காலிமுகத்திடல் போராட்டத்தில் மாறிவரும் காட்சிகள் ! அவதானி


காலிமுகத்திடல் போராட்டம் தொடங்கி ஐம்பது நாட்களும் கடந்த நிலையில்,  அங்கு காட்சிகளும்  மாறிவருகின்றன. அவற்றின் பாரிய அழுத்தம் அரசுக்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்தின.

ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் புதிய அமைச்சரவையில் இடமில்லாமல்போய்விட்டது. அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷ மாத்திரமே நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக,  அனைத்து ராஜபக்‌ஷவினரதும் பிரதிநிதியாகத் திகழுகிறார்.

தன்னை இலங்கையில் 69 இலட்சம் வாக்காளர்கள், அதிலும் பௌத்த சிங்கள மக்களே அதிகம் ஆதரவு தந்து அரியணை ஏற்றியதாக இதுவரையில் சொல்லிக்கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்‌ஷ, புதிதாக நியமித்த அமைச்சரவையில் தனது சகோதரர்களையும்  அண்ணன் மகனையும் இம்முறை இணைத்துக்கொள்ளவில்லை.

இது காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு கிடைத்த


முதல் வெற்றியாக இருந்தபோதிலும் அவர்கள் மேலும் சில வெற்றிக்கனிகளை எட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது.

கடந்த ஏப்ரில் மாதம் தொடங்கிய போராட்டம் இந்த  மேமாதமும் தொடர்ந்து,  இனி வரும் மாதங்களிலும் நீடிக்கப்போகிறது.

புதிதாக பிரதமராகியிருக்கும் ரணில் விக்கிரமசிங்காவுக்கு 1977 முதல் அரசியல் அனுபவம் உள்ளது. அதாவது 45 வருடகால அனுபவம்.  ஜனாதிபதியாகத் திகழும் கோத்தபாயவுக்கு அரசியல் அனுபவத்தை விட இராணுவ அனுபவம்தான் அதிகம். அவர் இதற்கு முன்னர் என்றைக்குமே அரசியல்வாதியாகத்  திகழவில்லை.

காலமும் சூழ்நிலையும் அவரை அரசியலுக்குள் இழுத்துவிட்டது.  ஆனால், தொடக்கத்தில் அவருக்கு இந்த அரசியல் சாதகமான சமிக்ஞைகளை காண்பித்தாலும், இந்த ஆண்டு தொடக்கம் முதல் சிவப்பு சமிக்ஞையைத்தான் காண்பிக்கிறது.  அவரது சகோதரர்கள் மூவரும், பெறாமகன் நாமல் ராஜபக்‌ஷவும் கழுத்தில் சிவப்பு நிற துப்பட்டாவுடன் வலம் வந்தாலும், இவர் அதனை அணிந்துகொள்ளவில்லை.

எனினும் அநுராதபுரத்திலிருந்து சோதிடம் பார்த்து குறிசொல்லும் ஞானக்கா என்பவரின் ஆலோசனைகளின் பிரகாரம் தனது அரசியல் பாதையை இவர் வகுத்துவருகிறார் என்பது பரகசியம்.  ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சொத்துக்களில் இந்த ஞானக்காவினதும் அடக்கம்.


இலங்கையின் எதிர்காலத்திற்கும் ராஜபக்க்ஷவினரது வளமான வாழ்வுக்கும் ஆரூடம் கூறிவந்தவரான அந்த ஞானக்காவுக்கு, தமது சொத்துக்களுக்கும்   தாக்குதலும் அழிவும்  நேரும் என்பதை சோதிடத்தின் மூலம் முற்கூட்டியே கணிக்க முடியாதிருந்திருக்கிறது.

இந்தப்பின்னணிகளுடன் கடந்துகொண்டிருக்கும் மே மாதம் பற்றிய பார்வையை இங்கே சமர்ப்பிக்கலாம்.

ஆண்டுதோறும்  வரும் மேமாதம் இலங்கைக்கும் முக்கியமானதுதான். தொழிலாள விவசாய பாட்டாளி மக்களின் மேதினமும், வெசாக் பண்டிகையும் வரும் இந்த மே மாதத்தில்தான், ஈழப்போரில் விடுதலைக்காய் உயிர்நீத்தவர்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களும்  நினைவு கூரப்படுகிறார்கள்.    தொழிலாளர் உரிமைக்காய் 18 ஆம் நூற்றாண்டில் சிக்காக்கோவில் போராடி உயிர்நீத்த தோழர்களும் நினைவுபடுத்தப்படுகிறார்கள்.

மேமாதத்தில் வரும் முழுநிலாக்காலத்தில் (பௌர்ணமி) புத்தர்பெருமானின் பிறப்பு, மறைவு, அவர் பரிபூரண நிர்வாணம்


எய்திய தினத்தை முன்னிட்டு இலங்கையில் வெசாக்தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புத்தரும் உலகத்தொழிலாளர்களும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களும் நினைவுகூரப்படும் வரலாறு எழுதப்பட்ட மேமாதம், வரலாற்று ஆசிரியர்களையும்  ஊடகவியலாளர்களையும் கவனத்தில்கொள்ளவைத்திருக்கிறது.

தனக்கு அரசும்வேண்டாம், அதிகாரமும் வேண்டாம் என்று பதவியையும் அதிகாரத்தையும் துறந்து  அன்புமார்க்கமே வேண்டும் என்று கானகம்  சென்று நிர்வாணம் எய்தியவர் புத்தர்பெருமான். ஆனால், எமது இலங்கையைப் பொறுத்தமட்டில் அவரைப்பின்பற்றும் பௌத்த பிக்குகள்தான் அரசியல் அதிகாரம் பற்றி ஆட்சியாளர்களுக்கு பாலபாடம் கற்பித்துவருகின்றனர்.

1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டு அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருந்தார்.  அவருக்குப்பின்னர் வந்த அதிபர்களும்  சிற்சில திருத்தங்களும் தம் வசம் வைத்திருந்தனர்.  அதனால் சிக்கல்கள் பெருகியதே தவிர இலங்கை தன்னிறைவு அடையவில்லை. அதன் பலனை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

விஹாரைகளிலிருந்து பிரித் ஓதவேண்டியவர்கள் அரசியலில் அதிகாரம் செலுத்துகிறார்கள். அவர்களின் ஆசிவேண்டி ஜனாதிபதி முதல் பிரதமர் மற்றும் அரசியல்தலைவர்கள் படையெடுத்தார்கள். இனிவரும்காலத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி விஹாரைகளுக்குள்ளிருந்துதான் வரும் என்பதற்கு இந்த ஆண்டு மேமாதம் முன்னுதாரணமாகிறது.

மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாமல் தன்னெழுச்சியாக  காலிமுகத்திடலில் தொடங்கிய  போராட்டத்திலும்  பௌத்த பிக்குகளை காணமுடிகிறது.

அவர்களில் சிலர் உதிரும் வார்த்தைகளை எழுத்திலும் பதிவேற்றமுடியாது. ஆனால்,  சமகால எண்ணிம ஊடகம் அவற்றை வைரலாக பரவச்செய்துகொண்டிருக்கிறது.

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு மலையகத்திலிருந்து போதியளவு தமிழ் மக்கள் கலந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கமும் பலபக்கங்களிலிருந்து எழுந்தாலும், கணிசமான தமிழ் – முஸ்லிம் மக்கள் அங்கே தோன்றியிருக்கிறார்கள்.  ஊடகங்கள் ஊடாக தமது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.  அரசுக்கு எதிராக கோஷம் இடம்பெறும் பாடல்களிலும் பங்கேற்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாது என்று கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி,  முன்பு அங்கே இராணுவத்தை குவித்திருந்தது  அரசு. ஆனால் காட்சிகள் இவ்வருடம் மேமாதத்தில் மாறின.   தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மொட்டு கட்சியின் தீவிர ஆதராவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டபோது அதே இராணுவமும் பொலிஸும் கைகட்டி வேடிக்கை பார்க்க நேர்ந்தது.   இது குறித்த கடும்  விமர்சனம் அரச தரப்பு எம். பி. க்களினாலேயே இதே மேமாதத்தில் நாடாளுமன்றில்  எழுந்தது.

இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமும் தங்கமும் எங்கே..?  என்ற கேள்வி தொடர்ந்து எழுந்ததை நாம் மறக்க முடியாது.

இந்த மேமாதத்தில் சில முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வீடுகளில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் சூறையாடப்பட்ட  தங்க நகைகளும் பணமும் எங்கே …? என்று  அரசிடமும் காவல் துறையிடம் முறையீடு செய்து வருகின்றனர்.

காலிமுகத் திடலுக்குள் தமிழ் ஈழம் நுழைந்தால் பொறுக்கமாட்டோம் என்றார் முன்னாள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர். 

ஆனால் நடந்தது என்ன..,?

இறுதிப்போரின்போது அரைநிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்பட்ட  விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு தொலைக்காட்சி  செய்தியாளர் இசைப்பிரியாவின் படத்துடன் சில சிங்கள ஊடகவியலாளர்கள் ஊர்வலம் சென்றனர்.

காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்பட்டு,  தீபம் ஏற்றப்பட்டதுடன், மக்களுக்கு கஞ்சியும் வார்க்கப்பட்டது.

ஒரு பௌத்த பிக்குவே  மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.  சரித்திரம் திரும்பியிருக்கிறது.

முன்னாள் அதிபர் சந்திரிக்காவும் தமது இல்லத்தில் விளக்கேற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை   நினைவு கூர்ந்தார்.

காலிமுகத்திடல் போராட்டம் அரசுக்கு எதிராக மட்டுமல்ல,  நாட்டை  இந்த நெருக்கடிக்குள்ளாக்கிய ராஜபக்‌ஷ குடும்பத்திற்கும் எதிரானதுதான்.

அதனால்தான் ஜனாதிபதி விலகும் வரையில் போராட்டம் தொடரும் என்ற குரல் எழுந்துகொண்டிருக்கிறது.

புதிய பிரதமர்  தனது அனுபவத்தை மூலதனமாக வைத்து காய் நகர்த்துகிறார்.  அத்துடன் நாட்டின் எதிர்காலம் குறித்தும் அபாயச்சங்கு ஊதுகிறார்.

அதற்கேற்ப போராட்ட வடிவங்களும் மாறலாம்.

---0---

 

 

No comments: