உலகச் செய்திகள்

 ரஷ்ய படைகளிடம் இருந்து தற்காப்பிற்கு போராட்டம்

உக்ரைனில் அணு நிலையத்தில் மோதல்: தீ பரவியதால் பரபரப்பு

மனிதாபிமானப் பாதைக்கு உக்ரைன் - ரஷ்யா இணக்கம்

உக்ரைன் எல்லையில் இருந்து 17,000 இந்தியர்கள் வெளியேற்றம்

 36 நாடுகளுக்கு ரஷ்ய வான் பகுதியில் தடை

ஐரோப்பா- ரஷ்யா இடையே பதிலுக்கு பதில் வான் தடை



ரஷ்ய படைகளிடம் இருந்து தற்காப்பிற்கு போராட்டம்

ரஷ்யப் படையினர் உக்ரைனியத் தலைநகர் கியேவை நெருங்கி வருகின்றனர் அவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக்கியமான வழிகளில் தடைகளை ஏற்படுத்த கடுமையாக முயல்கின்றனர் கியேவ் நகர மக்கள்.

கவச வாகனங்கள் தாண்டி வரமுடியாதவாறு கனத்த உலோகத் தடுப்புகளை அமைக்கின்றனர். உக்ரைனில் உள்ள மிகப்பெரிய சொத்து நிறுவனம் இதற்குத் தோள் கொடுக்கிறது.

தற்காப்பை வலுப்படுத்தி, எதிரிளின் கவச வாகனப் படையணி முன்னேற்றத்தை முடக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போரில் உக்ரைன் நிச்சயம் வெல்லும் என்பது கியேவ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.    நன்றி தினகரன்   




உக்ரைனில் அணு நிலையத்தில் மோதல்: தீ பரவியதால் பரபரப்பு

பல நகரங்கள் ரஷ்ய படையால் சுற்றிவளைப்பு

ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையிலான மோதலின்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்திற்கு அருகில் இருக்கும் பயிற்சிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக உக்ரைனின் அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் செபோரிசியா நிலையத்தில் கதிரியக்க அளவு அதிகரித்ததற்கான சமிக்ஞைகள் இல்லை என்று அமெரிக்க வலுசக்தி செயலாளர் ஜெனீபர் கிரன்ஹோல் தெரிவித்துள்ளார். இந்த அணு மின் நிலையம் உக்ரைனின் ஐந்தில் ஒரு மின் உற்பத்தியை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அணு மின் நிலைய வளாகத்தில் அணு மின் ஆலைக்கு அருகில் இருக்கும் கட்டடம் ஒன்றின் மீது ஷெல் குண்டுகள் வீசப்பட்டு தீப்பற்றி எரியும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஒரு கட்டடம் தீப்பற்றி எரிவதும் ஷெல் குண்டுகள் விழுந்த வண்ணம் இருப்பதும், பின்னர் பாரிய தீப்பிழப்பு ஒன்று வெளிப்படுவதும் தெரிகிறது. இந்த வளாகத்தின் கார் தரிப்பிடம் ஒன்றுக்கு அருகில் வெடிப்பு இடம்பெறுவதோடு அது வளாகம் எங்கும் தீ பரவுவதற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில் அணு மின் நிலையம் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றிய விபரம் உடன் வெளியாகவில்லை.

அணு உலை மீதான ரஷ்யத் தாக்குதலை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் உடனடியாக கண்டித்தனர். அவர்கள் அதை “பயங்கரமான” “பொறுப்பற்ற” செயல் என்று குறிப்பிட்டனர். இது ஐரோப்பா முழுவதற்குமான அச்சுறுத்தலாக இருந்தது.

‘ஐரோப்பியர்களே தயவு செய்து எழுந்திருங்கள். உக்ரைனில் அணு மின் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை உங்களது அரசியல்வாதிகளுக்கு கூறுங்கள்’ என்று உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ உரை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய டாங்கிகள் அணு உலை ஆலைகள் மீது சுட்டதாக செலென்ஸ்கி கூறியபோதும், அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்படுகிறது.

தலைநகர் கியேவில் இருந்து தென்கிழக்காக 550 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்த அணு உலைக்கு அருகில் இருக்கு நகரின் மேயர், எதிரிகளின் தொடர்ச்சியான ஷெல் வீச்சு மற்றும் உக்கிர தாக்குதல்களால் பெரும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி கடந்த வாரம் உக்ரைன் மீது படையெடுத்த நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக நம்பப்படுவதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக நாட்டை விட்ட வெளியேறியுள்ளனர்.

அணு நிலையத்தில் தீப்பற்றிய சம்பவத்தை அடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் வீழ்ச்சி கண்டதோடு எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது.

டோக்கியோ மற்றும் ஹொங்கொங் பங்குச் சந்தைகள் மிகுந்த வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜப்பானின் முக்கியக் குறியீடான நிக்கேய் 2.5 வீதம் குறைந்தது. ஹொங்கொங்கின் செங் 2.6 வீதம் குறைந்தது.

காலை வணிகத்தின் போது, ஆசியாவில் எண்ணெய் விலை உயர்ந்தது. ப்ரென்ட் மசகுஎண்ணெய் ஒரு பீப்பாய் 112 டொலருக்கும் மேல் உயர்ந்துள்ளது.

‘அணு அனர்த்தம் தொடர்பில் சந்தைகள் கவலை அடைந்துள்ளன. போர் நீடிக்கும் நிலையில் தவறான கணிப்பு மற்றும் அதிகப்படியான எதிர்வினை பிரச்சினைக்கு காரணம்’ என்று ஓ.சி.பி.சி வங்கியின் முதலீட்டு மூலோபாய நிறைவேற்று பணிப்பாளர் வாசு மேனன் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஏற்கனவே கியேவில் இருந்து சுமார் 100 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் செயலிழந்துள்ள செர்னோபில் அணு மின் நிலையத்தை கைப்பற்றியுள்ளது. இந்த அணு மின் நிலையத்தில் 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து ஐரோப்பாவின் பெரு பகுதிக்கு கதிர்வீச்சு கசிந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் செபோரிசியா ஆலை வித்தியாசமானது மற்றும் பாதுகாப்பானது என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த ஆலையில் வெடிப்பு ஏற்பட்டால், அது செர்னோபில் வெடிப்பைவிட 10 மடங்கு மோசமானதாக இருக்கலாம் என்று உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் முன்பு எச்சரித்திருந்தார்.

இந்த நிலையத்தின் தற்போதைய நிலை பற்றி உக்ரைன் ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் பேசியுள்ளனர்.

‘குறித்த பகுதியில் இராணுவ செயற்பாடுகளை நிறுத்தும்படியும் அவசர நடவடிக்கை பிரிவினருக்கு அந்தத் தளத்தை அடைய அனுமதிக்கும்படியும் ஜனாதிபதி செலெஸ்கியுடன் இணைந்து ஜனாதிபதி பைடன் ரஷ்யாவை வலியுறுத்துகிறார்’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்ய படைகள் உடன் தமது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தம் ஒன்று தீர்க்கமானது என்பது பற்றி செலென்ஸ்கியுடன் இணங்கியதாக ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி புட்டினின் பொறுப்பற்ற நடவடிக்கை தற்போது அனைத்து ஐரோப்பாவையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்’ என்ற பிரிட்டன் பிரதமர் அலுவலகம் கூறியது.

செபோரிசியா அணு மின் நிலையம் வலுவான கட்டுப்பாட்டு கட்டமைப்புகளால் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அது பாதுகாப்பாக மூடப்பட்டது என்றும் அமெரிக்க வலுசக்தி செயலாளர் குறிப்பிட்டார்.

அணு மின் நிலைத்தின் நிலைமை குறித்து பெரிதும் கவலை அடைவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச அணு சக்தி நிறுவனம் உக்ரைன் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய படை நடவடிக்கையை ஆரம்பித்த பின் முதல் நகராக தெற்கின் துறைமுக நகர் செர்சன் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளது. எனினும் ஏனைய நகரங்களை ரஷ்யப் படை சுற்றி வளைத்தும் தாக்குதல் நடத்தியும் வருகின்றது.

அசொவ் கடலின் பிரதான துறைமுக நகரான மரியுபோல் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதோடு சரமாரி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. நகரில் மின்சாரம் மற்றும் நீர் துண்டிக்கப்பட்டிருப்பதோடு காயமடைந்தவர்களை வெளியேற்ற முடியாதிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நகரின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இடைவிடாது சூட்டு சத்தங்கள் இடம்பெற்ற வருவதும் வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வானங்கள் தீப்பற்றி எரியும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்தது தொடக்க உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. கடும் ஷெல் வீச்சுக்கு இலக்காகி வரும் இந்த நகரை உக்ரைனிய படை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

எனினும் தலைநகர் கியேவ்மீது ஷெல் வீச்சுகள் இடம்பெற்ற போதும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் எந்த பாரிய தாக்குதல்களும் இடம்பெறவில்லை. புறநகர் பகுதியான பொரோடியங்காவின் பாதுகாப்பு அரணை முறியடிக்க ரஷ்ய பயங்கர தாக்குதல்களை நடத்துவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கியேவ் நகரின் மையப் பகுதியில் இருந்து 25 கிலோமீற்றருக்குள் ரஷ்ய படைகள் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கியேவை நோக்கி முன்னேறும் ரஷ்யாவின் மிக நீண்ட இராணுவ வாகனத் தொடரணி எதிர்ப்புகள் மற்றும் ஏற்பாட்டியல் பிரச்சினைகள் காரணமாக மெதுவடைந்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.    நன்றி தினகரன் 





மனிதாபிமானப் பாதைக்கு உக்ரைன் - ரஷ்யா இணக்கம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்த சந்திப்பில், மனிதாபிமான பாதைகளை அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அவற்றின் வழி பொதுமக்கள் வெளியேறுவதுடன் மனிதாபிமான உதவிப் பொருட்களும் விநியோகிக்கப்படலாம்.

மனிதாபிமான பாதைகளைச் சுற்றிய பகுதியில் வன்செயல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பெலாரஸில் கடந்த வியாழக்கிழமை நடந்த சந்திப்பில் தாங்கள் எதிர்பார்த்த அனைத்து முடிவுகளும் எட்டப்படவில்லை என்று உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் ஆலோசகர் கூறினார்.

எனினும் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும் காலம் பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு சாத்தியம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தம்முடன் நேரடி பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், உக்ரேன் படையெடுப்பு திட்டமிட்டதைப்போல் நடைபெறுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 





உக்ரைன் எல்லையில் இருந்து 17,000 இந்தியர்கள் வெளியேற்றம்

கியேவில் இருக்கும் இந்திய தூதரகத்தினால் பயண ஆலோசனை வெளியிடப்பட்ட பின் சுமார் 17,000 இந்திய நாட்டவர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியே இருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் 15 வரையான விமானங்கள் இயக்கப்படவிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டுவரும் கங்கா திட்டம் பற்றி ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தாம் பக்சி, “உக்ரைனை விட்டு வெளியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது ஆலோசனை வெளியிடப்பட்டது தொடக்கம் உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 17,000 இந்திய நாட்டவர்கள் வெளியேறி இருப்பதாக நாம் கணித்துள்ளோம்.

இதில் தூதரகத்துடன் முன்னர் பதிவு செய்யாத இந்தியர்கள் சிலரும் உள்ளனர்” என்றார்.    நன்றி தினகரன் 





36 நாடுகளுக்கு ரஷ்ய வான் பகுதியில் தடை

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 36 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு ரஷ்யா தனது வான் பகுதியை மூடியுள்ளது.

அதன் விமானங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் முதலில் ரஷ்யாவின் எரோப்லோட் விமானச் சேவைக்கும் தனியார் விமானச் சேவைகளுக்கும் தடை விதித்திருந்தது. ரஷ்யா பதில் நடவடிக்கையாகக் கடந்த வாரம் பிரிட்டனின் விமானச் சேவைகளுக்குத் தடை விதித்தது.

பின்னர், நாடுகளின் ஆகாயவெளியை ரஷ்ய விமானங்களுக்கு மூடவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. தடை விதிக்கப்படுவதால் விமானங்களின் பயணப்பாதைகளை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் பயணச்சீட்டுகளின் விலை உயரும் என்று கருதப்படுகிறது.   நன்றி தினகரன் 




ஐரோப்பா- ரஷ்யா இடையே பதிலுக்கு பதில் வான் தடை

ரஷ்யா சில நாடுகளின் விமானங்களுக்கு அதன் ஆகாயவெளியை மூடியுள்ளது.

லத்வியா, லித்துவேனியா, எஸ்டோனியா, சுலோவேனியா ஆகிய நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யாவில் அனுமதி இல்லை. ஏற்கனவே பல்கேரியா, போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்திருந்தது.

ரஷ்யாவுக்கு எதிராகச் சில ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ள தடைக்குப் பதிலடியாக ரஷ்யா இந்தத் தடையை அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் எரோபிளோட் விமானச் சேவைக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பல்கேரியா, போலந்து, செக் குடியரசு, சுலோவேனியா ஆகியவை ரஷ்ய விமானங்கள் தங்கள் ஆகாயவெளியைப் பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்துள்ளன.

இதேவேனை ரஷ்ய விமானங்களுக்கு தமது ஆகாயவெளியை மூடுவதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யும்படி ஜெர்மனி போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விசிங் உத்தரவிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 


No comments: