உலகச் செய்திகள்

 ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

வட கொரியா மேலும் இரு ஏவுகணை வீச்சு

சிரிய சிறையை கைப்பற்றிய 250 ஐ.எஸ் குழுவினர் சரண்

 புடின் மீது தடை அமெரிக்கா கடும் எச்சரிக்கை

புர்கினா பாசோ ஜனாதிபதி இராணுவத்தினரால் சிறை

திருட்டால் முறிந்த உறவை மீட்டது சவூதி - தாய்லாந்து



ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு தொடுக்கக் கூடும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதை தடை செய்வது குறித்த ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் பதற்றத்தை தணிப்பதற்கான ரஷ்யாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளார்.

நேட்டோவுடன் ஒருங்கிணைந்து பிளின்கன் வழங்கி இருக்கும் பதிலை பரிசீலித்து தமது நாடு பதிலளிக்கும் என்று ரஷ்ய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் ரஷ்யா கோரிக்கைகளை விடுத்திருந்தது. இதில் உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகள் அந்தக் கூட்டணியில் இணையும் சாத்தியத்தை நிராகரிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரி இருந்தது.

இந்நிலையில் உக்ரைன் எல்லையை ஒட்டி ரஷ்யா அண்மைய வாரங்களில் படைகளை குவித்திருப்பது மேற்கு நாடுகளின் கவலைக்கு காரணமாகியுள்ளது. ரஷ்யா ஆக்கிரமிப்பு ஒன்றுக்கு தயாராவதாக கூறப்பட்டபோதும் அதனை ரஷ்யா மறுத்துள்ளது.   நன்றி தினகரன் 




வட கொரியா மேலும் இரு ஏவுகணை வீச்சு

வட கொரியா நேற்று இரு குறுகிய தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை கடலை நோக்கி செலுத்தி இருப்பதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன.

வட கொரியா இந்த மாதத்தில் மேற்கொள்ளும் ஆறாவது ஏவுகணை சோதனையாக இது உள்ளது. நேற்று பாய்ச்சப்பட்டவை, புவியீர்ப்பு ஏவுகணைகளாக இருக்கலாம் என்று அவற்றைக் கண்காணித்த தென் கொரியா கூறுகிறது.

கிழக்குக் கடலில் விழுவதற்கு முன்னர், ஏவுகணைகள் 20 கிலோமீற்றர் உயரத்தில் 190 கிலோமீற்றர் தூரம் பறந்ததாகத் தெரியவந்துள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பான் கூறியது. வட கொரியா கடந்த வாரம் க்ரூஸ் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் இரு ஏவுகணைகளை வீசியதோடு, கடந்த ஜனவரி 14 மற்றும் 17 ஆம் திகதிகளில் பலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்தது. முன்னதாக ஜனவரி 5 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று கூறப்பட்ட ஏவுகணைகளை பாய்ச்சியது.   நன்றி தினகரன் 




சிரிய சிறையை கைப்பற்றிய 250 ஐ.எஸ் குழுவினர் சரண்

சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவினால் கைப்பற்றப்பட்டிருக்கும் சிறையில் உள்ள மேலும் 250 போராளிகள் சரணடைந்ததாக அந்த சிறையை விடுவிக்க போராடும் குர்திஷ் தலைமையிலான படை தெரிவித்துள்ளது.

வட கிழக்கு நகரான ஹசகாவில் உள்ள இந்த சிறைக்குள் சிரிய ஜனநாயகப் படை கொமாண்டோக்கள் கடந்த திங்கட்கிழமை நுழைந்த நிலையில் குறைந்தது 300 பேர் சரணடைந்தனர். சிறைக்குள் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இருப்பதோடு சிறைக் காவலர்கள் தொடர்ந்தும் பிணைக்கைதிகளாக உள்ளனர். ஐ.எஸ் உறுப்பினர்களை தடுத்து வைத்திருக்கும் இந்த சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் முயற்சியாக கடந்த வாரம் ஐ.எஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களில் 114 ஐ.எஸ் சந்தேக நபர்கள் உட்பட 160க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மோதல்களில் இருந்து தப்புவதற்கு ஹசகாவின் 45,000 வரையான குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 




புடின் மீது தடை அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் செயல்பாடு உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேநேரம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தமக்கு இல்லை என ரஷ்யா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, உக்ரைனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வொஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதியிடம் ரஷ்ய ஜனாதிபதி மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பைடன், 'ஆம்' என்று பதிலளித்தார். மேலும் புடின் அப்படி தாக்குதல் நடத்தினால் அதை செய்வதைப் பரிசீலிப்போம் என்று பைடன் தெரிவித்தார்.

அதேசமயம், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்பும் திட்டம் குறித்து தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை தற்போதைய பதற்றம் குறித்து ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டு இராஜதந்திரிகள் பாரிஸ் நகரில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு உக்ரைனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றியபோது, தெற்கு உக்ரைனில் உள்ள கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. அப்போதிருந்து, உக்ரைனின் இராணுவம் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது.  நன்றி தினகரன் 





புர்கினா பாசோ ஜனாதிபதி இராணுவத்தினரால் சிறை

புர்கினா பாசோவில் கலகத்தில் ஈடுபட்டிருக்கும் படையினரால் அந்நாட்டு ஜனாதிபதி ரொச் கபோரே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இராணுவத் தளபதிகளை நீக்கும்படியும் இஸ்லாமியவாத போராளிகளுக்கு எதிராக போராடுவதற்கு மேலும் வளங்களை தரும்படியும் சில துருப்புகள் கோரி வருகின்றன.

தலைநகர் அவுகடுகுவில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் இராணுவ முகாம்களில் கடந்த ஞாயிறு இரவு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இராணுவ சதிப்புரட்சி ஒன்று பற்றிய கூற்றை மறுத்திருக்கும் அரசு ஜனாதிபதி சிறைவைக்கப்பட்டதாக வெளியான செய்தியையும் மறுத்துள்ளது. எவ்வாறாயினும் கலகக்கார படையினரால் இராணுவ முகாம் ஒன்றில் ஜனாதிபதி கபோரே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச தொலைக்காட்சி தலைமையகங்களையும் படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

அரசு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில் படையினுருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கியுள்ளனர். சிலர் ஆளும் கட்சி தலைமையகத்தின் மீது தீ வைத்துள்ளனர்.

இராணுவ சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 வீரர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திலேயே தற்போதைய பதற்றம் ஏற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




திருட்டால் முறிந்த உறவை மீட்டது சவூதி - தாய்லாந்து

சவூதி அரேபியாவின் அரண்மனை ஒன்றில் இருந்து இரத்தினங்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புபட்டு கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் சீர்குலைந்திருந்த இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் அறிவிப்பை சவூதி மற்றும் தாய்லாந்து அரசுகள் வெளியிட்டுள்ளன.

சவூதி இளவரசர் ஒருவரின் வீட்டில் இருந்து 1989 ஆம் ஆண்டு தாய்லாந்தைச் சேர்ந்த துப்புரவு ஊழியர் கிரியங்கரி டெகமொங் 20 மில்லியன் டொலர் பெறுமதியான இரத்தினக் கற்களை திருடிய சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒசா சவூதிக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், 'இராஜதந்திர உறவுகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்' என்று இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதியுடன் உறவை எற்படுத்த தாய்லாந்து பல முறை முயன்றபோதும் திருட்டு தொடர்பான விசாரணையை குழப்பியதாக சவூதி தொடர்ந்து குற்றம்சாட்டியது.

இதன்போது திருட்டு குறித்த விசாரணையைத் தாய்லாந்து பொலிஸார் அரைகுறையாகச் செய்ததாகவும் மூத்த அதிகாரிகள் சிலர் இரத்தினங்கள் சிலவற்றை வைத்துக்கொண்டதாகவும் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியது.

1990 ஆம் ஆண்டில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சவூதி அரேபியா ஒரு வர்த்தகரை தாய்லந்திற்கு அனுப்பியது. இருப்பினும், அவர் காணாமல் போனார். அவர் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய சவூதி அரேபியா, ஐவர் மீது வழக்கு தொடுத்தது.

திருட்டில் சம்பந்தப்பட்ட தாய்லாந்து ஆடவருக்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2016 இல் அவர் துறவியானார்.

1989 மற்றும் 1990களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வருத்தத்தை வெளியிட்ட பிரயுத், புதிய ஆதாரங்கள் கிடைத்தால் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.   நன்றி தினகரன் 


No comments: