ஆளுமை மிக்க அந்தணப் பெரியார்

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..    ஆஸ்திரேலியா
 

   அந்தணகுலத்தில் பல ஆளுமைகள் இருந்து அரும்பணிகள்

ஆற்றி இருக்கிறார்கள்.அவர்கள் ஆலயங் களில் கிரியகைகளை ஆற்றும் நிலையிலும்
 அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார் கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அக வொழுக்கம்புற வொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்க தாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள் இன்னும் இருக்கிறார்கள் எனலாம்.

   வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. ஆண்டவனைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகென லாம்.கிரியைகளை ஆற்றி ஆலய கும்பிபிஷேகங்களை முறைப்படி செய்து மக்களும் நாடும் வளமுடன் இருக்கும் வழியிலே பயணிப்பதும்கூட அந்தணர்க்கு அழகு எனலாம்.

    கிராமத்தின் நன்மதிப்பைப் பெற்று அங்கு வாழும் மக்களுக்கு நாளும் பொழுதும் நல்ல குருவாய்நல்ல வழிகாட்டியாய்நல்ல ஆலோசகராய்விளங்கிய அழகும் -  விளங்கும் அழகும் அந்தணப் பெரியோருக்கு வாய்த்திருக்கிறது எனலாம். இப்படிப் பார்க்கின்ற வேளை ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மண்ணுக்கு அந்தணப் பெரியார்கள் பெருந் துணையாகவே விளங்கி இருக்கிறார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

   வித்துவான் கணேசையர்வித்தியாதிபதி சதாசிவ ஐயர்காசிவாசி செந்திநாத ஐயர் வித்தியாதிபதி லக்ஷ்மண ஐயர்பேராசிரியர், கா.கைலாசநாதக் குருக்கள்பண்டிதர் பஞ்சாட்சரசர்மா இந்த வரிசையில் வந்து நிற்பவர்தான் காரைநகர் ஈந்த பேராளுமை வைத்தீஸ்வரக்குருக்கள் ஆவர். ஆலயத்திலும் நிற்பார். ஆன்றோர் அவையிலும் நிற்பார். வேதமும் ஓதுவார். வித்துவான்கள் மத்தியில்  தொல்காப்பியமும் செப்புவார்.இறைவனைப் பற்றி அருட்பாடல்களையும் பாடுவார். இலக்கியக்கூட்டங்களில் இலக்கியப் பாடல் களையும் எடுத்து நயமுரைப்பார்.ஆனாலும் அந்தண ஆசாரத்தை அகமிருத்தியே அனைத்தையும் ஆற்றுவார்.

    இப்பேராளுமை 1916 ஆம் ஆண்டு கணபதீஸ்வரக்குருக்கள் சிவயோக சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு நற்புத்திரனாய் நானிலத்தில் இறையருளால் பிறந்தார்கள்.ஆண்டவனையே அனுதினமும் நினைக்கும் ஆசாரசீலரான கணபதீஸ்வரக்குருக்களின் உதிரத்தில் உதித்த காரணத்தால் அவரின் புத்திரராய் பிறந்த வைத்தீஸ்வரக் குருக்களும் ஆண்டவன் அருளினைப் பெற்றே இம்மண்ணில் நல்லவண்ணம் வந்தார் மலர்ந்தார் எனலாம். தந்தையைக் குருவாய் கொண்டு தனது கல்வியை ஆரம்பித்தார். தந்தையின் வழி காட்ட லில் நல்ல ஆசான்கள் இவருக்கு வந்தமைந்தார்கள். பண்டிதர் பஞ்சாட்சரசர்மாபண்டிதர் சுப்பிர மணிய தேசிகர் மகாவித்துவான் கணேசையர் இவருக்கு நல்ல வெளிச்சத்தைக் காட்டினார்கள். சமய த்தைக் கற்றார். அன்னைத் தமிழையும் ஐயந்திரிபறக் கற்றார்.சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந் தார்.ஆங்கிலமும் அறிவார்.ஆனாலும் அவரின் கற்றல் தாகம் அடங்கிவிடவே இல்லை.

  பேராளுமையாய் மிளிர்வதற்கான பாதையில் பயணிக்கத் தொடங்கினார் வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள். நல்ல ஆசான் களிடம் கற்றதோடு அமையாது மேலும் கற்றலின் வழியில் பண்டிதராய்.  பயிற்றப்பட்ட ஆசிரியராய் நற்றமிழ் நாயகராய் உயரும் நிலைக்கு வந்து நின்றார் எனலாம்.

  கற்றுத் தேர்ந்த குருக்கள் அவர்கள் கற்றதைக் கொடுக்கவேண்டும் என்னும் ஆவலினால் ஆசிரியப் பணியினை அணைத்துக் கொண் டார். கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் தொடங்கிய  ஆசி ரியப் பணி நாட்டின் பல இடங்களில் பயணித்து நிறைவில் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து ஓய்வினுக்குள் வந்து நின்றது.

  கொழும்பில் பணியாற்றும் வேளை கற்பித்தலோடு அமையாது ஏனைய நிலையிலும் தன்னுடைய ஆற் றலைப் பகிர்ந்து கொண்டார் என்று அறிகின்றோம்.விவேகானந்த சபையில் நடத்தப்படும் சைவசமயப் பாடக்குழுதினகரன் பத்திரிகை செய்திப்பிரிவு இவற்றில் தனது பங்களிப்பினை வழங்கினார். அத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று அறப்போதனையும் ஆற்றினார்.

  ஓய்வு பெற்றபின்னர் பலர் தங்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் - இருக்கும் காலத்தைப் பயன் படுத்தியே வாழ்வதைக் காண் கின்றோம். அப்படி இல்லாவிட்டால் பிரயாணங்கள் மேற்கொண்டு பொழு தினை ஆனந்தமாய் ஆக்கிக் கொள்ளுவதையும் காண்கின்றோம். இன்னொரு சாரார் இவ்வளவு நாளுந் தான் ஓடி யோடி ஓய்வின்றி வேலை செய்துவிட்டோம். இனிமேல் வீட்டில் நிம்மதியாய் இருப்போம் என்று பத்திரிகைகளை வாசித்து உண்டு உறங்குவதில் காலத்தைப் போக்குவதையும் காணுகிறோம். ஆனால் ஒரு சிலர்

ஓய்வு காலத்தைச் சரியான வகையில் பயனாக்கி சமூக நலத்தி னைக் கருத்திருத்தி வாழ்ந்து வாழ்வினை வையத்துள் நல்ல வாழ் வாக்குவதையும் கண்டு கொள்ள முடிகிறது எனலாம். அப்படியான வர்களைத் தான் பேராளுமைகள் என்று சொல்லலாம் அல்லவா !

  அந்த நிலையில் வந்து நிற்பவராகிறார் எங்கள் அந்தணப் பெரியோர் காரைநகர் தந்த நன்மணி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள். மேடையில் பேசுவார். எழுதுவார். அத்துறைக்கு வருகின்றவர்க ளுக்கும் ஊக்கம் ஊட்டுகின்றவராகவும் இருப்பார். சைவத்தையும் தமிழையும் நாவலர் பெருமான் தனது இரு கண்களாகவே கொண்டா ரென்று பலரும் விதந்து போற்றுவார்கள். அந்த நிலையில் எங்கள் குருக்கள் அவர்களும் விளங்கினார் என்றால் அதனை எவரும் மறுத் துரைக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரின் பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன என்பது வெள்ளிடை மலையாகும்.

  யாழ்ப்பாண ஆன்மீகப் பேரொளி யோகர் சுவாமிகளின் நல்லாசி யுடன் 1940 ஆம் ஆண்டில் குருக்கள் அவர்களால் " காரைநகர் மணிவாசக சபை " ஆரம்பிக்கப்பட்டது.இச்சபையின் பிறப்பால் இளைய சமுதாயத்திடம் சைவத்தைப் பற்றிய சிறப்பான புரிதல் உருவாகியது என்பது முக்கியம் எனலாம். காரைநகருக்கு மட்டு மல்லாது யாழ்மண்ணுக்கே இந்த அமைப்பு நல்லதோர் சமய வழி காட்டுதலை வழங்கியது எனலாம்.இந்தச் சபையினை அமைத் ததோடு நின்றுவிடாமல் இந்தியாவில் இருக்கின்ற சைவ ஆதீனங் களையும் இணைக்கும் பாலமாகவும் குருக்கள் அவர்கள் விளங் கினார் என்பதுதான் மிகவும் முக்கியம் எனலாம்.

  ஈழத்துச்சிதம்பரம் என பக்தி சிரத்தையுடன் போற்றி நிற்கும் காரைநகர் சிவன் சன்னிதானத்தில் அமை ந்துள்ள மணிவாசகர் சபையினூடாக 1955 ஆம் ஆண்டு தொடக்கம் திருவெம்பாக் காலத்தில் " மணிவாசகர் " விழா நடைபெறத் தொடங்கியது என்பது கருத்திருத்த வேண்டிய விஷயமெலாம். தொடர்ந்து ஆண்டு தோறும் இவ்விழாவினை நடத்துவதில் குருக்கள் அவர்களின் பணி மிகவும் போற்றப்பட வேண்டிய தென் றே கொள்ளல் வேண்டும். இந்த விழாக்களில் தமிழகத்துப் பல அறிஞப் பெருமக்கள் கலந்து சிறப்பிப்பதும் ஈழத்திருநாட்டின் அறிஞப் பெருமக்கள் அவர்களோடு இணைந்து நிற்பதும் குருக்கள் அவர்களின் சிந்த னையால்.  செயற்றிறனால் விளைந்த நல்ல பலனல்லவா ! சங்கமிக்கும் அறிஞர்களால் பல அரிய பெரிய விஷயங்கள் எல்லாம் யாவருக்கும் கிடைக்கும் பெருவாய்ப்பும் வாய்த்திருந்தது என்பதை எவருமே மறுத் துரைத் துவிட முடியாது எனக் கருதுகிறேன். "  காரைநகர் மணிவாசகர் சபை" சைவமும் தமிழும் நல்கும் பொக்கிஷமாய் மிளிர்ந்தது எனலாம். அந்தப் பொக்கிஷத்தை ஆக்கி அளித்த பேராளுமையாக எங்கள் குருக்கள் அவர்கள் திகழ்கிறார் என்பது யாவரும் மனமிருத்த வேண் டிய கருத்தெனலாம்.

  "'காரைநகரில் சைவசமய வளர்ச்சி " என்னும் குருக்கள் அவர்களின் நூல் - பல்கலைக்கழத்தில் வைக்க ப்படவேண்டிய பெறுமதியான நூலென்றே சொல்லலாம்.பெறுமதியான நூலை ஆக்கிய வைத்தீஸ்வரக் குருக்களென்னும் பேராளுமை - பதிப்புத்துறையிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.கந்தர் மடத்தைச் சேர்ந்த சுவாமிநாத பண்டித ரால் ஆக்கப்பட்ட " திரு முறைப் பெருமை " பிரம்மஶ்ரீ கார்த்திகேயப் புலவரின் " திண்ணைபுர அந்தாதி " திருப்போசை வெண்பா"   " "தன்னை அந்தாதி "  " திக்கை அந்தாதி " வித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் " நன்நூல் காண்டிகை உரையும் நாவலர்    பெருமானும் " , " தெரி நிலை வினயெச்சம் " ,  "வினைத் தொகை " ஆகிய வற்றைப் பதிப்பித்ததோடு அமையாது ஏழாலைப் பண்டிதர் கந்தையா அவர்களின் " நாவலர் பிள்ளை த்தமிழ் ", " ஷேத்திரத் திருவெண்பா "மற்றும் திருவாளர் சபாபதியால் எழுதப்பட்ட " அருள் நெறித் திரட்டு " ஆகிய நூல்களையும் பதிப்பித்தார் என்பது குருக்கள் அவர்களின் பதிப்புத்துறைப் பக்கம் எனலாம். அவரின் பதிப்புத்துறைக்கு முத்திரை பதிக்கும் வகையில் அமைந்த நூல்தான் -

தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகனார் புலவர்மணி சோஇளமுருகனார் ஆக்கிய         " திருத்திண்ண புரச்சுந்தரேசர் புராணம் என்னும்  ஈழத்துச் சிதம்பர புராணம் " ஆகும்.

    திருவாதிரைக் கால நிகழ்வுகளை மலராக்கி ஐந்து மலர்களாய் குருக்கள் அவர்கள் வெளியிட்டிருக்கி றார். அது மட்டுமன்றி " காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர் "காரைநகர் மணிவாசகர் சபைப் பொன்விழா மலர் ", " காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் கும்பாவிஷேக மலர் " என்று வெளிவந்த மலர்கள் அனைத்துக்கும் எங்கள் பேராளுமை குருக்கள் அவர்களே ஆசிரியராய் இருந்து நெறிப்படுத்தி இம்மலர்களை மணம் கமழ வைத்தார் என்பது மனக்கொள்ளத் தக்கதாகும்.

  திருவாசகத்தை தந்தை தாயார் வழியில் பெற்றுக் கொண்ட குருக்கள் அவர்கள் தானும் அதனுட் புகுந்து மணிவாசகரின் உருகும் வாசகத்தை அகமிருத்தியதன் விளைவே மணிவாசகர் சபை ஆகியது எனலாம். சைவத்தின் உயர் தத்துவங்கள் பொதிந்திருக்கும் திருவாச கத்தைக் கையில் எடுத்த பாங்குடன் நின்று விடாது - சைவத்துக்குத் தமிழும் இன்றியமையாதது என்பதை மனமிருத்தி 1960 ஆம் ஆண்டில் " தமிழ் வளர்ச்சிக் கழகத்தை " ஆரம்பித்தார். இதன் வாயிலாகப் பல தமிழ்ப்பணிகளுக்கு வழி சமைத்தார் எனலாம். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக இருபத்து ஆறு நூல்களை வெளியிட்டார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இக்கழகம் பெரிதும் துணையாக விளங்கியது என்பதை மறுத்துவிட முடியாது.இக்கழகத்தின் செயற்பாடு 1970 தொடக்கம் 1980 காலப் பகுதியில் பெரு வெளிச்சமாய் அமைந்தது எனலாம்.

  பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் சைவத்தையும் தமிழையும் அகமிருத்தி தன்னாலான பணிகளை மேற்கொண்டார் என்பதை பலரும் காய்தல் உவத்தலின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அவரை வந்து சேர்ந்த விருதுகளும் பட்டங் களும் குவிந்து கிடக்கின்றன எனலாம்.

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அவரை வியந்து அவருக்கு " தத்துவக் கலாநிதி " என்னும் பட்டத்தை 2020 ஆம் ஆண்டில் வழங்கி பெருமைப் படுத்தியிருக்கிறது என்பது குருக்கள் அவர்கள் பேராளுமைதான் என்பதில் ஐயமுறுவதற்கு இடமில்லாமல் ஆக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

  இலங்கைக் கம்பன்கழகம் " மூதறிஞர் " என்னும் பட்டத்தை வழங்கி குருக்கள் அவர்களைக் கெளவித் தமையும் மனங்கொள்ளத் தக்கதாகும். குருக்கள் அவர்களைக் கெளரவிப்பதன் மூலமாக கெளரவித்த அமைப்புக்களே பெருமையுற்றன எனலாம். அந்த வகையில் - வடக்குக்கிழக்கு புனர்வாழ்வு அமைச்சு      " கலைஞான கேசரி " என்னும் பட்டத்தையும்சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் " சிவாகம கிரியா பூஷணம் " என்னும் பட்டத்தினையும் வழங்கிப் பெருமைப்பட்டன எனலாம்.

    நூல்கள்மீது ஆராத காதல் கொண்டிருந்தார் குருக்கள் அவர்கள். அதனால் அவரின் இருப்பிடமே பெரியதொரு நூல்நிலையமாய் திகழ்ந்தது என்பதைப் பலரும் அறிவார்கள்.மலர்கள்பத்திரிகைகள்பல்வேறுவகையான நூல்கள் குருக்கள் அவர்களைச் சூழ்ந்தே இருந்தன எனலாம்.தனது சேமிப்பில் இருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை - அவரின் தந்தையாரும் ஈழத்துச் சிதம்பர நூலின் ஆசிரிய ருமான சிவஶ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள் பெயரில் அமைக்கப்பட்ட " கணபதீஸ்வரக்குருக்கள் நூல் நிலையத்துக்கு " வழங்கி யாவரும் என்றுமே பயனுறச் செய்தார் என்பது நோக்கத்தக்கதேயாகும்.

    தள்ளாத வயதானாலும் தமிழையும் சைவத்தையும் மனங்கொண்டவராகவே குருக்கள் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு அவரின் தொண்ணூற்று ஏழாவது வயதில் " சைவக்களஞ்சியம் " என்னும் அரிய நூலின் தொகுப்பு ஆசிரியராய் இருந்து 2013 ஆம் ஆண்டில் வெளியீடு செய்தமை பெருஞ் சான்றாய் அமைகிறது எனலாம்.

  எழுதி பேசிபதிப்பித்துமூகத்தில் முன்னின்ற குருக்கள் அவர்கள் அறவழியினையும் உபதேசிக்கும் ஆசானாயும் விளங்கி இருக்கிறார் கள். முப்பத்து இரண்டு விதமான அறங்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தார் என்று அறிய முடிகிறது.திருமணம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு உதவுதல் வேண்டும் என்பார். இறந்தவர் உடலைத் தகனம் செய்ய இயலா நிலையில் இருப்பார்க்கு உதவ வேண்டும் என்று எடுத்துரைப்பார்.ஆதரவற்றோரை அரவணைத்தல்அவருக்கு இருப்பிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல்கற்கும் மாணவர்களுக்கு உணவளித்தல்என்று பலவகை அறங்கள் செய்வது பெரும் புண்ணியம் என்றும் அவற்றைச் செய்தல் வேண்டும் என்பதும் குருக்கள் அவர்களின் விரிந்த பரந்த சிந்தனையாய் இருந்திருக்கிறது என்றும் அவரின் வரலாற்றால் அறிந்திட முடிகிறது.

    ஈழத்து மண்ணில் அதுவும் வட புலத்தில் காரைநகர் என்னும் புனித ஊரில் இப்படி ஒரு பேராளுமை , அந்தணப் பெரியோர்  - சிவத்தமிழ் வித்தகராக , பண்டிதமணியாக,  கலாநிதியாக,  விளங்கி இருக்கிறார் என்பது சைவத்துக்கும் தமிழ்மொழிக்கும் கிடைத்த பெருமை என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கிறதல்லவா !

 

அந்தணர்க்குண் மனையனையான் அருங்கலைகள்

  மிகப் பயின்றான் அருமை ஆசான்

  சந்தததும் சிவனன்பு தழைக்கின்ற

  உள்ளத்தான் தகைசால் நண்பன்

  கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணாபுரங்

  கவினோங்குங் கருத்து மிக்கான்

  வந்தவருக்கு அமுதளிப்பான வண்பெயர்கொள்

  
   வைத்தீஸ்வரக் குருக்கள்  "


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

No comments: