அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 34 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம், இவ்வாண்டு ( 2022 ) முதல், உதவியைப் பெற்றுவரும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது.
இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்
தமிழ் மாணவர்களுக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், போர் முடிவுற்ற பின்னர் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களையும் தெரிவுசெய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது.
அவுஸ்திரேலியாவில்
வதியும் மனிதநேயம் மிக்க அன்பர்களின் ஆதரவினால் இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி
நிதியம், இலங்கையில் யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் ( Centre
for Child Development ) வவுனியா நலிவுற்ற
சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு ( Voluntary
Organization For Vulnerable Community Development – VOVCOD) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation
Community Development Organization) மற்றும் கம்பகா மாவட்டத்தில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆகியனவற்றின்
ஊடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்றது.
இந்த உதவியின் மூலம் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு,
கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, கம்பகா, மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும்
மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.
இலங்கையில் சமகாலத்தில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடி - வாழ்க்கைச்செலவு - விலைவாசி உயர்வு முதலானவற்றை கவனத்தில்கொண்டு இந்த வருடம் ( 2022 ) ஜனவரி மாதம் முதல் கல்வி நிதியத்தின் உதவியை பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூவாயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் ஊடாக மாணவர்களுக்கு 2022 ஜூன் மாதம் வரைக்குமான நிதியுதவி முதற்கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஓவியர் ( அமரர் ) கே.ரி. செல்வத்துரை ஞாபகார்த்த
நிதியுதவி
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் இலட்சினையை 1988 ஆம்
ஆண்டில் வரைந்து வழங்கியவரும் பிரபல ஓவியருமான ( அமரர் ) கே. ரி. செல்வத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினர் வழங்கிய பத்து இலட்சம் ரூபா, யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக வங்கியில் நிரந்தர வைப்பிலடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்திலிருந்தும் சில மாணவர்களுக்குரிய நிதிக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவாளரான அன்பர் திரு. சோமசுந்தரம் பாலச்சந்திரன் வழங்கிய உதவியின் மூலம் யாழ். மாவட்டத்தில் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் அண்மையில் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டும் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் வடக்கு, கிழக்கு
மலையகம் உட்பட பல பிரதேசங்களில் உலர் உணவுப் பொருட்கள் மாணவர்களின்
குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment