அவுஸ்திரேலியாவில் தேவகி கருணாகரனின் " அவள் ஒரு பூங்கொத்து " வெளியீடு - திருமதி திலகா பிரபாகரன்

 திருமதி தேவகி கருணாகரன் அவர்களின் 'அவள் ஒரு பூங்கொத்து" புத்தக வெளியீட்டு விழா பற்றிய ஒரு கண்ணோட்டம்.


திருமதி தேவகி கருணாகரன் அவர்களின் 'அவள் ஒரு பூங்கொத்து" என்ற சிறுகதைத் தொகுப்பின் புத்தக வெளியீட்டு விழா கடந்த ஏப்ரில் மாதம் 30 ஆந் திகதி 2022 அன்று சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு அவுஸ்ரேலிய சிட்னி மாநில ஸ்ரத்பீல்ட் என்ற நகரத்தில் அமைந்துள்ள கரிங்ரன் சேர்ச் மண்டபத்தில் இடம்பெற்றது. திருமதி கருணாகரனின் அன்பான அழைப்பை ஏற்று நானும் அந்த விழாவிலே கலந்து கொண்டேன். அந்த மண்டப வாசலிலே ஏற்றப்பட்டு இருந்த குத்துவிளக்கோடு நிறைகுடம், விபூதி, சந்தனம,; பழங்கள,; கற்கண்டு யாவும் எம் தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றி;க்கொண்டு இருந்தன. வாசலிலே திருமதி கருணாகரன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அங்கு வருகைதந்த மக்களை அன்போடு வரவேற்றார்கள்.

விழாவின் ஆரம்பமாக திருமதி கருணாகரனின் பேரன் அஷான் கருணாகரன் ஆங்கிலத்திலும் திருமதி சரோஜாதேவி சுந்தரலிங்கம் அவர்கள் தமிழிலும் ஒரு சிறிய ஆரம்ப உரையைக் கூறி விழாவினைத் தலைமை தாங்கி நடாத்துவற்காக வைத்திய கலாநிதி பொன் கேதீஸ்வரன் அவர்களை மேடைக்கு அழைத்தார்கள்.

தலைவர் கேதீஸ்வரன் அவர்கள் மங்கல விளக்கேற்றுவதற்காக ஸ்ரத்பீல்ட் லோட் மேயர் கவுண்சிலர் மத்தியூ பிளக்மோ, கவுண்சிலர் சாண்டி றெட்டி, திருமதி சாந்தி பாஸ்கரன், பல்வைத்திய கலாநிதி திருமதி சிவரதி கேதீஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி ரதி நடனச்சந்திரன் ஆகியோரை அழைத்தார்.

அடுத்ததாக புத்தக ஆய்வு செய்வதற்காக திரு செ பாஸ்கரன் மற்றும் சௌந்தரி கணேசன் இருவரையும் மேடைக்கு அழைத்தார் 

அதனைத் தொடர்ந்து திருமதி கருணாகரனின் பேரப்பிள்ளை அலிஷா கருணாகரன் அவுஸ்ரேலிய தேசிய கீதத்தையும் அபிநயா பிரபாகர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் இனிமையாகப் பாடினார்கள்.

தொடர்ந்து விழாவைத் தலைமை தாங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கினார். மேலும் திருமதி கருணாகரன் தனக்கு எவ்வாறு அறிமுகமானார் எனவும் ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய கலப்பை சஞ்சிகையிலே அவரது சிறுகதைகள் பிரசுரிக்கப்பட்டதாகவும் கூறினார். தொடர்ந்து கூறுகையில் திருமதி கருணாகரன் அவர்கள் தனது இளமைக்காலத்தில் எழுதிய நாடகங்கள் மற்றும் இசையும் கதையும் போன்றவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகியிருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் இவர் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் எனவும் இவரது சிறுகதைகள் கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன எனவும் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து புத்தகத்தை தலைவர் வைத்திய கலாநிதி பொன்  கேதீஸ்வரன் வெளியீட்டு வைத்தார்.

 தேவகி கருணாகரன் முதல் பிரதியை, திருமதி தேவி பாலா, வைத்திய கலாநிதிகள் கதிர் நடனச்சந்திரன், வி மனோமோகன் ஆகியோருக்கும் கவுண்சிலர் மத்தியூ பிளக்மோ அவர்களுக்கும் வழங்கினார்.கவுண்சிலர் மத்தியூ பிளக்மோ அவர்கள் மேடையில் உரையாற்றும் பொழுது ஸ்ரத்பீல்ட் நூலகத் தமிழ்ப்பிரிவு அதீத வளர்ச்சி பெற்று வருவதாகக் கூறினார். வைத்திய கலாநிதிக்ள் சிவகுருநாதனினதும் வி எஸ் கருணாகரனினதும் பேரன் கணேஷ் சிவகுருநாதன், யாழ் கைதடியில் அமைந்துள்ள Nuffield செவிப்புலன், விழிப்புலன் இழந்தோர் பாடசாலையைப் பற்றிக் கூறி இந்த புத்தக வெளியீட்டு விற்பனையால் திரட்டப்படும் நிதி அவர்களின் கல்வி சம்பந்தமான தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

பலவிதமான தமிழ்த் தகைமைகள் பெற்றவரான திரு செ பாஸ்கரன் அவர்களை புத்தக ஆய்வு செய்யும்போது. திரு பாஸ்கரன் அவர்கள் திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்பு இலகாவில் பணிபுரிந்து இளைப்பாறியவர் என்று கூறி அவரின் திறமைகளையும் எழுத்தாற்றல்களையும் எடுத்துக் கூறினார். திருமதி கருணாகரனின் முதல் வெளியீடு ’அன்பின் ஆழம்’ என்று கூறி தான் இந்த அவள் ஒரு பூங்கொத்து"  புத்தகத்திலே அடங்கியுள்ள முதல் ஏழு சிறுகதைகளை ஆய்வு செய்வதாகக் கூறி கதைகளினுடாக எழுத்தாளரின் எழுத்தின் ஆழத்தையும் எளிமையான எழுத்தோட்டத்தைப் பற்றியும் விபரித்தார். திருமதி கருணாகரன் அவர்கள் தனது சிறுகதைகளிலே பெண்ணியத்தின் குரலாகவும், ஒடுக்கப்படுவோர் குரலாகவும் முன் நிற்பதையும் எடுத்துக்கூறி , அவுஸ்ரேலியாவின் அழகையும் வளங்களையும் மிகத் துல்லியமாகப் புகுத்தியுள்ளார் என்றும் கூறினார். 

அவரைத் தொடர்ந்து அவுஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன ஒலிபரப்பாளர் சௌந்தரி கணேசன் அவர்கள் மிகத் துணிச்சலாக நூலின் இறுதி எட்டுச் சிறுகதைகள் பற்றிய ஆய்வினை நடாத்தினார். திருமதி கருணாகரன் அவர்கள் தனது சிறுகதைகளிலே புதுமையான பல விடயங்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாது நல்ல பல வாழ்க்கைத் தத்துவங்களையும் புகுத்தியுள்ளார் என்றும் கூறினார். அத்தோடு நூல் ஆசிரியர் மென்மேலும் வளர்ந்து இன்னும் பல ஆக்கங்களைத் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன ஒலிபரப்பாளர் மறைந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் பாரியார் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் எழுதி அனுப்பிய வாழ்த்துச்செய்தி வாசிக்கப்பட்டது.

அடுத்து விழா நாயகி திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் தனது ஏற்புரை மற்றும் நன்றியுரையை வழங்கினார். அவர் தனது அழைப்பையேற்று அங்கு சமூகமளித்தவர்களுக்குத் தனது நன்றிகளைக் கூறிக்கொள்ளத் தவறவில்லை. மற்றும் வன்னியில் உள்ள பாடசாலைகளுக்கு தான் 40 புத்தகங்களை இலவசமாக வழங்கியிருப்பதாகவும்  குறிப்பிட்டார். அத்தோடு தான் இந்த அளவுக்கு எழுதுவதற்கும் அவற்றைப் புத்தகமாக வெளியிடுவதற்கும் தனக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் தன் கணவர் வைத்திய கலாநிதி  கருணாகரன் அவர்களுக்கும் குறிப்பாகத் தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

விருந்தோம்பலில் பெயர் பெற்றவர்கள் அல்லவா தமிழர்கள் நாங்கள். இதற்கு ஏற்றாற்போல அரை மணி இடைவேளையின்போது  சுவையான தின்பண்டங்களைப் பெட்டிகளிலே அடுக்கிவைத்துப் பரிமாறியதோடு சூடான காப்பி தேனீர் குளிர்பானங்கள் என அன்போடு பரிமாறினார்கள்.

இடைவேளையின் பின் ஒரு ஆங்கிலப்பாட்டை அலிஷா கருணாகரனும் தமிழில், ரன்ஞீவன் கிருபராஜா, அதிசய இராகம் என்ற பாட்டை இனிமையாகப் பாடி எல்லோரையும் இசை வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டார்.

 

இறுதியாக நிகழ்வுக்கு மகுடம் வைத்தாற்போல இந்த நிகழ்ச்சியின் நாயகி அவர்களால் எழுதி நெறியாக்கப்பட்ட கங்காரு திருமண சேவை (Kangaroo Matrimony) என்ற நகைச்சுவை நாடகம் மேடையேறி அங்கு வந்திருந்தவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.

இந்த நிகழ்வை முழுவதுமாக ரசித்து மகிழ்ந்தவள் என்ற முறையில் திருமதி கருணாகரன் அவர்களின் முயற்சியைக் கண்டு பார்த்துப் பிரமித்துப் போனேன். ஒரு சனிக்கிழமை மாலையை மகிழ்ச்சியாகக் களித்த பூரிப்போடு வீடு திரும்பினேன்

சிட்னியில் இருந்து திருமதி திலகா பிரபாகரன்

 
No comments: