மாநிலம் வரலாறாய் ஆக்கியே மதிக்கும் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




பிணியும் மூப்பும் அணுகா முன்னம் 
தினை அளவாவது நல்லதைச் செய்வோம்
பிறப்பது புவியில் பெருமையே அல்ல
இறப்பது வரலாறாய் இருந்திட வேண்டும்  

நால்வர்கள் வந்தார் நல்வழி புகன்றார்
நாநிலம் நினைக்க நற்குரு ஆனார் 
சங்கரர் வந்தார் சடுதியாய் அகன்றார்
சரித்திர மாகி நின்கிறார் இன்று 

வள்ளுவர் வந்தார் வான்மறை தந்தார்
தெள்ளிதின் உணர்ந்திட  திறமெலாம் ஈந்தார்
நல்லதை நாநிலம் காணவே நினைத்தார்
நல்வர லாறாய் ஆகியே விட்டார் 

வீரத் துறவி வெளிச்சமாய் வந்தார்
பாரினைத் திரும்பப் பார்த்திட வைத்தார் 
துறவினைத் தூய்மை ஆக்கிட முனைந்தார்
தொண்டினைத் துலக்கியே சரித்திரம் ஆகினார் 

பாரதி வந்தான் பட்டெனப் போயினான் 
பாரனில் புதுமையை விதைத்துமே நின்றான்
வாழ்ந்ததோ குறைவு கொடுத்ததோ நிறைவு
பாரதி படைப்புகள் சரித்திரம் ஆகின 

சமயம் காக்கப் பலரும் பிறந்தார்
மொழியைப் பேணிட பிறந்தார் பலரும் 
வளத்தைக் காக்க விளைந்தார் பலரும்
மாநிலம் நினைத்திட வரலா றாகினார் 

வாழ்வதும் மடிவதும் மாநிலம் நிகழ்வது
பிறப்பதும் இறப்பதும் இயற்கையின் வசமே
வாழ்வினைப் பயனாய் ஆக்கிட முனைந்தால்
மாநிலம் வரலாறாய் ஆக்கியே மதிக்கும்  

No comments: