முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி புலம்பெயர் தமிழரின் வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கும் “ கதைத்தொகுப்பின் கதை “ கனகா கணேஷ் – சிட்னி


பிரபல எழுத்தாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான முருகபூபதி ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். படைப்பிலக்கிய வாதியாகவும் ஊடகவியலாளராகவும் இயங்கி வருபவர். சிறுகதைக்காகவும், நாவலுக்காகவும் இரண்டு தடவைகள் இலங்கையில் தேசிய சாகித்திய விருது பெற்றவர். அவரது ஏழாவது  கதைத் தொகுதியான    "கதைத் தொகுப்பின் கதை"  யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வரவாகியுள்ளது.  

பதினைந்து சிறுகதைகளைக்கொண்ட  இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையைப்பற்றியும்  பதினைந்து தேர்ந்த வாசகர்கள்,  தங்கள் வாசிப்பு அனுபவத்தை இந்நூலில் பகிர்ந்துள்ளனர்.  அவர்கள் இலங்கை, அவுஸ்திரேலியா,  கனடா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அதனாலும் இந்நூல்    தனிச் சிறப்படைகிறது.   கதைகளின்  பாத்திர அமைப்பும் கதைகளை சுவாரஸ்யமாக சொல்லிய விதமும் ஆசிரியரின் நேர்த்தியான நடையில் அழகாக மிளிர்கின்றது.

ஈழம் மற்றும் புலம் பெயர் மக்களின் வாழ்க்கை, அந்நிய நாட்டில்


அவர்களுக்கென அமைத்துக் கொண்ட கலாச்சாரம் மற்றும் சம்பிரதாய முறைகளை அடிப்படையாகக்  கொண்ட இக்கதைத் தொகுப்பில் நாம் நிஜ வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பாத்திரங்களையே கதைகளின் நாயகர்களாக  நினைவில் நிறுத்துகிறார் ஆசிரியர்.

புலம் பெயர் மக்கள் அந்நிய தேசங்களில் தங்களின் அடையாளங்களை  தொலைத்து தங்கள் நடை உடை பாவனைகளில் கூட தங்களை அந்நிய தேசத்தவர்களாகவே  இனம் காட்ட முயற்சிப்பதை மிக நாசூக்காக நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.

 ஒவ்வொரு கதைக்கும் தேர்ந்தெடுத்த தலைப்புகள் கதையின் போக்கோடு ஒத்து போகின்றன.

 தலைப்பினை ஒட்டிய சம்பவக் கோர்வைகளும் தொய்வின்றி  கதை சொல்லிய விதமும் ஆசிரியருக்கே உண்டான தனிச் சிறப்பு.

 "கதைத் தொகுப்பின் கதை"யைக்  கதையென்று மேலோட்டமாக படித்து விட்டு செல்ல முடியாதபடி, கதையின் நாயகி நம் மனதை விட்டு அகல மறுக்கிறார்.  தங்களது  தனித்திறமைகளையும் கனவுகளையும் சமூக அமைப்புக்கு  கட்டுப்பட்டு  ஆழ் மனதுக்குள்ளேயே புதைத்து நடைப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ சுந்தரி டீச்சர்களை நம்மில் கிளர்ந்தெழச் செய்கிறது ஆசிரியரின்  அந்தப் பாத்திர படைப்பு.

 "கணங்கள்" சிறுகதை புலம்பெயர் புகலிடச்சிறுகதை நூல் "முகங்கள்" தொகுப்பில் இடம் பெற்றிருப்பதோடு சிங்கள மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

இக்கதை ஈழத்து வாழ்வு  வெளியிலிருந்து புலம் பெயர்ந்து


ஆஸ்திரேலிய மண்ணில் வாழும் தமிழ் - சிங்கள இனத்தாரின்  பாதிப்பை அவர்களது வாழ்வில் நேர்ந்த துயர சம்பவங்களை மாறுபட்ட கோணத்தில்  சொல்வதாக அமைந்துள்ளது.  

 போருக்கு பின்னரான  இன்றைய நிலையிலாவது தமிழ் - சிங்கள சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய அன்பின் வழியான இன ஐக்கியம் முக்கியம் என்பது மெல்லிய நூலாக கதையில் இழையோடுவதைக் காண முடிகிறது.

 "தினம்" சிறுகதை  இலங்கை தினக்குரல், ஆஸ்திரேலியா உதயம், தேனீ மற்றும் தமிழ் முரசு இணையம் ஆகியவற்றில் முன்னரே வெளியாகி உள்ளது.

இறுதி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் பூதவுடலை விட்டு பிரிந்த உயிர், கதை  சொல்வதாக வித்தியாசமாக நகரும்  இப்படைப்பு,  நம் மனதில் தங்கி விடுகின்றது. ஈழப் போரில் ஏற்பட்ட இழப்புகளின் வேதனைகளையும் வலிகளையும் இறந்த உடலின் ஆன்மா  ஊடாகவும், புலம் பெயர் நாடுகளில் தேசியம் பேசிபேசியே தங்களை வளப்படுத்திக் கொள்ளும் சிலரது போலி முகங்களையும்  ஆசிரியர்  நறுக்குத்  தெறித்தாற் போல் சொல்லி இருக்கிறார்.  இக்கதையை வாசித்து முடித்த போது,  நகர்த்த முடியாத பாராங்கல்லை யாரோ நம் மனதில் தூக்கி வைத்ததைப் போல கனத்துப் போகின்றது..

இரு தலைமுறைகளைச் சார்ந்தவர்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறை பற்றி  அவள் அப்படித்தான்”,  கொரோனா பெருந்தொற்று  காலத்தில்  நேர்ந்த  வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி கொரோன கால உறவுகள் சித்திரிக்கிறது.

நடையில் வந்த பிரமைசிறுகதை இன,  மொழி , மத வேறுபாடுகளுக்கு அப்பால் சக மனிதர்களோடு  மலரும் நட்பை எலிசபெத் என்ற அமானுஷ்ய சக்தியின் ஊடாக வித்தியாசமாக சொல்லி இருப்பதன் மூலம் தன்னை ஒரு பண்பட்ட  எழுத்தாளராக பரிணமிக்க வைத்துள்ளார் கதாசிரியர்.

இன்றைய யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்டுள்ள வாழ்வியல்  மாற்றங்களை,  சமுதாய சீரழிவுகளை , சமூக வலைத் தளங்களின் அதீத பயன்பாட்டால் ஆண் -  பெண் இடையே  கிளம்பும் பிரச்சினைகளையும் நேர்காணல்சிறுகதையின் மூலம் நயம்பட சொல்லி இருக்கிறார்.

புலம் பெயர் நாட்டில் தங்களது சொந்த நாட்டு பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள்  பண்பாடுகளை வசதிக் கேற்றவாறு மாற்றிக் கொண்டவர்களின் போலி முகங்களை உரித்துக்காட்டும்காத்தவராயன்கதை,   நாம் வழக்கமாகப்பேசும் சர்வதேச அரசியலை  பகடி செய்கிறது.  ஏனைய கதைகளான எங்கோ... யாரோ...  யாருக்காகவோ, அம்மம்மாவின் காதல்,  எங்கள் ஊர் கோவூர்,  பார்வை,  ஏலம்,  காதலும் கடந்து போகும்,  தாத்தாவும் பேத்தியும்முதலான கதைகளில் தனக்கே உரித்தான பாணியில் சமூக யதார்த்தங்களை, தனிமனித உணர்வுகளை சராசரி வாழ்வோட்டங்களை எளிமையாகவும்  அழகாக வெளிப்படுத்தி உள்ளார் முருகபூபதி.

---0---

 

No comments: