ஸ்வீட் சிக்ஸ்டி 13 - போலீஸ்காரன் மகள் - ச சுந்தரதாஸ்

  .

பிரபல சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் மணிக்கொடி புகழ் பி எஸ் ராமையா.இவர் எழுதிய பல கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டு வெற்றி கண்டன.சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ் வி சகஸ்ரநாமம் இவரிடம் சில நாடகங்களை எழுதி வாங்கி தனது சேவா ஸ்டேஜ் அமைப்பின் மூலம் மேடை ஏற்றி , அவை வெற்றி பெற்றன.இப்படி வெற்றி பெற்ற நாடகமான போலீஸ்காரன் மகள் நாடகத்தை பிரபல டைரக்டரான ஸ்ரீதர் படமாக்க விரும்பினார்.நாடகத்துக்குரிய சன்மானத்துடன் அதில் நடித்த சகஸ்ரநாமம்,முத்துராமன் இருவரையும் படத்திலும் நடிக்க வைப்பதென ஒப்பந்தம் போடப்பட்டது.ஸ்ரீதரின் நிதி உதவியுடன் சத்தியம்,நஞ்சுண்டான் என்ற இருவரும் படத்தைத் தயாரித்தனர்.



போலீஸ்காரர் குமாரசாமியின் மகள் ஜானகி.சூதுவாது தெரியாத அப்பாவியான இவள் தன் அண்ணன் சின்னையாவின் பணக்கார நண்பனான பிரபு மீது எதிர்பாராத விதமாக காதல் கொள்கிறாள்.மலருக்கு மலர் தாவும் குணம் கொண்ட பிரபு காலக்கிரமத்தில் ஜானகியின் உண்மைக் காதலை உணர்ந்து அவளை மனதார காதலிக்கத் தொடங்குகிறான்.தெய்வ சன்னதியில் இருவரும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.ஆனால் இந்த விஷயம் இருவருடைய குடும்பத்தினருக்கும் தெரியாது.இதற்கு இடையில் பிரபுவின் தந்தை தன் மகன் தான் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் இல்லாவிடில் சொத்து எதுவும் அவனைச் சேராது என்று உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார்.பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் பிரபு ஜானகியை கை விடத் துணிகிறான்.இதற்கு இடையில் பிரபு மேல் கொலை வழக்கு ஒன்றும் பதிவாகிறது.காதல் தோல்விக்கு உள்ளாகும் ஜானகியோ உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் உருக்குலைந்து போகிறாள்.


இப்படி அமைந்த ராமையாவின் கதையில் சில மாறுதல்களை செய்து வசனம் எழுதி இயக்கினார் ஸ்ரீதர்.போலீஸ்காரனாக சகஸ்ரநாமமும்,அவரின் மகளாக விஜயகுமாரியும் நடித்தனர்.நடித்தனர் என்பதை விட பாத்திரமாகவே மாறியிருந்தனர் எனலாம்.கண்டிப்பும்,கட்டுப்பாடும் மிக்க போலிஸ்காரனாக தனது முகபாவம்,குரல் வளம், மூலம் வாழ்ந்து காட்டினார் சகஸ்ரநாமம்.சோக காட்சிகளில் நன்கு பிரகாசிக்கக் கூடிய விஜயகுமாரிக்கு ஜானகி பாத்திரம் நன்கு பொருந்தியது.அதனை அவர் தவற விடவில்லை.அவரின் அண்ணனாக முத்துராமனும்,தாயாக சாந்தகுமாரியும் நடித்தனர்.இவர்களுடன் புஷ்பலதா,நாகேஷ்,டி எஸ் முத்தையா,வி எஸ் ராகவன்,கரிக்கோல் ராஜு ஆகியோரும் நடித்திருந்தனர்.




படத்தில் வில்லனாக வருபவர்கள் நகைச்சுவை நடிகரான எ வீரப்பனுக்கு,மனோரமாவின் கணவரான ராமநாதனும் ஆவர்.தொடர்ந்து பல படங்களில் துணை நடன நடிகையாக வந்து கொண்டிருந்த சி ஐ டி சகுந்தலாவுக்கு இந்தப் படத்தில் சில வசனங்கள் பேசி நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.இதற்கு எட்டாண்டுகள் கழித்தே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.




அறிமுக நடிகராக அன்று விளங்கிய நாகேஷுக்கு சில காட்சிகளில் தலையை காட்டும் சான்ஸ் கிடைத்தது.ஆனால் படத்தில் நகைச்சுவை விருந்து அளித்தவர்கள் சந்திரபாவும்,மனோரமாவுக்கு தான்! பூ விற்பவர்களாக வரும் இவர்கள் இருவரும் அடிக்கும் கூத்து சீரியஸ் படத்திற்கு ஓர் ஆறுதல்.அதிலும் இருவரும் நடிக்கும் பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக் கூடாது பாடல் சந்திரபாபு,ஈஸ்வரி குரலில் தூக்கலாக இருந்தது.


படத்தின் கதாநாயகன் கே பாலாஜி.கோட்டும் சூட்டுமாக டிப் டாப் ஆசாமியாக வரும் அவர் கதாபாத்திரத்தின் தன்மைக்கும் ஏற்ப பிளே பாய் வேடத்திற்கு இயல்பாகவே பொருந்தினார்.நட்சத்திர நடிகர்களை பயன்படுத்தாது துணிந்து பாலாஜியை கதாநாயகனாக்கி இருந்தார் ஸ்ரீதர்.



படத்தின் மற்றைய கதாநாயகர்கள் கண்ணதாசன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி மூவரும் ஆவர்.இவர்கள் இணைப்பில் உருவான ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா வா பாடல் இளமையின் வேகத்தையும்,காதலின் தாபத்தையும் உணர்த்தியது.பொன் என்பேன் சிறு பூ என்பேன் பாடல் இரு ஜீவன்களின் மன சங்கமத்தை மீட்டுவதாக அமைந்தது.இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேற்கின்றேன் பாடலில் முதல் பகுதி காதலி தன் காதலனை எண்ணிப் பாடுவதாகவும் இடையில் இணையும் அண்ணனின் குரல் அவள் தன்னை எண்ணிப் பாடுவதாக நினைத்து பதிலுக்கு படுவதாகவும் அமைந்தது நல்ல கற்பனை வளம்! நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறது பாடல் நல்ல இதம் என்றால் நெஞ்சில் நெருப்பைக் கொட்டுவது போல் ஒலிக்கிறது கண்ணிலே நீர் எதற்கு காலம் எல்லாம் அழுவதற்கு என்ற பாடல்.


படத்தில் அன்றைய உச்ச பாடகர்களான டி எம் எஸ்,சுசிலா இருவரும் பாடவில்லை.அதற்கு பதில் பாடல்கள் பி பி ஸ்ரீனிவாஸ் ஜானகி குரலில் ஒலித்தன.கண்ணிலே நீர் எதற்கு பாடல் சீர்காழி கோவிந்தராஜன் ஜானகியின் குரலில் நெஞ்சை பிழிந்தது.படத்தை ஏ வின்சென்ட் ஒளிப்பதிவு செய்தார்.என் எம் சங்கர் படத் தொகுப்பை கவனித்துக் கொண்டார்.




உணர்ச்சிகரமான கதையும் காட்சிகளும் கொண்ட படத்திற்கு அளவுடன் அர்த்தத்துடன் வசனங்களை ஸ்ரீதர் எழுதி இருந்தார். "ஏய் பிரபு என் இருபத்து இரண்டு வருஷ சர்வீஸ்ல ஏழு கொலை கேசுகளை நான் பிடிச்சேன்.அதுல நாலு பேருக்கு ஆயுள் தண்டனையும் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையும் கிடைத்தது.நீ என் மகளையே கொலை பண்ணிட்டு என் முன்னாலே வந்து நிக்கிறே போடா போ" என்று சகஸ்ரநாமம் ,பாலாஜியைப் பார்த்து சொல்லும் வசனம் ரசிகர்களை குலுங்க வைத்தது.


நல்ல மேடை நாடகங்களுக்கு திரையிலும் நல்ல வரவேற்பு இருக்கும்,அதற்கு நட்சத்திர நடிகர்களின் துணை தேவை இல்லை என்பதை போலீஸ்காரன் மகள் படத்தின் வெற்றி உணர்த்தியது!


No comments: