பெருஞ் சக்தியானவளை பேணிநிற்போம் வாரீர் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
மாநிலத்தில் மாதவமாய் வந்தவளே பெண்தான்
மங்கலமாய் திகழ்பவளும் மாநிலத்தில் பெண்தான்
ஊணுறக்கம் தனைமறந்து உழைப்பவளும் பெண்தான்
உயர்நிலைக்கு வருவதற்கும் உந்துசக்தி பெண்தான் ! 

பெண்ணவளை மனமிருத்தி பெயர்களையும் வைப்போம்
மண்பார்த்தால் நதிபார்த்தால் பெண்ணவளே வருவாள்
கல்வியொடு செல்வம்வீரம் தருஞ்சக்தி தனையும்
பெண்பெயரால் அழைத்துமே பெருமகிழ்வு அடைவோம் ! 

எம்பெருமான் சிவனாரின் இடதுபுறம் இருக்கும்
இயங்கு சக்தியானவளும் பெண்ணாக உள்ளாள் 
வெங்கொடுமைத் தீயிடையே விழுந்தெழுந்து வந்து
மேதினியே வியக்கும்படி நின்றசீதை பெண்ணே !

நீதியினை நிலைநாட்டத் தவறிநின்ற மன்னன் 
நெஞ்சுறைக்க சபையேறி நின்றவளும் பெண்ணே
பாதை தடுமாறியே சமணம் நெறிபுகுந்தர் 
பக்குவமாய் அப்பராய் ஆக்கியவளும் பெண்ணே ! 

கடவுளான கண்ணனையே காதலானாய் கொண்டு
கல்யாணம் வரைசென்று காட்டியவளும் பெண்ணே
காதலொடு கைபிடித்த கணவனையே துறந்து
தலையாலே கைலாயம் நடந்தவளும் பெண்ணே ! 

தவமிருந்து பெற்றபிளை தனையடியார் வேண்ட
தன்கையால் அவனைவெட்டிக் கறிசமைத்துக் கொடுத்து
அவனியிலே அதிசயமாய் ஆகியவளும் பெண்ணே
அளவில்லா ஆற்றலையும் அடக்கியவளும் பெண்ணே ! 

புவியினிலே புனிதர்களை பெற்றவளும் பெண்ணே
புகழ்பெற்ற யாவரையும் ஈன்றவளும் பெண்ணே
பெண்ணென்னும் சக்திதான் பெருஞ்சக்தியாகும்
பெருஞ் சக்தியானவளை பேணிநிற்போம் வாரீர் ! 

No comments: