காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாட சந்தர்ப்பம்
இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
தீவிரவாத, மதக்கருத்துக்களை ஒழிப்பதற்கான விதிமுறைகள்
யாழில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த படகு சேவை
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
ஜனவரி 28 முதல் மட்டக்களப்பு - கொழும்பு 'புலதுசி' கடுகதி ரயில் சேவை
2021 இன் சிறந்த இளம் எம்.பியாக சாணக்கியன் தெரிவு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாட சந்தர்ப்பம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்படும் என நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகினி ஹெட்டிஹே தெரிவித்துள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் வடமாகாணத்திற்கான நடமாடும் சேவையின் முதல் நாள் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) நடைபெற்றது.
இதன்போதுகாணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகள் மாவட்ட செயலகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவையில் ஈடுபட்ட நீதி அமைச்சின் கீழான உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகினி ஹெட்டிஹே உள்ளிட்ட நீதிச்சேவை ஆணைக்குழு அதிகாரிகள்,காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் அலுவலர்கள், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் அலுவலகர்கள் ஆகியோர் கலந்துரையாடியதுடன், அவர்களின் நோக்கம் மற்றும் செயற்றிட்டத்தினை தெளிவுபடுத்தியிருந்தனர்
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கும், அவர்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாகவும் கூறினர்.
இதற்கு பதில் அளித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த அரசே எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கியது. அவர்களிடம் இருந்து எமக்கான நீதி எவ்வாறு கிடைக்கும். இதுவரை அமைக்கப்பட்ட ஆணைக் குழுக்களுக்கும், விசாரணைகளுக்கும் என்ன நடந்தது?
மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் ஒரு போதும் நாம் பெற்றுக்கொள்ள மாட்டோம். அலுவலகம் வேண்டாம் என்கிறோம். நீங்கள் ஏன் அதனை எமக்கு திணிக்கின்றீர்கள். இனிமேல் இங்கு ஓ.எம்.பி (OMP) அலுவலகம் என்று வரவேண்டாம் எனத் தெரிவித்து விட்டுச் சென்றனர்.
(வவுனியா விசேட நிருபர்) - நன்றி தினகரன்
இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் நேற்று (26)யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியிலுள்ள இந்தியதூதரகத்தில் பதில் துணைத்தூதுவர் ராம் மகேஷ் தலைமையில் குடியரசு தின நிகழ்வுகள் நேற்று காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன் உட்பட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், இந்திய மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.தேசிய கொடியை ஏற்றி வைத்ததுடன், குடியரசு தலைவரின் உரையையும் வாசித்தார். அதன் பின்னர், இந்திய கலாசார நிலையத்தில் இசைக்கல்விபயிலும் மாணவர்களின் தேசப்பற்று பாடல்கள் இசைக்கப்பட்டதுடன், இந்திய கடலோர காவல்படை யினர் தேசப்பற்று பாடல்களையும் பாடினார்கள்.
யாழ்ப்பாணம் குறூப், யாழ்.விசேட நிருபர்கள் - நன்றி தினகரன்
தீவிரவாத, மதக்கருத்துக்களை ஒழிப்பதற்கான விதிமுறைகள்
வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 'தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்' அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை
விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (26) அனுமதி வழங்கியுள்ளது.
முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
யாழில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த படகு சேவை
யாழ். மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக கொழும்பில் இருந்து 8 பேர் பயணம் செய்யக் கூடிய உல்லாச கப்பல் ஒன்று குறிகட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது.
யாழ். மாவட்டத்தில் உள்ள தீவுக் கூட்டங்களை சுற்றிப்பார்க்கும் உல்லாச பயணிகளுக்கு ஏதுவாக குடும்பமாகவோ அல்லது தனித்தனியாகவோ கப்பலிலே தங்கி நின்றோ தீவுகளை பார்வையிடக் கூடிய வசதிகள் குறித்த கப்பலில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் தொழிலதிபர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்காலத்தில் 30 மற்றும் 100 அறைகளைக் கொண்ட உல்லாசக் கப்பல் யாழ்.மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் வடக்கின் உல்லாசத் துறையை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கடலில் இரவு பகல் தங்கி தீவுகளை பார்ப்பது மன அமைதியை ஏற்படுத்தும் என்பதுடன் இயற்கையை இரசிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(கோப்பாய் குறூப் நிருபர்) - நன்றி தினகரன்
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
வவுனியா நீதிமன்றம் நேற்று தீர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர், போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார். இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உள்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரப்பட்டது.
2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. வழக்கில் தயாமாஸ்டர் மற்றும் அவர் சார்பாக சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். குறித்த வழக்கில் தயாமாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அந்தகுற்ற பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நன்றி தினகரன்
ஜனவரி 28 முதல் மட்டக்களப்பு - கொழும்பு 'புலதுசி' கடுகதி ரயில் சேவை
மட்டக்களப்பு முதல் கொழும்பு வரையிலான அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட 'புலதிசி' அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் ஜனவரி 28 முதல் மட்டக்களப்பு - கொழும்பு 'புலதிசி' கடுகதி சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.
இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 9.52 க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கல்லடி குறூப் நிருபர்) - நன்றி தினகரன்
2021 இன் சிறந்த இளம் எம்.பியாக சாணக்கியன் தெரிவு
சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான 2021ஆம் ஆண்டுக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Institute of Politics எனும் அமைப்பினால் இந்த விருது இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.
எனினும், மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா. சாணக்கியன் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய Institute of Politics என்ற அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா. சாணக்கியனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment