பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - குலமா குணமா - ச. சுந்தரதாஸ் - பகுதி 21

 குடும்ப ,சமூக கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.இவருடைய படங்களில் உணர்ச்சிகரமான காட்சிகள் வியாபித்திருக்கும் .படம் முழுவதும் வசன மழையாக பொழியும். ஆனாலும் அவற்றை திறமையாக படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து விடுவார் கே எஸ் ஜி .இந்த வகையில் அவர் உருவாக்கிய மற்றுமொரு உணர்ச்சிகரமான படம் தான் 1971ல் வெளி வந்த குலமா குணமா .


தனது திரைக் கதையின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் பத்மினினியையும் இதில் நடிக்க வைத்தார் கே எஸ் ஜி .சிவாஜியின் தம்பியின் பாத்திரத்தில் முதலில் எஸ் எஸ் ராஜேந்திரன் நடிப்பதாக இருந்த போதும் நல்ல வேளையாக அவருக்கு பதில் ஜெய்சங்கர் நடித்தார்.இவர் அந்த கதா பாத்திரத்துக்கு ஏற்றவராக விளங்கினார்.அதே போல் அவருக்கு ஜோடியாக நடித்த வாணீஸ்ரீ அலட்டலில்லாமல் இயல்பாக நடித்திருந்தார்.ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி காட்டும் முக பாவங்களே போதும் அவர் நடிப்பை உணர்த்த! பத்மினி தன் பண் பட்ட நடிப்பால் ரசிகர்களை உருக வைத்தார்.

படத்தில் வில்லனாக வருபவர் நம்பியார்.ஆனால் வழக்கமான முரட்டு வில்லன் அல்ல,குதர்க்கமாகவும் குத்தலாகவும் பேசி மற்றவர்களை மட்டம் தட்டும் வேடம் அவருக்கு.தன் வழமையான பாணியில் இருந்து மாறி அதனை செய்திருந்தார் அவர் .அவருக்கு மனைவியாக வரும் சி கே சரஸ்வதி நம்பியாரையே தூக்கி ஏப்பம் விட்டு விட்டார் என்று சொல்ல வேண்டும்.நவீன காலத்து தாடகையாக காட்சியளித்தார் அவர். நம்பியார் சரஸ்வதி இருவரிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் வேடம் நாகேஷுக்கு! உணர்ந்து செய்திருந்தார்

கிராமத்துக்கு பெரிய மனிதராக வாழும் சின்னத்தம்பி தன் குடும்பத்தையும் மறந்து ஊருக்கு உழைக்கிறார்.அவர் மனைவி சீதா தனக்கு ஒரு குழந்தை இல்லையே என வருந்துகிறாள். தன் கொழுந்தன் ராஜா மீது பாசத்தை பொழிகிறாள்.அனால் ராஜாவோ ஊரில் கலப்பட வியாபாரம் செய்யும் நல்லகண்ணுவின் மகள் லலிதாவை காதலிக்கிறான்.இதை அறிந்து சின்னத்தம்பியும் சீதாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.அனால் நல்லக்கண்ணுவும் அவன் மனைவி செங்கமலமும் இந்த காதலை பயன்படுத்தி சின்னத்தம்பியை மட்டம் தட்டவும் அவர் சொத்தை சுருட்டவனும் திட்டமிடுகிறார்கள்.


இவ்வாறு அமைக்கப்பட்ட கதைக்கு பொருத்தமான நடிகர்களை தெரிவு செய்த கே எஸ் ஜி வசனங்களை சற்று குறைத்து காட்சி மூலம் படத்தை நகர்த்தியிருக்கலாம்.ஆனாலும் வசனங்கள் கருத்துடனே அமைந்தன.படத்தில் நான்கு பாடல்கள் தான்.கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.ஆர் சம்பத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

குடும்பக் கதைகளுக்கு வரவேற்பிருந்த காலத்தில் வெளிவந்த குலமா குணமா எது சிறந்தது என்பதை உணர்த்துவதாக அமைந்தது.பிற்காலத்தில் இதே பாணியில் நடிகரும் இயக்குனருமான விசு பல படங்களை உருவாக்கியிருந்தார் .


1 comment:

Unknown said...

Best movie. Nadigarthilagam super 🙏🌹