உலகச் செய்திகள்

 புதிய கொரோனா திரிபு; உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கை

ஆங்கிலக் கால்வாயில் அகதி படகு மூழ்கியதில் 27 பேர் பலி

கறுப்பின ஆடவரைக் கொன்ற மூவர் குற்றவாளிகளாக தீர்ப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முஅம்மர் கடாபி மகனுக்கு தடை

நியூசிலாந்தின் எல்லையை திறக்கும் திட்டம் அறிவிப்பு

செய்யாத குற்றத்திற்கு 42 ஆண்டு சிறை அனுபவித்தவர் விடுதலை


 புதிய கொரோனா திரிபு; உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கை

தென்னாபிரிக்காவில் நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு காரணமானதாகக் கூறப்படும் அதிக எண்ணிக்கையான மரபணு பிறழ்வுகளுடன் புதிய கொவிட்-19 திரிபு ஒன்று கண்டுடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ள தென்னாபிரிக்காவில் இந்த மாதம் ஆரம்பம் தொடக்கம் தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தென்னாபிரிக்காவுக்கு பயணத் தடை விதித்துள்ளன. தெற்கு ஆபிரிக்காவின் மேலும் ஐந்து நாடுகளில் இந்த புதிய வைரஸ் திரிபு பற்றிய கவலை அதிகரித்துள்ளது.

இந்த புதிய திரிபு டெல்டா திரிபை விடவும் அதிக தொற்று கொண்டதாகவும் தற்போதிருக்கு தடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

‘துரதிருஷ்டவசமாக நாம் புதிய திரிபு ஒன்றை அவதானித்துள்ளோம். அதுவே தென்னாபிரிக்காவில் கவலை அதிகரிக்கக் காரணமாகும்’ என்று வைரஸ் மருத்துவ நிபுணர் டுலியோ டி ஒலிவேரியா கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பி.1.1.529 என்று அழைக்கப்படும் இந்த திரிபு ‘மிக அதிக எண்ணிக்கையான மரபணு பிறழ்வுகளை கொண்டிருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திரிபுக்கு உலக சுகாதார அமைப்பு கிரேக்க பெயர் ஒன்றை சூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘துரதிருஷ்டவசமாக இது தொற்று நோயின் மறுபிறப்பை ஏற்படுத்துகிறது’ என்று அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

தென்னாபிரிக்காவில் இருந்து பொட்ஸ்வானா மற்றும் ஹொங்கொங் சென்ற பயணிகளிடமும் இந்த வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் டி ஒலிவேரியா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் திரிபு பற்றி தீவிரமாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு திரிபாக பார்ப்பது மற்றும் இது பற்றி கவலை கொள்வது பற்றி ஆராய்வதற்கு நேற்று முக்கிய கூட்டம் ஒன்றையும் அந்த அமைப்பு நடத்தியது. ‘ஆரம்பக்கட்ட ஆய்வில் இந்த வைரஸ் திரிபு பெரும் எண்ணிக்கையிலான பிறழ்வுகளை கொண்டிருப்பதை காட்டுவதோடு இது பற்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரும் அச்சறுத்தல்

இந்த புதிய திரிபு தீவிர அவதானத்திற்கு உரியது என்றும் நோய்த் தொற்றின் அதிவேகமான அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலை கொண்டது என்றும் தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் ஜோ பால்ஹா எச்சரித்துள்ளார். தென்னாபிரிக்காவின் தினசரி தொற்று சம்பவங்கள் கடந்த புதனன்று 1,200 ஆக இருந்தது. இதுவே இந்த மாத ஆரம்பத்தில் அது 106 ஆக மாத்திரமே இருந்தது.

இந்த புதிய திரிபு கண்டுபிடிக்கப்படும் முன்னர் பண்டிகைக் காலத்தை ஒட்டி வரும் டிசம்பர் நடுப்பகுதியில் ஆரம்பிக்கக்கூடிய நான்காவது அலை ஒன்று பற்றி தென்னாபிரிக்காவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் 22 புதிய வைரஸ் திரிபு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அரசின் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக மையமாக இருக்கும் ஜொஹன்னஸ்பேர்க் மற்றும் தலைநகர் பிரிடோரியா மற்றும் குவாடெங் உட்கட நாட்டின் மூன்று மாகாணங்களில் சோதனையில் நோய்த் தொற்று கண்டறியப்படும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரிடோரியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றியில் வைரஸ் கொத்தணி ஒன்று ஏற்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அது குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு பீட்டா வைரஸ் திரிபு தொன்னாபிக்காவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் டெல்டா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த திரிபின் தொற்று எண்ணிக்கை தற்போது சரிந்துள்ளது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் அதிக பெருந்தொற்று பதிவான நாடாக தென்னாபிரிக்கா உள்ளது. அங்கு 2.95 மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 89,657 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபில் 50 மரபணு பிறழ்வுகள் உள்ளன என்றும், ஸ்பைக் புரோட்டின் இடையில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழையையே இலக்கு வைக்கின்றன. அதேபோன்று மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவ கொரோனா வைரஸ் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றது.

மனிதர்களின் உடலோடு முதலில் தொடர்பு கொள்ளும் ரெசப்டாரில் 10 பிறழ்வுகள் உள்ளன. உலகை உலுக்கிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபிலேயே ரெசப்டார்களில் இரண்டு பிறழ்வுகள் மட்டுமே இருந்தன.

கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியாத ஒரு நோயாளியின் உடலிலிருந்து இத்தனை அதிக பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காகிதத்தில் மிகவும் அச்சுறுத்தக் கூடியதாக தோன்றும் பல கொரோனா திரிபுகள், எதார்த்தத்தில் ஒன்றுமில்லாமல் போய் உள்ளன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கொரோனா வைரஸின் பீட்டா திரிபு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மிகவும் அச்சுறுத்தக் கூடியதாக மக்களின் கவலைக்குரியதாக இருந்தது. அத்திரிபு மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிக்காமல் தப்பிப்பதில் சிறந்து விளங்கியது. ஆனால் எதார்த்தத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு உலகை தவிக்க வைத்தது.    நன்றி தினகரன் 
ஆங்கிலக் கால்வாயில் அகதி படகு மூழ்கியதில் 27 பேர் பலி

இரப்பர் படகில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் படகில் காற்று வெளியேறி, மூழ்கியதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை பிரிக்கும் இந்தக் கால்வாயில் குடியேறிகளுடன் தொடர்புபட்டு இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது உள்ளது.

ஐந்து பெண்களும் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். படகில் 34 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருவர் காப்பற்றப்பட்டனர். மேலும் ஒருவரைக் காணவில்லை.

படகில் செல்ல உதவிய சந்தேகத்தின் பேரில் பிரான்ஸில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்று இரப்பர் படகு ஒன்று இருப்பதாகவும் அருகில் பலர் உணர்வின்றி மிதப்பதாகவும் மீட்பு சேவைக்கு அழைப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து குறைந்தது மூன்று படகுகள் மற்றும் மூன்று ஹெலிகொப்டர்களை கொண்டு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் கூட்டாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

ஆபத்திற்கு மத்தியில் சிறிய படகுகள் அல்லது இரப்பர் படகுகளில் இந்த கால்வயை கடக்க முயல்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.    நன்றி தினகரன் 

கறுப்பின ஆடவரைக் கொன்ற மூவர் குற்றவாளிகளாக தீர்ப்பு

அமெரிக்காவில் உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்த கறுப்பின ஆடவர் ஒருவரை கொலை செய்த மூன்று வெள்ளை இனத்தவர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2020 பெப்ரவரி 23 ஆம் திகதி 25 வயதான அஹமவுத் ஆர்பெரி என்பவர் ட்ரவிஸ் மற்றும் ஜோர்ஜ் மைக்கல் மற்றும் அவர்களின் அண்டை வீட்டாரான வில்லியம் ப்ரியான் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தற்பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்ததாக பிரதிவாதிகள் கூறிய நிலையில் இந்த சம்பவத்தில் இனவாதம் தாக்கம் செலுத்தி இருப்பதாக வழக்குத்தொடுநர்கள் வாதிட்டுள்ளனர்.

இந்நிலையில் குற்றங்காணப்பட்டிருக்கும் இந்த மூவரும் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ளை இனத்தவர்களை பிரதானமாகக் கொண்ட 12 பேர் கொண்ட நடுவர் சபை சுமார் 10 மணி நேரம் ஆலோசனை நடத்திய பின் கடந்த புதன்கிழமை நண்பகல் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு வெளியில் திரண்ட கறுப்பின ஆதரவாளர்கள் கரகோசமிட்டனர்.   நன்றி தினகரன் 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முஅம்மர் கடாபி மகனுக்கு தடை

காலஞ்சென்ற லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சயிப் இஸ்லாம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

சட்டக் காரணங்களை காட்டி சயிப் அல் இஸ்லாம் கடாபி உட்பட பல விண்ணப்பதாரர்களின் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் சயிப் இஸ்லாம் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போர் குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்தால் தேடப்படுபவராக அவர் உள்ளார்.

நாட்டின் பலம்மிக்கவராக உள்ள காலிபா ஹப்தர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளார். நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் அவரது பெயரும் உள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறுபது பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 46 வயது பெண் உரிமை செயற்பாட்டாளர் லெய்லா பென் கலிபா ஒரே பெண் வேட்பாளராக உள்ளார்.    நன்றி தினகரன் 
நியூசிலாந்தின் எல்லையை திறக்கும் திட்டம் அறிவிப்பு

நியூசிலாந்து அதன் எல்லைகளை சர்வதேச பயணிகளுக்குத் திறந்துவிடுவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எல்லைகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.

அவுஸ்திரேலியாவிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்துக் குடிமக்களும் விசா அனுமதி வைத்திருப்போரும் வரும் ஜனவரி 16ஆம் திகதி முதல் நியூசிலாந்து செல்லலாம்.

வரும் பெப்ரவரி 13ஆம் திகதியிலிருந்து, மற்ற பெரும்பாலான நாடுகளிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்துக் குடிமக்களும் விசா அனுமதி வைத்திருப்போரும் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதியிலிருந்து, எல்லா நாடுகளிலிருந்தும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அங்கு செல்லலாம். நியூசிலந்து செல்வோர் தனிமைப்படுத்திக்கொள்ளும் இடங்களில் தங்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் 7 நாட்களுக்குச் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து நியூசிலாந்து கடந்த 2020 மார்ச் மாதம் தனது எல்லையை மூடியது. நோய்த் தொற்றுக் காரணமாக ஆரம்பத்திலேயே எல்லைகளை மூடிய நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து உள்ளது.   நன்றி தினகரன் 

செய்யாத குற்றத்திற்கு 42 ஆண்டு சிறை அனுபவித்தவர் விடுதலை

அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் 1978 இல் மூன்று கொலைகள் செய்ததாக தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு 42 ஆண்டுகளுக்கு மேல் சிறை அனுபவித்த ஆடவர் ஒருவர் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயது கெவின் ஸ்ட்ரிக்லான்ட், 18 வயதில் கைது செய்யப்பட்டது தொடக்கம் குற்றமற்றவர் என்று கூறி வருகிறார். அவருக்கு 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கன்சாஸ் நகரில் இருக்கும் வீடு ஒன்றை கொள்ளையடித்தது தொடர்பிலேயே அவர் குற்றங்காணப்பட்டிருந்தார். 15,487 நாட்கள் சிறை அனுபவித்த நிலையில் அவரை உடன் விடுவிக்கும்படி நீதிபதி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

“இந்த நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று தனது விடுதலைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து ஸ்ட்ரிக்லான்ட் கூறினார்.

மிசூரி வரலாற்றில் தவறான குற்றத்திற்கு நீண்டகாலம் சிறை அனுபவித்தவராக அவர் பதிவானபோதும், அந்த மாநில சட்டத்தின்படி அவருக்கு நிதி இழப்பீடுகள் பெற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
No comments: