நல்லைநகர் பெருமானார் எல்லையிலாப் புகழடைந்தார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 

மெல்பேண் .... ஆஸ்திரேலியா 




அன்னியமாம் பேரிருளில் அகப்பட்ட சைவமதை
முன்னின்று பேரொளியாய் காத்திடவே வந்தமைந்த 

நல்லைநகர் நாவலராய் நல்வரமாய் ஆறுமுகம் 
எல்லோரும் மதித்திடவே  ஈழமதில் பிறந்தனரே

கருவினிலே சமயநெறி நிறைந்தவராய் பிறந்தமையால்
கருதியது அத்தனையும் சமயநெறி ஆகியது
குறைகளைய புறப்பட்ட  குறையில்லா பெருமகனாய்
நிறையறிவாய் விளங்கினரே நிமலனருள் நாவலரும்  

நீறணிந்த மேனியராய் நெஞ்சமெலாம் சிவனினைவாய்
ஆறுமுக நாவலரும் ஆசாரம் பேணினரே 
தந்தையினைக் குருவாக்கி தாம்கற்றார் பலவற்றை
ஐயமின்றி கற்பதிலே அவர்கவனம் நின்றதுவே   

ஆங்கிலத்தைக் கற்றிட்டார் அன்னியத்தை ஒதுக்கிட்டார்
அழகுதமிழ் இலக்கணத்தை அறிந்துவிட உரைவகுத்தார் 
பாமரரும் விளங்குதற்கு பாங்கான உரைநடையை
பக்குவமாய் வழங்கிட்ட வல்லாளர் ஆகிநின்றார் 

சமயத்தை விளக்குதற்கு சரியான வழியென்று
பிரசங்க வடிவத்தை பேருரமாய் கொண்டாரே 
அரனாரின் ஆலயங்கள் அரங்கமாய் ஆக்கியே
ஆறுமுக நாவலரும் அரும்பணிகள் ஆற்றிநின்றார்  

சமயத்தை வளர்ப்பதற்கு தமிழையே கையெடுத்தார்
தமிழ்கொண்டு சைவத்தை தான்விளக்க முன்னின்றார்
கல்வியொடு ஒழுக்கமதை கற்பிக்கப் பலபள்ளி
நல்லைநகர் நாவலரும் நன்றாகத் தாபித்தார்  

அன்னைத் தமிழோடு ஆங்கிலமும் வடமொழியும்
ஆறுமுக நாவலரின் அரணாக அமைந்ததுவே 
கேட்டிடுவார் மனம்பதிய கருத்துரைக்கும் ஆளுமையால்
நல்லைநகர் பெருமானார் எல்லையிலாப் புகழடைந்தார் 

ஈழத்தின் வரலாற்றில் இணையில்லாப் பெருமகனாய்
நல்லைநகர் நாவலரை நாடுபோற்றி நிற்கிறது 
வேதமொடு ஆகமங்கள் விளங்குகின்ற சைவமதம்
நாவலரை நினைப்பதற்கு நம்சொத்தாய் அமைந்திருக்கு 

No comments: