தீக்குள் விரலை வைத்தால் ! - கிறிஸ்டி நல்லரெத்தினம்


போர் ஆரம்பம்!


இந்த இரு வார்த்தைகளின் பின்னே உள்ள சோகங்களையும் இழப்புகளையும் வேதனை வடுக்களையும் பற்றி சொற் சுணாமிகள் இனியே கரைதட்டத் தொடங்கும்.

'ஏன் போர்?'  என்பதற்கான வியாக்கியானங்களை போர் ஆராய்வாளர்கள் எம்முன் படைக்கத் தொடங்கிவிட்டனர்.

எந்தப் போருக்கும் பல பரிமாணங்கள் உண்டு. இப்பரிமாணங்கள் முற்றிப் பழுத்து போராய் வெடிக்கும் போது நிகழும் இழப்புக்கள் மீட்டெடுதலுக்கு அப்பாற்பட்டவை!

நேட்டோவில் (NATO)  இணைவதற்கான உக்ரையினின் நகர்வு, ரஷ்ய ஆதிக்கத்தை விஸ்தரிக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முன் நகர்வு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான பனிப்போரின் உச்சம் என பல பரிமாணங்கள் இங்கு உண்டு.

இப்பரிமாணங்களின் தொகுப்பை ஆராய்ந்து அவற்றை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாததால்  ரஷ்ய- உக்ரைன் போரின் ஒரு பரிமாணத்தை  மட்டும் இங்கே பார்ப்போம்.

 

இன்று உலகில் நிகழும் அனர்த்தங்களுக்கும் போர்களுக்கும்


இறைவன் இயற்கை வளங்களை சமமாக பங்கிடுவதில்  விட்ட தவறுதானோ என எண்ணத்தோன்றுகிறது.

இன்றய மனித இனம், காட்டுவாசிகள் வேட்டையாடிய மாமிசத்திற்காக அடித்துக்கொண்டது போல்,  இயற்கைச் வளங்களுக்காய் கையில் ஆயுதமேந்தி போராடுவதை பார்த்து அந்த இறைவன் தலையிலடித்து  தன் பிழையை நொந்து கொள்வானோ என எண்ணத் தோன்றுகிறது.

திண்மத்திற்காக திரவத்திற்காக,, ஏன் வாயுவிற்காகவும் நாம் ஆயுதமேந்தினோம்.

தங்கத்திற்காகவும் மற்றும் செம்பு இரும்பு, நிலக்கரி போன்ற தாதுப்டொருட்களுக்காகவும் போரிட்ட காலங்கள் மலையேறிவிட்டது.

அண்மைச் சகாப்தங்களில் மசகு எண்ணெக்காக மத்திய கிழக்கையே புரட்டிப்போட்டு  பங்கு பிரித்துக் கொண்டோம்.

மிகுதியாய் இருப்பது வாயு ஒன்றே. அதையும்தான் விட்டுவைப்பானேன் என்று  இன்று போர் ஒன்றை தொடங்கிவிட்டோம் உக்ரைனில்!

 


உலக  இயற்கை எரிபொருள்  தேவையில் எரியெண்ணை 37%தையும், நிலக்கரி 24%தையும், எரிவாயு 23%தையும் பூர்த்தி செய்கின்றன.  புதைபடிவ எரிபொருள் வகைக்குள் அடங்கும் இந்த இயற்கை ஏரி வாயு  பிற புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில் சூழலை மிகுதியாக மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளை தராத ஒரு மூலம் ஆகும். இது பெட்ரோலியத்தை விட 30% குறைவான கரியமில வாயுவையும் நிலக்கரியை விட 45% குறைவான கரியமில வாயுவையும் எரிக்கும் போது வெளிவிடுவதால் 'மாசற்ற சக்தியை'  நாடும் நவீன பொருளாதார நாடுகள் எரிபொருள் பாவனைக்காக  இதனையே அதிகம் விரும்புகின்றன.

 

உலகின் இயற்கை வளங்களை சரியாக பங்கீடு போடவில்லை என்று இறைவனை சாடியது ஏன் என்ற  கேள்விக்கு பதில் இதோ!

 

உலகின் 24% இயற்கை வாயு கையிருப்பை தன்னகத்தே அடக்கி


முதலிடத்தில் இருப்பது ரஷ்ய பேரரசு. இக்கையிருப்பு கனஅளவு 1,688 டிரில்லியன் கன அடிகள்  ஆகும். ரஷ்யாவை அடுத்து இரண்டாவதாக  ஈரானும்,  மூன்றாவதாக கடார் நாடும் நான்காவது இடத்தில் அமெரிக்காவும் இவ் வரிசையில் குந்திக்கொண்டிருக்கின்றன. சீனா இப்பட்டியலில் 15வது இடத்தையும் இந்தியா 22வது இடத்தையும் ஆஸ்திரேலியா 27வது இடத்தையும் நிரப்புகின்றன.

 

முதலிடத்தில் இருப்பதால் கையிருப்பை காசாக்குவதில் கவனம் செலுத்துவதில் தவறில்லையே? அதுவும் பாவனை நாடுகள் எரிபொருளுக்காய் ஆலாய் பறக்கும் இக் காலங்களில் தன் கஜானாவை நிரப்ப நினைப்பது நியாயமானதே.

ஆனால் ஒரு சிக்கல். வாயுவை வாளியில் நிரப்பி விற்க முடியாதே. கப்பலில் ஏற்றி அனுப்புவதானாலும் கடுகளவே கடல் சூழ்ந்த ரஷ்யாவிற்கு இதுவும் ஒரு தடங்கலே.

இதற்கு ஒரே தீர்வு இயற்கை வாயுவை திரவ நிலையில் (Liquefied Natural Gas -LNG) பாரிய குழாய்கள் மூலம் பாவனை நாடுகளுக்கு நேரடியாக அனுப்புவதே.

ரஷ்யாவின் வாடிக்கையானர்களில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகளே. இவர்களின் 40% இயற்கை வாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது.  ரஷ்யாவின் இயற்கை வாயு உற்பத்தியில் 70% ஐரோப்பிய யூனியன் நாடுகளே கொள்வனவு செய்கின்றன. 

 


அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளின் 23%  எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதால் தங்கள் ஏற்றுமதி விகிதாசாரத்தை அதிகரிக்கவே இப்போர் என்று ஒரு கருத்தும் நிலவாமல் இல்லை.

சரி, இப்போது களம் உங்களுக்கு புரிந்திருக்கும்.

2011இல் ரஷ்யாவின் மேற்குக்கரையில் உள்ள Vyborg மற்றும் Ust-Luga நகர இயற்கை வாய்வுக்குதங்களில் இருந்து பாரிய குளாய்கள் மூலம் Baltic கடலுக்கூடாக ஜேர்மனியின் மேற்கில் அமைந்துள்ள Greifswald நகருக்கு வாயுவை எடுத்துச் செல்லும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆக்டோபரில் பூர்த்தி செய்யப்பட்டன. இத்திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் 2006 இலேயே தொடங்கப்பட்டுவிட்டன என்பது துணைச் செய்தி.

  1,222 கி.மீ நீளமுள்ள இவ் வினியோகக் குழாய் உலகிலேயே மிக நீளமானதாகும்.

இத்திட்டத்திற்கு ஜேர்மனி (15.5 %), பின்லாந்து (9%), பிரான்ஸ் (9%) நாடுகளுடன் இணைந்து ரஷ்யா 51% பங்களிப்பை வழங்கியது. Nord Stream 1 என செல்லப்பெயர்  சூட்டி இதை 2012ல் ஜேர்மனியின் அங்கலா மேர்க்கிள் அம்மையார் உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்தார்.

மகிழ்ந்தது ஐரோப்பா!

ஆனால் துரிதமாக வளர்ச்சியடையும் இவர்களின் பாவனைக்கு இந்த


வாயு வினியோகம் போதுமானதாய் இருக்கவில்லை. யானைப் பசிக்கு சோளப் பொரியா?

'இந்தியன் 1'  வெற்றி பெற்றால் 'இந்தியன் 2' வந்துதானே ஆக வேண்டும்?

Nord Stream 2 இற்கான திட்டம் தீட்டப்பட்டது. 1,230 கி.மீ நீளமுள்ள குழாய்கள் NS 1 இற்கு அருகேயே ஓடுமாறு அமைத்து முடிக்கப்பட்டு வருடத்திற்கு  110 பில்லியன் கன மீட்டர் எரிபொருள் இதனூடாக கடத்தப்படுவதே இத்திட்டம். இதற்கான செலவின் 50% ரஷ்யாவின் அரசு நிறுவனமான Gazprom உம் மிகுதியை Shell மற்றும் ஆஸ்திரிய, பிரான்ஸ், ஜேர்மன் கம்பனிகள் பகிர்ந்து கொண்டன.  கடந்த ஆண்டு இறுதியில் கட்டுமான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும்  அங்குரார்ப்பணம் செய்வதில் இன்னும் தாமதம்  ஏற்பட்டுள்ளது.

 

நிறுத்துக!

அது சரி, இத்திட்டங்களுக்கு முன்னர் ரஷ்யா எப்படித்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை வாயுவை வினியோகித்தது என உங்கள் மனதில் எழும் கேள்வி நியாயமானதே.

1990ம் ஆண்டுக்குள் நுழைவோம்.

சோவியத் ஐக்கிய இராட்சியம் என்று பெயரிட்டு ஒரு உன்னத நாடாய் இருந்த நாட்கள் அவை. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி,  மாக்சிம் கார்க்கி

போன்ற  ரஷ்ய எழுத்துலக ஆளுமைகளை தமிழ் உலகம் கண்டுகொண்டு  அவர்களை கொண்டாடிய நாட்கள் அவை.


இந்நாட்களில் ஐரோப்பாவுக்கான இயற்கை வாயு வினியோக குழாய்கள் ஐக்கிய இராட்சியத்தின் பல பகுதிகளில் இருந்தும்  ஒரு பாரிய சிலந்தி வலை போல் ஐரோப்பாவினுள் ஊடுருவி திழைத்தன.  1991ல் இந்த ஐக்கியம் உடைந்து ஒரு தோசையை பதினைந்தாய் பிய்த்துப்போட்டாற் போல் பல தனிநாடுகள் உருவாகியதும் தமது நாட்டினூடாக செல்லும் வினியோக வலைப்பின்னலுக்கு ரஷ்யாவிடமாருந்தும்  இறக்குமதி நாடுகளிடம் இருந்தும் ரஷ்ய குடியரசின் குஞ்சுகள் வரி கேட்கத் தொடங்கின. இதனால் வந்த முறுகல்கள் பல.

'வந்தது வினை என் கல்லாப் பெட்டிக்கு' என எண்ணிய  ரஷ்யா தன் வாயு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே இவற்றை வினியோகிக்க கடலடி மார்க்கத்தை தெரிவு செய்தது.

 

Nord Stream 2 க்கான கட்டுமான வேலைகள் பூர்த்தியடைந்துவிட்டாலும் இறுதி தொழில்நுட்ப சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது .நா விதித்துள்ள  ரஷ்யா மீதான பொருளாதார தடை  திறப்புவிழாவிற்கு மேலும் முட்டுக்கட்டைகளை போட்டும் என எதிர் பார்க்கலாம்.

 

இங்குதான் உக்ரைன் அறிமுகமாகிறது.  ரஷ்யாவின் வாயு வினியோக வலைப்பின்னல் யூக்கிரேனையும் ஊடறுத்துப் போவதால் இரு நாடுகளுக்குமான முறுகல்களில் முதலில் பாதிப்படைவது இவ் வினியோக மார்க்கமே. 2006 இலும் 2009 இலும் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளில் உக்ரைன் வாயு வினியோகத்தை துண்டித்து தகராறு செய்தது ரஷ்யா.

ஐரோப்பா ரஷ்யாவின் நம்பர் 1 கஸ்டமர். எனவே வினியோகத்தில் எந்தத் தடங்கல் வந்தாலும் அது ரஷ்யாவின் பட்ஜெட்டில் ஒரு நெளிவை நிச்சயம் ஏற்படுத்தும். மேலும் ஐரோப்பா 'மாசற்ற சக்தி' மார்க்கங்களை நோக்கிப் பயணிக்கும் நாட்களில் நிலக்கரி மற்றும் அணுசக்தி  தொழில் நுட்பத்தால் சுற்றாடல் மாசுபடுவதால்  இயற்கை வாயுவிற்கு மவுசு அதிகரித்துக் கொண்டே இருந்தது.  கடல் மார்க்க வினியோகத்தை  ரஷ்யா விரும்புவதற்கு இவையே  முக்கிய  காரணங்கள் ஆகும்.

 

ரஷ்யாவின் பிராந்திய அரசியல் பல ஆக்கிமிப்புகளை கண்டது. 2008ஆம் ஆண்டு ஜோர்ஜியா மீதும் 2014ஆம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதல்களும் இதற்கு சான்று.  இந்த ஊடுருவல்களில் ஆக்கிரமித்த தெற்கு ஒசட்டியா, அப்காசியா, கிரிமியா பிரதேசங்களை ரஷ்யா தன்னுடனேயே இணைத்துக்கொண்டுள்ளது.

இந்த முன்னெடுப்புகள் மீண்டும் ஒரு சோவியத் பேரரசை கட்டியெழுப்பும் ரஷ்யாவின் கனவின் முதல் படியோ என எண்ணத்தோன்றுகிறது.

 

மீண்டும் இயற்கை வாயு வினியோகத்திற்கு வருவோம். இதன் வினியோகம் ஐரோப்பாவின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் அதே வேளையில் ரஷ்யாவின் கஜானாவை நிரப்பும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. பொருளாதாரத் தடை மற்றும் SWIFT எனும் சர்வதேச நிதி பரிவர்த்தன தகவல் சேவை முடக்கம்  மற்றும் இயற்கை வாயு குதங்களுக்கு ஏற்படும் போரிலானான சேதம்  ஆகியவை  நிச்சயம் இரு சாராருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியே தீரும்.

 

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அணு ஆயுத தடுப்புக் குழுவை தயார் நிலையில் வைத்திருக்கும் படி விடுத்துள்ள எச்சரிக்கை இப்போர் புதிய எல்லைகளை தொடலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த வாரம் உக்ரைனின் ஸாப்போரீஷியா அணு மின் நிலைய தாக்குதல் மேலும் கவலையையே அளிக்கிறது.

10 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் தம் நாட்டை விட்டு அகதிகளாய் இன்று வரை வெளியேறியுள்ளனர்.

எரியும் தீயில் எண்ணை வார்ப்பது போல் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு ஆயுத உதவி அளிப்பதாயும் ரஷ்ய விமானங்களுக்கு தமது  வான் எல்லைகள் ஊடாக பறப்பதையும் தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது. இதுபோன்ற முன்னெடுப்புகள் இப்போர் சீக்கிரமாய் முடிவிற்கு வருவதற்கான நம்பிக்கையை தவிடுபொடியாக்கியுள்ளன.

 

போர் பிரதேசங்களின்  எரிபொருள் குழாய்களில் தேங்கிக் கிடக்கும் திரவங்கள் ஐரோப்பாவை சென்றடையுமா அல்லது பீரங்கிகளுக்கு பலியாகி தீப்பற்றி எரிந்து விண்ணில் புகையாய் மறையுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்!

 

(முற்றும்)

No comments: