் நடித்தனர்.ராதாவின் தந்தையாக வரும் வீ எஸ் ராகவனுக்கு நிறைவான பாத்திரம்.புது நகைச்சுவை நடிகராக வளர்ந்து கொண்டிருந்த நாகேஷ் இப் படத்தில் தனி ஆவர்த்தனம் வாசித்திருக்கிறார் எனலாம்.நடிப்பிலும் முன்னேற்றம்.



கண்ணதாசனின் சொந்தப படம்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி இசை என்றால் பாடல்களை பற்றி சொல்ல வேண்டுமா ! மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் ,மாம்பழத்து வந்து வாச மலர் செண்டு,ராதைக்கு ஏற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ ஆகிய பாடல்கள் இனிமையாக அமைந்தன.எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா பாடல் பல கேள்விகளுக்கு பதில் சொல்லியது!

என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது பாடலின் வரிகள் மனதை உருக்கியது.எஸ் ஜானகியின் குரலும்,பி பி ஸ்ரீனிவாசின் குரலும் இதமாக அமைந்தன.பாடல்களை ஸ்ரீதர் அருமையாக படமாக்கி இருந்தார்.
1962ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் 3 படங்கள் வெளிவந்து மூன்றும் வெற்றி அடைந்து சாதனை புரிந்தன. ஸ்ரீதரின் கொடி பறந்தது.





No comments: