மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் 2022 ம் ஆண்டிற்கான தமிழ் கல்விச் செயற்பாடுகள்மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் தனது 2022 ம் ஆண்டிற்கான  கல்விச் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 05/02/2022 சனிக்கிழமை முதல்  திறக்கப்படுகின்றது. இந்த ஆண்டும் மழலையர் முதல் வளர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வழமைபோல தொடர்ந்தும் மாலை 2 மணிமுதல் 4.30 மணிவரை நடைபெற உள்ளது எனவும், புதிதாகச்  சேர்ந்துகொள்ள விரும்பும் மாணவர்களும் தங்களுக்கான  வகுப்பு அனுமதியினை 05/02/2022 முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 தமிழ்மொழிக் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டின் ஊடாக கற்கும் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணரும் அதேவேளை,   தமிழர் பண்பாடு,  கலாசாரம், விழுமியங்கள் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்  என்பவையும் செயற்பாடுகள் மூலமாக மாணவர்களுக்குப்  பயிற்றுவிக்கப்படுகின்றது என பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றது. மேலும் கடந்த காலங்களில் மாணவர்களுக்கான நேரடி வகுப்பறைக்  கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் தடைப்பட்ட வேளையில் இணைய  மூலமாக வகுப்புகள் நாடாத்தப் பட்டதாகவும். அதற்காக ஆசிரியர்களுக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கி அவர்களுக்கான தொழில்நுட்ப அறிவும் வழங்கிப் பயிற்றப் பட்டுள்ளனர் எனவும், தமது கல்வி நிலையம் எந்த ஒரு நிலையிலும் அதாவது நேரடி வகுப்பறைச்  செயற்பாடு அல்லது இணையவழிக் கல்விச்  செயற்பாடு ஊடாக தொடந்து இயங்கத்  தயார்ப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 


வகுப்பறைக் கல்விச் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக வழமைபோல இந்த ஆண்டும் பொங்கல் விழா, குடும்ப குதுகல நாள், பேச்சுப்போட்டி, கலைவிழா, வாணிவிழா, ஒளிவிழாவும் பரிசளிப்பு விழாவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்ற ஆண்டு கலைவிழா நாட்டு நிலை காரணமாக நடத்தப்படாத அதேவேளை, ஏனைய நிகழ்வுகள் யாவும் சிறப்புற நடாத்தி முடிக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு சிறப்பான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக கல்வி நிலைய விதிகளுக்கு அமைவாக புதிய பள்ளி நிர்வாகம் அமைக்கப்பட்டு,  குழுவின் தலைவராக சசிசுதன் சுந்தரலிங்கம், செயலராக குலசேகரம் முரளீதரன் மற்றும் அதிபராக கொலின்தேவராஜா சதீஸ்கரன் ஆகியோர் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். இத்துடன் வீரியமான செயற்பாட்டிற்காக கல்வி, கலை, ஆகிய குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டும் வழமைபோல சிறப்பான தமிழ்க்  கல்வியினை மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையம்  வழங்கும் என உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.

 No comments: