சுவீடனின் மருத்துவரை தூக்கிலிட ஈரான் திட்டம்
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
பிரான்ஸ் சென்ற மோடி மக்ரோனுடன் சந்திப்பு
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை ரஷ்யாவில் அழிப்பு
சுவீடனின் மருத்துவரை தூக்கிலிட ஈரான் திட்டம்
உளவுபார்த்ததாக குற்றங்காணப்பட்ட சுவீடன் மற்றும் ஈரான் நாட்டு மருத்துவர் மீது ஈரான் மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடுவது தொடர்பில் சுவீடன் வெளியுறவு அமைச்சர் கடும் கவலையை வெளியிட்டுள்ளார்.
50 வயதான அஹமது ரேசா டிஜலாலி மீது வரும் மே 21 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக ஈரானின் அரச சார்பு இஸ்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவீடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த மரண தண்டனையை கண்டிப்பதாகவும் டிஜலாலியை உடன் விடுவிக்க வேண்டும் என்றும் சுவீடன் வெளியுறவு அமைச்சர் ஆன் லின்டோ, ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு வர்த்தகப் பயணம் ஒன்றாக ஈரான் சென்றிருந்தபோது அவசர மருத்துவ நிபுணரான டிஜலாலி கைது செய்யப்பட்டார். அவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
டெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் 217ஆம் ஆண்டில் அவர் மீது மரண தண்டனை விதித்தது. நன்றி தினகரன்
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா, அதன் கிழக்குக் கரையை நோக்கி அடையாளம் தெரியாத ஏவுகணையைப் பாய்ச்சியிருப்பதாகத் தென் கொரியா கூறியுள்ளது.
வட கொரியா இவ்வாண்டு மட்டும் 14 முறை அத்தகைய பெரிய அளவிலான ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளது.
பாய்ச்சப்பட்ட ஏவுகணையைப் பற்றிய விபரம் உடனடியாகக் கிடைக்கவில்லை. அது புவியீர்ப்பு ஏவுகணையாக இருக்கக்கூடும் என்று ஜப்பானியக் கடற்கரை காவல் படை தெரிவித்தது.
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஒரு வாரத்துக்கு முன்னர் தமது நாட்டின் அணுவாயுத ஆற்றலை மேம்படுத்துவதில் வேகம் காட்டப்படும் என்று உறுதியளித்தார். நன்றி தினகரன்
பிரான்ஸ் சென்ற மோடி மக்ரோனுடன் சந்திப்பு
மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணமான ஐரோப்பா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இறுதிக் கட்டமாக பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவெல் மக்ரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மக்ரோன் கடந்த வாரம் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான நிலையில் முதல் சில உலகத் தலைவர்களில் ஒருவராகவே மோடி அவரை சந்தித்துள்ளார்.
“மீண்டும் வெற்றி பெற்றதற்காக எனது நண்பன் எமானுவேல் மக்ரோனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா – பிரான்ஸ் இடையிலான உறவை பலப்படுத்த தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்” என்று மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது மோடியின் ஐந்தாவது பிரான்ஸ் விஜயமாக இருந்தது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா மற்றும் பிரான்ஸ் மூலோபாய நட்பு நாடுகளாக இருப்பதோடு பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, பொருளாதாரம், விண்வெளி ஆய்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் பன்முக உறவை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை ரஷ்யாவில் அழிப்பு
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் முக்கிய விமான நிலைய ஓடு பாதையை தகர்த்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்கு தலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
மரியுபோல் நகரில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், சோவியத் காலத்து உருக்கு ஆலை பகுதியில் உள்ள தரைகீழ் தளத்தில் சுமார் 1,000 பொதுமக்களும் 2,000 உக்ரைன் வீரர்களும் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க ஐ.நா. சபை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் சில பெண்கள் மற்றும் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஓடுதளம் மீது ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைமியா பகுதியில் இருந்து நடத்தப்பட்ட இந்தத்தாக்குதலில் ஓடுதளம் முற்றிலும் சேதமடைந்ததாக ஒடேசா மாகாண ஆளுநர் மக்சிம் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் கார்கிவ் பகுதியில் உக்ரைனின் 2 சு-24எம் ரக போர்விமானங்களை தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு கருவிகள் சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment