நூற்றியைந்து ஆண்டுகளில் சோவியத்தில் நேர்ந்த மாற்றங்கள் ! எங்கிருந்து எங்கே….?! அவதானி


இந்தப்பதிவை எழுதிவரும் அவதானிக்கு

ரஷ்யா – உக்ரேய்ன் மோதல் தொடங்கியதும்  பின்வரும் குறிப்பு வந்து சேர்ந்தது. அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.

தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.

டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.

ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக்


கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக தான்  வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.

உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.

பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது.

வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது,  மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள்

அந்த வீரரின் மனைவி.இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.


பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?

விளாடிமிர் புடின். அவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் மனைவியும்  அமெரிக்காவில்  முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான திருமதி ஹிலாரி கிளின்டன்,  தான் எழுதியிருக்கும்  "Hard Choices"  என்ற புத்தகத்தில் இந்தத் தகவலை  குறிப்பிட்டிருக்கிறார்.


சோவியத் நாட்டில் 1917 இல் ஒக்டோபர் புரட்சி நடந்து, உலகின் முதலாவது சோஷலிஸ அரசு உருவானதன்பின்னர், அங்கு பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன.

அப்பிரச்சினைகளின் அடிப்படையில் மூன்று பிரதான கடமைகள் அன்றைய சோவியத் அரசுக்கு முன்னாலிருந்தன.

அவையாவன:  நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது.

அதன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது.

இந்தப்பின்னணிகளுடன் எதிர்பாராதவகையில் 1918 – 1920 காலப்பகுதியில் முதலாவது உலகமகா யுத்தம் மூண்டது. 14 நாடுகள் இதில் ஈடுபட்டனர். இதனால் சோவியத்தில் சுமார்  எண்பது இலட்சம் மக்கள் பலியானார்கள்.

அதனையடுத்து, 1941 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில் நாஜி ஜேர்மனியுடனான போரில், சோவியத் நாடு சுமார் இரண்டு கோடி மக்களை பலிகொடுக்கவேண்டியதாயிற்று.

இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த இரண்டாம் உலகப் போர்க்காலத்தில்  காயமுற்று சடலம் போன்றிருந்த  அந்தப் பெண், உரியநேரத்தில் காப்பாற்றப்பட்டதையடுத்து, 1952 ஆம் ஆண்டில் அவருக்கு பிரசவமானவர்தான் இன்றைய ருஷ்யாவின் அதிபர் விளடிமீர் புடின்.

அவர் பிறப்பதற்கு முன்பே, இரண்டாம் உலகப்போரின் முடிவையடுத்து, உலகெங்கும் சமாதானம் நிலவவேண்டும் மனித உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதற்காக 1946 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது.

ஆனால்,  உலகளவில் சமாதானம் நிலைத்து நின்றதா…?

1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவில் சுதந்திமடைந்த பாரத நாடு,  அதே காலப்பகுதியில் பாகிஸ்தானை பிரிவினையால் இழந்தது.

ஒன்றிணைந்திருந்த பாகிஸ்தான் 1971 இற்குப்பின்னர்  மேற்கு – கிழக்கு எனப்பிரிந்து, வங்காள தேசம் உருவாகியிருக்கிறது.

இந்தக்கதைதான் சோவியத் நாட்டிலும் நடந்தது.

ரஷ்யா, உக்ரேய்ன், பைலோ ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான், கஜாகிஸ்தான், ஜார்ஜியா, அஸர்பைஜான், லிதுவேனியா, மொல்டாவியா, கிர்கீஸியா, தாஜிக்ஸ்தான், ஆர்மீனியா, துருக்மேனியா, எஸ்தோனியா, முதலிய  குடியரசுகளைக் கொண்டிருந்த சோவியத் யூனியனில்,  மேலும் 20 சுயாட்சிக் குடியரசுகளும், எட்டு சுயாட்சிப் பிராந்தியங்களும், பத்து சுயாட்சிப் பிரதேசங்களும் 1985 காலப்பகுதியிலிருந்தன.

இன்று அந்த சோவியத் யூனியன் இல்லை.

1991 ஆம் ஆண்டு,  உக்ரேய்ன்,  சோவியத்திலிருந்து பிரிந்து சுதந்திர நாடாகியது.

இரண்டாம் உலகப்போரின்போது,   நாஜி ஜெர்மனியின் தாக்குதலினால் 1. 4 மில்லியன் உக்ரேய்ன் மக்கள் பலியெடுக்கப்பட்டனர்.

இன்று ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரேய்னுக்கு எதிராக போர் தொடுத்திருக்கிறது. இந்தப்போரின் சேதங்கள் பற்றிய புள்ளிவிபரம் காலப்போக்கில் தெரியவரும்.

தமிழ்மக்களுக்கு பாரதியார் எப்படி ஒரு மகா கவியோ, வங்கத்திற்கு ரவீந்திரநாத் தாகூர் எப்படி ஒரு மகா கவியோ, அதுபோன்று சோவியத் நாட்டில் மகாகவியாக கொண்டாடப்பட்டவர்தான் உக்ரேய்ன் கவிஞர் தராஷ் ( 1814 - 1861 ) ஷெவ்சென்கோவ். தமது 47 வயதில் ( அற்பாயுளில் ) மறைந்தார்.

அவர் எழுதிய ஒரு வேடிக்கையான கனவு ( Dream – A Comedy ) என்ற நெடுங்கவிதை இவ்வாறு தொடங்குகிறது: ( இதனை மொழி பெயர்த்தவர் இலங்கை எழுத்தாளர் ( அமரர் கே. கணேஷ் )

உலகமதில் வாழ்வோரில் ஒவ்வொருவர் கொரு விதியாம்

ஒவ்வொருவர் செல்வதுவும் உரிய தனிப்பாதையிலே

இங்கொருவன் ஆக்கிடுவான், அங்கொருவன் அழித்திடுவான்

பேராசை பிடித்தவனோ, பேருலகில் எங்கேனும்

நாடுகளை பிடித்ததனை நாளுமதைச் சாகும்வரை

ஆட்சியது செய்திடுவான், அங்கவனைப்பார்த்தீரோ

அடுத்தமனைக்காரனுடன் அழிசூதில் இறங்கியவன்

படுதோல்வி கண்டவனாய் பறிகொடுப்பான் பணமதனை

தெருமுனையில் இருப்பவனும் தீட்டிடுவான் கத்திதனை

உடன்பிறந்தான் முதுகினிலே உறும்வேளை பாய்ச்சிடவே…

 

உக்ரேய்ன்  மகாகவி ஷெவ்சென்கோவ் தாம்  வாழ்ந்த காலத்திலிருந்த ஜார் என்ற கொடுங்கோல் மன்னனின் ஆட்சிமுறையை இக்கவிதையில்   சித்திரித்திருந்தார்.

பிற்காலத்தில்  ரஷ்யாவின் அதிபரான  புடின் பற்றிய பிறப்புச்செய்தியை தனது "Hard Choices"  புத்தகத்தில் எழுதியிருக்கும் திருமதி ஹிலாரி கிளின்டனின்  அமெரிக்கா நாடு,  உக்ரேய்ன் விவகாரத்தில் தலையிடத் தொடங்கிய பின்னரே, விவகாரம் முற்றியது என்பதும் அரசியல் ஆய்வாளர் கருத்து.

அமெரிக்கா, இதற்கு முன்னர் அத்துமீறிய நாடுகளின் வரலாறு ஏடுகளில் பதிவாகியிருக்கிறது.  காலத்திற்கு காலம் அதன் தேவைகள் மாறுபடும்.

உலகம் முழுவதும் மக்கள் கோவிட் பெருந்தொற்றினால் அவலப்பட்டிருக்கும்போது,  பேசித்தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய பிரச்சினை போராக விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

இந்தவிவாகரத்தில் உக்ரேய்ன் சார்பாக சில உலக நாடுகளும், ரஷ்யா சார்பாக மற்றும் சில உலக நாடுகளும் நிலைப்பாடுகளை எடுத்திருக்கும்போது,  வேறு சில நாடுகள் மதில்மேல் பூனைகளாக மௌனம் காக்கின்றன.

இறுதியில் பாதிக்கப்படப்போவது மக்கள்தான்.

 போருக்கு எதிரான குரல் தொடரவேண்டும்.

---0---

 

 

No comments: