இலங்கைச் செய்திகள்

புதிய Omicron திரிபு அவதானம்; தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர நள்ளிரவு முதல் தடை

 இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையருக்கு கௌரவமான வாழ்வு

இந்தியாவுக்கு மேலதிகமான விமான சேவை

எந்த இனத்திற்கும் பாதிப்பின்றி மகாவலி காணிகள்; இவ்வருடம் 20 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க நடவடிக்கை


புதிய Omicron திரிபு அவதானம்; தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர நள்ளிரவு முதல் தடை

புதிய Omicron திரிபு அவதானம்; தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர நள்ளிரவு முதல் தடை-Omicron Variant-Sri Lanka Impose Travel Restrictions to Some African Countries-Including South Africa

- ஏற்கனவே வந்தவர்களை தனிமைப்படுத்துமாறு பணிப்பு

இன்று நள்ளிரவு முதல், தென்னாபிரிக்கா, பொட்சுவானா, லெசதோ, நமீபியா, சிம்பாப்வே, சுவாசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த தடையுத்தரவு அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள அதிக அவதானம் மிக்க 'Omicron' கொவிட்-19 வைரஸ் திரிபு பரவல் அவதானம் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிசாரசபை அறிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் குறித்த நாடுகளுக்கு பயணித்தவர்கள், அந்நாடுகள் ஊடாக வந்தவர்களுக்கு இத்தடை பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே இந்நாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உரிய பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 
இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையருக்கு கௌரவமான வாழ்வு

அவர்களது பூர்வீக இடங்களில் வாழ ஏற்பாடுகள் செய்யப்படும்

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இவ் விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியிருக்கின்றவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக பிரதி உயர்ஸ்தானிகரினால் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் பொருட்களை எற்றிவருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பிரதி உயர் ஸ்தானிகர், அழைத்து வரப்படுகின்றவர்களின் செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்த வருடம் சுமார் 7,000 குடும்பங்களை அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அழைத்து வரப்படுகின்றவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் சர்வதேச, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இம் முயற்சிகளை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டுக்கு வருவதற்கு விரும்புகின்ற இலங்கையர், தங்களுடைய பூர்வீக இடங்களில் மீள்குடியேறி இயல்பு வாழ்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன் இவ் விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷமற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷஆகியோரின் பூரணமான ஒத்துழைப்பத் தனக்கு கிடைக்குமெனவும் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் சிறப்பு முகாம்கங்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த மாதம் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டபோது சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரின் உறவினர்கள் தன்னை சந்தித்தமையை சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக ஏற்கனவே இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.    நன்றி தினகரன் 
இந்தியாவுக்கு மேலதிகமான விமான சேவை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்ததைப் போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையை மீண்டும் நிறுவ உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பமாகுமென அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    நன்றி தினகரன் 
எந்த இனத்திற்கும் பாதிப்பின்றி மகாவலி காணிகள்; இவ்வருடம் 20 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க நடவடிக்கை

 - இராஜாங்க அமைச்சர் சிரிபால கம்லத்

மகாவலி வலய காணிகளை வழங்குவது எந்த இனத்திற்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படும். இந்த வருட இறுதிக்குள் 20 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

தைக்தொழில், நீர்ப்பாசன அமைச்சுக்கள் மற்றும் ராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

மகாவலி எல் வலயம் தொடர்பாக சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு முன்வைத்தார். மகாவலி காணிகள் வழங்குகையில் எந்த இனத்திற்கும் பாதிப்பு ஏற்படாதவாறு வழங்கப்படும். இதனை அரசின் காணிக்கொள்கைக்கு அமைய பிரதேச செயலக பங்களிப்புடன் மேற்கொள்ள இருக்கிறோம். எமது அமைச்சிற்கு நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிக்கு சேவையாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் மகாவலி வலயங்களில் உள்ள 20 ஆயிரம் காணி உறுதிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. 2 வருடங்களில் காணி உறுதிகள் வழங்க இருக்கிறோம். 2023 இல் இதனை நிறைவு செய்ய இருக்கிறோம்.

3,28, 690 காணித்துண்டுகள் பகிரப்பட்டுள்ளன. 1,98,195 பேருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் காணிகளின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

சார்ள்ஸ் நிர்மலநாதன்:
(தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி)

வடக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் பூர்வீக பயிர்ச்செய்கை நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பிலும் மைலத்தனை பகுதியிலும் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை போதிய உரம் இன்றி விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்.

நாட்டு எரு பசளைக்காக அரசாங்கம் 3000 ரூபாய் வழங்கி வரும் நிலையிலும் சிலருக்கு மட்டுமே அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் அந்த கொடுப்பனவு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

தற்போது இரசாயன உரம் இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் விவசாயிகள் என்ன விலையில் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெரியாமலுள்ளது.

வடபகுதியில் விவசாயிகள் தாம் கஷ்டப்பட்டு மேற்கொண்டுள்ள உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தை வாய்ப்புக்கள் இல்லாமல் உள்ளது.

அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்னை சந்தித்த விவசாயி ஒருவர் தம்மிடம் 20 ஆயிரம் கிலோ மரவள்ளிக்கிழங்கு உள்ளதாகவும் அதனை சந்தைப்படுத்துதற்கு வழியில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். 30 ரூபாவிற்குக் கூட அதனை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் நியாய விலையில் அதனை விற்பனை செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பல விவசாயிகள் சந்தை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனுர குமார திசாநாயக்க: (மக்கள் விடுதலை முன்னணி எம்பி)

ஆளும் கட்சியின் குப்பைகளை ஆளும் கட்சியினரே கிளரும் போது பல்வேறு விடயங்கள் வெளியில் வந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சபையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு முன்னர் பதவியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தொடர்பிலும் குற்றம் சுமத்தினார்.

அவர் விமானங்களை பாவித்த முறைமை, ஹெலிகொட்பர்களை பாவித்த விதம் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தற்போதைய ஜனாதிபதி எவ்வாறு மக்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்கின்றார் என்ற விடயங்களையும் சபையில் கூறினார்.

சபையில் இருந்து கொண்டு நாம் நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்ககின்றோம். இதன்மூலம் இந்த நாட்டிற்கு என்ன சாபக்கேடு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இந்த குப்பைகளை மேலும் கிளறினால் அதிகமாக நாற்றம் வீசும் என்பதையும் மேற்படி இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனால் இந்த குப்பைகளை அனைவரும் ஒன்றிணைந்து மூடிவிடுவார்கள். அதற்கான பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவார்கள் என்பது எமக்குத் தெரியும்.

எவ்வாறெனினும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அப்பாவி நாட்டு மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வீ. இராதாகிருஷ்ணன்: (ஐக்கிய மக்கள் சக்தி எம்பி)

விதை உருளைக் கிழங்குகளை வெளிநாடுகளிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்வதை விடுத்து உள்நாட்டிலுள்ள பண்ணைகளில் அவற்றை உற்பத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுவரெலியா உட்பட மத்திய மாகாணத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யக்கூடிய ஆறு விவசாயப் பண்ணைகள் உள்ளன. அதனை முழுமையாக உபயோகித்து விதை உருளைக்கிழங்குகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது 50 கிலோ விதை உருளைக்கிழங்கு இருபத்தி மூவாயிரம் ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கிணங்க உருளைக்கிழங்கு ஒரு கிலோவை உற்பத்தி செய்வதற்கு நூறு ரூபா விவசாயிகளுக்கு செலவாகிறது. அவர்கள் அதனை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

அதேவேளை இங்கு உருளைக்கிழங்கு அறுவடை நடைபெறும் காலங்களில் வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படும். ஆனால் உள்ளூர் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும. விவசாயிகளின் வருமானமும் பெரிதும் பாதிக்கப்படும்.

நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் நுவரெலியா போன்ற இடங்களில் திருட்டுத்தனமாக மிக அதிகமான விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் உரங்களும் தரமானல்ல. அவை கலப்படமாகவே உள்ளது. அந்த வகையில் சுமார் 10,000 ரூபாய்க்கு உரத்தை கொள்வனவு செய்து எவ்வாறு விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். விவசாய அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்‌ஷ

அடிப்படையற்ற அப்பட்டமான குற்றச்சாட்டுகளே மக்களுக்கு இரசாயன உரம் வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய விவசாய உற்பத்திப் பொருட்கள் தற்போது இறக்குமதி செய்யப்படாமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

நாட்டில் இரசாயன உரப் பாவனையை நிறுத்தி சேதனப் பசளை மூலமான உற்பத்தியை ஊக்குவிக்கும் பாரிய சவாலை ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்துள்ளார்.

நாட்டு மக்களை நோயற்ற ஆரோக்கியமான பிரஜைகளாக உருவாக்குவதற்கு இது சிறந்த திட்டமாக அமைந்துள்ளது.

எனினும் இந்தத் திட்டத்தை சீர்குலைப்பதற்கு பல சக்திகள் திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சேதனப் பசளை திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறோம். உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய 22 கிருமிகொல்லிகளுக்கு அனுமதி வழங்க இருக்கிறோம். தனியார் துறைக்கு தேவையானால் இரசாயனப் பசளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் யூரியா விலை அதிகரித்துள்ளது. 3 மாதங்களாக திட்டமிட்டு இந்திய அரசின் தலையீட்டுடன் நெனோ நைட்ரிஜன் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எம்மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.இந்திய விமானப்படை இலவசமாக அவற்றை எடுத்து வந்தன. அதற்கு நாம் நன்றி 4 கூட சொல்லவில்லை. சகல விவசாய நிலங்களிலும் பயிற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேவையான பசளை வழங்கப்பட்டுள்ளது. பெரும்போகத்தில் எந்த குறையும் இன்றி அறுவடையை பெறுவோம்.

நளின் பண்டார எம்.பி (ஐ.ம.ச)

6 இலட்சம் ஹெக்டயார் நிலத்தில் விவசாயம் செய்திருக்கும் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை அரசாங்கம் எப்போது வழங்கப்போகின்றது.

அரசாங்கம் இரசாயன உரத்தைத் தடைசெய்து விடுத்திருந்த வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு இரசாயன உரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த வர்த்தமானி அறிவிப்பு வாபஸ் பெறப்படவில்லை. அத்துடன் இந்த காலப்பகுதியில் 6 இலட்சம் ஹெக்டயாரில் விவசாயம் செய்யப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு உரம் கொண்டுவந்து விநியோகிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் வரை செல்லும். தனியார் துறையினரே உரம் கொண்டுவர இருக்கின்றது. அதனால் தற்போது விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்துக்கு உரம் கிடைக்கப்போவதில்லை.

ரஞ்சித் மத்துமபண்டார: (ஐக்கிய மக்கள் சக்தி எம் பி.)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள நெனோ யூரியா திரவ உரம் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இரசாயன உர இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தினால் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக நாட்டில் பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரும்.

உரத்தட்டுப்பாடு மற்றும் இரசாயன உரத்தின் அதிகரித்து விலை காரணமாக சோளம் பயிர்ச் செய்கை விவசாயிகள் மூன்றில் ஒரு வீதமானோரே இம்முறை சோளம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

சி. வி. விக்னேஸ்வரன் எம். பி

அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்திற்கு சுமையாக உள்ளனர் என்று அரச தரப்பினர் கூறி வருகின்றனர். இம்முறை வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவரது பாதுகாப்புக்கு இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நாம் கேட்கின்றோம். நாட்டில் இப்போது எந்த பயங்கரவாதமும் கிடையாது. இத்தகைய செயற்பாடுகள் அரசியல் நோக்கங்களுக்காகவே மேற்கொள்ளப் படுகின்றன. அவை ஒரு போதும் மக்கள் நலனுக்கானதல்ல.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நலன்கள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.     நன்றி தினகரன் 

No comments: