எழுபது வருட கலைப் பயணத்துக்காக சௌகாருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது

 Thursday, January 27, 2022 - 6:00am

நடிகையாக வரும் போதே மூன்று மாத கைகுழந்தையுடன் நடிக்க வந்தவர், திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்த சௌகார் ஜானகி. தற்போது 92 வயதாகும் சௌகார் ஜானகிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. திரையுலகில் 70 ஆண்டுகாலம் நடித்து வரும் நடிகை என்னும் பெருமையுடன் கடந்த மாதம் தனது 92 வது வயதில் அடியெடுத்து வைத்தார் சௌகார் ஜானகி.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு பாத்திரங்களை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழகத்தின் 3 முதல்வர்களுடன் கலைப்பயணத்தில் இணைந்தவர் அவர். கருணாநிதி கதை வசனத்தில் 'குலக்கொழுந்து' படத்தில் நடித்துள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆருடன் நடித்துள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர் என்.டி.ஆருடன் நடித்துள்ளார். என்.டி.ஆரின் முதல் கதாநாயகியே சௌகார் ஜானகிதான்.

தென்னிந்தியாவின் அப்போதைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் உள்ளிட்ட அனைவருடனும் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழில் பாவேந்தர் பாரதிதாசன் வசனம் எழுதிய 'வளையாபதி' படத்தில் அவரது வசனத்தை பேசி நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் 'குமுதம்' படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

நடிகை சௌகார் ஜானகி கடந்த மாதம் 12 ஆம் திகதி தனது 92 வது பிறந்தநாளை கொண்டாடினார். 1931 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்த அவர், தனது 15 வயதில் 'ஓல் இந்தியா ரேடியோவில்' அறிவிப்பாளராக பணியாற்றினார். அவரது குரலைக் கேட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அவரை திரைப்படத்தில் நடிக்க அணுகிய போது அவரது குடும்பத்தார் மறுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

ஒரே ஆண்டில் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை வாட்டியது. கணவரிடம் நிலையைச் சொல்லி அதே தயாரிப்பாளர் வி.என்.ரெட்டி வீட்டு வாசல் கதவை கைக்குழந்தையுடன் தட்டினார் சௌகார் ஜானகி. 'கைக்குழந்தை, திருமணமாகிவிட்டது, சாத்தியமே இல்லையம்மா' என தயாரிப்பாளர் சொல்ல, குடும்ப நிலையை கூறியுள்ளார் சௌகார் ஜானகி.

தயாரிப்பாளர் அவர் தம்பி எடுக்கும் படத்திற்கு அவரை சிபாரிசு செய்ய, நடிகர் என்.டி.ஆர் நடித்த 'சௌகார்' படத்தில் அறிமுகமானார். 'சௌகார்' படம் 1947 ஆம் ஆண்டு வெளியானது. என்.டி.ஆரின் முதல் ஹீரோயினும் சௌகார் ஜானகிதான்.

பின்னர் தமிழில் ஜெமினி நிறுவன படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை வழங்க காரணமாக இருந்தவர் ஜெமினி கணேசன். அவர் தமிழில் நடித்த படங்கள் மிகவும் பிரபலமானவை. வித்தியாசமான பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். குமுதம், மோட்டார் சுந்தரம்பிள்ளை, உயர்ந்த மனிதன், பாபு, புதிய பறவை, எம்.ஜிஆருடன் என் கடமை, ஒளிவிளக்கு, ஜெமினியுடன் மாலையிட்ட மங்கை, காவியத்தலைவி, இருகோடுகள் உள்ளிட்ட படங்கள் பிரபலமானவை. கே.பாலச்சந்தரின் முதல் படமான நீர்க்குமிழியின் கதாநாயகி அவர். தொடர்ந்து எதிர்நீச்சல், பாமா விஜயம், ரஜினியின் தாயாராக தில்லு முல்லு, கமலுடன் சிறிய வயதாக இருக்கும் போதே பார்த்தால் பசி தீரும் உள்ளிட்ட படங்கள் என 70 ஆண்டு காலம் பேர் சொல்லும் பல படங்களில் நடித்துள்ளார்.

அனைத்துவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார் சௌகார் ஜானகி.

இந்திய குடியரசு தினமான நேற்று அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.   நன்றி தினகரன் 

No comments: