நனவிடைதோய்தற் குறிப்புகள் கண்கள் கட்டப்பட்ட பண்டாரநாயக்கா சிலை முருகபூபதி


தென்னிலங்கையில் பிரபலமான சிங்கள  ஊடகவியலாளர் வசந்த என்பர் தனது தொலைக்காட்சி செனலுக்காக முக்கிய அரசியல்வாதிகளிடம் பத்துக்கேள்விகளை முன்வைத்துவருகிறார்.

அண்மையில் அவர்,  அத்தனைகல்லை தொகுதியில் கொரகொல்லையில்  முன்னாள்  பிரதமர் பண்டாரநாயக்காவின்    பூர்வீக வாசஸ்தலத்தில்   அன்னாரின் இரண்டாவது புதல்வியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவை சந்தித்து பேட்டி கண்டார். இவரிடமும் ஊடகவியலாளர் வசந்த  பத்துக் கேள்விகளை முன்வைத்தார்.

 “ காலிமுகத்திடலில் நடைபெறும் மக்களின் தன்னெழுச்சி


ஆர்ப்பாட்ட போராட்டத்தை பார்க்க நீங்கள் செல்லவில்லையா..?   “ என்ற கேள்வியையும் ஊடகவியலாளர் வசந்த எழுப்பினார்.

அதற்குச் சந்திரிக்கா, தனக்கு அங்கே செல்வதற்கு விருப்பம் இருந்தாலும், தயக்கமும் இருக்கிறது என்றார்.  அம்மக்கள் தன்னைக்கண்டுவிட்டு,  ஏளனமாக,     ஹூ  சத்தம் எழுப்பினால், அவமானமாகிவிடும்  “ என்கிறார்.

அவரது  இந்தப்பதிலில் நியாயம் இருக்கிறது. 

நாடாளுமன்றிலிருக்கும் 225 பேருடன் ஜனாதிபதியுடன் சேர்த்து மொத்தம் 226 பேருமே வீட்டுக்குப்போகவேண்டும் என்றும் காலிமுகத்திடலில் குரல் ஒலிக்கிறது.

இந்தப்பின்னணியில் சந்திரிக்காவின் தந்தையும்  இலங்கையில் பிரதமராகவும் இருந்து, பதவிக்காலத்திலேயே 1959 ஆம் ஆண்டு  ஒரு பெளத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான  பண்டாரநாயக்காவின் சிலையின் கண்கள் கறுப்புத்துணியினால் மூடப்பட்டுள்ளது. 

காலிமுகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்கா சிலையின் மீது  ஒரு ஆர்ப்பாட்டக்காரர் ஏறி அச்சிலையின் ஒரு கையில் நின்றுகொண்டு, கண்களை கறுப்புத்துணியினால் கட்டி மூடுகிறார். பண்டாரநாயக்கா உருவாக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் சின்னம் கை என்பதும் குறிப்பிடத்தகுந்தது!

இச்செயல் எதனைக்குறிக்கிறது..?

   சிலையாக நிற்கும் அய்யாவே, நீர் பிரதமராகவிருந்த காலத்திலும்,


அதன்பின்னர் உமது மனைவி அந்த பதவிக்கு வந்த  காலத்திலும் உமது மகன் அநுரா, எம்.பி. ஆக பிரவேசித்தபோதும் இருந்த அதே நாடாளுமன்றம்தான் இப்போது நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியின் செயலகமாக மாறியிருக்கிறது.  அங்கிருந்து தற்பொழுது இயங்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவைத்தான் வீட்டுக்கு போகுவேண்டும் என்று  ஆர்ப்பாட்டம் செய்கின்றோம்.  அதற்காகவே இந்த காலிமுகத்திடலை கோ கோம் கோத்தா கம என்றும் பெயர்  மாற்றியுள்ளோம். இந்தக்காட்சிகளை உமது கண்கள் பார்க்க வேண்டாம் .   “ என்று சொல்லப்படுகிறதா…?

 “ இலங்கையில் தற்போது தோன்றியிருக்கும் பாரிய பொருளாதார


நெருக்கடிக்கு அடிப்படைக்காரணமே,  தேசிய இனப்பிரச்சினையை தீர்க்காமல், போரின் மூலம் தீர்க்க முனைந்த ஆட்சியாளர்கள்.  அதற்காக செலவிட்ட கோடிக்கணக்கான நிதியும்,  வெளிநாட்டு கடன்களும்தான்.  அன்று நீர் தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அர்த்தமுடன் நிறைவேற்றியிருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்காதே!  அதனால், நீரும் அன்றுபோல் இன்றும் கண்ணைக்கட்டிக்கொண்டு இரும்  “ என்று சொல்கிறதா..?

காலிமுகத்தில் அமைந்துள்ள இச்சிலையின் தோற்றம் பற்றியதே இந்த நனவிடை தோய்தற்குறிப்புகள்.


1974 ஆம் ஆண்டு காலத்தில்  சோவியத் சிற்பி லெவ் கேர்பிள் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, அந்த நாட்டு அரசினால் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்ட உயரமான வெண்கலச்சிலையே அது. சோவியத்தின் அதிபராகவிருந்த பிரெஷ்னேவ்  காலத்தில் அச்சிலை இலங்கைக்கு வழங்கப்பட்டது.  அப்போது ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமராகவிருந்தார்.

இதற்கு முன்னர் இவரது பதவிக்காலத்திலேயே 1973 ஆம் ஆண்டளவில்  கொழும்பில் சீன அரசினால் நிர்மாணித்து வழங்கப்பட்ட பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபமும்  அமைந்தது.

இரண்டு நாடுகளுடனும் ஶ்ரீமா அம்மையார் நல்லுறவைப்பேணி வந்தவர். அதற்கு கிடைத்த பரிசுகள்தான் அந்த மண்டபமும் காலிமுகத்திடல் சிலையும்.

ஏற்கனவே முன்னைய நாடாளுமன்றமான இன்றைய ஜனாதிபதி


செயலகத்திற்கு முன்பாகவும் அமரர் பண்டாரநாயக்காவுக்கு ஒரு சிலை அமைந்துள்ளது.

தற்போது கண்கள் மூடிக்கட்டப்பட்ட சிலையை சோவியத் சிற்பி லெவ் கேர்பிள் வடிவமைத்து, விமானம் மூலம்  இலங்கை வந்தபோது, கொழும்பில் சோவியத்தூதுவரலாய தகவல் பிரிவு     ( நவஸ்தி )  வெளியிட்டு வந்த சோவியத் நாடு மாத இதழில்            ( இவ்விதழ் சிங்களம் – தமிழ் மொழிகளில் வெளியானது )  அந்தச்சிற்பி பற்றிய கட்டுரையும் அவரது  படத்துடன் பதிவேற்றப்பட்டது.


சோவியத் நாடு இதழின் ஆசிரியர் குழுவில் எங்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், லத்தீஃப்,   எழுத்தாளர்கள் பெரி. சண்முகநாதன்,  மு. கனகராஜன்,  இராஜகுலேந்திரன் , ராஜஶ்ரீகாந்தன் ஆகியோர் பணியாற்றினார்கள்.

குறிப்பிட்ட கட்டுரையை ஒப்புநோக்கியமையால், அந்த சிற்பியின் பெயர் இன்னமும் எனது நினைவில் தங்கியிருக்கிறது.

அந்தச்சிலை விமானத்தில் வந்திறங்கியபோது,  அதன்


கழுத்துப்பகுதியில் பெரிய கயிறு கட்டப்பட்டு இறக்கப்பட்டதனால்,   அச்சமயம் எடுக்கப்பட்ட   புகைப்படம் ஊடகங்களில் வெளிவராமல் தவிர்க்கப்பட்டது.

பண்டாரநாயக்கா, லண்டனில் படித்துவிட்டு 1926 ஆம் ஆண்டில் தாயகம் திரும்பியவர். இலங்கை போன்ற நாடுகளுக்கு சமஷ்டி ஆட்சிமுறைதான் உகந்தது எனவும் வாதிட்டு வந்தவர்.  அதற்காக அவர் இலங்கை முற்போக்கு தேசியவாதிகள் என்ற கட்சியைத்தான் முதலில் ஆரம்பித்தார்.

சமஷ்டி கொள்கையை வலியுறுத்திய அவர் அதுதொடர்பாக அக்காலப்பகுதியில் வெளியான Ceylon Morning Leader பத்திரிகையில் கட்டுரைகளும் எழுதியவர்.

இதனால் கவரப்பட்ட தமிழ் இளைஞர்கள் அவரை யாழ்ப்பாணத்திற்கும் அழைத்து வரவேற்றனர்.  அத்தகைய ஒருவருடன் தந்தை செல்வநாயகம் 1957 இல் தமிழ்மக்களுக்கு ஏற்ற ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார்.

ஆனால், சிங்கள பேரினவாத கடும்போக்காளர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.  அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்கு பாதயாத்திரை சென்ற ஜே. ஆர். ஜெயவர்தனாதான் பின்னாளில் 1978 நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி ஆட்சிமுறையையும் இலங்கையில் அறிமுகப்படுத்தி இன்றைய இத்தனை சீரழிவுகளுக்கும் காரண கர்த்தாவாகினார்.

தமிழ் மக்களுக்கு நேசக்கரம் நீட்டிய பண்டாரநாயக்கா, இறுதியில் கடும்போக்காளர்களிடம் சிக்கி, சூழ்நிலையின் கைதியாகி 1959 ஆம்  ஆண்டு அவரால் வளர்த்துவிடப்பட்ட பௌத்த பிக்கு ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது பெயரில் சர்வதேச மாநாட்டு மண்டபம், விமான நிலையம், உட்பட தலைநகரம் உட்பட பல இடங்களில் சிலைகளும் அமைந்துள்ளன.

அதில் ஒரு பிரம்மாண்டமான  வெண்கலச் சிலைதான் காலிமுகத்தில் அமைந்துள்ளது. அதன் கண்கள் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் கறுப்புத்துணியினால் கட்டப்பட்டுள்ளது.

----000----

 

No comments: