“எதுவரினும் தினமுன்னைப் பார்க்க வருவேன்! எனையணைத்து ஒருமுத்தம் தந்தாற் போதும்!”

   

பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.  

                                                                                                                                                     

                                                                                                      

நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டல்லவா? சென்ற வாரம் இடம்பெற்ற குலவிளக்குப் பிள்ளைகளே! சற்றுக் கேட்பீர்!  என்ற தலைப்பொடு எழுந்த கவிதை வயதில் மூத்த  பெற்றோரைத் தங்களின் காரியம் முடிந்தவுடன் - பணமிருந்தும் - தங்களொடு வைத்துப் பார்க்கும் வசதிகள் இருந்தும் - பெற்றோர்களின்; உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்காது மூத்தோர் இல்லங்களிலே சேர்த்து விடுவதைதயும் அங்கு அவர்கள் பிள்ளைகளினதும் பேரப்பிள்ளைகளினதும் அன்பிற்காக ஏங்குவதையும் சித்தரித்தது. 

இன்றைய கவிதை இறுதிவரை உண்மையான அன்பொடு செயற்படும் அன்புப் பிள்ளைகளின் செந்தண்மையைச் சித்தரிக்கிறது. படித்தாற் புரியும். பண்புநிறை சோதரி ஒருவரின் மனதிலே எழுந்த யதார்த்தமான கருத்துகள் கவிதை உருவம் பெறுகின்றன!

 



 











பெற்றோரைத் தெய்வமெனத் துதித்து வாழும் திருமணமாகிய திருமகன் பெற்றோரின் ஆசியுடன்  சிட்னிக்குப் புலம்பெயர்ந்து ஆண்டுகள் இரண்டாகியது…..

 

 

குறைந்தவைப்புத் தொகையைமட்டும்  கட்டி விட்டுக்

   கோடிவிலை மதிப்புள்ள வீடு வாங்கி

நிறைந்திருக்கும் மலிவுவிற்பனைக் கடைகள்  பார்த்து

    நிலையில்லாப் பொருள்களாலே வீட்டை நிரப்பிப்

பறைசாற்றித் தங்கள்தம் செல்வச் செழிப்பைப்

   பலவிதமாய் விருந்தினர்க்குக் காட்டி மகிழ்ந்தான்!

இறைவாகேள்! இவனெடுத்த கடன்கள் அடைக்க

   இரவுபகல் உழைப்பினிலே வாழ்நாள் கழியும்.!

 

இதுவே புலம்பெயர்ந்த பலரின் யதார்த்த நிலை!

 

புலம்பெயர்ந்து புதுவாழ்வு தொடங்கிய நாள்முதல்

   புரிந்துணர்வு துணைநிற்கத் கணவன் மனைவி

வலம்வருவர் வேலைத்தலம் தவணை முறையில்

   வாங்கிவிட்ட கடனடைக்க இருவரும் கூடிக்

கலங்கிடாது சபதமிட்டு  மிச்சம் பிடிப்பர்

   காலையிலே நின்றபடி ஒருதுண்டு பாணைக்

கலக்கத்தொடு வேலைக்குப் பிந்திடு மேயெனக்

   கடித்தபடி காரியாலயம் காரிற் செல்வர்.

 

பணிமனையில் மதியவேளை சாப்பிடச் சென்றால்

   பக்குவமாய் விரைவுணவு கொண்டு பசியைத்

தணித்திடவே பட்டபாடு சொல்லப் போமோ?

   தாரமொடு வேலையாலே வீட்டிற்கு வந்தால்

அணியணியாய்ச் சனிக்கிழமை ஒருகிழ மைக்கென

   அருமையாய்ச் சமைத்துக்குளிர் ஊட்டியி லிட்ட

மணிமுத்துச் சிரிப்பழகி கறிகள் சிலதை

   வகுத்தெடுத்துச் சூடாக்கி வைத்த தோடு….

(‘விரைவுணவு’ - -- Fast Food)

 

அழுத்தச்சமை கலம்அதனில் அமுது பொங்கி

   அன்றொருநாள் குளிர்ஊட்டிதனிலே வைத்த

கொழுத்தகோழிக் கறிதனையுஞ் சேர்த்து  நன்றாய்க்

   குழைத்துண்ண இரவுவிருந் தரங்கே றுமங்கே! 

எழுந்தவுடன் இருந்துபணி செய்த தாலே

   ஏற்பட்ட கழைப்பெல்லாம் தீர நன்றாய்

முழுக்கப்பசி போகும்வரை உண்ட வுடனே

   மூடிவிழி உறக்கத்தை நாடி நிற்கும்.

 

 

அழுத்தச்சமை கலம்  Pressure Cooker

குளிர்ஊட்டி  Refrigerator

 

புலம்பெயர்ந்து இரு வருடங்கள் ஓடி மறைந்தன…..

இல்லத் தலைவன் அல்லது தலைமகன் வேலையாலே  வீடு திரும்பும் வரை இவீட்டில் உள்ள முதியவர்கள் அயலவருடன் எல்லை வேலிக் கிடுகு ஓலைகளைச் சற்றே  நீக்கிப் பேசுவதும் கோடிவளவுக்குள் நடப்பதுவும் ஆகப் பொழுது போகும் - முடியுமானவரை சிறு சிறு வேலைகளையும் செய்வார்கள் இது இயல்பு வாழ்க்கை !! ஆனால் அவர்கள் புலம்பெயர்ந்த பின்னர் இபுதிய சூழல் ஒரு செயற்கை வாழ்வை உருவாக்கி விடுகிறது

 

மணிவயிற்றை மனையாளும் வாய்க்கப் பெற்றாள்!

   மணமகனும் பெற்றோரைச் சிட்னிக் கழைத்தால்

துணிவாகப் பிரசவத்தை எதிர்கொள் வோமெனத்

   துரிதமாய்ச் செயற்பட்டு  வெற்றி கண்டான்!

பணிவான தலைமகனும் பாசப் பெற்றோர்

   பற்றதனை மதித்தவர்க்குக் குறைவைக் காது

தணியாத காதலுடன் புலம்பெ யர்ந்து

   தன்னில்லம் வந்தபெற்றோர் மகிழ வைத்தான்.

திருமாலின் மறுபிறப்போ ரன்ன ஆணும்

செந்திருவின் உருவம்போல்  செதுக்கிய பெண்ணும்

பெரும்பேறாய் அடுத்தடுத்துப் பெற்று மகிழ்ந்தான்!

பிரியமுடன் குழந்தைகளை உயிர்க்கு உயிராய்

அருந்தவமாய்க் கிடைத்ததெனத் தாத்தா பாட்டி

அன்புப்பால் ஊட்டிஊ ட்டி வளர்க்க லானார்

விருந்தாக மழலைச்சொல் தினமுங் கேட்டு

வியந்துமகிழ் வெய்திநின்றார் சொல்லப் போமோ?

 

 












பேரனுடன் மகிழ்ந்துவிளையாடும் தாத்தா!

கழைப்புடனே சோர்ந்துவரும் மகனை  அணைத்துக்

   கனிவோடு தலைநீவிக் கைகால் வருடி

இழைப்பாறிக் கைகாலை அலம்பி வாடா!

   இதமாகச் சுடச்சுடவே சமைத்த தெல்லாம்

குழைத்தேநான் என்கையாற் பிசைந்தே உனக்கும்

  குறைவைக்கா தெனைப்பார்க்கும் உன்றன் துணைக்கும்

தழைத்தோங்கி  எங்களன்பு வளர வேண்டிச்

   சாமிதனை வேண்டிநானும் ஊட்டவாஎன்பாள்.

 

சுடச் சுடப் புதிய புதிய கறிவகைகளுடன் தினமும் தாயின் அன்புப் பராமரிப்புத் தொடர்ந்தது….











Ngug; gps;isfSld; cy;yhrg; gazq;fSk;; njhlu;e;jd.. gRikahd ,dpa epidTfs;

தான் தடுத்தும் பல வேலைகளைத் தாயார் செய்துவந்தார். தனது குடும்பத்திற்காக இரண்டரை ஆண்டுகள் பெற்றோரின் பராமரிப்பு அருமையாக அமைந்ததை நினைந்து மனம் நெகி ந்தான் திருமகன்.   மூப்படையும் தனது பெற்றோரைக் கொண்டு வீட்டுவேலைகளைத் தொடர்ந்து செய்விக்க மகனின் அன்பு மனம் இடங்கொடுக்க மறுத்தது.

அவர்களை உல்லாசப் பயணிகளைப் போலப்பராமரிக்க என்ன செய்யலாம் எனத் தினமும் சிந்தனையில் ஆழ்ந்தான். குழந்தைகளைக் காலை முதல் மாலை வரை மழலைகள் காப்பகத்திலே சேர்க்க முடிவெடுத்தான்….

 

 

இரண்டரைவய தாகியதும் ஒவ்வொரு வராக

   எழில்பொங்கும் மழலைகள் காப்பகம்  தனிலே

புரண்டுஅழு வதையும்பொருட் படுத்தாது பெற்றோர்

   பொன்னனைய பிள்ளைகளைச் சேர்த்து விட்டுத்

திரண்டுவரும் விழிநீரைத் துடைத்த வண்ணம்

    தினம்நீவிர் செய்துவரும் வேலைகள் அதிகமே

மருண்டுவந்த மகனுந்தாய் மடியிற் சாய்ந்து

   மன்னித்தே விடுவீரென் முடிவுக் கென்றான்.

 

 

என்வேலைத் தலத்திலொரு உயர்ந்த பதவி

   இன்றுமுதல் கிடைத்ததுவே! ஏற்று விட்டேன்

அன்பா  உங்களொடு இனிமேற் றினமும்

   அளவளாவி மகிழநேரம் இருப்பது அரிதே

தென்பெல்லாம் குன்றிஇய லாமை யோடு

   தினமும்பேச் சுத்துணையும் இன்றி நீவிர்

தன்னந்தனி  யாய்ப்பகலில் தவிக்கும் நிலைமை

   தானாக வரக்கண்டு துடிக்கின் றேனே!

அயலவருடன் பேசிப் பழக முடியாது! -பண்பாடு வேறாக இருக்கும்! பேசும்மொழி வேறு! ---Hello,Good  Morning,   தற்கு மேல் பேச்சு நகர முடியாது………மகன்: -

பள்ளிசென்று திரும்பிவரும்   என்னருங்   குழந்தைகள்

   பசிக்கழைப்பால் உண்டதுமே தூங்கி விடுவர்

கள்ளத்தனம் செய்கின்றார் தமிழ் படிக்க!

   கலங்குகிறேன் காலந்தான் அவர்க ளுக்குத்

தெள்ளுதமிழ் படித்திடும்நன் மனநி லையைத்

   தெய்வத்தின் அருளாலே சேர்க்க வேண்டும்!

உள்ளத்தில் உங்களுக்கு உதிக்கும் தனிமை

   உண்மைநிலை போக்கவழி  உண்டே சொல்வீர்?”

வெகு விரைவிலேயே குழந்தைகளால் ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசமுடிந்தது. தமிழைப் படிக்க விரும்பாத குழந்தைகளைப் பார்த்துப் பாட்டி….

பாட்டி குழந்தைகளை அழைத்தபடி  ….

பாட்டிசொல்லை நீங்களென்றும் தட்டா தீர்கள்!

   பழையதமிழ் தாய்மொழியே படிக்க வாரீர்

வீட்டிலேநீர் பேசும்மொழி புரிய வில்லை

   வேதனைப்படு கின்றோமே! விளங்கு மட்டும்

காட்டிநாமும் தருகின்றோம் எழுத்தெ ழுத்தாய்

   கற்றிடுவீர் கன்னித்தமிழ்என்று  நானும் 

கேட்டுவிட்ட நாள்தொடங்கி எங்கள் பக்கம்

   கிட்டவரா தெட்டியெட்டி ஓடுவ தேனோ?”

 

 (சிட்னியிலே பல தமிழ்க் குடும்பங்களின் நிலைமை இது.)

 

திருமகனுக்கு வேலை உயர்வு கிடைத்ததைத் தொடர்ந்து    பெற்றோருடன் கூடுதலான நேரத்தைச் செலவழிக்க முடியாத நிலை! வீட்டிலே தமிழ் பேசாக் குழந்தைகள்! வீட்டுக் கடனை அடைக்க வேலைகள் பல செய்யும் மனைவி!

 

 

மகன் தாயிடம்:-

 

காலங்கள் நாம்நினைத்த படியே நின்று

   கருத்திற்கு ஏற்றபடி நன்மை தாரா!

கோலங்கள் மாறுதம்மா! குழந்தைகள் பள்ளியிற்

   கூடுதலாய் ஆங்கிலமாம் மொழியை நன்றாய்ச்

சாலங்கள் போடாது தாமாய்க் கூடிச்

   சரளமாகப் பேசிடவும் பழகி விட்டார்!

ஏலாது நாம்தமிழைப் படிக்க மாட்டோம்

   என்றடமும் பிடிக்கின்றார் நானென் செய்வேன்?.”

 

 

இந்தக் கட்டத்திலே எதிர்பாராத விதமாகச் சந்தித்த நண்பன் ஒரு யோசனையைச் சொன்னான்

 

நண்பன் கூறிய யோசனையைத் தாயிடம் பக்குவமாகத் திருமகனும் எடுத்துரைத்தான்.

]

 

 

இத்துணைநாள் எங்களுக்கு இயற்றிய சேவையை

   என்றும்நாம் போற்றுவதொடுன் இறுதி மூச்சோ

சத்தியமாய் என்மடியிற் போகவேண்  டுமெனச்   சங்கரனைத் தினம்வழுத்து கின்றேன் அம்மா!

பத்துமணத் தியாலங்கள் தனிமை போக்க

   பாசமிகு நண்பனென்றன் நிலைமை கண்டு

உத்தியொன்றைக் காதோரம் சொன்னான் அம்மா!

  உரைத்திடுவேன்! விருப்பமென்றாற் கூட்டிச் செல்வேன்.

கேட்பீர் அம்மா!... என்றான்

நண்பனவன் அன்புப்பெற் றோரும் மூத்தோர்

   நலம்பேணும்  இல்லத்தில்நனிசி றக்க

எண்ணியிரு ஆண்டுகளாய் வாழு கின்றார்

   இருபதுதமிழ்  மொழிபேசும் முதியோர் அங்கே

கண்ணனைய ஈழத்தில் காண்பது போலக்

    கலகங்கள்எதுவுமின்றிக் கலகலப் பாகப்

பெண்மைவிஞ்சும் விழுமியங்கள் மலரத் தமிழ்

   பேசித்தினம் கூடுவதைக் காட்டச் சொன்னான்.

 

 

விருப்பத்தைத் தெரிவித்த தாயிடம் திருமகனும்…..

செய்தியிதைத் தாயின்மனம் ஏற்கக் கண்டு

   செல்வமகன் யோசனையை விரித்துச் சொல்வான்

வெய்யில்வர முன்பேநான் உங்களை அங்கு

   விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடியும்!

ஐயிரண்டு மணத்தியாலம் அங்கே உள்ளோர்

   அரட்டை த்தமிழ்ப்  பேச்செல்லாம் அமுதம் ஆகும்

பையவேநான் வேலையாலே வருகின்ற வழியில்

   பழையபடி உங்களைநன் வீடுசேர்த் திடுவேன்!

மகன் சொன்ன முதியோர் இல்லத்தைக் காண விரும்பிய பெற்றோரை சில நாள்கள் அங்கு நடப்பதைப் பார்க்கும்படி அழைத்துச் சென்றான். தனது நண்பனின் பெற்றோரையும் அறிமுகஞ்செய்து வைத்தான்

தனயன்சொன உத்திதனைப் கேட்டு வியந்து

தம்பீநீ ஏனிதனை முன்பே சொல்லியென்

மனதிலெழும் உணர்வுகளைக் கேட்க வில்லை?

மகிழ்ந்தேநான்! நேற்றங்கு பலருடன் கூடி

இனந்தெரியாப் புதியசக்தி சேர்த்தேன் அப்பா!

இவர்களொடு எஞ்சியவெம் காலங் கழிக்க

ஏன்தான்எங் களுக்கிவற்றைக் காட்ட மறந்தாய்?

இற்றைநிலை கடக்கவேற்ற இடந்தான் இதுவே!

 

இரண்டு நாள்கள் சும்மா பார்க்கச் சென்ற திருமகனின் பெற்றோர்க்கு மூத்தோர் இல்லம் அவனின் இக்கட்டான நிலைமையைக் கடந்து செல்லஅருமையான இடமெனத் தோற்றிற்று…. தாங்கள் பெற்ற புது அனுபவங்களையும் தாய் மகனுடன் பகிர்ந்தாள்…….

அன்பு மகனே!

தமிழ்ப்பேச்சுப் போட்டிதனில் அப்பா வென்றார்!

   தரமான கவிதைசொல்லிப் பரிசை வென்றேன்!

அமிர்தமென அறுசுவைகள் போட்டி போட

   ஆசையொடு மதியமுண்டு மகிழ்ந்தோம்! மழையின்

துமிபட்டுத் தடிமனொருவர் பெற்றா ரென்றால்

   துறைபோந்த வைத்தியர்கள் குழுவும் உடனே

திமிதிமியென் றோடோடி வந்து தக்க

   சிகிச்சைதனை அளிக்கின்ற விந்தை கண்டேன்.

முதியோர் இல்லத்திலே தங்கள் தங்கள் பெற்றோர்களைச் சேர்த்துவிட்ட பிள்ளைகள் அடிக்கடி அன்போடு அவர்களை வந்து பார்த்துச் செல்வது   முதுமைக்கு கிடைக்கும் நல்ல ஒத்தடம் என்பதையும்  திருமகனின் பெற்றோர் நேரே கண்டார்கள் ! ஏற்றுக்கொண்டார்கள்!

அன்பு மகனே மேலும் கேளாய்!

 

இங்குதங்கும் மூத்தோரை அவரவர் பெற்ற

   இன்னரிய பிள்ளைகளோ மாறி மாறிப்

பங்கமேதும் ஏற்படாது வந்தே பார்த்துப்

   பாசத்தைப் பொழிகின்ற காட்சி கண்டு

தங்கமக்கள் அவர்களையோ   இந்தஇல் லத்தில்

   தவிக்கவிட வில்லையடா! ஈழ மண்ணில்

பொங்குநிறை மனத்துடனே வாழ்தல் போலப்

   பூரித்து வாழ்வதைப்போல் வாழச் செய்தார்!

 

பெற்றோரிடம்  பேச நேரமில்லாமல் ஓடித்திரியும் பிள்ளைகளையும் படிப்பிலும் தொலைபேசியிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கிப்போகும் இளைய தலைமுறையினரையும் பார்த்துக்கொண்டு வாழ்வதிலும் பார்க்க  தமது அன்புப் பிள்ளைகளின் பூரண விருப்பத்தொடு  தம் வயது ஒத்தவர்களோடு முதியோர் இல்லத்தில் மருத்துவ வசதியுடன் வாழ்வது இலகுவானது அல்லவா என்பதும் சரியாகவே படுகிறது!

 

 

கடைசிவரை நீயெம்மை மறக்க மாட்டாய்!

   கதைப்பதற்குத் தமிழ்தெரிந்தோர் அயலில் இல்லை!

கிடைத்தபேரர் எங்களுடன் தமிழ்பேசும் தொல்லை!

   கிரமமாக நீபார்க்க முடியா நிலைமை!

உடைத்திவற்றைச் சீர்செய்யும் ஒரேயொரு வழிதான் 

   உளம்மாறி வருந்திடாது இல்ல கத்தை

எடைபோடா தெமையங்கு இனிதே சேர்ப்பாய்!

   என்றுமெங்கள் உயிர்நீயே தயக்கம் வேண்டாம்!

 

தனது பெற்றேரின் முழு விருப்புடனே முதியோர் இல்லத்தில் அவர்களைச்  சேர்த்துவிட்ட திருமகன் தாயிடம்

இதுநானாய் எடுத்தமுடி வில்லை அம்மா!

    எப்படியோ உங்களுக்குப் பிடித்த படியால்

 பொதுவான காப்பகத்திற் சேர்த்து  விட்டேன்!

    பொழுதுபோக்க வழிகள்பல அங்கே உண்டு 

 புதுவாழ்வில் அமைதியொடு ஆரோக் கியமும்

    புத்துணர்வும் மேலோங்கி இன்பம் பெருகும்

 எதுவரினும் தினமுன்னைப் பார்க்க வருவேன்!

    எனையணைத்து ஒருமுத்தம் தந்தாற் போதும்!

அடுத்த நாள் முதல் ஒவ்வொரு மாலையும் திருமகன் பெற்றோரைப் பார்க்கச் சென்றுவருகிறான்

 

 












என்னே வாழ்க்கை! இரண்டும் கெட்டான் நிலையா?”



 









அன்பிற்;கும் உண்டோ அடைக்குந்தாழ்”……

No comments: