மாறாத விடியலின் அழகும் வீசும் காற்றும் (கவிதை) வித்யாசாகர்!

விளக்குகள் அணைந்தாலென்ன விடியல் இயல்புதானே காத்திரு;

 நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன விட்டில் பூச்சு ஒன்று வரும் காத்திரு;

 கற்றது வேறானாலென்ன அறிவு உன்னுடையது தானே காத்திரு; 

 யார்விட்டுப் போனாலென்ன உயிர் உண்டுதானே காத்திரு; 

 உலகம் எப்படி இருந்தாலென்ன நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும் காத்திரு;

 யாரால் எது செய்யமுடியா விட்டாலும் உன்னால் எல்லாம் முடியும் காத்திரு;

 நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு, நம்பிக்கையோடு எழுந்து இந்த உலகம் பார் யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள் ஏதோ போனாலும் ஏதோ வருகிறது போனது கிடைப்பதுமில்லை வருவது நிற்பதுமில்லை; பிறகேன் வருத்தம் ?

 எல்லாம் மாறும், நம்பியிரு பூக்கள் நிறைந்த காடுகளில் ஒரு மலர் உதிர்வதும் ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில் எல்லாம் மாறுவதும் கூட இயற்கையின் இயல்புதானே? 

 பிறகு நீயென்ன? நானென்ன? போவதை விடு வாழ்வதை எண்ணிக் காத்திரு;

 இருக்கும் காலம் அத்தனையும் உயிர் மிக்கவை, இந்த உலகம் உயிர்கள் வானம் பூமி மழை கடல் காற்று சூரியன் நிலா காடு அத்தனையும் உயிர் மிக்கவை அவையெல்லாம் உனக்காகக் காத்திருக்கிறது 

 நீ தான் ஏதோ ஒன்றிற்காக மட்டுமே மயங்கி காத்திருந்து பிரிந்து ஒடுங்கி ஒன்றிற்காக மட்டுமே அழுது ஒன்றிற்காக மட்டுமே சாகிறாய் ஒன்று போனால், எல்லாம் போனதாய் முடிகிறாய்;

 சற்று யோசி; சாதல் பிழையன்று தனித்து வலித்து சாதல் சரியுமன்று; வாழ்ந்துக்காட்டப் பிறந்தவர்கள் நாம் வாழ்தலே விதி, வாழ்தலே வரம்; 

 சரி சரி; விடு நிறைய யோசிக்காதே நீ உயிர்த்திருக்க உள்ளிழுக்கும் காற்று இந்த பிரபஞ்சம் வரை நிறைந்தேயிருக்கிறது; போ மிச்சமிருக்கும் நாட்களையேனும் மகிழ்வோடு வாழ்ந்துவிடு!!

 ------------------------------------------------------------ 
 வித்யாசாகர் வாட்சப் செய்ய - பேச - 09840502376

No comments: