எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -05 “ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் நான்காம் அத்தியாயம் முருகபூபதி

 


பேர்த்தில்…. உமக்கு வேலை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் சந்திரன். இன்றைக்கு டிலக்ஸ்ஸில் அல்லது அன்ஸட் பயணியரில் உமக்கு சீட் புக்பண்ணுவோம்.  “

 பாலேந்திரா சொல்வதை அருகே அமர்ந்து கதை கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்தான் சந்திரன்.

 “ இன்றைக்கு வேலை இல்லையா..? “

 “ இங்கே எமக்கு மாதத்தில் ஒருநாள்  ‘ ரொஸ்டர் டே    என்று விடுமுறை தருவார்கள். அதனை எப்போதும் எடுக்கலாம். இன்றைக்கு எனக்கு நிறைய அலுவல்கள், பேங்க் லோன்… வீட்டின் மோட்கேஜ் தவணைப்பணம், கார் இன்ஸுரன்ஸ்… யுனிவர்சிட்டியில் ஒரு கோர்ஸுக்காக விண்ணப்பம்… இப்படி… அதோடு உமக்கும் மெல்பன் போவதற்கு பஸ்ஸில் சீட் புக் பண்ணிவிடலாம் என்று பார்க்கிறன். 

 “ உங்கட மிஸிஸுக்கு இன்றைக்கு வேலையாக்கும்…? “

   ஓமோம்… சந்திரன்… சொல்ல மறந்திட்டன்.  நேற்று… வசந்தி அப்படி கத்தியதை இப்பவும் மனசில் வைத்திருக்கிறீரோ…? “  சிக்னலுக்கு


முன்னே காரை நிறுத்தி, ஸ்டியரிங்கில் இரண்டு கைகளையும் முழங்கை வரையில் பதிந்து நெஞ்சையும் முகத்தையும் முன்னெடுத்து, முகத்தை திருப்பிக்கேட்டார் பாலேந்திரா.

 “இல்லை… இல்லை… எனக்குப்புரிந்தது 

 “வெரி குட் 

கார் மீண்டும் புறப்பட்டபோது, சந்திரன் சொன்னான்:   “என்னை நீங்கள் இருவரும் மன்னிக்கவேண்டும் 

 “ ஏன்…?   “ பாலேந்திரா சற்று உரத்த தொனியிலேயே கேட்டார்.

 “ வந்து… என்ர தம்பியும்… அந்த  ‘ஒப்பரேஷன்  ‘ ல ஒருத்தனாய் இருக்கவேண்டும் 

  ஓ…  ஐ ஸீ… அதனாலென்ன சந்திரன்…?  நடந்தது நடந்துபோய்விட்டது. இனி அதைப்பற்றி பேசிப்பயனில்லை.  உம்மட தம்பியும் அதில் ஒருத்தன்தான் என்பதை வசந்தி இப்போது அறிந்தாலும் கோபப்படமாட்டாள். 

 “அப்படியென்றால்….?! 

 “ சும்மா ஒரு பெருமூச்சுத்தான் விடுவா….” 

 “ நான் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். இரண்டு மூன்று நாட்களாக உங்கள் வீட்டில் உப்பைத் தின்றுகொண்டு, அந்த உண்மையை மறைக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. 

 “ ஊரில் நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறீர் போலத் தெரியுது…..”  பாலேந்திரா சிரித்துக்கொண்டே கேட்டு அவனது உணர்வை அடக்கினார்.

 அன்ஸட் பயணியர்  அலுவலகத்தில் சந்திரனுக்காக ஒரு ஆசனத்தை பதிவுசெய்துவிட்டு திரும்பும்போது,  “ இன்றைக்கு இரவுக்கு அந்தப்புலவரின்ட ரெலிபோன் இலக்கத்தையும் அட்ரஸையும் தாரன். பிறகு ஞாபகப்படுத்தும்.  “ என்றார் பாலேந்திரா.

 “ புலவரா…? யார்…?  

 “ வசந்தி சொல்லவில்லையா…? உம்மை நாங்கள் நாளைக்கு மெல்பனுக்கு அந்தப்புலவரிட்டத்தான் அனுப்பப் போகிறோம். வசந்தி


அவருக்கு  ‘ சடையப்ப வள்ளல்  ‘ என்றும் பெயர் சூட்டித்தான் அனுப்பினா. அவரும் உம்மைப்போல சாமிநாதனால் அனுப்பப்பட்டவர். பலதும் பத்தும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும்.  அந்த ஆள் போனபிறகு … எனக்கே ஒரு வார காலம் போரிங்காகத்தான் இருந்தது. நல்ல இன்டரஸ்டிங் கரெக்டர். தலைமுடி நிரம்ப. அதனால் சடையப்ப வள்ளல். 

பாலேந்திரா விபரிக்கும்போது, இன்னமும் முகம் பார்த்தறியாத அந்த நபரை, அரியாலையில், நல்லூரில், யாழ்ப்பாணத்தில், பல்கலைக்கழகத்தில்… யார்… யாருடைய முகங்களோடெல்லாம் ஒப்பிட்டுப்பார்க்க முனைந்தான் சந்திரன்.

வங்கி அலுவல், இன்ஸுரன்ஸ்.. இப்படி ஒவ்வொரு வேலைகளையும் துரித கதியில் கவனித்த பாலேந்திராவின் சுறுசுறுப்பு அவனுக்கு வெகுவாகப்பிடித்திருந்தது.

 “ நீங்கள் நாலாம் நம்பர்காரரா…?  “ என்று சந்திரன் கேட்டபோது,  "அந்தப்புலவரும் அவ்வாறுதான் கேட்டார்  “ என்றார் பாலேந்திரா.

   இல்லை… உங்கள் சுறுசுறுப்பு அவ்வாறு கேட்கவைத்தது.   

 “ பிறந்த திகதியின் கூட்டுத்தொகைதான் நான்கு. பிறந்ததோ பதினைந்தாம் திகதிதான். 

 “ நீங்கள் சொல்லும் புலவர், வயசானவரா…? சாத்திரம் எல்லாம் பார்ப்பவரா…?  

   இல்லை… இல்லை…. அப்படி ஒன்றும் இல்லை. அந்தக்கேஸும் ஒரு


நாலாம் நம்பர்தான். தியாகராஜ பாகவதர் நடித்த படத்தின் ஷுட்டிங்கில் தன் அப்பா லைட்போயாக இருந்து கீழே விழுந்து கால் முறிந்து, அண்ணி கொடுமையால் கள்ளத்தோணியில் புறப்பட்டது முதல், திம்பு பேச்சுவார்த்தைக்கு யார்… யார்… போனார்கள்… காந்தி,             ஹிட்லர் -  முசோலினி, ஃபிடல் காஷ்ரோ… என்ன என்ன செய்தார்கள்… சத்தியஜித்ரே முதல் பாலுமகேந்திரா வரையில் திரையுலக இயக்குநர்களின் திறமைகள்… இப்படி ஒன்றிலிருந்து ஒன்பதுக்குத் தாவி… கதை கதையாகச்  சொல்லும் அந்தச்சீவன். கேட்டுக்கொண்டிருக்கலாம். கவிதைகளும் எழுதியிருக்கிறதா சொன்னதாக ஞாபகம். வசந்தியக் கேளும்… மிச்சத்தை சொல்லுவா….  

பேர்த் நகரத்தை சுற்றியடித்து வலம்வந்து வீடு திரும்புகையில், நாளை இங்கிருந்து புறப்படப்போகிறோமே என்ற கவலை நெஞ்சை அடைத்தது சந்திரனுக்கு.

அதனால், பாலேந்திரா விபரித்த புலவரைப்பற்றி எதுவுமே தொடர்ந்து கேளாமல், புறப்படுவதற்கு முன்னர், வசந்தியுடன் எப்படியாவது தனியாக அமர்ந்து.. மனம்விட்டு பேசவேண்டுமென்ற துடிப்புடன் காத்திருந்தான்.

 “ நாளைக்கு புறப்பட்டுப்போயிடுவீர் என்பதனால் ஒரு மணித்தியாலம் முன்பதாகவே வந்திட்டேன். ஏன் தெரியுமா…?  “ கதவைத்திறந்துகொண்டு வந்ததும் வராததுமாகவே உற்சாகமாக பேசினாள் வசந்தி.

 “ ஏன்…? 

 “ இன்றைக்கு உமக்கு ஸ்பெஷல் ட்ரீட் தரப்போகிறோம். ஒவ்வொரு நாளும் அரையும் குறையுமாக கடுகு போட்டேனா, சீரகம் தூவினேனா என்பதே தெரியாமல் நான் சமைத்துக்கொட்டியதை சாப்பிட்டீர்.  அதனால், இன்றைக்கு ஸ்பெஷல் நூடில்ஸ்.. ஓ… கே… 

 “ எல்லாம் என்னுடைய ட்ரெயினிங்தான் சந்திரன்  “ பாலேந்திரா  வசந்தியை சீண்டினார்.

  ஓ… பெரிய ட்ரெயினிங்… நான் ஃபுளு வந்து மூன்றுநாள் படுக்கையில் கிடந்தபோது, சிக்கன் கறிக்கு சீரகம் போடுவதற்குப்பதில், தேயிலைத்தூளை கொட்டிய மகாராஜா அல்லவா நீங்கள் 

 “ ரொயிலட் ரிஸுவை ஐஸ்கிறீம் கன்டேயினருடன் ஃபிறிட்ஜில் டீஃபிறீஸருக்குள் வைத்த மகா ராசாத்தியல்லவா நீங்கள்… 

மூவரும் அட்டகாசமாகச் சிரித்தனர்.

வசந்தியின் கண்களில் நீர் துளிர்த்தது.

சிரிப்பு அடங்க சில நிமிடங்களாயிற்று.

இந்த இளம் தம்பதியின் குறும்புகளுக்கும் அவர்களின் ஓய்வற்ற இயந்திர கதியிலான வாழ்க்கை ஓட்டத்தில் வீசும் வசந்தத்தின் மத்தியிலும்  ‘ கட்டப்பிராய்  ‘ சோகத்தை எப்படி பகிர்ந்துகொள்வது..?

வேண்டாம்…. வேண்டாம்… வசந்தியின் உள்மனதில் உறங்கியிருக்கும் அவள் தம்பியை தட்டி எழுப்பவேண்டாம்.. அவன் அங்கே நிம்மதியாக உறங்கட்டும்.

அவுஸ்திரேலியா பழங்குடி மக்களான அபோர்ஜனிஸின் வாழ்க்கையிலிருந்து ஆரம்பித்து, எந்தெந்த மாநிலத்தில் ஆசிய நாட்டவர்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் பேசப்படுவது வரையில் அவுஸ்திரேலியாவின் கதையில் கால்வாசியை சுவையாகச்சொல்லிக்கொண்டிருந்தார் பாலேந்திரா.

 “ சந்திரன்… முதலில் மெல்பனில் வேலையைத் தேடிக்கொள்ளும்.    ‘ வேர்க் பேர்மிட்டு  ‘ க்கு ட்ரைபண்ணும். அவர் சடையப்ப வள்ளல் உதவிசெய்வார்.   “ வசந்தி குறுக்கிட்டுச்சொன்னாள்.

 “ ஏனப்பா அப்படிச் சொல்லுறீர்…?  அந்த ஆள் இப்ப மெல்பனில் முடியை வெட்டியிருக்கும். சந்திரன், நீர் செல்லும் அன்ஸட் பயணியர்,  நாளன்றைக்கு அடிலைட் என்ற ஊருக்கு பின்னேரம் போயிடும். போய்ச்சேர்ந்தவுடனே, சில சமயம் பஸ்ஸை மாற்றுவாங்கள்.  அந்த பிரேக்கில் அவருக்கு ஒரு கோல் எடுத்துச்சொல்லும்… நல்லவேளை ஞாபகம் வந்தது…. “

பாலேந்திரா எழுந்து சென்று டெலிபோனுக்கு அருகே இருந்த கொப்பியிலிருந்து இலக்கத்தையும் முகவரியையும் எழுதிக்கொண்டுவந்து கொடுத்தார்.

 “ மிஸ்டர் நடராஜன்.  “ பெயரை உச்சரித்துவிட்டு, பாலேந்திராவின் முகத்தைப்பார்க்கிறான் சந்திரன்.

 “ அவரை ஊரில் ராஜன் என்றுதான் அழைப்பார்களாம். பிற்காலத்தில் பல இடங்களுக்கும் ஆசாமி நடந்து திரியும் என நினைத்தோ என்னவோ அப்படி பெயர் வைத்திருக்கிறார்கள்.  “ பாலேந்திரா சிரிக்கிறார்.

 “ ஏன் அப்படிச்சொல்கிறீங்க…?  

 “ ஆளின்ட கதைகளைக்கேட்டால், அப்படித்தான் சொல்லத்தோன்றும்.  போய்ப்பாரும்.  உமக்கு நல்ல கம்பனி கிடைத்த மாதிரித்தான்.  

வசந்தியினதும் பாலேந்திராவினதும் சகோதர வாஞ்சையுடனான உபசரிப்பில் நான்கு நாட்கள் திளைத்திருந்துவிட்டு, நாளை புறப்படும்போதாவது,  மனதுக்குள் வெந்துகொண்டிருக்கும்  ‘ கட்டைப்பிராய்  ‘ சோகத்தை வசந்தியிடம் கக்கிவிட நினைக்கிறான் சந்திரன்.

எப்படி ஆரம்பிப்பது…? எப்படி முடிப்பது…? நாளை தன்னை பஸ்ஸிற்கு அழைத்துச்செல்லவிருப்பது வசந்தியென அறிந்ததும்,  மனதுக்கு ஒருபுறம் சுகமாகவும் மறுபுறம் சங்கடமாகவும் இருக்கிறது.

யார்… யாரை எங்கெங்கே சந்தித்து பின்னர் எங்கெங்கே பிரிவோம்…? இந்த வினாவுக்கு விடைகூறமுடியாமல், இழையோடும் விந்தையில் செறிந்துள்ள இன்பத்தையும் துன்பத்தையும் மனிதநேயம் மிக்கவர்களிடம்தானே அனுபவிக்க முடியும்.

இவர்கள் யார்…? நான் யார்…? ஏன், எதற்கு சந்திக்கின்றோம்…? இந்த சந்திப்பு ஒரு தொடர்கதையாகிவிடுமா…? அல்லது, ரயில் – பஸ் பயணங்களில் நேரம் பார்ப்பதற்கும் பேச்சுத்துணைக்கும் அருகே அமர்ந்து இறங்கவேண்டிய இடம் வந்ததும்  ‘ குட்பை  ‘ சொல்லி பிரிந்துவிடும் சில மணிநேர உறவுகளைப்போன்று முற்றுப்பெறும் சிறுகதையாகிவிடுமா…?

இவ்விதம் கடந்த காலங்களில கிட்டிய உறவுகளையும் நட்புகளையும் இரைமீட்டிப்பார்க்கிறான் சந்திரன்.

  *    *    *     *    *     *   *   *   *

பாலேந்திரா காலையிலேயே முதலில் எழுந்து, “ Wish you good luck “ சொல்லி, கை குலுக்கி விடைபெற்றுக்கொண்டார்.

 

வசந்தி தேநீர் தயாரித்துக்கொண்டுவந்து கொடுத்தாள்.

 

அதனை வாங்கிப்பருகும்போது நேருக்கு நேர் அவளது முகத்தை பார்க்கத் தயங்கியவனாக, அடுத்து எதனை பேக்கில் வைப்பது என்ற கவனத்தில் சந்திரன் இருந்தான்.

 

 “ ஏழரை மணிக்கு பஸ் புறப்படும். கெதியா புறப்படும்.  “ வசந்தி, அவனது பதிலையும் எதிர்பார்க்காமல் தயாரானாள்.

 

வசந்தியின் காரில் புறப்பட்டு, அன்சட் பயணியர் பஸ் தரிப்பிடத்திற்கு வந்து சேர பதினைந்து நிமிடங்கள் கரைந்துவிட்டன.

 

இவ்வளவு நேரமும் சந்திரனின் மனம் பரபரத்துக்கொண்டிருந்ததே தவிர, அவளிடம் சொல்ல நினைத்ததை, சொல்ல விரும்பியதை  சந்திரன் சொல்லவில்லை.  காரைவிட்டு இறங்கினான்.

 

இதுவிடயத்தில் ஒரு பெண்ணிடம் தனக்கு நேர்ந்த இயலாமைக்கு வெட்கப்பட்டான்.

வசந்தியே அவனிடம் டிக்கட்டை  வாங்கிச்சென்று ஓகே செய்துகொண்டு வந்தாள்.

 

ஒவ்வொரு பயணிகளதும் உடைமைகள்  ‘ஆ ‘ வென வாய்பிளந்து நிற்கும் பஸ்ஸின் பெரிய டிக்கிக்குள் திணிக்கப்பட்டு ஒவ்வொருவராக ஏறிக்கொண்டிருக்கின்றனர்.


     சரி… சந்திரன்… சந்தோஷமாகப் போயிட்டு வாரும் என்ன…?   “ வசந்தி முகத்தில் புன்னகை தேக்கி கையசைத்து விடைகொடுத்தபோது, சந்திரனுக்கு தொண்டை அடைத்தது.  உதடுகள் துடித்தன.

 

இரண்டு   கரங்களையும் ஒருங்குசேர்த்து கூப்பி,                                      “ உங்களை அக்கா … என்று கூப்பிடலாமா…?   “ எனக்கேட்டான்.

 

இந்த எதிர்பாராத கேள்வியை வசந்தி சாதாரணமாகவே எடுத்துக்கொண்டு, அவன் கரங்களை பொத்திப்பிடித்து,  “தாராளமாக… நோ… எமோர்ஷன் பிள்ளாய்… போயிட்டு வாரும். குட் லக்…  “ என்றாள் வசந்தி.

 

சந்திரன், மனச்சுமையுடன் அன்ஸட் பயணியரில் ஏறினான்.

 

( காலமும் கணங்களும் நெடுங்கதை முற்றிற்று )

 

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

No comments: