என் பிரிய எழுத்தாளர் செங்கை ஆழியான் - கானா பிரபா

 என் வாசிப்பு உலகில் தாயாக விளங்கிய பெருமதிப்புக்குரிய


செங்கை ஆழியான் அவர்களது பிறந்த தினம் (ஜனவரி 25,1941) இன்றாகும்.

ஒரு தாய் தன் பிள்ளைக்குக் கெடுதல் தராத உணவைப் பார்த்துப் பார்த்துத் தன் கைப்பக்குவத்தில் சமைத்துக் கொடுத்தது போல செங்கை ஆழியானின் படைப்புகளைத் தேடி வாசித்த அவரின் தீவிர வாசகர்கள், அவரின் பன்முக எழுத்தாற்றலை ஈடு செய்யுமளவுக்கு இன்னொரு படைப்பாளியைக் காட்ட முடியாத வெறுமை நிலையை உணர்ந்து கொள்வர்.

ஈழத்து இலக்கிய உலகுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்தத் தமிழ் இலக்கியப் பரப்பில் செங்கை ஆழியான் அளவுக்குப் பன்முகப்பட்ட களத்தில் இலக்கியம் சமைத்தோரை என்னால் இனம் காட்ட முடியவில்லை.

தமிழ் இலக்கிய வாசகப் பரப்பில் நட்சத்திர அந்தஸ்த்தைச் சம்பாதித்த எழுத்தாளர் பலர் இருக்கிறார்கள். ஆனால் செங்கை ஆழியான் அளவுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நில்லாது ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களைப் பகைப்புலமாகக் கொண்ட நடைமுறை வாழ்வியல் நாவல்கள், சிறுகதைகள், வரலாற்றை அடியொற்றிய படைப்புகள் என்று தன் எல்லாவிதமான எழுத்துகளையும் அபிமானம் பெற வைத்த நட்சத்திர எழுத்தாளர் அரிது. அம்புலிமாமா, பாலமித்திரா போன்ற சிறுவர் புதினங்களில் இருந்து அடுத்த கட்டத்துக்கு என் வாசிப்பனுபவத்தை உயர்த்தி வைத்த செங்கை ஆழியானின் எழுத்துகள் அதையே அந்தமாக வைத்துக் கொள்ள உதவியது. என் பதினோராவது வயதில் எங்கள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில் பட்டது "கிடுகு வேலி" என்ற தலைப்போடு செங்கை ஆழியான் எழுதிய தொடர்கதை. அந்த இதழில் தான் முதல் அத்தியாயம். அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் என்ற வீறாப்பு இருந்ததால் மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடித்தேன். அட .. இவ்வளவு நாளும் நான் கண்டிராத ஒரு உலகுக்கு என்னை அழைத்துப் போகிறதே இந்த எழுத்து என்று அப்போது நினைத்துக் கொண்டேன். ஈழநாட்டில வந்த "கிடுகுவேலி" வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன். அன்று தொடங்கியது தான், செங்கை ஆழியானின் கதைகளைத் தேடி எடுத்துப் படிக்க முடிவுசெய்துகொண்டேன். நான் கல்வி கற்ற கொக்குவில் இந்துக்கல்லூரி நூலகத்தில் செங்கைஆழியானின் நாவல்கள் இருக்கும் அலமாரியைக் குத்தகைக்கு எடுத்தது போல, அவரின் நாவல் ஒவ்வொன்றிலும் இருக்கும் வெளிவந்த நூல் பட்டியலைக் குறித்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு நாள் நூலகத்தின் புத்தகச்சுரங்கத்திலே எனக்குக் கிடத்தது ஒரு பழைய சிறுகதைத்தொகுதி. 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ் மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட "விண்ணும் மண்ணும்" என்ற சிறுகதைத்தொகுதி தான் அது. யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தம் சிறுகதைகளைக் கொடுத்திருந்தார்கள்..பின்னாளில் அதில் எழுதிய அனைவருமே ஈழத்தின் இலக்கிய முன்னோடிகளாகத் தடம்பதிருந்தார்கள். நாவல் மூலம் எனக்கறியப்பட்ட செங்கை ஆழியான் நல்ல சிறுகதைகளையும் எழுதாமல் விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டிகொடுத்துவிட்டது அந்நூல்.

இப்பொது எனக்கு புதிதாக ஒரு பிரச்சனை. செங்கை ஆழியானின் நாவல்களை மட்டுமல்ல சிறுகதைகளையும் விடக்கூடாது எண்டு முடிவெடுத்துப் பள்ளிக்கூட நூலகத்தில இருந்த மல்லிகை போன்ற சஞ்சிகைகள் பக்கம் பாய்ந்தேன். நூலகராக இருந்த தனபாலசிங்கம் மாஸ்டர் எனக்குப் பெரிதும் கை கொடுத்தார். " பிரபாகர், மல்லிகை புதுசு வந்திருக்கு" என்று நூலக வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சொல்லிப்போட்டு ஏதோ ஒரு பெரிய கடமையை முடித்த திருப்தியில் போவார். வீரகேசரி பிரசுரம் வழியாக செங்கை ஆழியானின் மிக முக்கியமான நாவல்கள் எனக்குக் கல்லூரி நூலகத்தில் இருந்து கிடைத்தன. இருந்தாலும் அப்போது எனக்கிருந்த இலக்கு இவரின் எல்லாப் புததகங்களையும் படித்து முடிக்க வேணும் என்று. எப்படி இது சாத்தியம் என்று நான் நினைத்தபோது ஒருநாள் அதுவும் கைகூடியது இன்னொரு சந்தர்ப்பத்தில். எங்கள் வீட்டு அயலில் இர்ய்ந்த அண்ணா கோப்பி நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த மேகநாதன் என்ற இளைஞன் புத்தகப் பிரியன். ஒரு முறை அவரின் புத்தகக் கட்டை எட்டிப் பார்த்த போது கிடைத்தது செங்கை ஆழியானின் " இரவின் முடிவு" என்ற நாவல். மேகநாதனிடம் ஒப்பந்த அடிப்படையில் அவர் வேலை செய்யும் நேரத்தில் நான் புத்தகத்தைப் படித்து விட்டுத் திரும்பக் கொடுப்பது என்ற உடன்படிக்கையில் எனது பாடசாலை மூன்றாம் தவணை விடுமுறை காலத்தில் அப்போது "இரவின் முடிவு" நாவலைப் படித்து முடித்தேன். என்னுடைய நம்பகத்தன்மையைக் கண்ட மேகநாதன் தொடர்ந்து செங்கை ஆழியான் எழுதிய நாவல்களான பிரளயம், ஆச்சி பயணம் போகிறாள், காட்டாறு, யானை, ஓ அந்த அழகிய பழைய உலகம், கங்கைக்கரையோரம் , அக்கினிக்குஞ்சு என்று ஒவ்வொன்றாகத் தந்தார். சில நாட்களில் ஒரே மூச்சாக நான் முழு நாவலையும் படித்து முடித்துக் கொடுக்கும் போது வியப்பாகப் பார்ப்பான் அவன். பூபாலசிங்கம், சிறீலங்கா புத்தகசாலை என்று ஒருகாலத்தில் அலைந்து செங்கை ஆழியானின் சிறுகதை, கதை, கட்டுரை எனத்தேடியெடுத்து வாசித்தேன், திரும்பத்திரும்பச் சிலவேளை. ஒரு கட்டத்தில் அவரின் ஒரு சில கைக்கெட்டாத சில படைப்புக்கள் எனக்குக் கிடைக்காது, அவர் எழுதிய "பூமியின் கதை" உட்பட புவியியல் வரலாற்றுப் படைப்புக்களைப் படித்தேன். வேறெந்த எழுத்தாளனின் படைப்பையும் தொட்டுப்பார்க்க விரும்பாத காலம் அது. Error! Filename not specified. இப்போது நினைத்துப் பார்த்தாலும் என்ற இந்தச் செய்கை எனக்கு உள்ளூர வியப்பாக இருந்தாலும், நான் எந்த உசாத்துணையும் இன்றி இன்றும் நினைவில் வைத்திருந்து எழுதக் கூடிய அளவுக்கு செங்கை ஆழியானின் நாவல்களின் பின்னணி வார்ப்பும், பாத்திரங்களும் அமைந்திருக்கின்றன. ஆச்சி பயணம் போகிறாள் - யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப்பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது. யானை - ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை ஓ அந்த அழகிய பழைய உலகம் - ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரீகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தின்னும் கதைப்புலன். வாடைக்காற்று - நெடுந்தீவின் புவியியற்பின்னணியில் காதலும் மீனவரின் வாழ்வியலும் கலந்த கதை கிடுகுவேலி - புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப்பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக்காட்டுகின்றது. Error! Filename not specified.முற்றத்து ஒற்றைப் பனை - சோளகக்காற்றில் காலம் காலமாகப் பட்டம் விட்ட, இன்னும் விட ஆசைப்படுகின்ற ஒரு முதியவரின் மனவியலைக் காட்டுகின்றது. நடந்தாய் வாழி வழுக்கியாறு - வழுக்கியாறுப் பிரதேசத்தில் தொலைந்த தம் மாட்டைத்தேடுபவர்களின் கதை. கங்கைக்கரையோரம் - பேராதனை வளாகச் சூழலில் மையம் கொள்ளும் காதல் கதை. கொத்தியின் காதல் - கொத்தி என்ற பெண் பேய்க்கும் சுடலைமாடன் என்ற ஆண் பேய்க்கும் வரும் காதல், சாதி வெறி பிடித்த எறிமாடன் என்ற இன்னொரு பேயால் கலைகிறது. எமது சமூகத்தில் சாதிப்பேய் எப்படித் தலைவிரித்தாடுகிறது என்பதைக்காட்டும் கதை. சிரித்திரனில் தொடராக வந்து மாணிக்கம் பிரசுரமாக வெளிவந்தது.
கடல்கோட்டை - ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்துறை கடற்கோட்டையப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட அருமையான வரலாற்று நவீனம்.

தீம் தரிகிட தித்தோம் - 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவந்தபோது மலர்ந்த கற்பனைக்காதற் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்களச்சட்டவிவாதம் நடந்தபோது எடுக்கப்பட்ட குறிப்புக்களும் விவாதமும் காட்டபட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தமிழ்ப்பையனுக்கும் சிங்களபெண்ணுக்குமான காதற் களம் காட்டப்பட்டிருக்கும், நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்துபோகும்.
நான் இதுவரை இப்படியான இரண்டு வேறுபட்ட களத்தோடு பயணிக்கும் வேறொரு நாவலையும் படிக்கவில்லை. செம்பியன் செல்வன் ஆசிரியராக இருந்த அமிர்தகங்கையில் தொடராக வந்தது. 1986ஆம் ஆண்டு நல்லூர்திருவிழாவின் புத்தகக்கண்காட்சியில் இதைக்கண்டபோது ஐஸ்பழம் வாங்க வைத்த காசில் இதை வாங்கினேன்.

ஈழத்தின் பல்வேறு பகைப்புலங்களைத் தன் கதைக்களங்களில் கையாண்டதோடு, பொருத்தமான சூழலையும் தேர்வுசெய்து புவியியல் ரீதியான விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் தன் படைப்பு ஊடாக சமூகப்பார்வையினையும் வரலாற்றுத்தடங்களையும் காட்டுவது இவரின் சிறப்பம்சம். ஈழத்தின் பிரதேச வழக்கியல் பற்றிய விவரணமாகவும் இவை அமைகின்றன. இப்படி நான் முன் சொன்ன நாவல்கள் அனைத்தையுமுமே எந்த வித உசாத்துணையுமின்றி என்னால் நினைவுபடுத்தி எழுதமுடிந்ததை வைத்தே இவரின் எழுத்துக்கள் எப்படி என்னை ஆட்கொண்டன என்பது புரியும். நான் இதுவரை வாசிக்காத அவரின் படைப்புக்கள் ஒரு சிலவற்றையும் தாயகம் போகும் போதெல்லாம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிக் கொள்வேன். புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் சூழலில் வானொலிப் பணியிலும் என்னை ஈடுபடுத்தும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. எனது வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காகப் பத்து வருடங்களுக்கு முன்னர் செங்கை ஆழியான் அவர்களை அழைத்து அவரின் எழுத்துலகத்தை ஆதி முதற் தொட்டு 45 நிமிட வானொலிப் பேட்டி எடுத்துக் கொண்டேன். "எனக்கு நீங்கள் இன்னொரு வாய்ப்புக் தர வேண்டும்" என்று வானொலிப் பேட்டியின் முடிவில் அவர் கேட்டதும் அதற்கான சூழல் வாய்க்காததும் ஒரு புறமிருக்க, எனக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைத்தது. கடந்த ஜனவரி 2016 இல் எதிர்பாராத தாயகப் பயணம் கிடைத்த ஐந்து நாட்களுக்குள் தனிப்பட்ட வேலைகளுக்கும் மத்தியில் ஒரு நாள் செங்கை ஆழியான் வீடு தேடி இழுத்துச் செல்கிறது என் கால்கள். அன்று தான் அவரின் 75 வது பிறந்த தினம் என்பதை அவருக்கு முன்னால் பெரியதொரு கேக் பறை சாற்ற, அவரின் குடும்பத்தினர் மட்டும் பங்கு கொண்ட விழாவில் அவரின் ஆயுள் கால வாசகனாகிய நான் திடீர் விருந்தாளியாக. இந்தச் சந்திப்பில் அவரின் எழுத்துகளின் ரசிகன் என்று சொல்ல முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுர இருந்தாலும் அவரைச் சந்தித்த திருப்தி கிட்டியது. எங்களிடமிருந்து செங்கை ஆழியானைப் பிரிக்க முடியாத பந்தத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது அவர் கொடுத்த படைப்புகள். எங்கள் யுகம் கடந்த பின்னும் செங்கை ஆழியான் வாழ்வார். செங்கை ஆழியானின் படைப்புகள் குறித்து நான் முன்னர் எழுதிய, பகிர்ந்த இடுகைகள் வாடைக்காற்று

கிடுகுவேலி


சாம்பவி


சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு


யாழ்ப்பாணம் பாரீர்


ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்


நூலகம் தளத்தில் செங்கை ஆழியான் படைப்புகளை வாசிக்க

https://noolaham.org/ - செங்கை ஆழியான்


செங்கை ஆழியான் என்றும் நம்மோடு வாழ்வார்.

கானா பிரபா
25.01.2022

No comments: