பாசம் - ஸ்வீட் சிக்ஸ்டி 1 - ச சுந்தரதாஸ்

.

1960 ஆண்டுகளின் ஆரம்பத்தில் தமிழ் திரையுலககின் உச்ச நடிகராக மாறி விட்ட மக்கள் திலகம் எம் ஜீ ஆர் சரித்திர கதைகளைக் கொண்ட படங்களில் நடிப்பதில் தனக்கிருந்த ஆர்வத்தை சற்று தளர்த்திக் கொண்டு சமூகக் கதைகளிலும் நடிக்க முன்வந்திருந்தார்ஆனால் சமூகக் கதைகளை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு ஒரு குழப்பம் இருந்தே வந்தது.பெரும்பாலும் தயாரிப்பாளர்,டைரக்டர் தெரிவு செய்யும் படங்களிலேயே நடித்து வந்தார். இவற்றில் பல படங்கள் தோல்வியே கண்டன.இந்த வரிசையில் எம் ஜீ ஆர் ரசிகர்களினால் நிராகரிக்கப் படங்களில் ஒன்றாக அமைந்த படம் தான் பாசம்.


பிரபல தயாரிப்பாளராகவும்,இயக்குனராகவும் திகழ்ந்த டி ஆர் ராமண்ணா எம் ஜீ ஆர் சிவாஜியின் நடிப்பில் 1954ம் ஆண்டு கூண்டுக்கிளி என்ற சமூகப் படத்தை தயாரித்தார்.இரண்டு நட்சத்திரங்கள் நடித்தும் படம் தோல்வி கண்டது. அதன் பின் எம் ஜீ ஆர் நடிப்பில் சரித்திரக் கதையான குலேபகாவலி வெற்றி படத்தை உருவாக்கினார்.பின்னர் புதுமைப்பித்தன் என்ற சரித்திரப் படத்தை டைரக்ட் செய்து அதுவும் சுமாரான வெற்றியை பெற்றது.இப்போது 62ம் ஆண்டு மீண்டும் எம் ஜீ ஆர் நடிப்பில் ஒரு சமூகக் கதையை உருவாக்க முன் வந்தார் ராமண்ணா.

தாய்க்கும் ,மகனுக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை கருவாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப் பட்டிருந்தது.தாய் சென்டிமென்டில் மிகுந்த நம்பிக்கை கொண்ட எம் ஜி ஆர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்.ஆனால் படத்தின் முடிவை ராமண்ணா சொன்னவுடன் அதிர்ந்து விட்டார் எம் ஜி ஆர்.படத்தின் முடிவை மாற்றும் படி ராமண்ணாவிடம் கேட்டுக் கொண்ட போதும் அவர் மறுத்து விட்டார்.இறுதியில் வேறு வழியின்றி ராமண்ணாவின் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிட்டார்.அதுவே படத்தின் வெற்றிக்கும் முடிவு கட்டியது.

அப்படி என்னத்தான் படத்தின் முடிவு வில்லங்கமானது! படத்தின் முடிவில் கதாநாயகன் எம் ஜி ஆர் இறப்பதாக கதையை அமைத்திருந்தார் கதாசிசியர் துறையூர் மூர்த்தி.அது மட்டுமன்றி தான் இறப்பதற்கு முன் தவறுதலாக தன தாயையே கதாநாயகன் சுட்டுக் கொன்று விடுவதாக வேறு கதையை அமைத்திருந்தார்.எம் ஜி ஆர் ரசிகர்களால் சற்றும் ஜீரணிக்க முடியாத இந்த முடிவுடன் படம் வெளிவந்து தயாரிப்பாளருக்கு பாசத்துக்கு பதில் மோசத்தையே பெற்று தந்தது.

எம் ஜி ஆரின் வழக்கமான கதா பாத்திரத்துக்கு மாறான பாத்திரம் இதில் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தும் முகம்,மீசை,அவ்வப்போது விரல் நகத்தை கடிப்பது,தடித்த ஆடை என்று எம் ஜி ஆருக்கு மேக்கப் போடப்பட்டிருந்தது.படம் முழுவதும் ஒரு துரதிர்ஷ்டசாலியாகவே அவர் வருகிறார்.வழமைக்கு மாறக ஒரு தலைப்பட்சமாக ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அதுவும் மறுக்கப்படுகிறது.தாய் தந்தை சகோதரனை பிரிந்தே வளர்கிறார் வாழ்கிறார் அவரை விரும்பும் பெண்ணையும் மணக்க மறுக்கிறார் கடைசி வரை தாய் அன்பிற்காகவே ஏங்குகிறார் மருகுகிறார் இவ்வாறு அமைந்த ஒரு கதையில் அதன் பிறகு எம் ஜி ஆர் நடித்ததே இல்லை.

படத்தில் எம் ஜி ஆரின் ஜோடி சரோஜாதேவி.தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார். மற்றைய கதாநாயகி ஷீலா.சகோதரனாக கல்யாணகுமாரும்,தாயக டீ ஆர் ராஜகுமாரியும், தந்தையாக எம் ஆர் ராதாவும் நடித்தனர்.இவர்களுடன் டீ ஆர் ராமசந்திரன், எஸ் என் லட்சுமி,அசோகன்,கொட்ட்டப்புளி ஜெயராமன்,சி கே சரஸ்வதி,என்னத்தே கன்னையா ஆகியோரும் நடித்தனர்.எம் ஆர் ராதா படத்தின் விறுவிறுப்பிற்கு துணை புரிந்தார்.டீ ஆர் ராஜகுமாரி அடக்கமாக அளவாக நடித்திருந்தார்.கல்யாணகுமார் ஷீலா ஜோடி ஈடுபட்டது.

இவர்கள் அனைவருக்கும் ஈடு கொடுத்து இயல்பாக அலட்டலின்றி எம் ஜ் ஆர் நடித்திருந்தார்.சில காட்சிகளில் முகபாவம் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.படத்தில் ஒரே ஒரு சண்டைக்கு காட்சிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.படத்தின் வசனங்களை துறையூர் மூர்த்தி அர்த்தத்துடன் எழுதியிருந்தார்.பிள்ளை பெற முடியாத பொண்ட்டி,ஓடாத சைக்கிள்,எதிர்த்து பேசும் வேலைக்காரன் இவங்களை கட்டிக்கிட்டு வாழவேண்டி இருக்கு என்று ராதா பேசும் வசனம் ரசிகர்களின் கரகோசத்தை பெற்றது.என் தங்கச்சியை கட்டிக்க கொள்பவன் அதிர்ஷ்டசாலியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை துரதிஷ்டசாலியாக இருக்கக் கூடாது என்று அசோகன் கூறுவது எம் ஜி ஆரின் பாத்திரத்தை உணர்த்தியது.எம் ஏ ரஹ்மான் படத்தினை ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படத்தின் பெரும் பலமாக அமைந்ததுபாடல்கள்தான்.கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணி அருமையாக அமைந்தது.எம் ஜி ஆர் அறிமுகமாகும் கட்சியில் ஒலிக்கும் “உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ” பாடல் டீ எம் எஸ் குரலில் கணீர் என்று ஒலித்தது.இது தவிர பால் வண்ணம் பருவம்கண்டு பாட்டில் பலவண்ணங்களை கண்ணதாசன் வர்ணித்திருந்தார்.மாலையும் இரவும் மயங்கிடும் ஒளியில்,ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒளி,தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது , உறவு சொல்ல ஒருவர் இன்றி வாழ்பவன்ஆகிய பாடல்கள் பெரு வரவேற்பை பெற்றன.பி பி ஸ்ரீனிவாஸ்,சுசிலா,ஜானகி ஆகியோர் பாடியிருந்தார்கள் .சௌந்தர்ராஜனுக்கு இதில் ஒரு பாட்டுதான்.

எம் ஜி ஆரை வைத்து வித்தியாசமான படத்தை எடுக்கிறேன் என்று கிளம்பி விஷப் பரிட்சையில் ஈடுபட்டதுதான் ராமண்ணா கண்ட மிச்சம்.ஆனாலும் எம் ஜி ஆரின் மாறுபட்ட படத்தை பார்க்க விரும்புவோருக்கு பாசம் ஒரு வாய்ப்பு!No comments: