காலன் ஒத்திவைத்த மரணம் ! ஐ. தி. சம்பந்தன் வாழ்வும் பணிகளும் மொழிவழித் தொழிற்சங்கங்களை உயிர்ப்பிக்க ஒலித்த குரல் ஓய்ந்தது ! முருகபூபதி


பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணம் நிச்சயமானதுதான்.  எமது தமிழ் சமூகத்தில் ஒருவர்  மரணம் எய்தி அமரத்துவம் அடைந்துவிட்டால்,  இயற்கை அநர்த்தத்தினால் அல்லது விபத்தினால், வேறு ஏதும் காரணங்களினால் கொல்லப்பட்டால்,   “  காலன் கவர்ந்துவிட்டான்  “  என்போம்.

உயிரைக்கவர வரும் எமதர்மன், தனது செயலாளர் சித்திரகுப்தனிடம் ஒருவரை எவ்வளவு காலம் பூவுலகில் வைத்திருக்கலாம் எனக்கேட்டுத்தான் மரணத்தீர்ப்பை வழங்குவார் என எமது முன்னோர்கள் சொல்வார்கள்.

சித்திரகுப்தனின் கணக்குத்தவறி, எமதர்மன் தனது கடமையைச்


செய்யாமல் திரும்பிச்சென்றால்,                                           “ மரணிக்கவிருந்தவர் மயிரிழையில்  உயிர் தப்பினார்   என்ற பிரயோகமும்   சமூகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

இம்மாதம் 03 ஆம் திகதி லண்டனில் தமது 87  வயதில் இயற்கை எய்தியிருக்கும் மூத்த தொழிற்சங்கவாதியும், தமிழ் உணர்வாளரும்,  சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும் , ஆவணப்பதிவாளருமான ஐ.தி. சம்பந்தன் அவர்கள், இங்கு குறிப்பிடப்பட்ட எமதர்மராஜனதும் அவரது செயலாளர் சித்திரகுப்தனதும் கணிப்பின் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட மரணத்தை அடைந்திருக்கிறார்.

இதனை வாசிக்கும் வாசகர்கள்,    அது என்ன ஒத்திவைக்கப்பட்ட மரணம்…?   எனக்கேட்கலாம்.  ஆம்… அவர் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதியே முன்னாள் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம், மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோருடன் எமதர்மனிடம் போய்ச் சேர்ந்திருக்கவேண்டியவர்.

அவர்களுடன், இவரையும் பரலோகம் அனுப்பவந்த தமிழ் இளைஞர்களிடமிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியவர். அக்காலப்பகுதியில் அத்தகைய கொலைகளைச் செய்பவர்களை இனந்தெரியாதவர்கள் என்றுதான் பத்திரிகை ஊடகங்கள் பதிவுசெய்தன.


எமதர்மனும் சித்திரகுப்தனும் அத்தகைய இனந்தெரியாதவர்களையும் எமது சமூகத்தில் வாழவைத்து, அதன்பின்னர் தம்மிடம் உரிய நேரம் வரும்போது அழைத்துக்கொள்வார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஐ.தி. சம்பந்தன் அவர்கள்,  தான்   ஆழமாக நேசித்த ஈழத்தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனைத்து அவலங்களையும்,  அவர் நெருங்கிப்பழகிய பல தமிழ்த்தலைவர்களின் மரணங்களையும் பார்த்துவிட்டே  இம்மாதம் நிரந்தரமாக கண்ணயர்ந்துவிட்டார்.

காரைநகர் களபூமியில் 26.06.1935 ஆம் திகதி மத்தியதர குடும்பத்தில் பிறந்திருக்கும் சம்பந்தன் அவர்கள், தமது இளமைக்காலம் முதலே தமிழர் உரிமை சார்ந்து இயங்கிய சமூகப்போராளி.

அவரை கொழும்பில் துறைமுக அதிகார சபையில் பணியாற்றிய எழுத்தாளரும், நாவலர் சபை, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியனவற்றில் முக்கிய பொறுப்புகளிலிருந்த ( அமரர் ) சோமகாந்தனை சந்திக்கச்செல்லும்  சந்தர்ப்பங்களில் பார்த்து பேசியிருக்கின்றேன்.

அவர் தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தில்  அங்கம் வகித்திருந்த


காலப்பகுதியில் வீரகேசரிக்கும் அடிக்கடி வந்து செய்திகள், செய்தி அறிக்கைகள் தருவார்.  அங்கு செய்தி ஆசிரியராக பணியாற்றிய டேவிட் ராஜூ, நீதிமன்ற நிருபர் வி. ஆர். வரதராஜா ஆகியோருடனும் நட்புறவைப்பேணியவர்.

வருடத்தில் வரும் செப்டெம்பர் மாதங்களை தன்னால் மறக்கமுடியாது என்றும், அத்தகைய ஒரு மாதத்தில் 1985 ஆம் ஆண்டு,   தான் எவ்வாறு உயிர்தப்பினேன் என்பதை விரிவாக லண்டன் தேசம் நெற் ஜெயபாலனுக்கு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், ஈழத் தமிழ் மக்கள் சார்ந்து ஆவணப்படுத்தல் பணிகளிலும் ஆக்கபூர்வமாக உழைத்திருப்பவர். அவர் எழுதிய நூல்கள் அதற்குச்  சிறந்த சான்று.

1985 இல் அவர் உயிர்தப்பியிருந்தாலும், அதற்கு முன்பே 1958 இல் கொழும்பில் நடந்த கலவரத்தின்போதும் எவ்வாறு தெய்வாதீனமாக தான்  உயிர் தப்பிய கதையையும் 2009 இல் எழுதி வெளியிட்ட Black July 83 : Indictment  கறுப்பு யூலை 83 : குற்றச்சாட்டு என்ற ஆங்கில – தமிழ் நூலிலும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.


இந்த நூல் இலங்கை அரசியல் வரலாற்றை படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் உசாத்துணையாகவும் விளங்குகிறது.

தான் எழுதும் ஆவணங்களில் அவர் முக்கியமான அரிய ஒளிப்படங்களையும் தவறாமல் பதிவேற்றி ஆதாரம் காண்பிப்பதிலும் அக்கறை கொண்டிருந்தவர்.  அத்தகைய ஆவண ஏடுகளுக்காக அவர் செலவிட்ட நேரம் அதிகம். இதுவிடயத்தில் அவர் அயராத உழைப்பாளியாகவே திகழ்ந்தார்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி காலை,  கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்கு வணங்கச் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட தமது ஊரைச் சேர்ந்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் அவர்களைப் பற்றியும் சம்பந்தன் ஒரு விரிவான நூலை எழுதியிருக்கிறார்.

மொழிவழி தொழிற்சங்களின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தி


வந்திருக்கும் சம்பந்தன், இதுதொடர்பாக விரிவான பேட்டியையும் வீரகேசரிக்கு முன்னர் வழங்கியிருந்தார்.

1985 ஆம் ஆண்டிற்குப்பின்னர் செயல் இழந்துவிட்ட தமிழ் தொழிற்சங்க கூட்டணிக்கு மீண்டும் புத்துயிர்ப்பு வழங்கவேண்டும் என்பதும் சம்பந்தனின் வேண்டுகோளாகவிருந்தது.

தன்னால் இயன்றவரையில் ஈழத் தமிழ் இனத்திற்காக பல்வேறு வழிகளில் குரல் கொடுத்துவந்த ஐ. தி. சம்பந்தன் இம்மாதம் 03 ஆம் திகதியுடன் பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டார்.  அன்னாருக்கு எமது இதய அஞ்சலி.

---0---

 

 

No comments: