கடவுள் வழிபாடு??

முருகனையோ பிள்ளையாரையோ   வழிபடுபவர்கள் சிலர் சிவனை வழிபடுவதில்லை! இது ஓர் தவறான நம்பிக்கை!

 

முருகன் பிள்ளையார் வைரவர்  என்று உருவங்களைக்கொண்ட கடவுளர் எல்லோரும் சிவபெருமானின் அருட்சத்தி வடிவங்களே

! தடத்த நிலையிலே வேறுவேறான உருவ வழிபாடு நடைமுறையில் இருந்தாலும் சொரூப அருவ நிலையிலே இக்கடவுளர் எல்லாம் பரம்பொருளான சிவபெருமானின் சத்தி வடிவங்களே!. தடத்த நிலையிலே காணப்படும் வேறுவேறு உருவங்களுக்கு இயற்றும் வழிபாடு சிவனையே சென்றடையும்.   தூய மனதுடன் உண்மையாக வழிபடுபவர்களுக்கு அவரவர் வினைப் பயன்களுக்கு ஏற்ப உரிய பலன்களை அருள்பவர் சிவபெருமான் மட்டுமே!.

இதையே சைவசித்தாந்தம் இறுதியான மந்திர முடிவென வலியுறுத்துகிறது.

இதைவிட்டு ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

 

 பொங்கரவன் கருணையினால் பிறப்பிறப்பும்  மலமுமிலாப்

பெருஞ்சொரூப சிவசத்தி அருள்வடிவாய்த் தோற்றிட்ட

ஐங்கரனோ(டு) அறுமுகனை  வழிபாடு செய்வதெலாம்

ஆதிசிவன் தனைவணங்குஞ் செயலாகும் தெரிந்திடுவீர்!

 

உண்மையை உணர்வீர்!


மனம்விரும்பும் கடவுளரை மனதார வழிபட்டு

மனக்குறையை நேரடியாய்  மண்டியிட்டுச் சொன்னாலும்

தினமியற்றிச் சேர்த்திட்ட வினைப்பயனுக்(கு) அமைவாகச்

சிவனவன்தான் பலனளிப்பான்; தெரிந்திடுவீர் இவ்வுண்மை!

 

மனதுருகி வழிபட்டால் தலைக்குவரும் பெருந்துன்பம்

மலைபோலத் தாக்காது தலைப்பாகை உடன்போகும்;

உனதுவழி பாட்டின்பயன் இதுவேயென் றுணர்ந்திடுவாய்!

ஒட்டுமொத்த வினைப்பயனை அனுபவித்தே போக்கணுமே!

              

பணக்கார ரிற்சிலரோ பணஞ்சேர்க்கும் ஆசையொடு

படிகடந்து கோயிலுக்குள் பகட்டுடனே சென்றிடுவர் இணக்கமாகப் பேசிப்பணங் கொடுத்ததுமே விசேடவழி

இட்டுச்செல்ல மூலவரை எதிர்நின்று வணங்கிடுவர்!

 

கணக்கில்லாச் செல்வத்தைச் சுணக்காது வெகுவிரைவில்

கடனாக வென்றாலும்; கரஞ்சேர்க்க வேண்டிடுவர்!

இணக்கமொடு இறைவனிடம் தூதாகப் பூசைசெய்தோர்க்

கேற்றபடி சன்மானம் இட்டம்போல் வழங்கிடுவர்!

 

வணங்கிக் கை  கட்டிவாயும் பொத்திநிற்கும் ஏழைகளோ

வயிற்றுப்பசிக் காகப்படி வெளிநின்று பிச்சையேற்பர்!

 உணவுக்காய்க் கால்வயிறு நிரப்பிடவே எதையேனும்

உளமகிழ்ந்து தாராரோ எனவேண்டித் தொழுதிடுவர்!

 

புலம்பெயர்ந்தவர் பலரின் பலன்தராப் புதிய சிந்தனை தொடர்கிறதே !!

 

நாள்நட்சத் திரத்தோடு குலங்கோத்தி ரங்குறித்து

நல்லபடி எழுதிக் காசோலையுடன்;; தபால்மூலம்

சூழ்ந்துவரும் தம்துன்பம் துடைத்திடவோர் விண்ணப்பம்

தூதுவருக்(கு) அனுப்பிவழி பாடுசெய்வோர் பலருண்டு!

 

வீட்டிலேதாம் இருந்தபடி கேட்டபணம் தரகருக்கு

வேண்டியபூ சைசெய்து விளக்கேற்ற ; அனுப்பிவிட்டால்

ஈட்டிவிட்ட வினைத்தொகையை இறைவனவன் கழைவானாம்!

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

தொன்றுதொட்டுச் சைவர்க்குச் சிவனொருவ னேகடவுள்!

தூயசைவ நெறிகொண்டோர் உயிர்களிலே சிவங்கண்டார்!

இன்றுவரை சிறுதெய்வ வழிபாட்டில்; உயிர்ப்பலியா?

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

தானேதான் கடவுள் என ஏமாற்றும் ஈனர்களின்

தாள்கழுவிப் பூசைசெய்யும் அறிவிலிகாள் கேட்டிடுவீர்!

 

மாதாவின் கருமூலம் மண்ணினிலே பிறந்தோரை

மலப்பற்றுக் கொண்டவரை மடிந்திறக்கும் மனிதர்களை

ஏதோவோர் கடவுளென்று சைவமென்றும் ஏற்கவில்லை!

ஏன்மூட நம்பிக்கை எண்ணங்கள் மாறாதோ?

 

 

சிவஞானச் சுடர்பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

No comments: