நாளுமே முகத்தை மலர்வுடன் வைப்போம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனால் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


நல்ல நினைவுகள் நமை வாழவைக்கும்
பொல்லா நினைவுகள் பொசிக்கிடும் வாழ்வை 

அல்லல் நினைத்தால் அனைத்துமே அகலும்
தொல்லை நினைப்பைத் தொலைத்திடல் வேண்டும்  !

வீழும் நினைப்பை வீழ்த்திடல் வேண்டும்
வாழும் நினைப்பை மனமதில் இருத்துவோம் 
சூழும் வினைகளைத் துரத்திட நினைப்போம்
வாழும் வரைக்கும் வளமதை விதைப்போம்  !

மனமதில் சுமைகளை ஏற்றிடா திருப்போம்
மாசுடை செயல்களை வீசியே எறிவோம்
சினமதை என்றுமே தேக்கிடா திருப்போம்
சிறியன கண்டால் ஒதுங்கியே போவோம் ! 

சொல்லிடும் சொற்களைச் சுவைபடச் சொல்வோம்

சுடுநீர் சொற்களைத் தூரவே எறிவோம்
நல்லதை நாளும் பார்த்திட நினைப்போம்
நாளுமே முகத்தை மலர்வுடன் வைப்போம் ! 

கருணையைக் கண்களால் காட்டிட நினைப்போம்
கருத்தினில் கண்ணியம் நிறைத்திட நினைப்போம்

உரிமையாய் உதவிகள் ஆற்றிட நினைப்போம்
உண்மையாய் வாழ என்றுமே நினைப்போம் ! 

No comments: