இனிவரும் நூற்றாண்டில் அழியும் உலகமொழிகளில் தமிழும் ஒன்று என பலரும் கடந்த சில காலமாக சொல்லிவருகிறார்கள்.
இவ்வாறு சொல்பவர்களும்
தமிழர்கள்தான். புகலிடத்தில் பலர் தமிழ் அமைப்புகளை
நடத்தி வருகின்றனர். அவற்றில் தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களும் அடங்கும்.
அதன் கூட்டங்களில்
சந்திப்புகளில் தமிழர்கள் இருந்தாலும், ஆங்கிலத்திலேயே
உரையாடுவதை அவதானித்திருக்கின்றேன். தமிழர்கள்
நடத்தும் நடன அரங்கேற்றங்களில் ஆங்கில மொழி
கோலோச்சியிருக்கும். அங்கு வெளியிடப்படும் மலர்களிலும் தமிழைத் தேட நேரிடும்.
சீனர்கள் உட்பட
பிற இனத்தவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் இரண்டாம் பட்சம்தான். இரண்டு சீனர்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் தமது
தாய்மொழியில்தான் உரையாடுவார்கள்.
இது இவ்விதமிருக்க, தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம்
பரவச்செய்வோம் எனப்பாடிய பாரதியும் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லியிருப்பதாகவும் தவறாகப்புரிந்துகொண்டு தொடர்ந்தும் அவ்வாறே பேசிக்கொண்டிருப்பவர்களையும் அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில்
உலகமொழிகள் பல பேச்சு, எழுத்து வழக்கில் இல்லாமல்போனதனால்
மறைந்துவிட்டன. சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை.
ஆனால், தொன்மையான
தமிழ்மொழிக்கு வரிவடிவம் இருக்கிறது. ஈழத்தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்து
வாழத்தலைப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்க மற்றும் மத்தியகிழக்கு, ஐரோப்பிய
நாடுகளிலும் தமிழ் பேசப்படுகிறது.
“ மொழிகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது; மொழி, அழிவை சந்திக்கும்போது, அந்த இனத்தின் வரலாறு அழிக்கப்படுகிறது. உலகெங்கும், பெரும்பான்மையினர் பேசும் மொழிகளால், சிறுபான்மையினர் பேசும் மொழிகள் அழிந்து வருகின்றன. இப்பூமியில், 6,000 மொழிகள் பேசப்படுகின்றன. 100 ஆண்டுகளுக்குப் பின், இதில், 600 மட்டுமே மிஞ்சும். ஏனெனில், 3,000 மொழிகளை, 1,000 திற்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். 500 மொழிகளை, வெறும், பத்துப்பேர் தான் பேசுகின்றனர் என, ஐ.நா.,வின் மொழியியல் ஆய்வுத் துறை பட்டியலிடுகிறது. “ என்ற குறிப்பினையும் படித்திருக்கின்றேன்.
எனினும் அண்மைக்காலங்களில், எதிர்காலத்தில் அழியும் மொழிகளில் தமிழும் ஒன்றென்று பேசப்பட்டதற்கு காரணம் என்ன..?
இந்தியாவிலிருந்தும்,
இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதாது,
பேசாது என்ற பொதுவான காரணம் சொல்லப்படுகிறது. இந்த அச்சத்தினால் வெளிநாடுகளில் இயங்கும்
தமிழ் அமைப்புகள், தமிழ்ப்பாடசாலைகள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழை வாழ வைக்க
கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
" தமிழினி மெல்லச்சாகும்" என்று பாரதியும்
உரைத்திருக்கிறார் என்று பலரும் மேடைகளில் பிதற்றிவருவதையும் அவதானிக்கமுடிகிறது.
பாரதி அப்படிச்சொன்னாரா...?
என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு அவர்கள் தயாரில்லை. மேடைகளில் முழங்கும்போது பாரதியே
சொல்லியிருக்கிறார் " தமிழினி மெல்லச்சாகும்" என்று மேலோட்டாகச் சொல்கிறார்கள்.
ஆனால், பாரதி
என்ன சொன்னார் என்பதை இங்கு கவனிப்போம்.
பாரதி இயற்றியிருக்கும்
தமிழ்த்தாய் என்ற கவிதையில் வரும் வரிகள்
இவை:
" புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்,
மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக்கலைகள்
தமிழினில் இல்லை,
சொல்லவும் கூடுவதில்லை- அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை,
மெல்லத்தமிழினிச்சாகும் - அந்த மேற்கு
மொழிகள் புவிமிசையோங்கும்"
என்றந்தப்பேதை உரைத்தான் - ஆ !
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
!
தந்தை அருள்வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும்,
இந்தப்பெரும் பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
----இதுவே பாரதி
எழுதியிருக்கும் கவிதை.
இதனை சரியாகப்படித்துப்புரிந்துகொள்ளாமல்,"
தமிழினி மெல்லச்சாகும்" என்று சொல்லி, தமது வாதத்திற்கு பாரதியையும் துணைக்கழைத்துக்கொள்கிறார்கள்.
இன்னும் சிலர்,
பாரதி அவ்வாறு சொல்லியிருந்தாலும், அவரது உள்ளக்கிடக்கைதான் அவ்வாறு எழுதவைத்தது என்றும்
பொருள் மயக்கத்துடன் பேசுகின்றனர்.
பாரதி தமிழுக்காக
தான் என்ன செய்வேன் என்றுரைத்ததுடன் நிற்கவில்லை. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும்" என்றும் அறைகூவல் விடுத்து "கலைச்செல்வங்களை கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் அத்துடன்
நிறுத்தவில்லை. பேதைகளுக்கு மேலும் ஒரு விடயத்தை வலியுறுத்துகிறார்.
" யாமறிந்த
மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும்
காணோம்,
பாமரராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப்
பான்மை கெட்டு,
நாமமது தமிழரனெக்
கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல்
நன்றோ? சொல்லீர் !
தேமதுரத் தமிழோசை
உலகமெலாம்
பரவும்வகை செய்தல்
வேண்டும்."
இலங்கையின்
மூத்த தமிழ் அறிஞராகவும் சிறந்த கல்விமானாகவும்
விளங்கிய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (
1902 - 1968) அவர்கள் வாழ்ந்த காலத்திலும், " தமிழினி மெல்லச்சாகும்" என்ற பிதற்றல்கள் ஒலித்திருக்கின்றன.
பருத்தித்துறை,
புலோலி கிழக்கில் 1902 ஆம் ஆண்டில் பிறந்திருக்கும் கணபதிப்பிள்ளை அவர்கள் பற்றி விரிவான
கட்டுரையை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி (2017 ஆனி) இதழில் ஈழக்கவி
எழுதியுள்ளார்.
பன்மொழிப் புலமைமிக்கவரான
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, 1936 இல் இலங்கைப்
பல்க்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத்
தலைவராகவும் நியமனமாகி, 1947 இல் தமிழ்ப்
பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். பேராதனை பல்கலைக்கழகத்தின்
தமிழ்த்துறை தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.
இவரது முயற்சியால்
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத் தேர்வையும் தொடங்கி வைத்த பெருமையும் இவரைச்சாரும்.
பாரதியின்பால் அபிமானம் கொண்டிருந்த மூத்த அறிஞராகவும்
பேராசிரியர் அறியப்பட்டிருப்பதாக ஈழக்கவி எழுதியுள்ளார்.
சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டிருந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள்,
பாரதியாரின் பாப்பாப் பாடல்களுக்கும் அருமையான விளக்கம் கொடுத்திருப்பதாக ஈழக்கவி பதிவுசெய்கின்றார்.
அவர் வாழ்ந்த
காலத்திலும், "மெல்லத்தமிழ் இனிச்சாகும்
" என்று யாராவது பேசினால் பேராசிரியர் கணபதிப்பிள்ளை பொங்கி எழுந்துவிடுவார்.
புதிய துறையில் எல்லாம் தமிழ் வளரவேண்டும் என்பதும் பேராசிரியரின் இலட்சிய வெறி. ஆங்கிலேயரின்
சிறந்த படைப்புகளை யாராவது அவ்வப்போது மொழிபெயர்த்து வெளியிட்டால் அந்த முயற்சியை அவர்
பாராட்டுவார். ஆங்கில மொழியில் உள்ள இலக்கிய நூல்களைப்போல ஐரோப்பிய மொழிகளில் உள்ள
படைப்புகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்பதை வற்புறுத்துவார் பேராசிரியர்
" என்று ஈழக்கவி பதிவுசெய்திருக்கிறார். அதற்கு ஆதாரமாக முன்னாள் மகாஜனாக்கல்லூரி அதிபரும் தமிழ் அறிஞருமான
எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் எழுதியிருக்கும் கலையருவி கணபதிப்பிள்ளை என்ற நூலையும் சுட்டிக்காண்பிக்கின்றார் ஈழக்கவி.
“ இந்திய தமிழ் சினிமா, இந்தியத்தமிழ்த்தொலைக்காட்சிகளில்
உச்சரிக்கப்படும் தமிழைப்பார்த்துவிட்டு,
" தமிழைக்கொல்கிறார்கள்" என எம்மவர் விமர்சிப்பதையும் அவதானிக்கின்றோம்.
இத்தகைய ஊடகங்களில் நல்ல தமிழைத் தேடவேண்டிய துர்ப்பாக்கியம் நீடிப்பதனாலும்,
"தமிழினி மெல்லச்சாகும்" என்று பேசத்தலைப்படுகின்றனர்.
தமிழர் புகலிடம்
பெற்ற அந்நிய நாடுகளில் ஆங்கிலமும் ஐரோப்பிய
மொழிகளும் பிரதான மொழியாகவிருப்பதனால், தமிழில் எழுதுவதும் பேசுவதும் அருகிவருகிறது.
அதனால் புகலிடத்தில் தமிழ்ப்பாடசாலைகள் தோன்றுகின்றன.
சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் அலாஸ்கா
மாநிலத்தில் மரியா ஸ்மித் ஜோன்ஸ் என்ற
பெண்மணி இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 89. பழங்குடி இனத்தைச்சேர்ந்த அவர், அம்மக்களின் மொழிகளில் ஒன்றான " ஏயக்" என்ற மொழியை பேசியவர்.
அவர்தான் அந்த மொழியை இறுதியாகப்பேசியவர். அவருக்குப்பின்னர் அந்த மொழியை எவரும்
பேசமாட்டார்கள் என்பது தெரிந்தே, ஏயக் மொழிக்கான அகராதியையும் தயாரித்தார்.
இனிமேல் யாராவது அந்த அகராதியின் துணையோடு படித்தால்தான் அம்மொழி வாழும்.
இரண்டு வாரத்திற்கு ஒரு மொழிவீதம் உலகில் எங்கோ ஒரு
மூலையில் ஏதாவது ஒரு மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அல்லது காணாமல்போகிறது.
அழிந்துபோவதும் காணாமலாவதும் ஒன்றுதான்.
மறைந்த மரியா ஸ்மித் ஜோன்ஸ் வாழ்ந்த அலாஸ்காவில் எஞ்சியிருக்கின்ற மேலும்
சில மொழிகளும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு அழியும் மொழிகளுடன்
அவற்றின் வரலாறும் அழிந்துவிடலாம். ஒரு மொழி தொடர்ந்து வாழவேண்டுமாயின் குறைந்தது
ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பது மொழியியல்
வல்லுனர்களின் கருத்து.
அந்த வகையில் தமிழ்மொழி அழிந்துவிடாது என்று இந்த
நூற்றாண்டில் நாம் ஆறுதல்கொண்டாலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும்,
இலங்கை, தமிழ்நாடு, மற்றும் மலேசியா,
சிங்கப்பூரிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும்
தமிழ் சினிமாக்களிலும் தமிழின் தேவை குறைந்துகொண்டிருப்பதை அவதானிக்க
முடிகிறது. வெளிநாடுகளில் தமிழர்களின் அரங்கேற்றங்கள் பதச்சோறு.
தமிழ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
இலங்கையில் பெருகிவரும் சர்வதேசக்கல்லூரிகள் ( International Colleges) மற்றும் ஒரு உதாரணம்.
அமெரிக்காவில் வாழும் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி
மீராவுக்கு தமிழில் சரளமாகப் பேசமுடியவில்லை
என்றால், அதற்காக பாரதி மீண்டும் உயிர்பெற்றுவந்து அவரை
கோபித்துக்கொள்ளத்தான் முடியுமா...?
யாழ்ப்பாணத்திற்கு சுமார் 60 வருடங்களுக்கு முன்னர்
வருகைதந்திருந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள் " இந்த மண்ணின் தண்ணீர் உவர் நீராக
மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது" என்று
எச்சரித்துவிட்டுச் சென்றார்களாம்.
ஆனால், அதனை அரசியல் தலைவர்களோ மக்களோ கவனத்தில்
கொள்ளவில்லை. 60 ஆண்டுகள் கடப்பதற்கு முன்பே யாழ்குடாநாட்டின்
தண்ணீரின் சுவை எவ்வாறு மாறியிருக்கிறது.....? ஒவ்வொருவரும் இந்த மாற்றத்தை எமது
தாய்மொழிக்கு எதிர்காலத்தில் நேர்ந்துவிடவிருக்கும் மாற்றத்துடன்
ஒப்பிட்டுப்பார்த்தல் வேண்டும் என்பதும் பாரதி தரிசனம் பற்றிய இத்தொடரின் முக்கிய செய்தியாகும்.
எந்தவொரு மொழியும் வழக்கிலிருக்கும்வரையில் வாழும்
என்ற ஆறுதலுடன், தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் என்ற
பாரதியின் கனவுடன் நாம் எமது
பணிகளைத்தொடருவோம்.
பாரதிக்கு முன்பும் பாரதிக்குப்பின்பும்
தமிழ்மொழியும் தமிழரின் வாழ்வுக்கோலங்களும் பல ஆய்வாளர்களினால் அவரவர் கண்ணோட்டத்தில்
ஆராயப்பட்டிருக்கிறது.
அவர்களின் அக்கறை யாவும் தமிழ்மொழியிடத்தும் தமிழினத்திடத்திலும்
நீடித்திருந்தாலும், இந்த நூற்றாண்டிலும், அதாவது பாரதி நினைவு நூற்றாண்டிலும் அதற்குபின்னர் வரும் நூற்றாண்டிலும்
தமிழ்மொழி , தமிழ் இனம் பற்றி வேறுவகையான
ஆராய்ச்சிகளும் தரவுகளும் வெளியாகத்
தொடங்கும்.
“ தன்னிடம் இல்லாத, பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்
மொழி அழிவதில்லை. ஆனால், தன்னிடம் இருக்கும் சொற்களை துறந்து, பிற
மொழி சொற்களை ஏற்றுக்கொள்ளும் மொழி, விரைவில் அழிந்துவிடும். “ என்று சி.கலாதம்பி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
---0---
1 comment:
சிறப்பான கருத்தும், மகிழ்ச்சியும் - சி.கலாதம்பி
Post a Comment