இலங்கைச் செய்திகள்

 இலங்கையில் மீண்டும் அவசரகால நிலை பிரகடனம்; அதி விசேட வர்த்தமானி

நாடளாவிய ரீதியில் பொது நிர்வாக பணிகள் பல முடக்கம்

தனியார் ஊடக வலையமைப்பு குற்றச்சாட்டுகளை நாமல் எம்பி முற்றாக மறுப்பு

பாராளுமன்ற வீதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த நன்றிஇலங்கையில் மீண்டும் அவசரகால நிலை பிரகடனம்; அதி விசேட வர்த்தமானி

இலங்கையில் நேற்று (மே 06) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதியின்மையை அடுத்து, கடந்த ஏப்ரல் 01 முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததோடு, அதனுடன் இணைந்தவாறு ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக வலைத்தள முடக்கம் ஆகியன பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை அடுத்து, ஏப்ரல் 06ஆம் திகதி அவசரகால நிலை நீக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் (06) நாடு தழுவிய ஹர்த்தால் மற்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மை உள்ளிட்ட விடயங்களை காரணம் காட்டி, மீண்டும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்திற்கு அமைய, பிடியாணையின்றி கைது செய்தல், 48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைத்தல், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்தல், சட்டங்களை இடைநிறுத்துவதற்கும், நீதிமன்றத்தினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது. அத்துடன் அவ்வாறான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்குகளையும் தொடர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

நாடளாவிய ரீதியில் பொது நிர்வாக பணிகள் பல முடக்கம்

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் மக்களுக்கு பெரும் அசௌகரியம்

நாட்டில் நேற்று சில தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக நாடளாவிய ரீதியில் நிர்வாக பணிகள் முடங்கின. இதன்காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

போக்குவரத்து, சுகாதாரத்துறை, அத்தியாவசிய பொருள் விநியோகம் ஆகியவற்றில் ஏற்பட்ட தடையால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அரசாங்கம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் நேற்று முன்னெடுத்த பொது நிர்வாக முடக்கல் போராட்டம் காரணமாக பலதுறைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

புறக்கோட்டை உள்ளிட்ட நாட்டின் பல பிரதான நகரங்கள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்ததை காணக்கிடைத்தது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டு தமது சேவையை நிறுத்தியிருந்தனர். எனினும்இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டன.

ஆசிரியர், அதிபர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதன் காரணமாக பல பாடசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதவளித்து நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டன. சில வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்ததால் அத்தியாவசிய மற்றும் இதர தேவைகளுக்காக பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆசிரியர், அஞ்சல், சுகாதாரம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ராஜகிரிய சுற்றுவட்டத்தில் பேரணியை ஆரம்பித்திருந்தனர்.இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நான்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று முற்பகல் மத்திய வங்கிக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விவசாய உற்பத்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக இந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக விவசாய ஆலோசகர் தொழிற்சங்கம் தெரிவித்தது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, கண்டி, புஸ்ல்லாவை, நுவரெலியா, பதுளை மற்றும் ஹற்றன் ஆகிய நகரங்களில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா நகர் பகுதிகளில் பெருந்தோட்ட மக்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஹர்த்தாலால் களையிழந்த யாழ் மாவட்டம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்தால்லால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. எனினும் இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெற்றபோதும் தனியார் சேவைகள் இயங்காதிருந்தது.

இதனால் நகர வீதிகள் வெறிச்சோடி இருந்ததுடன் வங்கிகள் பூட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இதேபோல் வடக்கு மாகாணங்களின் முக்கிய பெருநகரங்கள் சோபையிழந்து காணப்பட்ட போதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

முற்றாக முடங்கிய மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு நகர்,களுவாஞ்சிகுடி நகர்பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும். பொதுச்சந்தை தனியார் மற்றும், அரச வங்கிகள் அனைத்தும் முற்றாக பூட்டப்பட்டிருந்தன. பாடசாலைகளும் இயங்கவில்லை.    நன்றி தினகரன் 


தனியார் ஊடக வலையமைப்பு குற்றச்சாட்டுகளை நாமல் எம்பி முற்றாக மறுப்பு


ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக தனியார்  ஊடக வலையமைப்பு வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் தானோ அல்லது தனது குடும்ப அங்கத்தவர்களோ தொடர்பில்லையென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். தாம் கேள்விப்படாத இரு நிறுவனங்களுக்கிடையில் இடம்பெற்ற பரிவர்த்தனை தொடர்பில் தமது குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக அம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணிகளில் இடம்பெற்றுள்ள கொடுக்கல் வாங்கல் மோசடிகளில் தாமோ அல்லது தமது குடும்பத்ததில் எவரும் சம்பந்தப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

தனியார் ஊடக வலையமைப்பு அம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணிகளின்போது இடம்பெற்றுள்ள கொடுக்கல்-வாங்கல் மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.எனினும் அந்த மோசடிகள் எனக்கும் எனது குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. தாம் கேள்விப்பட்டும் இராத இரண்டு நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தமது குடும்பத்தினரை குற்றம்சாட்டி மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் இன்னமும் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்    நன்றி தினகரன் 


பாராளுமன்ற வீதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

- 'கோத்தா கோ கம' போராட்டக்கார்களுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றிற்கு

பாராளுமன்ற நுழைவு வீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, தியத்தஉயனவுக்கு முன்பாக உள்ள குறித்த வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் குறித்த வீதியை மறித்து பொலிஸார் நிறுவியிருந்த வீதித்தடையை, ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்ற முற்பட்ட வேளையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பொலிஸாரினால் இவ்வாறு நீரத்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது-

பாராளுமன்றத்திற்கு செல்லும் குறித்த வீதியை ஆக்கிரமித்து "ஹொரு கோ கம" என பெயரிட்டு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள், அரசாங்கத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 'கோட்டா கோ கம' என பெயரிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டக்களத்தில், ஜனாதிபதி செயலக வாயிலின் தடைகளை அகற்றுதல் மற்றும் ஒரு சில நபர்களுக்கு எதிரான தடையுத்தரவை பெறுவது தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதிலிருந்து கொழும்பு பிரதான நீதவான் விலகியுள்ளதோடு, குறித்த கோரிக்கையை எதிர்வரும் மே 10ஆம் திகதி, பிரதான நீதவான் முன்னிலையில் முன்வைக்குமாறு பொலிஸாருக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி தினகரன் 


தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த நன்றி

தமிழில் கடிதமும் அனுப்பிவைப்பு

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராபஜக்ஷவின் கையொப்பத்துடன், தமிழக முதல்வருக்கு நேற்று முன்தினம் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில், தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, அண்டை நாட்டு பிரச்சினையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நன்றி தினகரன் 
No comments: