அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு !
அத்துடன், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதும் சமூக வழக்காகிவிட்டது. சமகாலத்தில் இலங்கை அரசியலில் தோன்றியிருக்கும் நெருக்கயானது
நாடாளுமன்றத்திலிருக்கும் 225 பேருக்கும், இவர்களையெல்லாம் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்திவைத்திருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பெரிய தலையிடியை தந்திருக்கிறது.
இந்தப்பதிவை எழுதும்போது,
கொழும்பு காலிமுகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டம் 25 நாட்களையும் கடந்துகொண்டிருக்கிறது.
இதே வேளை, வடக்கிலும் கிழக்கிலும் போர்க்காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின்
உறவுகள் தொடர்ச்சியாக நடத்தி வரும் அறப்போராட்டம் ஆயிரத்து ஐநூறு நாட்களை கடந்துவிட்டது. அவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள், ஏங்கி ஏங்கியே தங்கள் இன்னுயிரையும் விட்டுவிட்டனர்.
இலங்கையில் தோன்றியிருக்கும்
பிரச்சினை, நாடாளுமன்றில் ஆசனங்களை சூடாக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை
மட்டுமன்றி, அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கியிருக்கிறது. அவர்களில் சிலர் வாரிசு அரசியல் கனவிலும் மிதந்தவர்கள்.
தமக்குப்பின்னர் தமது மனைவி, மகன், மகள் மற்றும் இரத்த உறவுகளை நாடாளுமன்ற அரசியலில் இணைத்துக்கொள்ளும் உள்ளார்ந்த
எண்ணங்களில் வாழ்பவர்கள்.
அண்மையில் பிரதி சபாநாயகர் தெரிவில் நடந்த சடுகுடு விளையாட்டு கேலிக்கூத்தானதுதான் மிச்சம் !
மகேந்திர பேர்ஸி ராஜபக்ஷ என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவராக அரசியலில் பிரவேசித்து, 1970 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தென்னிலங்கையில் பெலியத்தை தொகுதியிலிருந்து தேர்வாகி நாடாளுமன்றம் வந்தவர்.
1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய குடும்பமும் அரசியல் பின்னணி கொண்டிருந்தது.
அரைநூற்றாண்டு கால ( சுமார் 52 வருடங்கள் ) நாடாளுமன்ற அரசியல் அனுபவம் பெற்றிருந்த மகிந்தர், இக்காலப்பகுதியில் எம். பி. ஆக, அமைச்சராக, பிரதமராக,
இரண்டு தடவை ஜனாதிபதியாக, எதிர்க்கட்சித் தலைவராக, மீண்டும் பிரதமராக வந்திருப்பவர்.
குறிப்பிட்ட 52 வருட காலத்தில் அவர் படிப்படியாக தனது
சகோதரர்கள், மற்றும் செல்வப்புதல்வன் நாமல் ராஜபக்ஷவையும் அரசியலுக்குள் அழைத்து வந்துவிட்டார். தம்பி கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியும் தனது கனவுகளை நனவாக்கிக்கொண்டவர்.
ஆனால், இலங்கை மக்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் தவறிவிட்டார்.
அதன் விளைவுதான் இன்று அவரும் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களிடம் செல்வதற்கும் முடியாத பரிதாபகரமான நிலை !
ஈழப்போராட்டத்தை நடத்தி,
நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்திய தீவிரவாதிகளையே அடக்கிய
அனுபவம் தமக்கு இருப்பதனால், தற்போது தோன்றியிருக்கும்
பொருளாதார நெருக்கடியையும் தன்னால் சமாளித்து கடந்து செல்ல முடியும் என்று இறுமாப்புடன் சொல்கிறார்.
அந்தப்போராட்டம் முடிவுக்கு வந்தவேளையில் வெளிநாடொன்றிலிருந்து திரும்பிய
அவர், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் தரையை முத்தமிட்டு வணங்கியபோது எடுக்கப்பட்ட
படங்களை ஊடகங்களில் பார்த்திருப்போம்.
அவ்வாறு தற்போது நடக்கும்
மக்கள் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவரமடியும் என நம்பும் அவர், அவ்வாறு நடந்தால்
நாடாளுமன்றத்தின் தரையை முத்தமிட்டு வணங்குவாரா…? என மக்கள் எதிர்பார்த்திருக்கவும்
கூடும்.
ஈழப்போராட்டம் ஏன் நடந்தது..?
தற்போது மக்கள் தொடங்கியிருக்கும் தன்னெழுச்சிப்போராட்டம் ஏன் நடக்கிறது? என்பதை படிப்பறிவற்ற பாமரர்களும் தெளிவாகச்சொல்வார்கள்.
அதற்கு அரசியல் ஞானமோ, பொருளாதாரம் குறித்து
துறைசார் அறிவோ அவசியம் இல்லை.
“Gotha Go
Home “ என்ற கோசத்துடன் தொடங்கிய தன்னெழுச்சிப்போராட்டம், முழு
ராஜபக்ஷ குடும்பமுமே வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று மாறியது. அத்துடன் இதுவரையில்
கொள்ளையடித்து சூறையாடிய பணத்தையும் மீள ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டும் என்றும் பரிமாணம்
பெற்றதுடன், நாடாளுமன்றிலிருக்கும் 225 பேருமே போய்விட வேண்டும்
“ என்று மற்றும் ஒரு புதிய வடிவத்தையும்
எடுத்துள்ளது.
அரசை அமைத்த மொட்டு கட்சிக்குள்ளும்
முரண்பாடுகள் வெடித்திருக்கிறது. அதற்கு துணை
நின்ற இதர உதிரிக்கட்சிகளுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் மத்தியிலும் வாதப்பிரதிவாதங்கள்
தொடருகின்றன.
அமெரிக்கா சென்ற பஸில்
ராஜபக்ஷவை இறக்குமதி செய்தமைதான் இத்தனை நெருக்கடிக்கும்
காரணம் என்று அவரை காகத்திற்கு ஒப்பிட்டுப்பேசுபவர்களும் இவர்களிடையே காணப்படுகின்றனர்.
இதுவரையில் அமைச்சரவையில்
எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. அதேசமயம் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளிலும்
மாற்றங்கள் வந்துவிட்டன. அதுதான் விலைவாசி உயர்வு. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கிய கடந்த மாதங்களுக்கு
முன்பிருந்த விலைவாசிகள் தற்போது இல்லை. அவையும்
முன்னெப்போதுமில்லாத வகையில் உயர்ந்துள்ளன.
நெருக்கடிகளுக்குத் தீர்வாக அமைச்சரவையை முதலில் மாற்றிய ஜனாதிபதி கோத்தபாய, பின்னர்
தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையை முன்வைத்தார். அதன்பின்னர் அரசின் மீது அதிருப்தி
தெரிவிக்கும் எதிரணியினர் 113 பேர் முடிந்தால் ஒன்றிணைந்து வந்தால்
இடைக்கால அரசுக்கு வழிசமைக்கின்றேன் என்றார்.
இதுஇவ்விதமிருக்க, இலங்கை அரசியலில் தங்களது செல்வாக்கினையும் இருப்பினையும் எப்பொழுதும் தக்கவைத்துக்கொள்ளவிரும்பும்
பெளத்த பிக்குகளான மகா நாயக்க தேரர்கள், தேசிய இணக்கப்பாட்டு
அரசை உருவாக்குங்கள் என்று வலியுறுத்தினர்.
ஆனால், அதற்கு சஜித் பிரேமதாசவின்
ஐக்கிய மக்கள் சக்தியும் அநுர குமாரவின் மக்கள் விடுதலை முன்னணியும் சம்மதிக்கவில்லை.
ஜனாதிபதி உட்பட அனைத்து
ராஜபக்ஷக்களும் வெளியேற வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துக்கொண்டிருக்கும் இக்கட்சிகள்,
மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் ஏறி பயணிக்க விரும்பவில்லை.
மாற்று அரசாங்கம் அமைக்கப்படும்,
அவ்வாறு அமையும் பட்சத்தில் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவர்
பதவிக்கு மற்றும் ஒருவரும் வரக்கூடும் என்றும் அரசியல் அவதானிகள் ஆரூடம் கூறிவருகின்றனர்.
அரசுக்கு எதிரான நம்பிக்கை
இல்லாத் தீர்மானம், ஜனாதிபதியிடமிருக்கும்
கூடுதல் அதிகாரங்களை குறைத்தல், முதலான விவாதங்கள் நாடாளுமன்றில் வந்தால், இந்த அரசியலில் யார் எதிரி..? யார்… நண்பன்…? யார்
மதில்மேல் பூனை…? என்பதும் தெரிந்துவிடும் !
பிரதி சபாநாயகர் தெரிவில்
அனைத்தும் அம்பலமாகியிருக்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் எமது
தமிழ் சமூகம் அடிக்கடி சொல்லும் திரசங்கு சுவர்க்க
நிலையின் மூலக்கதையை சொல்லலாம்.
திரிசங்கு என்பவன் தனது பூதவுடலுடன்
சொர்க்கம் செல்ல விரும்புகின்றான்.
சொர்க்த்துக்கு செல்வதற்காக அவன் மேற்கொண்ட
முயற்சிக்கு எவரிடமிருந்தும் உதவி கிடைக்கவில்லை. விகார ரூபத்தையும் சாபமாக பெற்றவன்தான் அவன்.
அவனை அந்த ரூபத்துடனேயே சொர்க்கத்துக்கு அனுப்புவதற்காக, மற்றும் ஒரு முனிவர் விசுவாமித்திரர் யாகம் நடத்துகிறார். இவ்வேளையில் குறுக்கிடும் இந்திரன் திரிசங்குவை கீழே தள்ளுகிறார். அதனால் கோபம் கொண்ட விசுவாமித்திரர் அவனை ஆகாயத்திலேயே
அந்தரத்தில் நிறுத்தி அவனை சுற்றி இன்னொரு சொர்க்கம் படைக்க ஆரம்பிக்கிறார்.
அதனைக்கண்டு பயந்துவிட்ட இந்திரனின் சபையிலிருக்கும்
தேவர்கள், அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு, அவனை அப்படியே
விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார்கள். அவ்வாறு அமைந்ததுதான் அந்த சொர்க்கம். அதுதான் திரிசங்கு சொர்க்கம். அதாவது பூமியும் இல்லை,
சொர்க்கமும் இல்லை.
இந்தக்கதையை படிக்கும் வாசகர்கள், இலங்கை அரசியலில்
யார் திரிசங்கு…? – யார் விசுவாமித்திரர்…?
- யார் வசிஸ்டர் …? யார் இந்திரன்….? யார்
தேவர்கள்….? என்பதை புரிந்துகொள்வார்கள் !
----0---
No comments:
Post a Comment