எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) மரணங்கள் மலிந்த பூமி ( Killing Field ) தொலைவிலிருந்து விம்மலோடு அவதானித்த காலம் ! அங்கம் - 12 முருகபூபதி


கடந்த  11 ஆவது அங்கத்தில் 1987 ஆம் ஆண்டு எவ்வாறு கடந்தது என்பதை குறிப்பிட்டிருந்தேன்.  1988 ஆம் ஆண்டும் இலங்கையிலிருந்து கிடைத்த செய்திகள் பதட்டத்தையே ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

விடுதலைப் புலிகளுக்கும்  இந்தியப் படைகளுக்குமிடையிலான மோதல் நீடித்துக்கொண்டிருந்தது.  இதற்குள் சில புத்திஜீவிகளும் சமூகப் பணியாளர்களும் சிக்கினர்.

அதில் ஒருவர் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழக ஸ்தாபக உறுப்பினர் சட்டத்தரணி கே. கந்தசாமி.

மறைவு என்றால், மரணமடைந்துவிட்டார் என்பதே அர்த்தமாக கொள்ளப்பட்டிருந்தபோது, அவரது மறைவு பல கேள்விகளை எழுப்பியிருந்தது. அவர் ஒரு தமிழ் இயக்கத்தினால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தார். அவர் இதய நோயாளியாகவும் இருந்தார்.

அவர்பற்றி முன்னர் வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில்


அறிந்திருந்தாலும், மெல்பனில்  நான் வாழத்தலைப்பட்டபோது, அவர் கடத்தப்பட்ட செய்தியறிந்து, அவரது தமிழ் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய மேலதிக தகவல்களை, அவருடன் நெருங்கிப்பழகியிருந்தவரான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அண்ணன் அவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

நான் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் Brunswick இல்  5/249 , Victoria Street என்ற முகவரியில் அமைந்த குடியிருப்பில் அப்போது வசித்தேன்.  சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணன் அவர்களது அலுவலகம் மிகச்சமீபமாக சிட்னி வீதியில் அமைந்திருந்தது.

அக்காலப்பகுதியில் எனக்கு இரவு நேர வேலை.  அதனால், உறங்குவதிலும் எனக்கான சமையலை கவனிப்பதிலும் கடிதங்கள், கட்டுரைகள் கதைகள் எழுதுவதிலும் எனது பகல் பொழுதுகள் கரைந்தன.

மதிய வேளையில் ரவீந்திரன் அண்ணனிடம் சென்று பேசிக்கொண்டிருப்பேன். அத்தகைய ஒரு நாளில்தான் சட்டத்தரணி கே. கந்தசாமி காணாமலாக்கப்பட்ட செய்தி கசிந்திருந்தது.  ரவி அண்ணன் அதனை ஊர்ஜிதப்படுத்தினார்.

வீரகேசரி ஊடகத்துறை  நண்பர்களிடம் கேட்டால் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள்தான் வந்தன.  அதற்கு முன்னர் எனது இலக்கிய உலக நண்பன் -  எழுத்தாளன் காவலூர் ஜெகநாதன் 1985 ஆம் ஆண்டில் சென்னையில் காணாமலாக்கப்பட்டபோதும், அவ்வாறே ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள்தான்  எனக்கு கிடைத்திருந்தன. அவர் எழுதிய ஒரு நாவல்,  அவரது கையெழுத்தில் எனக்கு முகவரியிடப்பட்டு தபாலில் வந்து ஒரு சிலதினங்களில் அவர் மறைந்தார். 

காணாமலாக்கப்படுபவர்கள் இறுதிவரையில் மறைந்தவர்கள்தான்.  இன்றும் வடக்கிலும் கிழக்கிலும்  போர்க்காலத்தில்  ஆயுதப்படைகளிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றன.

ஆனால், அன்று 1987 – 1988 – 1989 – 1990 காலப்பகுதியில் தமிழின விடுதலையை நோக்கி ஆயுதம் ஏந்திய இயக்கங்களினால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்காகவும் கொல்லப்பட்டவர்களுக்காகவும் அவர்களின் உறவுகள் வாய் திறந்து குரல் எழுப்பமுடியாதிருந்தது.

அவர்கள் உண்பதற்கும் கொட்டாவி , குறட்டை விடுவதற்கும்


மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  இந்த இலட்சணத்தில் நாம் அடிப்படை மனித உரிமை பற்றி புகலிடத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தோம்.

1988 ஆம் ஆண்டளவில்  மெல்பனில் எனக்கு அறிமுகமான சிலர்  இனவிடுதலைப் போராட்டத்தில் மாற்றுச்சிந்தனை கொண்டிருந்தனர்.  இவர்கள் விடுதலைப் புலிகளின் ஏகபோக சிந்தனையோட்டத்திலிருந்து வேறுபட்டிருந்தனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அமையவிருந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையை எவ்வாறாயினும் இயங்கச்செய்து,  அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற கருத்தியலை முன்வைத்துக்கொண்டிருந்தனர்.

அக்கருத்தியலை மக்களிடம் எடுத்துச்செல்வதற்காக ஒரு பத்திரிகையை நடத்துவதற்கும் அவர்கள் விரும்பினர். இதுதொடர்பான கலந்துரையாடல் கூட்டம்,  மெல்பனில் அச்சமயம் கிளேய்டனில் வசித்த திவ்வியநாதன் என்பவரது வீட்டில் நடந்தது.  இவர் யாழ். பல்கலைக்கழ துணை வேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நெருங்கிய உறவினருமாவார்.

இவரது தங்கை சகுந்தலாவின் கணவர் சிவயோகநாதனை எமது ஊரில் நன்கு அறிவேன்.  இவரது அண்ணன் கதிர்காமநாதன் நீர்கொழும்பு  உயர் நீதிமன்றத்தில் எழுதுவினைஞராக பணியாற்றியவர். இவரது துணைவியார் எங்கள் ஊர் விஜயரத்தினம் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றியவர்.


மெல்பனில் திவ்வியநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இராஜரட்ணம் சிவநாதன்.  எம்மால்  “ திவ்வி  “ என அழைக்கப்படும் இவரது  வீட்டில் சிவநாதன், தருமகுலராஜா, பாலச்சந்திரன்,  நல்லையா சூரியகுமாரன்,  பல் மருத்துவர் ரவீந்திரன், விஜயகுமார், சிவகணேசன் ஆகியோரை சந்தித்தேன். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் மக்கள் குரல் என்ற கையெழுத்து இதழை வெளியிடுவது என்று முடிவாகியது.

ஒவ்வொரு மாதமும் முதல் வார இறுதியில் சந்தித்து , மக்கள் குரலில் வெளிவரவேண்டிய ஆக்கங்கள் பற்றி கலந்துரையாடினோம்.  எழுதப்பட்ட ஆக்கங்களை மீண்டும் வாசித்து, திருத்தங்கள், மாற்றங்களைச்செய்து அழகான கையெழுத்து கொண்டிருக்கும் ஒருவர் மூலம் பதிவுசெய்து விநியோகித்தோம்.  

Heidelberg இல் Burgundy Street இல் அமைந்திருந்த தர்மசேகரம் அண்ணரின் கடையிலும் விற்பனைக்கு வைத்தோம்.  மக்கள் குரலின் உள்ளடக்கம் அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை.  எனினும் அவருடை உடல் நலத்திற்கு உவப்பில்லாத பொருட்களையும் அவர் அங்கே விற்பனைக்கு வைத்திருப்பதை சுட்டிக்காண்பித்தபோது அட்டகாசமாகச்சிரித்தார். அவர் பழகுவதற்கு இனியவர்.  வர்த்தகராகவுமிருந்தமையால் நண்பர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேண்டும்தானே அண்ணன்.  கருத்துக்கு மாற்றுக்கருத்தும் இருந்தால்தானே சமூகம் ஆரோக்கியமாக வளரும் என்பேன்.

அப்போதுதான் செம்மறி ஆட்டின் கதை நினைவுக்கு வந்து,  மக்கள் குரலில் ஒரு குறிப்பினை எழுதினேன்.

இரண்டு செம்மறி ஆடுகள் பேசிக்கொண்டிருப்பது போன்ற குறிப்பு அது. 

செம்மறி ஆடு 01 :  இந்த மனிதர்கள்  எங்கள் இனத்தின் ரோமங்களை  சவரம் செய்து, கம்பளி ஆடை செய்கிறார்கள். எங்கள் இனத்தை கொலைசெய்து சாப்பிடுகிறார்கள். அவ்வாறிருந்தும் எமது இனம் அழியவில்லை சகோதரா !

செம்மறி ஆடு 02 :  சகோதரா… இந்த மனித இனம் எம்மைப்பற்றியும் ஒரு பாடல் இயற்றியிருக்கிறது தெரியுமா..?  “சாய்ஞ்சா சாயிற பக்கமே சாயிற செம்மறி ஆடுகளா  “ என்பதுதான் அந்தப்பாடல். எனவே எமது இனம் அழியவே அழியாது!

இவ்வாறு மற்றும் ஒரு குறிப்பு துணுக்கும் எழுதியிருந்தேன்.

அதனைக்கேட்ட மக்கள் குரல் ஆசிரிய பீட நண்பர்கள் சிரித்தார்கள்.  அதனை  வெளியிடவேண்டாம் என்று நண்பர் நல்லையா சூரியகுமாரன் தடுத்தார்.

அந்த குறிப்பு இதுதான்:  தலைப்பு:   பாலபாடம். 

சேவல் காலையில் கூவும்.

நாய் வீட்டை காக்கும்.

பூனை  எலி பிடிக்கும்.

பசு பால் தரும்.

புலி காட்டில் வசிக்கும்.

இதில் இறுதி வரிதான் சூரியகுமாரனுக்கு பிரச்சினை தந்தது.

 “ மச்சான் வேணாம்.  “  என்றார்.  அக்காலப்பகுதியில் இந்தியப் படைகளை புலிகள் இயக்கம் மறைந்திருந்து தாக்கியது.  ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் அவர்கள் பாசறை அமைத்து இயங்கினர். அவர்கள் மரபுவழி முறை தாக்குதலை நடத்தாமல்  கெரில்லா முறை தாக்குதல்களிலேயே ஈடுபட்டு வந்தனர்.  பிற்காலத்தில்தான் மரபுவழித்தாக்குதல்களில் நேரடியாக மோதினர். அதனால்தான் அவர்களை முறியடிக்க முடிந்தது என்று அண்மையில்கூட  முன்னாள் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவும் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.

1988 காலப்பகுதியில் புலிகள் இயக்கம் மறைந்திருந்து இயங்கியது. அதனை குறியீடாக்கி  அவ்வாறு எழுதிய குறிப்பு இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது.

அத்துடன் மக்கள் குரல் இதழில் இறுதிப்பக்கத்தில் கடைசிப்பக்க  கண்ணாடி என்ற பகுதியில் சமகால செய்திகளில்  இடித்துரைக்கவேண்டிய குறிப்புகளையும் பதிவுசெய்தேன்.

வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில்  டெலோ இயக்கத்தின் தலைவர் ஶ்ரீசபாரத்தினம் உட்பட சுமார் 300 போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். செய்தவர்கள் யார் எனத் தெரியும்.  அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் 36 ஆவது நினைவேந்தல் இலங்கை உட்பட புகலிட நாடுகளில் நடந்துகொண்டிருக்கும்  இத்தருணத்தில் எனது இந்த அங்கம் வெளியாவதும் தற்செயலானது.

அவ்வாறு சகோதர படுகொலைகளுடன் ஆரம்பமாகிய பிரச்சினைகள் பின்னர் படிப்படியாக  தமிழ் சமூகப்பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பக்கமும் திரும்பியது.

அதில் முதலாவது பலி சட்டத்தரணி கே. கந்தசாமி.

எனது நினைவு அடுக்குகளில் வாழும் சிலரை இங்கே குறிப்பிடுகின்றேன். 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச செயலாளர் தோழர் விஜயானந்தன்,  நவசம சமாஜக்கட்சியின் வடக்கு பிரதேச செயலாளர்  அண்ணாமலை, சர்வோதய இயக்கத்தின் வடக்கு செயற்பாட்டாளர் கதிரமலை, இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணசிங்கா, வண. பிதா. சந்திரா பெர்ணான்டோ,  பல் மருத்துவர் ஞானி – ஞானசேகரன், யாழ்,  மன்னார், மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் பஞ்சலிங்கம்,  மாக்பூல், அந்தோனி முத்து,  அம்பாறை மாவட்ட அபிவிருத்திச்சபை உறுப்பினர் வேல்முருகு,  யாழ். சென். ஜோன்ஸ் அதிபர்  ஆனந்தராஜா,  யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் றஜனி திராணகம, யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை, சட்டத்தரணி சாம். தம்பிமுத்து, மூதூர் முன்னாள் எம்.பி. தங்கத்துரை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விமலேஸ்வரன், விஜிதரன், ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வத்தின் ஏக புதல்வன் அகிலன், சட்டத்தரணி குமாரசாமி விநோதன்…. இப்படியே நீண்ட பட்டியல்.

இவர்களில் சிலருடன் எனக்கு தொலைபேசி தொடர்பும் முன்னர் இருந்தது.  இந்த மறக்கமுடியாத கொடிய  நினைவுகளுடன்தான்  மறைந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள் என்ற கட்டுரையை பின்னாளில் எழுதினேன். இந்த ஆக்கம் எனது சொல்லத்தவறிய கதைகள் (2019 இல் வெளியானது )  நூலில் இடம்பெற்றுள்ளது.

T.R. R. O கந்தசாமி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதை கண்டித்து கூட்டம் நடத்தவேண்டும் என்று எமது மக்கள் குரல் ஆசிரிய பீடம் தீர்மானித்தது.  அந்தப் பீடம் அமைப்புக்குழுவாகத்தான் இயங்கியது.  கந்தசாமியுடன் நெருங்கிப்பழகியிருக்கும் சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணனும் அத்தகைய ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு விரும்பியிருந்தார்.

லண்டனில் கந்தசாமியுடன் இணைந்து இயங்கிய மருத்துவர் பொன். சத்தியநாதனுடன் அவர் இதுபற்றி பேசினார்.  அனைவரும் ஒற்றுமையாக இந்த நிகழ்வை நடத்துவது என்ற முடிவுக்கு அமைய,  ஒரு பேச்சுவார்த்தைக்கு ரவீந்திரன் அண்ணன் ஏற்பாடு செய்தார்.

அந்தச் சந்திப்பு மருத்துவர் சத்தியநாதன் இல்லத்தில் நடந்தது. இராஜரட்ணம் சிவநாதனும் இலங்கைத் தமிழ்ச்சங்க தலைவர் சோமா சோமசுந்தரம் அண்ணரும் ரவி அண்ணனும் நானும் கலந்துகொண்டோம். கந்தசாமிக்கு நினைவுக்கூட்டம் நடத்துவது என்றே இறுதியில் முடிவாகியது.

கண்டனக்கூட்டம்  நடத்துவதற்கு சோமா அண்ணர் விரும்பவில்லை.  அவ்வாறு நடத்தினால், அவர் இங்கு இயங்கிய  “ பெரிய கம்பனி  “ யின் கண்டனத்துக்கு ஆளாகநேரிடும்.  

பெரிய கம்பனி படிப்படியாக ஈழவிடுதலைப் போராட்டத்தை தான் மாத்திரமே நடத்தவேண்டும் என்பதை பரப்புரை செய்துகொண்டிருந்த காலம் அது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் அவர்கள் சமூக நலன் கருதி ஓரளவு கண்ணியமாகவும் நடந்துகொண்டார்கள். அதற்கு அவர்களை தலைமை தாங்கி நடத்திய தில்லை ஜெயக்குமார்தான் முக்கிய காரணம்.

அன்றைய சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய             04-12-1988 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் Y W C A  மண்டபத்தில் சோமா அண்ணர் தலைமையில் அந்தக்கூட்டம்  நடந்தது. ரவி அண்ணன், சத்தியநாதன், ஆகியோருடன் நானும் உரையாற்றினேன்.

சிட்னியிலிருந்து தமிழ் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்த சமூகப்பணியாளர் – கணக்காளர் துரைசிங்கம்,  தமிழ்நாட்டில் மஸ்ட் என்ற மருத்துவ உதவி அமைப்பினை தமிழ் அகதிகளுக்காக இயக்கியவரும் விலங்கு மருத்துவருமான நடேசன் ( இவர் பின்னாளில் எழுத்தாளராகவும் மாறினார் )  ஆகியோரும் வருகைதந்து உரையாற்றினர். 

குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து மனித உரிமை ஆர்வலர் மருத்துவர் பிறைன் செனவிரத்தின தமது உரையை வீடியோவில் பதிவுசெய்து அனுப்பினார்.

அதனை தில்லை ஜெயக்குமார் மண்டபத்தில் ஒளிபரப்பினார்.

அந்த மண்டபத்தில் கந்தசாமி அவர்கள் திரளான மக்கள் மத்தியில் நினைவு கூரப்பட்டார். 

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட இயக்கங்கள் முதலில் தமக்குள்ளிருக்கும் முரண்பாடுகளை தவிர்த்துக்கொண்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டால்தான் விமோசனம் கிட்டும் என்ற தொனியில் எனது உரை அமைந்தது.  அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை வீரகேசரியில் வெளிவரச்செய்ததுடன்,  விடுதலை இயக்கங்கள் ஒன்றை ஒன்று அழிப்பதை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து,  அறிக்கை தயாரித்து கையொப்பம் சேகரிக்கும் இயக்கத்தை அன்றைய தினமே ஆரம்பித்தேன்.

அந்த அறிக்கை வீரகேசரி பத்திரிகையில் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வெளியானது.

அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருந்தது என்பது பற்றிய விபரத்துடன் அடுத்த அங்கத்தில் சந்திக்கின்றேன்.

( தொடரும் )

 

 

 

 

 

 

 




No comments: